Published:Updated:

`கடைசி நாள்கள் மட்டும்தான் எனக்கு சவாலா இருந்துச்சு... ஏன்னா?!' - `பிக்பாஸ்' ஸ்டோரி சொல்லும் ரம்யா

குடும்பத்தினருடன் ரம்யா பாண்டியன்
குடும்பத்தினருடன் ரம்யா பாண்டியன்

`பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, முதல் முறையாகப் பேட்டி கொடுக்கும் ரம்யா பாண்டியன், அந்த நிகழ்ச்சி அனுபவம் முதல் பர்சனல் வரை பகிர்கிறார் உற்சாகம் குறையாமல். #VikatanExclusive

`சிங்கப் பெண்’ பட்டத்துடன் `பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரம்யா பாண்டியன், செம ஹேப்பி. மொட்டைமாடி போட்டோஷூட்டில் இருந்து டிரெண்ட் ஆனவர், `குக் வித் கோமாளி’, `கலக்கப்போவது யாரு’, `பிக்பாஸ்’ எனக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வேகமாக வளர்ந்து வருகிறார். நடிகர் சூர்யா தயாரிக்கும் படம் உட்பட இரண்டு படங்களில் நாயகியாக கமிட் ஆகியுள்ளார்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

`பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு முதல் முறையாகப் பேட்டி கொடுப்பவர், அந்த நிகழ்ச்சி அனுபவம் முதல் பர்சனல் வரை பகிர்கிறார் உற்சாகம் குறையாமல்.

``கடந்த சீஸன் `பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலயே எனக்கு வாய்ப்பு கிடைச்சது. நான் யோசனை பண்ணி சொல்றதுக்குள்ள போட்டியாளர்களை முடிவு பண்ணிட்டாங்க. நானும் விட்டுட்டேன். அப்புறம் பட வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தேன். கொரோனா லாக்டெளனால் அந்தத் திட்டமிடல் எல்லாம் நிறைவேறல. அந்த நேரத்துலதான் மறுபடியும் `பிக்பாஸ்’ போட்டியாளரா கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. லாக்டெளன் நேரத்துல வீட்டுல சும்மாவே எத்தனை நாள்தான் இருக்கிறது. அதனால, `பிக்பாஸ்’ வாய்ப்பை நூறு நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம்போல பாசிட்டிவ்வா நினைச்சுகிட்டேன். மூணு மாசம் பொழுதுபோன மாதிரியும் இருக்கும், மக்கள்கிட்ட பெரிய ரீச்சும் கிடைக்கும்ங்கிற எண்ணத்துலதான் உடனே ஓகே சொன்னேன்.

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில்
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில்

முந்தைய `பிக்பாஸ்’ சீஸன்களையெல்லாம் பார்த்திருக்கேன். அந்த அனுபவத்துல, நமக்கு எப்படியான விமர்சனங்களும் கிடைக்கக்கூடும்னு புரிஞ்சது. எது நடந்தாலும், அதை எதிர்கொள்ளும் மனநிலையில்தான் போட்டியாளரா போனேன். முதல் நாள்லேருந்தே மற்ற போட்டியாளர்கள் எல்லோர்கூடவும் இயல்பா பழகினேன். மத்தவங்களும் என்கிட்ட சகஜமா பழகினாங்க. அதனால, தொடக்கத்துல இருந்து 90-வது நாள் வரைக்கும் எந்த விஷயமும் எனக்குச் சவாலாவோ, கஷ்டமாவோ தெரியல. நான் சீக்கிரமே எமோஷனல் ஆக மாட்டேன். அவ்வளவு சீக்கிரம் கோபமும் படமாட்டேன். இது ரெண்டுமே எனக்கு உதவுச்சு.

