Published:Updated:

`கே.எஸ்.ரவிகுமார், சேரன், சமுத்திரக்கனி கொடுத்த அட்வைஸ்!’ - ரீ என்ட்ரி குறித்து நடிகை விசித்ரா

கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு, சீரியல் மூலம் திரைத்துறையில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் விசித்ரா.

நடிகர் செந்தில், நடிகை சுலோச்சனா உடன் விசித்ரா
நடிகர் செந்தில், நடிகை சுலோச்சனா உடன் விசித்ரா ( ராசாத்தி சீரியல் )

நடிகர் செந்தில் மற்றும் நடிகை விசித்ரா ஆகியோர், ராசாத்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்துள்ளனர்.

நடிகை விசித்ரா
நடிகை விசித்ரா

500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் செந்தில் சமீபத்தில் வெளியான `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்திருந்தார். இடையில் அரசியலில் நட்சத்திரப் பேச்சாளராக ஆர்வம் காட்டிய செந்தில் தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். சன் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் `ராசாத்தி’ சீரியலில் செந்தில், நடிகர் விஜயகுமார், விசித்ரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த சீரியலில் நடிகை விசித்ரா வில்லி ரோலில் மிரட்டுகிறார்.

90' கிட்ஸுக்கு கண்டிப்பாக விசித்ரா மிகவும் பரிச்சயமானவர். 90-களில் வந்த பல்வேறு ஹிட் திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். குறிப்பாக, செந்தில் - விசித்ரா காம்போவில் காமெடி களைகட்டும். கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு, சீரியல் மூலம் திரைத்துறையில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் விசித்ரா. அவரிடமே இதுகுறித்து பேசினோம்.

நடிகை விசித்ரா
நடிகை விசித்ரா

``பல வருடங்களுக்குப் பிறகு நடிக்கிறேன். ஆனால், சின்னத்திரையில் நடிக்கிறேன் அப்படிங்குற ஒரு ஃபீல் வரல. திரைப்படம் மாதிரிதான் இந்த சீரியல எடுத்துட்டு இருக்காங்க. ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமா இருக்கும். நிறைய அவுட்டோர் ஷூட், பெரிய ஆர்ட்டிஸ்ட் அப்படின்னு படம் பண்ற மாதிரிதான் எனக்கு ஃபீல் ஆகுது. இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறேன். நான் ஏற்கெனவே திரைப்படங்களில் சில நெகட்டிவ் ரோல் பண்ணியிருக்கேன். இது எனக்கு ரீ என்ட்ரி. அதனால ரொம்ப யோசிச்சுதான் இந்த ரோலுக்கு ஓகே சொன்னேன்.

பாசிட்டிவ் ரோலைவிட நெகட்டிவ் ரோலில் என்ட்ரி ஆகும்போது நல்ல ரீச் கிடைக்கும். என் திறமைய நல்லா வெளிப்படுத்த முடியும். நெகட்டிவ் ரோல் நடிக்கும்போது ஸ்ட்ராங் டைலாக் டெலிவரி, கெத்தான உடல் மொழின்னு நிறைய சேலஞ்ச் இருக்கு. என் கேரக்டர் இல்லாம கதையே நகராது. அதனாலதான் இந்த கேரக்டரத் தேர்வு பண்ணேன். அதுமட்டுமல்ல, நான் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னாடி, பல இயக்குநர்களிடம் கருத்து கேட்டேன். கே.எஸ்.ரவிகுமார் சார், சேரன் சார், சமுத்திரக்கனி எனப் பல்வேறு இயக்குநர்களிடமும் நண்பர்களிடமும் அட்வைஸ் கேட்டேன். எந்த மாதிரியான ரோல் எனக்குப் பொருந்தும்னு பெரும்பாலானோர் என் உயரத்துக்கும் உடல் மொழிக்கும் வில்லி ரோல் சரியா இருக்கும்னு சொன்னாங்க. சீரியல் பார்த்துட்டு மக்களிடம் இருந்தும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கெடச்சிருக்கு. என் பிள்ளைங்களுக்கு என்னைத் திரையில் பார்த்ததும் ஒரே சந்தோஷம். என் கேரக்டர் பற்றி துருவித் துருவி கேட்டுட்டு இருக்காங்க.

நடிகை விசித்ரா
நடிகை விசித்ரா

செந்தில் சார் கூட நடிப்பது இன்னொரு பெரிய ப்ளஸ் எனக்கு. மக்கள் எங்களோட காம்போவை ரொம்ப ரசிச்சு பார்த்திருக்காங்க. `முத்து' படத்தில் செந்தில் சார் கூட நடிச்ச காட்சிகள் இன்னைக்கு வரைக்கும் மக்கள் விரும்பிப் பாக்குறாங்க. திரைப்படங்களில் நானும் செந்தில் சாரும் காமெடி காம்போ பண்ணிக் கொண்டிருந்தோம். ஆனா, இப்போ எதிரிகளா நடிக்குறோம். `ராசாத்தி' சீரியலைப் பொறுத்தவரை எங்களுக்குள்ள எப்போதுமே சண்டை, வாக்குவாதம்தான் நடக்கும். இதுவும் மக்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்’’ என்றார் உற்சாகத்துடன்.