Election bannerElection banner
Published:Updated:

``அப்படி ஆசைப்பட்டிருந்தா, 20 வயசுல கல்யாணம் பண்ணியிருப்பேனா..!? - நீலிமா இசை

நீலிமா இசை
நீலிமா இசை

''கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கு. நான் சிவன், ஷிர்டி சாய்பாபா, ஜீசஸ் என எதையும் பாகுபாடு இல்லாமல் வணங்குபவள். என்னைப் பொறுத்தவரை எந்த மதமும் சம்மதம்தான்'' நீலிமா இசை.

'தேவர் மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'விரும்புகிறேன்', 'தம்' போன்ற படங்களில் நடித்தார். மேலும், சில வருடங்கள் கழித்து 'மொழி' , 'ராஜாதி ராஜா', 'சந்தோஷ் சுப்ரமணியம்’, 'நான் மகான் அல்ல' போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தார் நீலிமா இசை. இவர், `நான் மகான் அல்ல’ படத்துக்காக சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றுள்ளார். தற்போது, சீரியல் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார் நீலிமா இசை. அவரிடம் பேசினோம்.

''என்னுடைய சீரியல் வாழ்க்கை 'மெட்டி ஒலி'யிலிருந்து தொடங்கியது. 'நீங்க ஏன் இன்னும் ஹீரோயினா நடிக்கல'னு கேட்கிறாங்க. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு அமையாது. எனக்கு ஹீரோயினா நடிக்கணும் என்கிற கனவும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால், 20 வயதில் கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். நான் 20 வயதிலேயே வாழ்க்கையில் செட்டில் ஆகிட்டேன். அதனால், நான் எதையும் பிளான் பண்ணல. நம் வாழ்க்கையில் எது எப்போது நடக்கும் என்பது தெரியாது. என்னை ஹீரோயினாக வைத்து படம் எடுக்க ஏன் எந்த இயக்குநரும் முன் வரவில்லை என்பதுதான் என் கேள்வி...'’ என்றவர்,

''இன்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனக்கு, டி.ஆர்.பி என்றால் முன்பெல்லாம் தெரியாது. இப்போது, மக்களுக்கு அதெல்லாம் தெரியுது. அதனால், அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்ற விஷயங்களைக் கொடுக்கவேண்டியிருக்கிறது'' என்றவரிடம், உலகத்தின் மிக உயரமான கட்டடமான பூர்ஜ் கலிஃபா (burj khalifa) வுக்குச் சென்று வந்த அனுபவம் பற்றி கேட்டோம்.

நீலிமா இசை
நீலிமா இசை

''உலகின் மிக உயரமான பில்டிங் அது. வி.ஐ.பி-க்கான இடத்திலிருந்துதான் போட்டோ எடுத்தோம். பூர்ஜ் கலிஃபாவுல இருந்து முழு துபாயைப் பார்க்கலாம். என் மகள் அதிதி இசையின் இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடத்தான் அங்கே போனோம். முதல் பிறந்தநாள், சிங்கப்பூரில் செலிபிரேட் பண்ணோம். அந்த இடம் உங்களை முழுவதுமாக மாற்றிவிடும். ஈஃபில் டவர் மேல் ஏறும்போதுகூட குட்டிக்குட்டி இடங்களாகத் தெரியும். ஆனால், அதைவிட இரண்டு மடங்கு பெரிய இடம், பூர்ஜ் கலிஃபா. பகல், இரவு என இரண்டு நேரத்திலும் இருந்தோம். கலர்ஃபுல்லான இடம். என்னதான் உலகம் முழுக்க சுற்றி வந்தாலும், நமக்கு எல்.ஐ.சிதான் எப்போதுமே பெரிய உயரமாகத் தெரியும்'' என்றவர், தன்னுடைய கரியர் பற்றி பேச ஆரம்பித்தார்.

