Published:Updated:

AKS - 58: இரட்டை மனநிலையால் தவிக்கும் பெண்களும் குழப்பமான முடிவுகளின் பாதிப்பும்!

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் ஆண், பெண் நண்பர்கள் சேர்ந்து தங்கியிருந்து வேலைக்குச் செல்வது தற்போது இயல்பான விஷயமாக மாறிக் கொண்டிருக்கிறது.

கவிதா பாண்டியனிடம் காதலைச் சொல்லும் ஆசையுடன் பெங்களூருவில் இருந்து வருகிறாள். கவிதா வீட்டுக்குள் நுழையும்போது வீட்டில் பாண்டியனும் பொற்கொடியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொற்கொடி பாண்டியனைக் காதலிக்கிறாள். ஆனால், கவிதாவிற்கு பொற்கொடியைப் பிடித்தால் மட்டுமே அவளை ஏற்றுக் கொள்வதாக பாண்டியன் பொற்கொடியிடமே சொல்லி வைத்திருக்கிறான். பாண்டியன் கவிதாவிடம் பொற்கொடியை நேர்காணல் செய்து அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று சொல்லுமாறு கேட்கிறான். கவிதா பொற்கொடியிடம் தனியாகப் பேசுகிறாள்.

AKS 58
AKS 58

பொற்கொடி பேசியதை வைத்து பாண்டியனை பொற்கொடி எவ்வளவு நேசிக்கிறாள் என கவிதா புரிந்து கொள்கிறாள். பொற்கொடியை வேண்டாம் என்று சொல்வதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. நன்றாக பேசுகிறாள். வசதியான பெற்றோருக்கு ஒரே மகளாக இருந்தும் எளிமையாக இருக்கிறாள். எல்லாவற்றையும் விட பாண்டியனை அளவுக்கதிகமாக நேசிக்கிறாள். கவிதா நேர்மையாக முடிவெடுத்து பாண்டியனிடம் பொற்கொடியை தனக்கு பிடித்திருப்பதாகச் சொல்கிறாள். எல்லா காரணங்களையும் விட பாண்டியனுக்கும் பொற்கொடியை பிடித்திருக்கிறது என்கிற காரணம் கவிதாவிற்கு முதன்மையாக இருக்கின்றது.

பொற்கொடி தான் ப்ரொபோஸ் செய்தது கவிதாவுக்கும் சேர்த்துதான் என்பதை மீண்டும் சொல்கிறாள். பாண்டியனும் கவிதாவும் எப்போதும் இதே ஒற்றுமையுடன் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று பொற்கொடி சொல்கிறாள்.

AKS 58
AKS 58

சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்-பெண் நட்பு என்பது திருமணத்திற்கு பிறகு பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. சமூக வலைதளங்கள் வந்த பிறகு ஆண்-பெண் நட்பு ஓரளவு சகஜமாகி இருக்கின்றது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் ஆண், பெண் நண்பர்கள் சேர்ந்து தங்கியிருந்து வேலைக்குச் செல்வது தற்போது இயல்பான விஷயமாக மாறிக் கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது, ஒன்றாக உணவருந்துவது, படத்திற்குச் செல்வது என்பதெல்லாம் தற்போது சாதாரண விஷயமாக ஆகிக் கொண்டிருக்கிறது. பாண்டியன் மற்றும் கவிதா இருவரும் இறுதிவரை பிரியாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் தான் அதை பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் பொற்கொடி சொல்கிறாள். பொற்கொடியின் இந்த நல்ல எண்ணம்தான் பாண்டியன் செய்த நல்ல விஷயங்களையும் கவனிக்கச் செய்திருக்கிறது.

மாயா மீண்டும் சிவாவுடன் இணைவதற்காக பெங்களூருவில் இருந்து சென்னை வருகிறாள். சிவாவை சந்தித்து பேசும் மாயாவிடம் அவன் சரியாக பேசாததால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்கிறாள். ஆராய்ச்சியின் முடிவு காயத்ரியிடம் போய் நிற்கிறது.

AKS 58
AKS 58

மாயா காயத்ரியிடம் வெளிப்படையாகவே சிவா காயத்ரியை காதலிக்கிறானா என்று கேட்கிறாள். காயத்ரி தனக்கு ஏற்கெனவே நிச்சயமாகி விட்ட விஷயத்தைச் சொன்னவுடன் அப்படி என்றால் தன்னையும் சிவாவையும் சேர்த்து வைக்கும்படி மாயா காயத்ரியை கேட்டுக் கொள்கிறாள். காயத்ரி சிவாவிடம் பேசுகிறாள். சிவா தன்னால் பழையபடி மாயாவுடன் சேர முடியாது என்று கூறுகிறான். மாயாவை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதாக சொல்கிறான்.

மாயாவை பார்க்க செல்லும்போது அவள் தன்னுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று கேட்டால், ’சரி’ என்று சொல்லும் எண்ணத்தில்தான் சிவா அங்கு செல்வான். ஆனால் மாயா சிவாவின் கையைத் தொட்டதும் அவனுக்கு காயத்ரியின் நினைவு வரும். மேற்கொண்டு அவனால் அங்கு இருக்க முடியாமல் கிளம்பி வந்துவிடுவான். சிவா அப்போதுதான் தனக்கும் காயத்ரிக்கும் உள்ள உறவின் ஆழத்தை புரிந்து கொள்வான். ஒருமுறை காதலர்கள் பிரிந்தால் மீண்டும் சேர்வது பிரிந்த காரணத்தை பொருத்தது.

மாயாவின் தந்தையை சிவா அவமரியாதை செய்ததால் அவளிடமிருந்து பிரிந்து வருகிறான். அவன் வாழ்க்கையில் ஒருவேளை காயத்ரி வராமல் இருந்திருந்தால் சிவாவுடன் மீண்டும் சேருவதற்கான வாய்ப்புகள் ஓரளவு இருந்திருக்கும். சிவா தற்போது மாயாவை வேண்டாம் என்பதற்கும், மாயாவிடம் இருந்து வெகுதூரம் சென்றுவிட்டதாக நினைப்பதற்கும் காரணம் இடைப்பட்ட பயணத்தில் துணையாக காயத்ரி உடன் வந்திருக்கிறாள்.

சிவாவிடம், “என்னை காதலிக்கிறீர்களா சிவா?” என்று கேட்கிறாள். சிவா தான் யாரையும் காதலிக்கவில்லை என்று சொல்லும்போது காயத்ரிக்கு அழுகை வருகிறது. காயத்ரிக்கு எப்போதும் இரண்டு மனதாக இருக்கின்றது. ஒன்று சிவா தன்னைக் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றது. இன்னொன்று நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பதால் சிவாவை விட்டுவிட்டு சுந்தரை திருமணம் செய்து கொள்வது தனக்கும் தன் குடும்பத்திற்கும் நல்லது என்று எண்ணுகிறது. காயத்ரி இது இரண்டுக்கும் நடுவில் தானும் கஷ்டப்பட்டு, சிவாவையும் கஷ்டப்படுத்துகிறாள்.