முடிஞ்சவரை எல்லாப் போட்டியாளர்கள்கூடவும் ஃபிரெண்ட்லியாதான் இருந்தேன். அதேநேரம் சிலருக்குள்ள சண்டை வரும்போதெல்லாம், அந்த இடங்கள்ல எல்லாம் நான் இருந்திருக்க மாட்டேன். என்ன பிரச்னைனு முழுசா தெரிஞ்சுக்காம கருத்து சொல்லி அது யாரையும் மேற்கொண்டு காயப்படுத்திடக் கூடாதுனு கொஞ்சம் அமைதியா இருந்தேன். என் கண் முன்னாடி நடந்த பிரச்னைகளுக்கு உடனே என்னோட கருத்தைப் பதிவு செஞ்சிருக்கேன். நான் யாருக்கும் ஆதரவாவும் இல்ல, எதிராவும் இல்ல. ஒவ்வொரு டாஸ்க்லயும் ஆக்டிவ்வா விளையாடினேன். ஒவ்வொருத்தர் செயல்பாட்டுக்கும் பொதுவான நிலைப்பாட்டுலதான் கருத்து சொன்னேன்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

பல பிரச்னைகளுக்கும் சரியாவே குரல் கொடுத்தேன். சிலர் மேல தப்பு இருக்கும்பட்சத்தில், அவங்ககிட்ட உரிமையோடு தனியா உட்கார்ந்து ஆரோக்கியமா விவாதிக்கவும் செஞ்சேன். அதெல்லாம் டிவியில ஒளிபரப்பாகலைனு நினைக்கிறேன். ஆனா, நான் கொஞ்சம் நியூட்ரலா இருந்ததா சிலர் கருத்து தெரிவிச்சிருக்காங்க. அது அவரவர் நிலைப்பாடு. என் தரப்பில் நான் சரியாவே செயல்பட்டேன். அதைப் போட்டியாளர்களில் சிலரும், என் குடும்பத்தினரும், என் ரசிகர்களும் சரியா புரிஞ்சுகிட்டாங்க. அதுவே எனக்குப் போதும்!

என் தம்பியும் அம்மாவும் `பிக்பாஸ்’ வீட்டுக்குள் வந்துட்டுப் போன பிறகுதான் என்னோட கணிப்பு மாறியிருக்கிறதைத் தெரிஞ்சுகிட்டேன். என்னோட நிலைப்பாடும், மக்களின் கருத்தா கமல் சார் சொன்ன விஷயங்களும் மாறுபட்டிருந்துச்சு. அப்பதான் கொஞ்சம் அப்செட் ஆனேன். அதுக்குப் பிறகு, ஃபைனல் வரைக்கும் அந்த வீட்டுல இருந்த எஞ்சிய நாள்கள் மட்டுமே எனக்குச் சவாலா இருந்துச்சு. இருப்பினும் என் நிலைப்பாட்டில் கடைசிவரை உறுதியா இருந்தேன். நான் திட்டமிட்டபடியே, ஃபைனல் வரைக்கும் வந்தேன். `சிங்கப் பெண்’ங்கிற பட்டம் எனக்குக் கிடைச்சது, நான் எதிர்பார்க்காத பெரிய சந்தோஷம்” என்று சிரிப்பவர், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகான மாற்றங்கள் குறித்துப் பேசினார்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

``அந்த நிகழ்ச்சியில இருந்து நேரா வீட்டுக்கு வந்தேன். தெருவுக்குள் நுழைஞ்சதுமே, சண்டமேளம் அதிர என்னை வரவேற்கப் பலரும் கூடியிருந்தாங்க. எனக்கு வெட்கமாகிடுச்சு. `உன்னை தடபுடலா வரவேற்க அம்மாதான் இந்த ஏற்பாடுகளையெல்லாம் செஞ்சாங்க’ன்னு உறவினர்களும் நண்பர்களும் சொன்னாங்க. அந்த ஒரு நிமிஷம் எமோஷனலாகிட்டேன். உடனே சந்தோஷமாகி எல்லோர்கூடவும் ஜாலியா டான்ஸ் ஆடிட்டு வீட்டுக்குள் போனேன். எனக்கு செம கவனிப்பு இருந்துச்சு. ஆரம்பகாலத்துல எங்க குடும்பத்துல பலரும் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அதனாலதான் என்னவோ தெரியல, ஒருகட்டத்துக்கு மேல எந்தக் கஷ்டமும் எங்களுக்குப் பெரிசா தெரியல.