``என் பொண்ணு வேலைக்குப் போனால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்கிற நிலையில்தான் என் அப்பா, அம்மா என்னை நடிக்க அனுப்பினாங்க. சிவாஜி ஐயாவில் இருந்து ஆரம்பித்த என் கரியர், இப்போது ராதிகா மேடம் வரை பெரிய ஆட்களுடனே பயணிக்கவைத்திருக்கிறது. சிவாஜி சார் கொடுத்த விருது எனக்கு எப்போதும் பொக்கிஷம். அதேபோல, 'பாண்டவர் பூமி' படம் குடும்பக் கதை என்பதால், நிறைய பேர் அதில் நடித்திருந்தோம். ராஜ்கிரண் அப்பா நல்ல மனிதர். அப்போது நான் ஏழாவது படிச்சிட்டு இருந்தேன்'' என்றவரிடம் அவருடைய குடும்பத்தைப் பற்றிக் கேட்டதற்கு...

நீலிமா இசை
நீலிமா இசை

''எல்லோருக்கும் நல்லது கெட்டது வாழ்க்கையில் நடந்திருக்கும். அதைக் கடந்து வர பக்கபலமாக ஒருவர் இருக்க வேண்டும். அப்படி என் கணவர் இசை எனக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறார்; இருக்கிறார். இப்போது, எங்கள் இரண்டு பேருக்குமான உலகமாக இருப்பவர் எங்கள் மகள் அதிதி இசை. இதுவரை என் கணவருக்கு நான்தான் அதிகம் கிஃப்ட் கொடுத்திருக்கேன். எனக்கு புடவை பிடிக்கும் என்பதால, என் பிறந்தநாள், திருமண நாள், பொங்கல் என வருஷத்துக்கு மூன்று பட்டுப்புடவை கண்டிப்பாக கொடுத்துவிடுவார். சமீபத்தில் அவருடைய 34-வது பிறந்தநாளுக்கு 34 கிஃப்ட் கொடுத்தேன். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார்'' என்றவரிடம், சத்குரு தொண்டராக இருக்கிறீர்களே... அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள் என்றபோது...

''கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கு. நான் சிவன், ஷிர்டி சாய்பாபா, ஜீசஸ் என எதையும் பாகுபாடு இல்லாமல் வணங்குபவள். என்னைப் பொறுத்தவரை எந்த மதமும் சம்மதம்தான். இந்த வருடத்தோடு ஐந்து வருடம் நான் ரமலான் நோன்பு இருந்திருக்கேன். சத்குருவை நான் கடவுளாகப் பார்க்கல, குருவாகத்தான் பார்க்கிறேன். ஒரு மனிதனுக்கு குருமாருடைய ஆசீர்வாதம் எப்போதும் தேவை. அவர் சத்குருவாகவோ, பாம்பாட்டியாகவோ, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்க ஆசிரியரிடம் கத்துக்கிற மாதிரி அவர்களிடம் நல்ல விஷயங்களை, போதனைகளைக் கற்றுக்கொள்ள முடியும். நான் நிறைய ஆன்மீக ஸ்தலங்களுக்குப் போவதுண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன். ஒரு மனிதனுக்கு சுய தேடல் முக்கியம் என நான் நினைப்பேன். அந்தத் தேடலை நோக்கித்தான் என் பயணம் இருக்கு.''

ராதிகா உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம்..?

நீலிமா இசை
நீலிமா இசை

''என்னைப் பொறுத்தவரை பர்சனல், அலுவல் என எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்கு மூல காரணம் ராதிகா மேடமாகத்தான் இருக்க முடியும். நானே ஒரு சீரியலின் தயாரிப்பாளராகி இருக்கேன். 'நிறம் மாறாத பூக்கள்' சீரியல் 500 எபிசோட்ஸை நெருங்கியிருக்கு என்றால், அதற்கும் ராதிகா மேடம்தான் காரணம். நான் அவரின் மகளாக 90-களில் நடிக்க ஆரம்பிச்சேன். அதற்குப் பிறகு, 'செல்லமே', 'வாணி ராணி' எனப் பல சீரியல்களில் அவரது புரொடக்‌ஷனில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். அவங்ககூட இருந்தா எதையாவது சாதிக்கணும் என்கிற தேடல் வந்துடும். அப்படி ஒரு திறமைசாலி அவங்க. அந்த மாதிரி ஆட்கள் நம்மகூட இருந்தா, நாமளும் அவங்க மாதிரி ஆகிடுவோம். அதனால்தான், அவர் எப்போதும் எனக்கு ரோல் மாடல்'' என்கிறார் நீலிமா இசை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு