`ரஜினிகாந்த் நடித்த `பாபா' படத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், சந்தோஷி. அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்தவருக்கு, சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. சன் டி.வியில் ஒளிபரப்பான `அரசி', `இளவரசி', `மரகத வீணை' போன்ற பல சீரியல்களில் நடித்தார்.

`மரகத வீணை' சீரியலுக்குப் பிறகு, சீரியலிலிருந்து பிரேக் எடுத்தவர், தன் கணவருடன் இணைந்து ஆரம்பித்த `PLUSH Boutique & Beauty Lounge' என்கிற பொட்டீக்கைப் பார்த்துக்கொள்வதில் தீவிரமாக இருந்தார். அவருக்கு தற்போது ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே. மேலும், சமீபத்தில் அவரது தோழிகள் இணைந்து அவருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பும் நடித்தியிருந்தனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் மூன்று மணிக்கு இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார் சந்தோஷி. இதுகுறித்து, சந்தோஷியின் கணவர் ஶ்ரீகரிடம் பேசினோம். ``இப்போ நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். எங்க வீட்டுக்குப் புது வரவாக இரண்டு மகாலட்சுமிகள் வந்திருக்காங்க.

என் மனைவி சந்தோஷியையும் சேர்த்து இப்போ எங்க வீட்ல மொத்தம் மூன்று மகாலட்சுமிகள். இரட்டைக் குழந்தைகள் என்பதால, சிசேரியன் பண்ணவேண்டியதாகிடுச்சு. தாயும், சேயும் நலமா இருக்காங்க. இன்னும் இரண்டு நாள்களில் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுவோம். இப்போதான் விஷயம் தெரிந்து ஒவ்வொருத்தரும் போனில் அழைத்து வாழ்த்திட்டிருக்காங்க. ஒரு அப்பாவாக என்னுடைய பொறுப்பு இன்னும் அதிகமாகியிருக்குன்னு நினைக்கிறேன். உங்களுடைய வாழ்த்துக்கு நன்றிகள்!'' என்றார் ஶ்ரீகர் பூரிப்புடன்.