ரொம்பவே ஹேப்பியா வாழணும்ங்கிறதுதான் எங்க நோக்கம். அதனால, அம்மா, பொண்ணு, பையன் மாதிரி இல்லாம, எல்லோருமே ஃபிரெண்ட்லியாதான் பழகுவோம். எங்களைச் சோகப்படுத்துறது ரொம்பவே கஷ்டம். இந்த அன்புனாலதான், `100 நாள்கள் என் குடும்பத்தைப் பிரிஞ்சு இருந்தது எனக்குப் பெரிய வருத்தமாவே தெரியல. நிகழ்ச்சியில இருந்து வெளிய வந்ததும் குடும்பத்தினர் கூட மனம்விட்டுப் பேசினேன். எந்த இடத்துலயும் அவங்க என்னைத் தப்பா புரிஞ்சுக்கல.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

`பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் சில எபிசோடுகளை மட்டும் பார்த்தேன். எனக்குச் சில விஷயங்கள் ஏற்புடையதாவும், ஏற்புடையதா இல்லாமலும் இருந்துச்சு. ஆனாலும், அது ஒரு கேம் ஷோ. அந்தக் கண்ணோட்டத்துல எல்லாத்தையும் மறந்துட்டேன். `பிக்பாஸ்’ போட்டியாளர்கள் சிலர்கிட்ட பேசினேன். நடிகர் ஜீவா சாரோட புதிய படத்தின் பிரிவ்யூ நிகழ்ச்சி உட்பட ரெண்டு நிகழ்வுல `பிக்பாஸ்’ போட்டியாளர்கள் பலரும் சந்திச்சுப் பேசினோம்.

இப்ப வரை நேர்லயும், சோஷியல் மீடியா கருத்துகள் மூலமும் பலரும் என்னைப் பாராட்டுறாங்க. சில எதிர்மறை விமர்சனங்களும் வருது. ஆனா, அதை நான் பெரிசா எடுத்துக்கல. ஃபேக் ஐ.டி-யில இருந்து சில போட்டியாளர்கள்மீது தவறான கருத்துகளைச் சிலர் பதிவிடுறாங்க. அதுக்காக வருத்தப்பட்டா நமக்குதான் நஷ்டம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெருவாரியான மக்கள் என்மீது அன்பு செலுத்துறாங்க.

குடும்பத்தினருடன் ரம்யா பாண்டியன்
குடும்பத்தினருடன் ரம்யா பாண்டியன்
``அன்பு ஜெயிக்கும்னு இனியும் நம்புவேன்!" - `பிக்பாஸ்' அர்ச்சனா பளிச் #VikatanExclusive

நான் இதுவரை அதிகமான படங்கள்ல நடிச்சதில்ல. ஆனாலும், குறுகிய காலத்துலயே மக்களின் ஆதரவு எனக்கு அதிகளவுல கிடைச்சிருக்கு. அதனால, நான் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்ல. நான் ரொம்பவே ஹேப்பியா இருக்கேன். `பிக்பாஸ்’ நிகழ்ச்சியால எனக்குக் கூடுதலான புகழும் மக்களின் அன்பும் கிடைக்கும். சினிமா வாய்ப்புகள் வரும்னு எதிர்பார்த்தேன். அது சரியாவே நடந்திருக்கு. சூர்யா சார் பேனர் உட்பட ரெண்டு புதுப் படங்கள்ல கமிட்டாகியிருக்கேன். விரைவில் ஷூட்டிங் போகணும்னு ஆசைப்படுறேன். சினிமாவுல புகழ்பெறணும்ங்கிறதுதான் என்னோட விருப்பம். அது சரியா நடக்கும்னு உறுதியா நம்புறேன்” என்கிற ரம்யா பாண்டியன் மகிழ்ச்சியோடு விடைபெற்றார்.

அடுத்த கட்டுரைக்கு