சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'வானத்தைப் போல'. இந்தத் தொடரின் அடிப்படை அண்ணன் - தங்கை பந்தம். இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், இந்தத் தொடரில் அண்ணன், தங்கை கதாபாத்திரத்தில் நடித்த இருவரும் தொடரில் இருந்து விலகியதை அடுத்து தற்போது பொன்னி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ப்ரீத்தி குமாரும் அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார்.

கன்னட சீரியல் உலகில் பிரபலமான ஸ்வேதா கெல்ஜ் இதில் நாயகி துளசியாக நடித்து வந்தார். அவர் விலகியதும் நடிகை மன்யா ஆனந்த் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல, அண்ணன் சின்ராசாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் தமன் அந்தத் தொடரிலிருந்து விலகியதும் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்த நடிகர் ஶ்ரீ, அந்தக் கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ப்ரீத்தி. அவர் இந்தத் தொடரில் பொன்னி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். இது குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக கனத்த மனதுடன் 'வானத்தைப் போல' தொடரில் இருந்து விலகுகிறேன். கண்ணியமான மெளனம் காக்க முடிவு செய்துள்ளேன்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

பொன்னி கதாபாத்திரத்தில் இனி ப்ரீத்திக்கு பதிலாக 'ஈரமான ரோஜாவே சீசன் 2'வில் நடித்துக் கொண்டிருக்கும் சாந்தினி பிரகாஷ் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் விலகுவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.