Published:Updated:

`ரஜினியின் யதார்த்தம், அஜித்தின் மரியாதை, விஜய்யின் அன்பு, நிறைவேறா ஆசை!’ - தேவதர்ஷினி ஷேரிங்ஸ்

குடும்பத்தினருடன் தேவதர்ஷினி
குடும்பத்தினருடன் தேவதர்ஷினி

விஜய் டிவி `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனிலும் நடுவராகத் தொடர்பவரிடம், கால் நூற்றாண்டுக்கால வெற்றிப் பயணம் குறித்துப் பேசினோம்.

சின்னத்திரையில் இடைவிடாமல் அதிக காலம் பணியாற்றும் பெருமைக்குச் சொந்தக்காரர் நடிகை தேவதர்ஷினி மட்டுமே. தொகுப்பாளராக மீடியா பயணத்தைத் தொடங்கி, நடிகை, ரியாலிட்டி நிகழ்ச்சி போட்டியாளர் எனப் படிப்படியாக வளர்ந்திருக்கிறார். 25 ஆண்டுகளைக் கடந்தும் சின்னத்திரையில் தனக்கான இடத்தைத் தக்க வைத்திருக்கிறார். விஜய் டிவி `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனிலும் நடுவராகத் தொடர்பவரிடம், கால் நூற்றாண்டுக்கால வெற்றிப் பயணம் குறித்துப் பேசினோம்.

குடும்பத்தினருடன் தேவதர்ஷினி
குடும்பத்தினருடன் தேவதர்ஷினி

``ஜெயா டிவி-க்கு முன்பே தொடங்கப்பட்ட ஜெ.ஜெ டிவியில தொகுப்பாளரா வேலை செஞ்சதுதான் என்னோட முதல் மீடியா அனுபவம். காலேஜ் படிச்சுகிட்டே ஹாபியா வேலை செஞ்சுகிட்டு இருந்த நிலையில, எனக்குப் பொறுப்புணர்வையும் அடையாளத்தையும் கொடுத்தது `மர்ம தேசம்’ சீரியல். 1990-கள்ல அந்த சீரியல் ஏற்படுத்திய தாக்கம் ரொம்ப பெரிசு. காலேஜ்லயும் மக்கள் மத்தியிலயும் எனக்கு அளவு கடந்த அன்பும் பெருமிதமும் கிடைச்சது. சி.ஏ படிக்கும் எண்ணத்தைத் திசைதிருப்பி, மீடியாவுல தொடர்ந்து வேலை செய்யும் ஆர்வத்தையும் அந்த சீரியல்தான் ஏற்படுத்துனுச்சு.

`மர்ம தேசம்’ சீரியல் இயக்குநர் நாகா சார்தான், `ரமணி Vs ரமணி’ சீரியல் வாய்ப்பும் கொடுத்தார். `எனக்கு காமெடியெல்லாம் வராது சார்’னு தயங்கினேன். `நீ ‘மர்ம தேசம்’ல நடிக்க வரும்போது உனக்கு நடிப்பு மட்டும் வந்துச்சா? ஒருகட்டத்துல அதுவும் சரியா வந்ததுபோல, இதுவும் சரியா வரும்’னு என்மேல நம்பிக்கை வெச்சு நடிக்க வெச்சார். அந்த சீரியல் மூலமா, நமக்கு நகைச்சுவைகூட வரும்னு எனக்கே வியப்பும் கிடைச்சது. கே.பாலசந்தர் சாரோட மகன் கைலாசம் சார்தான் அந்த சீரியலின் தயாரிப்பாளர். ஷூட்டிங் நேரத்துல அவ்வப்போது பாலசந்தர் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அவர் இயக்கத்துல நடிக்கும் வாய்ப்பு அமையாதது சின்ன வருத்தம்தான்.

தேவதர்ஷினி
தேவதர்ஷினி

என்னோட பெற்றோரும் அக்காவும் நல்லா படிச்சவங்க. மீடியாவுல வேலை செஞ்சாலும் நானும் நல்லா படிச்சேன். ஒரு கட்டத்துல மீடியாவை என் கரியரா தேர்ந்தெடுத்தப்போ, பெற்றோ முழு சுதந்திரமும் ஊக்கமும் கொடுத்தாங்க. அதனால, எனக்கு எந்தச் சவாலும் ஏற்படல. அதே நேரத்துல சினிமா வாய்ப்புகளும் வந்துச்சு. `எனக்கு 20 உனக்கு 18’ படத்துல நான் நடிச்ச முதல் காட்சியே, விவேக் சாரை திட்டி அடிக்கிறதுதான். அப்போ ராதிகா மேடத்தின் `அண்ணாமலை’ சீரியல்ல ஹியூமர் கலந்த வித்தியாசமான ரோல்ல நடிச்சேன். அதன் மூலம்தான் `பார்த்திபன் கனவு’ பட வாய்ப்பு கிடைச்சது. விவேக் சார் மனைவியா நடிச்ச காட்சிகள் பசுமையான நினைவுகளா மனசுல நிக்குது. அவரோட மறைவு என்னை ரொம்பவே பாதிச்சது” என்பவரின் குரல் தளர்கிறது.

``குடும்ப வாழ்க்கை, குழந்தைப்பேறுனு தனிப்பட்ட காரணங்களுக்காகச் சின்னத்திரையில வேலை செய்றது எனக்கு செளகர்யமா இருந்துச்சு. நடுவுல இடைவெளி விட்டு சினிமாவுல செலக்ட்டிவா நடிச்சேன். `காஞ்சனா’வுக்குப் பிறகு ஹியூமர் ரோல்கள் ஓரளவுக்குக் கிடைச்சது. அதைச் சிறப்பா செஞ்சேனான்னு மக்கள்தாம் சொல்லணும். ஆனாலும், நகைச்சுவை நடிகைகள் லிஸ்ட்டுல என்னையும் சேர்த்தது பெருமையான விஷயம். `96’ படத்துல என்னோடது குணச்சித்திர வேடம்தான். அதுவும் மக்கள்கிட்ட பேசப்பட்டது. இதுபோல பலதரப்பட்ட ரோல்கள்ல நடிக்கிறதுதான் எனக்கும் பிடிக்கும். இப்போதான் எனக்கான படங்களைச் சரியா தேர்வு செய்ற பக்குவம் எனக்குக் கிடைச்சிருக்கு.

குடும்பத்தினருடன் தேவதர்ஷினி
குடும்பத்தினருடன் தேவதர்ஷினி

பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் ஆசை யாருக்குத்தான் இருக்காது? ரஜினி சாரை திரையில பார்த்து ரசிச்ச நிலையில, `எந்திரன்’ல அவர் என்னோடு யதார்த்தமா பேசிப் பழகினது ஆச்சர்யம் அகலாத நிஜமாச்சு. அவர்கூட நடிக்கும்போது சின்ன பதற்றம் மனசுல இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்காம நடிச்சேன். விஜய் சார்கூட ரெண்டு படங்கள் பண்ணியிருக்கேன். குறைவா பேசினாலும், அவர்கூட பழகும் கொஞ்ச நேரமும் மனசுக்குப் பெரிய நிறைவைக் கொடுக்கும் அன்பா மாறும். அஜித் சாரும் ரொம்பவே ஃப்ரெண்ட்லியான பக்குவமான மனிதர். எல்லோருக்கும் சமமான மரியாதை கொடுக்கிற குணம்தான், அவர்கிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும். `மைக்கேல், மதன, காம, ராஜன்’, `சலங்கை ஒலி’தான் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள். இது ரெண்டுமே கமல் சார் நடிச்சது. அவர்கூட நடிக்காததுதான் என்னோட நிறைவேறாத சினிமா ஆசை” என்று ஏக்கமாகக் கூறுபவர், கமல் உடன் நடிக்கும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