சிவா யாரையும் காதலிக்கவில்லை என்று முகத்தில் அறைந்தாற் போல் காயத்ரியிடம் சொல்கிறான். அப்படி என்றால் மாயாவுடன் மீண்டும் இணைவதைப் பற்றி யோசிக்குமாறு காயத்ரி சிவாவுக்குச் சொல்கிறாள். காயத்ரி சொல்வது போல ஒருவரின் காதலை ஏற்றுக் கொண்டு பிறகு பழகுவது என்பது எப்படி நேர்மையானதாக இருக்கும். காயத்ரி தன் வீட்டில் ஏற்பாடு செய்திருக்கும் சுந்தரை ஏற்பாட்டுத் திருமணம் செய்து கொள்ள போகிறாள். அவள் வளர்ந்த சூழ்நிலைக்கு அது மிகச் சரி. அதேபோல் சிவாவும் கூட மாயாவுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ள முடியும் என்று காயத்ரி நம்புகிறாள். காதல் என்பது இயல்பாக தோன்ற வேண்டிய உணர்வு அல்லவா? முன்பு மாயாவை சிவா காதலித்தது உண்மைதான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் காயத்ரியின் மீதான காதல் மாயாவை மறக்கச் செய்து இருக்கிறது. காயத்ரிக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது எனும் காரணத்தினால் மீண்டும் மாயாவுடன் இணைவது மாயாவுக்கு செய்யும் துரோகம்.

AKS 58
AKS 58

சிவா மாயாவுடன் சேர்வதற்கு காயத்ரி சொன்னதன் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறான். மாயா விஷயம் தெரிந்து மிக மகிழ்ச்சியாக காயத்ரியிடம் நன்றி சொல்கிறாள்.

தான் காதலிக்கும் ஆண் இன்னொரு பெண்ணை காதலிக்கிறான் என்று தெரிந்தும் அந்தப் பெண்ணின் மூலமாகவே தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள சொல்ல முடிவதும், அதை ஏற்று காயத்ரியும் சென்று பேசுவதும் அழகான காட்சி, ’பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டியும் பொறாமையும் கொண்டவர்கள்’, ’இரண்டு பெண்கள் ஓரிடத்தில் சேர்ந்து இருக்க முடியாது’ என்றெல்லாம் ஆண் உலகம் கதை கட்டி வைத்திருக்கிது. ஆனால் முன் அறிமுகமில்லாத இரண்டு பெண்களால் இவ்வளவு இயல்பாக தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய முடிவுகளை பேசிக் கொள்ளவும், உதவி கேட்கவும், உதவவும் முடிந்திருக்கிறது.

பாண்டியன் பொற்கொடியை காதலிப்பதை அறிந்ததும் கவிதா தனியாகச் சென்று அழுகிறாள். மறுநாள் அலுவலகம் வந்து தனது இருக்கையில் இல்லாமல் தனியாகச் சென்று அழுது கொண்டிருக்கிறாள். ராஜேஷ் கவிதாவை தேடி வருகிறான். கவிதா ராஜேஷிடம் பாண்டியன், பொற்கொடி காதல் பற்றி கூறுகிறாள். ராஜேஷ் கவிதாவை சமாதானப்படுத்துகிறான். பாண்டியன் கவிதாவைத் தவிர வேற ஒரு பெண்ணைக் காதலிப்பதாக ராஜேஷால் நம்ப முடியவில்லை. கவிதா அதிக நேரம் அழுகிறாள். அழுகையோடு ராஜேஷை கட்டிக் கொள்கிறாள். ராஜேஷ் செய்வதறியாது திகைத்து நிற்கிறான்.

AKS 58
AKS 58

தோளில் சாய்ந்து கொள்வது அன்பின் ரீதியாக கட்டி அணைத்துக் கொள்வது மிக சாதாரண விஷயம்தான். ஆனால் ஏற்கெனவே ராஜேஷ் கவிதாவை காதலிக்கும் சூழ்நிலையில் கவிதா இவ்வாறு செய்யும்போது நம் சமூகத்தின் பொதுபுத்தியின் படி ராஜேஷிற்கு மீண்டும் காதலில் நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்தச் செயல் இருக்கலாம்.

பாண்டியன் மற்றும் பொற்கொடியின் காதல் கதையில் நல்ல ட்விஸ்ட்தான் என்றாலும் இதனால் கவிதா இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ராஜேஷுடன் இணைவாளா என்று கேள்வி இருக்கின்றது.

ராஜேஷ், கவிதா மற்றும் சிவா, மாயா உறவுகள் மீண்டும் புதிதாகத் தொடங்குமா?

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு