Published:Updated:

"ஜோதிகா 'ஜாக்பாட்'ல ஏன் நடிச்சாங்கன்னே தெரியலை!" - 'நாச்சியார்புரம்' ரேமா

ரேமா
ரேமா

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான 'ஓடிவிளையாடு பாப்பா' நிகழ்ச்சி மூலம் டான்ஸராக அறிமுகமானவர், ரேமா அசோக். தற்போது, 'களத்து வீடு' மூலம் சீரியல்களிலும் களம் இறங்கியிருக்கிறார். டிக் டாக்கில் பிஸியாக இருக்கும் ரேமாவுடன் ஒரு சாட்...

''கலைஞர் டிவியில் 'மானாட மயிலாட சீஸன் 10' முடித்த உடனே விஜய் டிவியில், 'களத்து வீடு' சீரியலுக்கு வாய்ப்பு வந்தது. அதுதான் என்னுடைய முதல் சீரியல். நடிப்பு அனுபவமே எனக்குக் கிடையாது. ஆடிஷன் அப்போ ஒரு சீன் கொடுத்து நடிக்கச் சொன்னாங்க. முதல் டேக்லயே ஓகே ஆகிடுச்சு. தேவி ப்ரியா, சங்கரபாண்டியன், சிவன் ஶ்ரீனிவாசன்னு பெரிய பெரிய நடிகர்கள்லாம் இருந்தது எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயத்தைக் கத்துக்கிட்டேன், அவங்களும் நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க.''

''எனக்கு சொந்த ஊர் மதுரை. அப்பா ஒரு பல்கலைக்கழகத்துல டெக்னிக்கல் வேலையில இருக்கிறார். அம்மா 15 வருடங்களா தனியார் ஸ்கூல்ல டீச்சரா இருந்தாங்க. இப்போ, நான் நடிக்க ஆரம்பிச்ச பிறகு, என்கூடவே இருக்காங்க. நான் அவங்க கிளாஸ்லதான் படிச்சேன். ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடம் எடுப்பாங்க. ஒரு நாள் ஸ்கூல்ல தெரியாம 'மம்மி'னு கூப்பிட்டு செம அடி வாங்கிட்டேன். அதுல இருந்து டீச்சர்னு ஸ்கூல்லேயும், அம்மானு வீட்லேயும்தான் கூப்பிடுவேன். அவ்வளவு கண்டிப்பான அம்மா. அவங்க கிளாஸுக்கு வந்துட்டாலே பயமா இருக்கும். இப்போ அவங்க அப்படியில்ல. எனக்கு எல்லாமே இப்போ அம்மாதான்'' என்றவருக்கு டான்ஸ் மீதான ஆர்வம் வந்த கதையைக் கேட்டேன்.

ரேமா
ரேமா

'’ ‘எதிர்நீச்சல்' படத்துல வர்ற மாதிரி, 'எல்லாக் குழந்தைகளும் நடக்க ஆரம்பிச்சப்போ நீ ஆட ஆரம்பிச்ச'னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. சின்ன வயசுல இருந்தே டான்ஸ் பிடிக்கும். அந்த ஆர்வத்தில் கிளாசிக், வெஸ்டர்ன்னு எல்லா வித நடனங்களையும் கத்துக்கிட்டேன். நிறைய மேடைகள்ல டான்ஸ் பண்ணியிருக்கேன். பாராட்டும் வாங்கியிருக்கேன். சின்ன வயசுல இருந்தே ஃபேஷன் மீதான ஆர்வத்தால, ஃபேஷன் டிசைனிங் முடிச்சேன். இனி காஸ்மொட்டாலஜி பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். எனக்கு தோல் சார்ந்த விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும். எதிர்காலத்தில் பியூட்டி பார்லர், ஸ்டூடியோ வைக்கணும்னு ஆசை'' எனத் தனது ஆசைகள் பற்றிச் சொன்னவரிடம், அவர் நடித்து வரும் படங்கள் பற்றிக் கேட்டேன்.

''அசோக் செல்வன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்ல ஒரு ஹீரோயினா நடிக்கிறேன். படம் மூணு மாசத்துக்கு முன்னாடிதான் ஆரம்பிச்சது. அவர் இன்னொரு படத்துக்காக கெட்டப் சேஞ்ச்ல இருக்கார். அதனால அவரும் நானும் நடிச்ச படம் ரிலீஸ் ஆக இன்னும் கொஞ்ச நாள் ஆகும்."

ரேமா
ரேமா

சமீபத்தில் நீங்கள் பார்த்த படங்களில் உங்களை மிகவும் பாதித்தது எது?

''வாரத்தில் நான்கு படங்கள் ரிலீஸானாலும், அதில் எப்படியாவது ஒரு படம் ஹிட்டாகிடுது. ஜோதிகா மேடம் நடிச்ச 'ராட்சசி' படம் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. ஆனால், கடந்த வாரம் வெளியான 'ஜாக்பாட்' படம் எனக்குப் பிடிக்கலை. ஏன் ஜோதிகா அந்தக் கதையில நடிச்சார்னு இப்போவரைக்கும் எனக்குத் தெரியலை. ஜோதிகா மேம் ஏற்று நடிச்ச அந்தக் கதாபாத்திரமே எனக்குப் பிடிக்கலை. '36 வயதினிலே'ல ஆரம்பிச்சு இப்போவரைக்கும் நல்ல படங்கள்ல நடிச்சிட்டு வர்றார். அந்த மாதிரியே படம் பண்ணுங்க மேம்'' என்ற அன்புக் கட்டளையோடு பேசி முடிக்கிறார் ரேமா.

அடுத்த கட்டுரைக்கு