Election bannerElection banner
Published:Updated:

``குரூப் செக்ஸ் பத்திலாமா ஷோல பேசுவாங்க... அருவருப்பா இருக்கு!" - கொதிக்கும் ரஞ்சினி

Ranjini
Ranjini

``சென்னை உயர்நீதிமன்றமோ, மகளிர், குழந்தைகள் நல ஆணையம் உடனடியாகத் தலையிட்டு இந்த மாதிரி டிவி ஷோக்களைத் தடை செய்யணும். நானுமே சில சட்டபூர்வமான முயற்சிகளில் இறங்கியிருக்கேன்'' என்கிறார் ரஞ்சினி.

`சொல்வதெல்லாம் உண்மை' ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சமயத்தில், லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கும், நடிகைகள் ஶ்ரீப்ரியா,`முதல் மரியாதை' ரஞ்சனி உள்ளிட்டோருக்கும் இடையில் நடந்த சண்டையை ஊரறியும். ``பிரச்னைன்னா போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுக்குத்தானே போகணும்... இவங்க யாரு தீர்ப்பு சொல்றதுக்கு'' என ஶ்ரீப்ரியாவும், ரஞ்சனியும் கேட்க, ``ஷோல நாங்க தீர்ப்பு சொல்றதில்லை'' என்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ``போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுக்குப் போகப் பயந்த அல்லது போக முடியாத பலரோட பிரச்னைகள் இந்த ஷோவுக்கு வந்த பிறகு சரியாகியிருக்கு'' எனப் பதில் தந்திருந்தது நினைவிருக்கலாம்.

ஒருகட்டத்தில் நிகழ்ச்சியில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அணியும் காஸ்ட்யூம்கூட விவாதப்பொருளாகப் பேசப்பட்டது. ``ஷோல பேசற விஷயத்தைக் கவனிக்கச் சொன்னா, நான் காதுல என்ன போட்டிருக்கேன், கழுத்துல என்ன போட்டிருக்கேன், புடவை எப்படிக் கட்டியிருக்கேன்னு எல்லாம் பார்க்கறாங்கன்னா, பார்க்கிறவங்க கண்ணுலதான் கோளாறு'' என்றார் அவர். சில நாள்களில் ஷோவில் பங்கேற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று ஒருவழியாக ஷோவும் முடித்து வைக்கப்பட்டது.

Ranjini
Ranjini

சில மாத இடைவெளியில் மீண்டும் யூடியூப் சேனல் ஒன்றில் அதே டைப்பில் இன்னொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக் கிளம்பினார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். தற்போது அந்த நிகழ்ச்சியானது ஒரு சேனலுக்குக் கைமாறியிருக்கிறது. `நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பும் தொடங்கிவிட்டது.

கேரளாவில் இருந்தாலும் `முதல் மரியாதை' ரஞ்சினி முதல் எபிசோடைப் பார்த்துவிட்டாராம். பழையபடி கண்டனம் தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருந்தவரிடம் பேசினோம்.

``உச்சநீதிமன்றம் 2011-ம் ஆண்டே ஒரு தீர்ப்புல `குடும்பப் பிரச்னைகளுக்கு இந்த மாதிரித் தீர்வு சொல்வது சட்டத்துக்குப் புறம்பானது'னு சொல்லிடுச்சு. ஆனா நாம இப்ப வரைக்கும் இந்த மாதிரி கவுன்சலிங் ஷோக்களை டிவியில பார்த்திட்டேதான் இருக்கோம். அதுவும் தகுதி இருக்கிற உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினாக்கூடப் பரவாயில்லை. அப்படியில்லாம, சினிமா செலிபிரிட்டிகளை வெச்சே நடத்திட்டிருக்காங்க. அவங்களும் இது மாதிரியான பிரச்னைகளை எந்தவிதத்துல அணுகணும்கிற அடிப்படையே தெரியாம நடத்திட்டிருக்காங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடி நான் இந்த மாதிரியான ஷோக்களைத் தடுக்க எடுத்த முயற்சிகளுக்குப் பலன் கிடைச்சாலும், இதோ மறுபடியும் தொடங்கியிருக்காங்களே!

ரஞ்சினி
ரஞ்சினி

முதல் எபிசோடை ஷோ முடியற வரைக்கும் கூடப் பார்க்க முடியலை. அந்தளவுக்கு குரூப் செக்ஸ், அது இதுன்னு என்னங்க இது... ஒரே அருவருப்பா இருக்கு. இப்படியா லட்சக்கணக்கான மக்கள் வீட்டோட உட்கார்ந்து பார்த்திட்டிருக்கிற டிவியில பகிரங்கமாப் பேசுவாங்க? சினிமாவுல குடும்பத்தோடு பார்க்க முடியாத சில படங்கள் வருதில்லையா, டிவியில அந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியா இது இருக்கு. சென்னை உயர்நீதிமன்றமோ, மகளிர், குழந்தைகள் நல ஆணையம் உடனடியாகத் தலையிட்டு இந்த மாதிரி டிவி ஷோக்களைத் தடை செய்யணும். நானுமே சில சட்டபூர்வமான முயற்சிகளில் இறங்கியிருக்கேன்'' என்கிறார் ரஞ்சினி.

ரஞ்சினியின் கருத்து குறித்துக் கேட்க லக்ஷ்மி ராமகிருஷ்ணனைத் தொடர்பு கொண்ட போது, நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவர் பேசினால் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு