Published:Updated:

AKS - 40 | பிற்போக்கு மனிதர்களும், கைகொடுக்கும் நண்பர்களும்... காயத்ரி சுந்தரைச் சமாளித்தாளா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (15-10-2021) வெளியான 40-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

AKS - 40 | பிற்போக்கு மனிதர்களும், கைகொடுக்கும் நண்பர்களும்... காயத்ரி சுந்தரைச் சமாளித்தாளா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (15-10-2021) வெளியான 40-வது எபிசோட் எப்படி இருந்தது?!

சென்னை செல்ல பேருந்தில் ஏற்றிவிடுவதாக சொல்லி காயத்ரியை அழைத்துவரும் சுந்தர் பேருந்து நிறுத்தத்தை கடந்து செல்வதைக் கண்டு காயத்ரி குழம்புகிறாள். சுந்தர் அவளை சென்னையில் ஜீப்பிலேயே கொண்டு போய்விடுவதாக கூறுகிறான். காயத்ரி அதிர்ச்சியாக, சுந்தர் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று முன்பே சொல்லவில்லை என்கிறான். காயத்ரி புனிதாவுக்கு சொல்ல நினைக்கையில், அவர்களுக்கும் சர்ப்ரைசாக இருக்கட்டும் என சுந்தர் அவளது மொபைல் போனை வாங்கி வைத்துக் கொள்கிறான். சென்னையை அடைவதற்கு முன்பு கழிப்பறை செல்வதற்காக வண்டியை நிறுத்துகிறான். அந்த இடைவெளியில் காயத்ரி புனிதாவிற்கு கால் செய்து தான் சுந்தருடன் சென்னை வரவிருப்பதைச் சொல்கிறாள்.

காயத்ரியின் பதற்றம் புனிதாவிற்கும் தொற்றிக் கொள்கிறது. கடைசி நிமிடத்தில் சொன்னால் என்ன செய்வது என்று காயத்ரியிடம் கேட்கிறாள் புனிதா. காயத்ரி, தனது அப்பாவிற்கும், அண்ணனுக்கும் எல்லோரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பது தெரிந்தால் பிரச்னையாகும் என்று சொல்கிறாள்.
AKS - 40
AKS - 40

கிராமம் மற்றும் சிறு நகரங்களில் இருந்து பெண்கள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வேலைக்குச் செல்லும்பொழுது அவர்கள் சொந்த காலில் நிற்கிறார்கள் என்று சமூகம் பெருமையாக நினைத்தாலும் முழுவதுமாக எல்லோருடைய மனதிலும் முற்போக்கு எண்ணம் வந்துவிடுவதில்லை. பெண்கள் பொறியியல் படித்திருந்தாலும் சென்னை அல்லது பெங்களூருவுக்கு வேலைக்கு அனுப்ப தயக்கம் கொண்டு உள்ளூரில் அவர்களின் படிப்புக்குத் தொடர்பில்லாத வேலை அல்லது அதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கச் சொல்லும் பெற்றோர்கள், அந்த வகைதான் பெரும்பான்மை இங்கே.

இது ஒரு பக்கம் என்றால் இந்தத் தலைமுறை ஆண்களிலும் கூட பலரும் நகரத்தில் வேலைக்கு சென்று தனியாக இருக்கும் பெண்களை நம்புவது இல்லை. சுந்தரை போல சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் பெண்களைத் தவறாக நினைப்பது, வெளியூரில் சென்று பெண்கள் தங்கியிருப்பதை நம்பகத்தன்மையோடு அணுகாமல் இருப்பது, இவற்றுக்கு பின்னால் இருப்பது கற்பு என்கிற கோட்பாடும், பெண்கள் வீட்டை விட்டு செல்லும்பொழுது அவர்களின் கற்புக்கு மற்றவர்களால் ஆபத்து வரும் என்கிற எண்ணமும்தான்.

புனிதா வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் காயத்ரி சுந்தருடன் வரும் விஷயத்தைச் சொல்லி ஆண்களை எங்காவது 2 மணி நேரம் செல்லச் சொல்கிறாள். சிவாவிற்கு அப்படி வீட்டைவிட்டு செல்வது விருப்பமில்லை. பரத்தை பார்த்து சலித்துக் கொள்கிறான். புனிதா சிவாவை தனக்காக செய்யுமாறு கேட்டு கொள்கிறாள். சிவா உடை மாற்றிக் கொண்டு வந்து கிளம்ப ஆயத்தமாகும் பொழுது வெளியில் வாகனத்தின் சத்தம் கேட்கிறது.

AKS - 40
AKS - 40

இனி வெளியில் சென்றால் மாட்டிக் கொள்வோம் என்பதால் ஆண்கள் மூவரையும் வீட்டுக்குள்ளேயே சென்று ஒளிந்துகொள்ள சொல்கிறார்கள் புனிதாவும் கவிதாவும். புனிதா பதற்றமாகவே இருப்பதைக் கண்ட கவிதா, தான் சமாளித்துக் கொள்வதாகவும் புனிதாவை கொஞ்சம் பதற்றம் இல்லாமல் ரிலாக்சாக இருக்கும் படியும் கூறுகிறாள்.

பல நேரங்களில் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேச முடியாத விஷயங்களை நண்பர்களிடம் பேசும் சுதந்திரம் இருக்கிறது. குடும்பத்தினர் செய்யாத உதவிகளை நண்பர்கள் செய்வதும் நடந்திருக்கின்றது. பெரும்பாலும் குடும்பத்தினரை விட நண்பர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவும், நம்பவும், அப்படியே ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள். குடும்பம்தான் சமூகத்தின் அடித்தளம் என்றெல்லாம் பேசிக் கொண்டாலும், வாழ்க்கை நண்பர்களாலேயே இயங்குகிறது.

காயத்ரியின் சூழ்நிலையை சொன்னதும், பரத்தும் பாண்டியனும் மறுபேச்சு இல்லாமல் புரிந்து கொண்டு உதவ முன் வருகிறார்கள். காயத்ரியின் பிரச்னையை தன் பிரச்னை போல புனிதா, கவிதா, பரத் மற்றும் பாண்டியன் நினைக்கிறார்கள். சிவா ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கினாலும் பின் சரி என்று சொல்லி அவர்களுடன் வெளியே கிளம்புகிறான்.

காயத்ரி தனது அண்ணன் மற்றும் அப்பாவிற்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று புனிதாவிடம் சொல்கிறாள். சொந்த தந்தையும், உடன்பிறந்த அண்ணனும் தன்னை நம்பவில்லை என்பது ஒரு பெண்ணுக்கு குடும்ப உறவுகளின் மீதும், திருமண வாழ்க்கையின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தாதா? சமூகம் எப்பொழுதும் இதைப் பற்றி யோசிப்பதே கிடையாது.
AKS - 40
AKS - 40

காயத்ரியை யாரென்றே தெரியாத சிவா, அவர்கள் சந்தித்துக் கொண்ட முதல் நாளே இருவருக்குள்ளும் இருந்த சண்டைகளை கடந்து காயத்ரி ஆசைப்பட்டு இந்த வேலைக்கு வந்திருக்கிறாள், சென்னையை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக அவளுக்காக சண்டை போட்டதை அவளிடம் சொல்லாமல் மறைத்துவிடுவான். இந்தப் பெருந்தன்மையும், புரிதலும், அக்கறையும் காயத்ரிக்கு தனது சொந்த வீட்டில் இல்லை. அவள் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடமும் இல்லை.

உள்ளே வரும்பொழுது சுந்தர் வெளியில் கிடக்கும் சிவாவின் செருப்பை பார்த்துவிட்டு பெண்கள் தங்கியிருக்கும் வீட்டில் ஆணின் செருப்பு எப்படி இருக்கிறது என்று கேட்கிறான். அதைக் கேட்ட கவிதா, ரூமில் ஒளிந்து கொண்டிருக்கும் பாண்டியனை எலக்ட்ரிஷன் போல் நடிக்கச் சொல்லி கையில் ஒரு பையை கொடுத்து அனுப்புகிறாள். கவிதாவும், பாண்டியனும் போலியாக சண்டையிடுவது போல் பேசி நடிக்கிறார்கள். பாண்டியன் வெளியே சென்று சிவாவின் செருப்பை எடுத்துக்கொண்டு செல்கிறான்.

கவிதாவின் சமயோசித புத்தியும், அதை புரிந்து கொண்டு பாண்டியன் நடித்ததும், வெளியே சென்று தோட்டத்தில் உட்கார்ந்திருப்பதும் நண்பர்களால் மட்டுமே சாத்தியம். பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்பொழுது சொந்த குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏன் நடித்து பொய் சொல்ல வேண்டும் என்ற சலிப்பு ஏற்படுகிறது. காயத்ரியின் அப்பா வயதை கூட ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அடுத்த தலைமுறையான அவள் அண்ணன் மற்றும் சுந்தரிடமும் அவளுக்கு அதே பயம் இருப்பது அவளின் வாழ்வில் நிம்மதியைக் கொடுக்காது.

வீட்டின் உள்ளே வந்து பேசிக் கொண்டிருக்கும் சுந்தர், ஒவ்வொரு அறையிலும் யார் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள், ஏன் வரவில்லை என்று எல்லாவற்றைப் பற்றியும் கேட்கிறான். சுந்தர் டீசண்டாக இருப்பது போல் இருந்தாலும் மிகப்பெரிய அதிகப்பிரசங்கியாக இருக்கிறான். காயத்ரி பற்றிய தனிப்பட்ட தகவல்களைக் கேட்பதே அநாகரிகம் எனும்போது சுந்தர் அவளுடன் தங்கி இருப்பவர்களை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள நினைக்கிறான்.

AKS - 40
AKS - 40

மேலும் அங்கே எத்தனை அறைகள் இருக்கின்றன என்று கேட்கும் சுந்தர், ஒரு அறை காலியாக இருக்கிறது என்று புனிதா கூறியதும், நான் தங்கிக் கொள்ளலாமா எனக் கேட்கிறான். பிறகு அதை விளையாட்டுக்கு கேட்டதாகவும், புனிதாவே சொன்னாலும் அங்கே தங்க மாட்டேன் என்றும் கூறி கிளம்புகிறான். ஏனென்றால் பெண்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஒரு ஆண் தங்குவது தவறாம்.

மனதில் அழுக்கும், தவறான எண்ணமும் இல்லை என்றால் கவிதாவையும், பாண்டியனையும் போல ஒரே அறையில் கூட ஒன்றாக இருக்கலாம். சுந்தரின் மனம் முழுக்க பிற்போக்குத்தனமும், பெண்கள் பற்றிய தவறான புரிதலும் நிறைந்திருக்கின்றன. அதுவே அவனை இயல்பாக இருக்கவிடாமலும் அங்கே தங்குவது தவறு எனவும் அவனுக்குச் சொல்கிறது.

இரண்டு நாள்கள் சென்னையில் தங்க இருக்கும் சுந்தரினால் காயத்ரிக்கு நேரவிருக்கும் பிரச்னைகள் என்னென்ன?
மற்றவர்கள் எவ்வளவு தூரம் காயத்ரிக்கு உதவ முன்வருவார்கள்?

காத்திருப்போம்!