Election bannerElection banner
Published:Updated:

``கருணாநிதி, ஜெயலலிதா கூப்பிட்டும் அரசியலுக்கு வரல; ஆனா இப்போ..?" - புதிய முடிவு குறித்து ராதிகா

கணவர், மகளுடன் ராதிகா
கணவர், மகளுடன் ராதிகா

சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் நடிகை ராதிகா, `சித்தி 2’ சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக ராதிகாவிடம் பேசினோம்.

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகளில் முக்கியமானவர் ராதிகா. 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருபவர், சின்னத்திரைக்கும் புதிய பாதையை வகுத்துக் கொடுத்துள்ளார். `சித்தி’யில் தொடங்கி, தற்போது `சித்தி 2’ வரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையிலும் கோலோச்சி வருகிறார். இந்த நிலையில், `சித்தி 2’ சீரியலில் இருந்து விடைபெறுவதாக அறிவித்திருக்கிறார்.

'சித்தி 2' சீரியல் டீம்
'சித்தி 2' சீரியல் டீம்

ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ``கொஞ்சம் மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். இப்போதைக்கு `சித்தி 2' தொடரில் இருந்து விலகுகிறேன். என்னுடன் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரிடமும் இருந்து சோகத்துடன் விடை பெறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். கணவர் சரத்குமாருடன் தீவிர அரசியலில் ஈடுபடும் நிலைப்பாட்டில் ராதிகா இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது தொடர்பாக ராதிகாவிடம் பேசினோம்.

``லண்டன்ல படிச்சுகிட்டு இருந்த நிலையில, லீவுக்காகச் சென்னை வந்திருந்தேன். அப்போ, எதேச்சையா பாரதிராஜா சார் என்னைச் சந்திச்சதும், சினிமா வாய்ப்பு கொடுத்ததும் கனவு மாதிரியான தனிக்கதை. சினிமாவுல நடிக்க சுத்தமா விருப்பம் இல்லாம இருந்தேன். அதனால, ரெண்டு நாள்கள்தான் நடிப்பேன். அதுக்கு மேல என் தொந்தரவு தாங்காம, என்னை நடிக்கச் சொல்ல மாட்டாங்கன்னுதான் நினைச்சேன். `கிழக்கே போகும் ரயில்’ படத்துல நல்லபடியா நான் நடிச்சு முடிச்சது இப்போ வரை எனக்கு விடை கிடைக்காத ஆச்சர்யம்.

ராதிகா
ராதிகா

அதைச் சாத்தியப்படுத்தியவர் பாரதிராஜா சார். நான் பணியாற்றிய ஒவ்வோர் இயக்குநருக்குமே, என்னோட நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்ததுல முக்கியப் பங்குண்டு. ஆனாலும், ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் 31-ம் தேதி எனக்குள் ஓர் எண்ணம் தோணும். `நடிச்ச வரைக்கும் போதும். இத்தோடு சினிமாவுல இருந்து விலகிடலாம்’னுதான் நினைப்பேன். ஆனா, தவிர்க்க முடியாத காரணங்களால அந்த முடிவை உடனே கைவிட வேண்டியதா போயிடும். `சினிமாவையும் உன்னையும் பிரிக்கவே முடியாது’ன்னு என்னைச் சார்ந்த பலரும் கிண்டல் பண்ணுவாங்க.

இப்படியே 40 வருஷங்களைக் கடந்தும் இன்னும் ஆக்டிவ்வா பல மொழி சினிமாக்கள்லயும் நடிச்சுட்டு இருக்கேன். இது எனக்கு மலைப்பான ஆச்சர்யம்தான். இதே எண்ணம், சின்னத்திரையிலயும் எனக்கு வரும். 20 வருஷங்களுக்கு முன்னாடி `சித்தி’ சீரியல்ல நடிச்சது, சின்னத்திரையின் பொற்காலம்னு சொல்லலாம். அப்போ பொழுதுபோக்கு விஷயங்கள் பெரிசா இல்ல. சினிமாவுக்கு இணையான முக்கியத்துவம் சீரியலுக்கும் இருந்துச்சு.

`கிழக்குச் சீமையிலே' படத்தில் ராதிகா...
`கிழக்குச் சீமையிலே' படத்தில் ராதிகா...

அதுவரை சினிமா நடிகையா எனக்குக் கிடைச்ச மக்களின் அன்பு, அந்த ஒரு சீரியல் மூலமாகவே கிடைச்சது. எனக்கும், அந்த சீரியல் சம்பந்தப்பட்ட பலருக்கும் பெருமித உணர்வை `சித்தி’ கொடுத்துச்சு. ஆனா, இப்போதைய காலம் அப்படியில்ல. தொழில்நுட்ப ரீதியாவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும், கால சூழல்களும் ரொம்பவே மாறிடுச்சு. அதுக்கெல்லாம் ஈடு கொடுத்து இடைவிடாம சின்னத்திரையிலயும் வொர்க் பண்ணிட்டேன்.

இந்த நிலையில, புதிய பொறுப்புகளுடன், புதிய முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் இப்போ எனக்கு ஏற்பட்டிருக்கு. கட்சிப் பணிகள்ல ஆக்டிவ்வா இருக்கிற என் கணவர் சரத்குமாருக்குப் பக்கபலமா இருக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு. சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள் கூடியிருக்கு. அதனால, தினமும் சின்னத்திரை ஷூட்டிங் போக நேரம் இருக்காது. அதனாலதான், `சித்தி 2’ சீரியல்ல இருந்து விலக முடிவெடுத்திருக்கேன். என்னோட முடிவை சன் டிவி தரப்பிலும் ஏத்துக்கிட்டாங்க.

