Published:Updated:

`வீட்டுக்காரரை மிரட்ட இப்படியும் ஒரு வழி இருக்குல்ல!' - ஃபேஸ்புக் பதிவு குறித்து மோனிகா

அய்யனார் ராஜன்

தன் மகன் ஜேடனுக்கு `தம்பி வரப்போறான்' என ஃபேஸ்புக்கில் பதிவிட்டது குறித்து `வானிலை' மோனிகா விளக்கம் அளித்துள்ளார்.

மோனிகா
மோனிகா

`எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஜேடனுக்குத் தம்பி வரப்போறான்...' - டிவி பிரபலமும் முன்னாள் `வானிலைச் செய்தி' வாசிப்பாளருமான மோனிகாவின் முகநூல் பக்கத்தில்தான் நேற்றைய தினம் (10.9.19) இப்படியொரு ஒன்லைன் போஸ்ட். ஜேடன், மோனிகாவின் மகன்.

அவ்வளவுதான்.. அடுத்த நொடியிலிருந்தே வரிசை கட்டத் தொடங்கின வாழ்த்து கமென்ட்ஸ். நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்லாது, அவருடைய டிவி, சினிமா நண்பர்களும் `டேக் கேர் மா' என அக்கறை மழையைப் பொழிய, அடுத்த சில மணி நேரங்களில், `இதோ ஜேடனும் அவனுடைய தம்பியும்' எனத் தன் மகன் ஒரு நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் மோனிகா. அதிர்ந்து சிரித்தது மோனிகாவின் நண்பர் வட்டம்!

கணவருடன் மோனிகா
கணவருடன் மோனிகா

``ஏன் இந்த விளையாட்டு'' என மோனிகாவிடமே கேட்டேன்.

``வீட்ல ஒரு நாய்க்குட்டி வளர்க்கணும்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை. என் கணவர்கிட்ட கேட்டுட்டே இருந்தேன். மனுஷன் வாங்கித் தரவே இல்லை. `தனி வீட்டுல இருந்தா நாய் வளர்க்கலாம். ஃபிளாட்ல இருக்கோம். இங்கெல்லாம் பராமரிக்கிறது கஷ்டம்'ங்கிற பதிலையே சொல்லிட்டிருந்தார்.

என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருந்தப்பதான், என்னை மாதிரியே என் பையனுக்கும் நாய்க்குட்டி மேல பாசம் வர, அவனைக் கேட்கவிட்டேன். மகன் கேட்டா மறுப்பாரா.. வாங்கித் தந்துட்டார்'' என்கிறார்.

``நாய்க்குட்டி கிடைச்சது இருக்கட்டும், `ஜேடனுக்குத் தம்பி'னு ஏன் பரபரப்பைக் கிளப்பினீங்க?'' என்றதும்,

``கொஞ்சம் ஃபன் பண்ணலாம்னு நினைச்சேன். அதுவும் போக, என்னை ரொம்ப நாளாக் காக்க வச்சாருல்ல, அதுக்காக அவருக்கு ஏதாவது தண்டனை தர வேணாமா.. என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமே அவருக்கும் தெரிஞ்சவங்கதான். அதனால நான் போஸ்ட் போட்டதுமே, அவரோட மொபைலும் அலற ஆரம்பிச்சிடுச்சு. இதைப் பலரும் சீரியசா எடுத்துக்கிட்டு மெடிக்கல் அட்வைஸ்லாம் கொடுக்கத் தொடங்கிட்டாங்க.

ஜிஞ்சருடன் ஜேடன்
ஜிஞ்சருடன் ஜேடன்

அப்புறம்தான் மேட்டர் கொஞ்சம் சீரியசா போகுதுங்கிறதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. அவரும், `அம்மா தாயே, அதான் வாங்கித் தந்துட்டேன்ல... ஏன் இந்த மாதிரி பண்ணிட்டிருக்க, முதல்ல, அதை ரீவில் பண்ணு'னு கெஞ்சினார். பிறகுதான், சரி, போகட்டும்னு நாய் ஃபோட்டோவை போட்டேன். வீட்டுக்காரரை மிரட்ட இப்படியும் ஒரு வழி இருக்குல்ல'' எனச் சிரிக்கிறார் மோனிகா.

நாய்க்குட்டிக்கு மோனிகா வைத்திருக்கும் பெயர் ஜிஞ்சர்!