கால் நூற்றாண்டுக்கால சின்னத்திரை அனுபவம் குறித்துப் பேசும் தேவதர்ஷினி, ``என்னோட மகப்பேறு காலத்துல ரெண்டு வாரங்கள் லீவ் எடுத்தேனே தவிர, மீடியாவுக்கு வந்ததுல இருந்து இப்போவரை இடைவெளி இல்லாம தொடர்ந்து சின்னத்திரையில வேலை செஞ்சுகிட்டேதான் இருக்கேன். இதுக்கிடையே, `ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சியில நானும் என் கணவரும் போட்டியாளர்களா பங்கேற்றோம். படிப்படியா வளர்ந்து, இன்னைக்கு அதே சேனல்ல `மிஸ்டர் & மிஸஸ்’ சின்னத்திரை நிகழ்ச்சியில தொடர்ந்து மூணாவது சீஸன்லயும் நடுவரா இருப்பது பெரிய அங்கீகாரமா தோணுது.

குடும்பத்தினருடன் தேவதர்ஷினி
குடும்பத்தினருடன் தேவதர்ஷினி
`கமலின் தோல்வி, அந்த ரியாக்ஷன், அவர் என்கிட்ட சொன்னது!’ - தேர்தல் அனுபவம் பகிரும் ஸ்ரீப்ரியா

இதே நிகழ்ச்சியில அனுபவமுள்ள டான்ஸர்களுக்கு மார்க் போடுறப்போ வெட்கமாவும் கூச்சமாவும் இருக்கும். `டான்ஸ்ல அனுபவமே இல்லாத நாம இவங்களுக்கு மார்க் போடுறோமே’ன்னு `நீயா நானா’ கோபிநாத் சாரும் நானும் அடிக்கடி பேசிப்போம். மீடியாவுக்கு வந்த புதுசுலயும் இடைப்பட்ட காலத்துலயும் இப்பவும் எந்த இலக்கும் வெச்சுக்கல. அதுவா என்னை இத்தனை வருஷமா கூட்டிட்டு வந்திருக்கு. போற ரூட்டு ஒரு ஃப்ளோவுல நல்லா இருக்கேன்னு நானும் அதுகூடவே சேர்ந்து பயணிக்கிறேன். எல்லாம் நல்லபடியா போகுது. போற வரைக்கும் போகட்டுமே” என்று சிரிப்பவர், மனோதத்துவ ஆலோசகராவும் பணியாற்றுகிறார்.

``முக்கியமான விஷயங்களுக்குக் கணவர் சேத்தன்கிட்டதான் ஆலோசனை கேட்பேன். அவரும் மீடியாவுல வேலை செய்றதால, என்னோட வேலை விஷயங்களை இயல்பாவே புரிஞ்சுகிட்டு ஊக்கம் கொடுக்கிறார். பெற்றோர் ஒத்துழைப்பு இல்லாம இந்தத் துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்ல. அதேபோல கணவர் ஒத்துழைப்பு இருக்கிறதாலதான் இத்தனை வருஷமா எந்தச் சிக்கலும் இல்லாம சின்னத்திரையில வேலை செய்றேன். குறிப்பா, ஆரம்பகாலத்துல ரொம்பவே கூச்ச சுபாவத்துடன் இருந்தேன். என்னை ரொம்பவே மெருகேத்தினதும் இதே சின்னத்திரைதான்.

மகளுடன் தேவதர்ஷினி
மகளுடன் தேவதர்ஷினி
``தளபதியிடம் பேசினேன்; திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதையும் சொன்னேன்!” - சுப்புலட்சுமி ஜெகதீசன்

எங்க மகள் நியதி கடாம்பி என்ன பண்றான்னுதான் பலரும் கேட்கிறாங்க. படிப்புக்காக `96’ படத்துக்குப் பிறகு அவளால பட வாய்ப்புகளை ஏத்துக்க முடியல. இப்போ ப்ளஸ் டூ முடிக்கப் போறா. டான்ஸ், சினிமா நடிப்புனு பல தளங்கள்ல அவளுக்கு நிறைய ஆர்வம் இருக்கு. அதனாலயே, அடுத்து விஸ்காம் கோர்ஸ்ல சேரப்போறா. இனி தொடர்ந்து நடிக்கவும் செய்வா. அவளுக்கு பெற்றோரா முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” என்று புன்னகையுடன் கூறுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு