Published:Updated:

``சித்ராவைப் போல நிறைய சீரியல் ஹீரோயின்கள் சிக்கியிருக்காங்க!" - விளக்கும் ரேகா நாயர்

சித்ராவின் மரணம் குறித்து பேசிவரும் சித்ராவின் தோழியான ரேகா நாயரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்...

சீரியல் நடிகை சித்ராவின் மரணம் அவரின் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. `சித்ராவின் மரணத்துக்கு என்ன காரணம், ஹேம்நாத்துக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது என அடுக்கடுக்கான கேள்விகள் அவரின் ரசிகர்கள் மனதைக் குடைந்துகொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில்தான் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சித்ராவின் மரணம் குறித்து பேசிவரும் சித்ராவின் தோழியான ரேகா நாயரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்...

``ஹேம்நாத் கைதானதை எப்படிப் பார்க்கிறீர்கள்... `ஹேம்நாத்துக்கு நெருக்கமான அரசியல் சக்திகள் அவரை காப்பாற்றிவிடக்கூடும்' என்றெல்லாம் ஒரு பேச்சு ஓடுகிறதே?"

``அவன் கைதாவான்ங்கிறது முன்னாடியே எதிர்பார்த்ததுதான். அவனைக் காப்பாத்துற அளவுக்கு அவனுக்குப் பெரியளவில் பொலிட்டிகல் சப்போர்ட்லாம் கிடையாது. தமிழக அமைச்சர் ஒருவரின் மகனுடன் ஹேம்நாத்துக்குப் பழக்கம் இருந்தது. அதுவும் பெரியளவு பழக்கமெல்லாம் கிடையாது. அமைச்சரின் மகன் பப்புக்கு வரும்போது கார் ஓட்டுகிற அளவுக்கான பழக்கம்தான். கடந்த ஆறேழு மாசமா அவனும் ஹேம்நாத்கூட டச்ல இல்லை. பொலிட்டிக்கல் சப்போர்ட் இருக்கா இல்லையாங்கிறதைத் தாண்டி இந்தக் கைதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் வெறும் கண் துடைப்புதான். எப்படியா இருந்தாலும் அவன் வெளியில வரத்தான் போறான். ஆனா, ஒண்ணு அவன் வெளியில வந்தாலும் அவன்கூட இருக்கறவங்க அவனை சும்மா விட மாட்டாங்க. ஏன்னா, அந்தளவுக்கு அவன் நிறைய மோசடிகள் பண்ணியிருக்கான்."

``ஹேம்நாத் பற்றி நிறைய குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீங்க... அவர் உங்களுக்கு எப்படிப் பழக்கம்?"

``சில வருஷங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவுல நடந்த ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவை நான் ஹோஸ்ட் பண்ணினேன். தி.மு.க பிரமுகர் ஒருவரின் பையனுடைய ஆடியோ லாஞ்ச் அது. அந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க பிரமுகரின் மகனின் நண்பருடைய நண்பர் என்ற முறையில் ஹேம்நாத் வந்திருந்தான். அங்குதான் ஹேம்நாத் முதல்முறையா எனக்குப் பழக்கம். அதுக்குப் பிறகு பார்ட்டி... சின்னச் சின்ன நிகழ்ச்சிகள்னு நான் சென்ற பல இடங்கள்ல ஹேம்நாத்தைப் பார்த்தேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்குள்ள நட்பு உருவாச்சு. நான் ரொம்ப சோஷியலா எல்லோர்கூடவும் பழகக் கூடிய ஆள். நிறைய ஹெல்ப் பண்ணுவேன். 2015-ல் `சாப்பாட்டுக்கு பணம் இல்லை... ஆட்டோவுக்கு காசு இல்லை'ன்னு சொல்லி ஹேம்நாத் என்கிட்ட பல முறை சின்னச் சின்ன தொகை கேட்பான். நானும் கொடுத்திருக்கேன்.

சித்ரா, ஹேம்நாத்
சித்ரா, ஹேம்நாத்

அந்த நேரத்துலதான், `நான் ஒரு டாக்டரை லவ் பண்ணினேன். கல்யாணம் வரைக்கும்போனது. ஆனா, திடீர்னு அந்தப் பொண்ணு இறந்துட்டாங்க'ன்னு தன்னோட காதலைப் பத்தி ஹேம்நாத் என்கிட்ட சொன்னான். `ஏன்... என்னாச்சு?'ன்னு கேட்டதுக்கு சூசைடு'ன்னு சொல்றாங்க... என்னன்னே தெரியலைன்னு ரொம்ப ஃபீல் பண்ணினான். அப்போ எனக்கு சினிமா உலகத்தைப் பற்றி அவ்வளவா தெரியாது. அதனால அவனை நம்பி அவனுக்கு அட்வைஸ்லாம் பண்ணினேன். ஒருகட்டத்துக்குப் பிறகு, ஹேம்நாத்தை வேறவேற பொண்ணுங்களோட நான் பார்க்கும்போதுதான் அவனுடைய ஒரிஜினல் கேரக்டர் எனக்குத் தெரிஞ்சது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா அவனுடைய நட்பு வட்டத்திலிருந்து நான் விலகிட்டேன். சித்ராவுக்கும் அவனுக்கும் நிச்சயதார்த்தம்’னு எனக்குத் தெரிஞ்சதுமே நான் சித்ராவுக்கு போன் பண்ணி ஹேம்நாத் பத்தி எனக்குத் தெரிஞ்சதையெல்லாம் ஓப்பனா சொன்னேன். ஆனா, அதுக்கு சித்ரா பெருசா ரியாக்ட் பண்ணலை.