கணவருடன் ராதிகா
கணவருடன் ராதிகா

சினிமா, சின்னத்திரை ரெண்டுலயும் 20 வருஷங்களுக்கு முன்னாடி இருந்த நிலை இன்னைக்கு இல்ல. குறிப்பா, நிறைய சேனல்கள் வளர்ச்சியடைஞ்சிருக்கிற நிலையில, ஒரு சீரியலை வெற்றிகரமா கொண்டுபோக ஒவ்வொரு நாளும் மெனக்கெட வேண்டியிருக்கு. சேனல் நிர்வாகத்துக்கும், சீரியல் தயாரிப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்கும்தாம் அந்த நிலை புரியும். சின்னத்திரையிலயே, வெற்றியுடன் சில தோல்விகளையும் சவாலான பல தருணங்களையும் எதிர்கொண்டிருக்கேன். இங்க ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களைக் கத்துக்கிறது பெரிய சுவாரஸ்யம்.

இந்தக் கால மாற்றங்களைக் கடந்தும் தொடர்ந்து இத்தனை வருஷங்கள் சின்னத்திரையிலயும் வேலை செஞ்சது பெருமிதமா இருக்கு. இந்தப் பந்தத்துல இருந்து பிரேக் எடுக்கிறதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. ஆனா, என்னோட ராடான் நிறுவன தயாரிப்புல `சித்தி 2’ சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகும். என்னோட கேரக்டர் இல்லாம கதை நகரும். சட்டமன்றத் தேர்தல் பிரசாரங்கள் முடிஞ்ச பிறகு, மறுபடியும் இதே சீரியல்ல நான் வருவேனான்னு சூழலைப் பொறுத்துதான் முடிவு எடுக்கணும். இதுக்கிடையே, முன்பே ஒப்புக்கொண்டபடி தமிழ், தெலுங்குல பல படங்களும், மூணு வெப் சீரிஸ் புராஜெக்ட்ஸும் பண்றேன்" என்றவர், அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் பேசினார்.

கருணாநிதியுடன்...
கருணாநிதியுடன்...
ராதிகா... 80'ஸ் மட்டுமா, மில்லினியல்ஸுக்கும் இவரைப் பிடிக்கும்... ஏன் தெரியுமா? #42YearsofRadhika

``என்னோட அப்பா அரசியல்ல ஈடுபாட்டுடன் இருந்தவர். அவரோட வாழ்க்கைப் பயணத்துல இருந்தே, நிறைய அரசியல் விஷயங்களையும் கத்துக்கிட்டேன். அப்புறம் பல அரசியல் தலைவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைச்சது. அரசியல் ரீதியா எதிரெதிர் திசையில பயணிச்ச போதும், `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ன்னு எங்க மேல அன்பு செலுத்தினார் கலைஞர் கருணாநிதி. அவரும், ஜெயலலிதா உட்பட பல அரசியல் தலைவர்களும் என்னை நேரடி அரசியலுக்கு அழைச்சிருக்காங்க. அப்போதெல்லாம் அதுக்கான சூழல் எனக்கு அமையல. ஆனா, அவங்க ரெண்டு பேர் மீதும் எனக்குப் பெரிய மதிப்பு உண்டு.

1989 முதலே தேர்தல் பிரசாரங்கள்ல ஈடுபட்டிருக்கேன். தொடர்ந்து ஒவ்வோர் அரசியல் மாற்றத்தையும் கவனிச்சுகிட்டுதான் இருக்கேன். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரா என் கணவர் பல வருஷங்களா ஆக்டிவ்வா அரசியல்ல இருக்காரு. என்னாலான பங்களிப்பைக் கொடுத்துட்டு இருந்தேன். இப்போ எங்க அரசியல் பயணத்துல கூடுதல் உத்வேகத்துடன், புதுப் பரிமாணத்தோடு களமிறங்கியிருக்கோம். கட்சியில எனக்கு முதன்மை துணைப் பொதுச் செயலாளரா பொறுப்பு கொடுத்திருக்காங்க. சமீப காலமா கணவரோடு நானும் கட்சிக் கூட்டங்களுக்கும், மக்களைச் சந்திக்கவும் போயிட்டிருக்கேன். சட்டமன்றத் தேர்தல்ல எங்க கட்சியின் நிலைப்பாடு, கூட்டணி பத்தியெலாம் சீக்கிரமே என் கணவர் அறிவிப்பாரு.

Radhika
Radhika
``நீ ஏன் என்கூட சேர்ந்து நடிக்கிறன்னு, எஸ்.பி.பி சார் கேட்டுக்கிட்டே இருந்தார்!''- ராதிகா

எதிர்பார்ப்புக்கும் மீறி என் வாழ்க்கையில நிறைய விஷயங்களை மக்கள் எனக்குக் கொடுத்திருக்காங்க. அதுக்கு கைம்மாறா, அரசியல் களத்துல ஆக்கபூர்வமா சில விஷயங்கள் செய்ய ஆசைப்படுறேன். மக்கள் பிரதிநிதியாக வேலை செய்யும் எண்ணமும் எனக்கு ஏற்பட்டிருக்கு. அதனால, தேர்தல்ல வேட்பாளரா களமிறங்குறது உட்பட எந்த முடிவையும் எடுக்கத் தயாரா இருக்கேன். பொறுத்திருந்து பார்ப்போமே!" என்று புன்னகையுடன் முடித்தார் ராதிகா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு