Published:Updated:

``என்னை மன்னிச்சு ஏத்துப்பீங்களா அகிலாம்மா..?!'' பாலு மகேந்திரா மனைவிக்கு மௌனிகாவின் வேண்டுகோள்!

மௌனிகா
மௌனிகா ( படம்: பா.காளிமுத்து )

``நானும் இந்த 5 வருஷத்துல பல முறை அகிலாம்மாவைச் சந்திக்க முயற்சி பண்ணேன். ஆனா, இப்ப வரைக்கும் முடியலை. அம்மாவுக்கும் சரி, அவங்க மகன் சங்கிக்கும் சரி, என் மீது கோபம் இருக்கலாம். ஆனா அந்தப் புள்ளையாலதான் அன்னைக்கு கடைசி நிமிஷத்துல அவர் முகத்தை என்னாலப் பார்க்க முடிஞ்சது.''

மெளனிகா... ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்காத முகம். இயக்குநர் பாலு மகேந்திராவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர், பின்னர் பாலுமகேந்திராவின் வாழ்க்கையில் இணைந்தார். சில காலம் சத்தமில்லாமல் இருந்த மெளனிகா இப்போது மீண்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரிடம் பேசினேன்.

மௌனிகாவுடன் பாலு மகேந்திரா
மௌனிகாவுடன் பாலு மகேந்திரா

``கடைசியா ஏ.வி.எம். தயாரிச்ச `சொர்க்கம்’ சீரியல்ல நடிச்சிருந்தேன். சீரியல்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி, இதுவரைக்கும் சாஃப்ட்டான கேரக்டர்களே எனக்கு அமைஞ்சது. ஆயுத எழுத்து’ காளியம்மா டைப் கேரக்டரை முதல் தடவையா இப்பதான் பண்றேன். அந்த கெட்-அப், மிரட்டலான பார்வை, பாடி லாங்குவேஜ்... எனக்கே இப்ப காளியம்மாவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இந்தக் கேரக்டருக்குள் என்னைக் கொண்டு வந்தது ரமணகிரிவாசன். `இப்படித்தான் பார்க்கணும்', `இந்த மாதிரிதான் பேசணும்'னு சின்னச் சின்ன விஷயத்தையும் ரசிச்சுச் செதுக்கிய பெருமை அவருக்குத்தான் சேரும்’’ என்றவரிடம்,

``நடிப்புக்கு ஏன் இவ்ளோ பெரிய இடைவெளி?'’ என்று கேட்டேன்.

``ஒரு பிசினஸ்ல பிசியா இருந்தேன். அந்தப் பரபரப்பு, உற்சாகமெல்லாம் காலியாகிற மாதிரி அடுத்தடுத்து வாழ்க்கையில ரெண்டு சோகங்கள். இந்த நாள் வரையிலான என் வாழ்க்கையில் நான் அதிகமா நேசிச்சது ரெண்டு பேர். ஒருவர் என்னுடைய கணவர் பாலு மகேந்திரா. இன்னொரு ஜீவன் என் சகோதரி மகள் உதயா. ஒரு புள்ளைய வயித்துல சுமக்கிற பாக்கியத்தைத் தராத அந்த ஆண்டவன், நான் வளர்த்ததையும் என்கூட இருக்க விட்டு வைக்கலை.

உதயாவுக்கும் பாலுவுக்கும் ரொம்பவே கனெக்ட்டிவிட்டி இருந்தது. அவ என்னோட அக்கா வயித்துல உருவான நேரம்தான் என் வாழ்க்கையில இவர் வர்றார். அவ தவழ்ந்து, நடந்து, ஓடியாடி விளையாடிய நாள்கள்ல தோள்மேல தூக்கி வெச்சுக் கொஞ்சுவார். அவருக்குப் பொண்ணு இல்லாத குறையை இவதான் தீர்த்து வெச்சா. எல்லா விஷயத்துக்கும் `அங்கிள்கிட்ட கேட்கலாம்’னு சொல்லுவா. அவ கல்யாணம் உட்பட அவளோட எல்லா விஷயத்துலயும் முன்னாடி நின்னு இவர்தான் செஞ்சார்.

மௌனிகா, பாலு மகேந்திரா
மௌனிகா, பாலு மகேந்திரா

நான்தான் பாவி. எப்படி அவரோட கடைசி நாள்கள்ல பேசாம இருந்துட்டேனோ, அதேபோல விபத்துல உதயா இறக்கிற தருணத்துலயும் சில நாள்கள் அவளோட பேசலை. அம்மா பொண்ணுக்கிடையில வர்ற சின்னச் சின்ன சண்டைதான். ஆனா அவளுக்கு உள் மனசுல ஏதோ தெரிஞ்சிருக்கு. சாகறதுக்கு மூணு நாள் முன்னாடி `அங்கிள் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்’னு ஸ்டேட்டஸ் வச்சிருந்திருக்கா. எல்லாம் முடிஞ்சிடுச்சு. 2014-ல் அவர் விட்டுட்டுப்போன வலியில இருந்து மீள்வதற்குள்ளேயே 2018-ல் இந்தப் பொண்ணு...’’ - மௌனிகாவின் வார்த்தைகளில் வலி. சில நிமிட மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார்...

``எத்தனை நாளுக்கு வீட்டுக்குள்ளேயே அழுதுட்டு கிடக்கறது? அதுவும் போக, நான் பிசினஸ் பண்ணிகிட்டிருந்தப்ப `என் காலத்துக்குப் பிறகும் நீ நடிக்கணும்’னு சொல்லி என்கிட்ட சத்தியம் வேற வாங்கியிருந்தார். அதனால மெதுவா படங்கள்ல நடிக்கத் தொடங்கினேன். இப்ப ரெண்டு சீரியல்ல நடிக்கிறது அந்தச் சூழலைக் கொஞ்சம் மறக்கச் செய்யுது. சினிமாவுலயும் பாரதிராஜா இயக்கியிருக்கிற `ஓம்’ படத்துல நடிச்சிருக்கேன். 'அசுரன்’ படத்துலகூட நடிக்க வெற்றிமாறன் கூப்பிட்டிருந்தார். அந்த வாய்ப்பை என்னால பயன்படுத்திக்க முடியாமப் போயிடுச்சு. தொடர்ந்து பழையபடி நடிக்கலாம்னு இருக்கேன். அதேபோல என் வாழ்க்கையில் இன்னும் ஒரேயொரு ஆசை. அது மட்டும் நிறைவேறினா போதும்.

உதயாவுடன் மௌனிகா
உதயாவுடன் மௌனிகா

அவர் இருந்தப்ப ஒருமுறை என்கிட்ட இப்படிக் கேட்டார்...

`நான் போன பிறகு அகிலாகிட்ட (பாலு மகேந்திராவின் முதல் மனைவி) பேசுவியா, அவளைப் போய்ப் பார்ப்பியா?' - அவர் இப்படிக் கேட்டது மட்டும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு.

நானும் இந்த 5 வருஷத்துல பல முறை அகிலாம்மாவைச் சந்திக்க முயற்சி பண்ணேன். ஆனா, இப்ப வரை அது முடியலை. அம்மாவுக்கும் சரி, அவங்க மகன் சங்கிக்கும் சரி; என் மீது கோபம் இருக்கலாம். ஆனா அந்தப் புள்ளையாலதான் அன்னைக்கு கடைசி நிமிஷத்துல அவர் முகத்தை என்னால பார்க்க முடிஞ்சது. இப்பவும் எங்காச்சும் பார்த்தா முகத்தைத் திருப்பிட்டுப் போறவர் இல்லை அவர். நாகரிகமானவர். உயிர்களோட வலி, ஈவு இரக்கம் தெரியற மாதிரிதான் பாலு மகேந்திரா தன்னோட புள்ளையை வளர்த்திருக்கார். ஆனாலும், ஏனோ இன்னும் அவங்க வீட்டு வாசலை மிதிக்கிற சந்தர்ப்பம் எனக்கு அமையலை.

பாலு மகேந்திரா
பாலு மகேந்திரா

ஒண்ணும் வேண்டாம், அவங்க முகம் பார்த்து `தப்புதான் பண்ணிட்டேன்... மன்னிக்க மாட்டீங்களா அகிலாம்மா’னு இந்த நாலு வார்த்தையைச் சொல்லிடணும், அவ்ளோதான். விகடன் மூலமா இப்ப நான் அகிலாம்மாகிட்ட பேசுறேன். `அவரோட சொத்துக்கோ, அவர் மீதான உரிமையில பங்கு கேட்டோ நான் உங்ககிட்ட வர விரும்பல. அதுவும் போக, அவர் அன்னைக்குக் கேட்ட அந்தக் கேள்விக்காக மட்டுமே நான் உங்களை சந்திக்கணும்னும் நினைக்கலை. எனக்கே உங்ககூட இருக்கணும்னு ஆசையா இருக்கு அகிலாம்மா. ஆரம்ப காலத்துல எப்படிப் பேசிச் சிரிச்சிட்டு இருந்தேனோ அதேபோல என் மிச்ச காலத்துலயும் அப்படி இருக்க ஆசைப்படறேன்.

என்னை மன்னிச்சு ஏத்துப்பீங்களா அகிலாம்மா..?''

அடுத்த கட்டுரைக்கு