இதையெல்லாம் இப்போ நான் வெளியில சொல்றதால `ஹேம்நாத்துக்கும் எனக்கும் காதல் இருந்தது... அவன் என்னுடைய முன்னாள் காதலன்' என்றெல்லாம் சில ஊடகங்கள்ல எழுதுறாங்க. அப்படியெல்லாம் கிடையாது. எனக்குக் கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆச்சு. என் லைஃப்ல லவ்வெல்லாம் கிடையாது. அதுமட்டுமல்ல. நான் சரக்கு அடிக்க மாட்டேன், தம் அடிக்க மாட்டேன். பணத்துக்காக எந்தவிதமான தவறான வழியிலயும் போக மாட்டேன். ஆனா, நான் கிளப்புக்குப் போவேன். பாடுவேன்... கேட்பேன்... வந்துடுவேன். அவ்வளவுதான்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `எனக்கு சில விஷயங்கள் தெரியும்'னு சொல்றீங்க... உங்களுக்கு அப்படி என்ன ரகசியம் தெரியும்?"

``பர்சனலா தெரிஞ்சதை எப்படி ஒரு பொண்ணு மீடியாவுல ஓப்பனா சொல்ல முடியும். என்னை ஒருத்தர் கூப்பிட்டார்னு சொல்லலாம். எதுக்காக... என்ன சொல்லிக் கூப்பிட்டார்னு எப்படிச் சொல்றது? தயவுசெஞ்சு யார்கிட்டயும் சொல்லிராதம்மா'ன்னு சித்ராவுடைய அம்மா என்கிட்ட சொன்ன விஷயங்களையெல்லாம் எப்படி வெளியில சொல்ல முடியும்? சித்ராவை அடக்கம் பண்ணினதுக்கு அடுத்த நாள் நான் சித்ரா வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க வீட்ல இருக்கிற எல்லா எவிடன்ஸையும் அவங்க அம்மா எனக்குக் காட்டினாங்க. சுருக்கமா சொல்லணும்னா அவங்களால இதுக்கு மேலயும் அசிங்கப்பட முடியலை. சித்ராவுடைய அப்பா என் முன்னாலேயே தூக்குப் போட்டுக்கப் போயிட்டார்... சூழல் இப்படி இருக்கும்போது எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிர முடியாது."

ரேகா நாயர்
ரேகா நாயர்

``சரி, பிறகு எந்த நோக்கத்துக்காக இந்த விவகாரம் தொடர்பா தொடர்ந்து பொதுவெளியில பேசிட்டிருக்கீங்க?"

``ஹேம்நாத் மாதிரி இன்னும் நிறைய பேர் இங்கே இருக்காங்க. அவங்களுடைய தொழிலே மீடியாவில் இருக்கும் பொண்ணுங்களை டார்கெட் பண்றதுதான். சித்ரா மாதிரி நிறைய சீரியல் நடிகைகள் அவங்ககிட்ட சிக்கியிருக்காங்க. லைஃப்ல அடுத்தகட்டத்துக்கு எப்படி மூவ் ஆகறதுன்னு தெரியாம அந்த நடிகைகளெல்லாம் தத்தளிக்கிறாங்க. சித்ராவின் தற்கொலைக்குப் பிறகு, அந்த நடிகைகளுக்குத் தெரிஞ்சவங்க எனனை கான்டாக்ட் பண்ணி, `நீ அவங்ககிட்ட பேசு; அட்வைஸ் குடு'ன்னு சொல்றாங்க. நான் எப்படி எல்லார்கிட்டயும் போய்ப் பேச முடியும்? இதுக்கு முன்னால நிறைய பேருக்கு இப்படி அட்வைஸ் பண்ணி நான்தான் அசிங்கப்பட்டிருக்கேன். அவ்வளவு ஏன் ஹேம்நாத் பற்றி சித்ராகிட்ட சொல்லும்போதுகூட சித்ரா என்னுடைய பேச்சைப் பொருட்படுத்தலை.

இங்க வேற ஓர் உலகம் இருக்கு. ஒருநாள் தண்ணி அடிக்காம போய் பப்ல உட்கார்ந்தாதான் அங்க என்ன நடக்குதுன்னு உங்களால தெரிஞ்சுக்க முடியும். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நம்ம வாழ்க்கைக்குத் தேவை இல்லாத விஷயங்களைப் பண்ணும்போது சிக்கல் வரும்னு சிலருக்கு உணர்த்தவும் நடிகைகளை எப்படி வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்னு நினைக்கிற மோசமான ஆண்களுக்கு அலர்ட் கொடுக்கவும்தான் நான் தொடர்ந்து பேசிகிட்டிருக்கேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு