புனிதாவுக்கு அலுவலக ரீதியாக பயிற்சி ஒன்றை கிஷோர் ஏற்பாடு செய்திருக்கிறான். அதற்காக புனிதா கிஷோருடன் சேர்ந்து கொச்சி செல்ல வேண்டும். புனிதாவின் கரியர் வளர்ச்சிக்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கிஷோர் சொன்னதன் அடிப்படையில் புனிதா கொச்சி செல்ல சம்மதிக்கிறாள். புனிதா பரத்திடம் கிஷோருடன் கொச்சி செல்வதை சொல்லும்போது பரத் கோபப்படுகிறான்.
புனிதா கிஷோருடன் செல்லக்கூடாது என்று பரத் சொல்கிறான். புனிதாவிற்குக் கோபம் வருகிறது. புனிதா தான் எங்கு போக வேண்டும், போகக் கூடாது என்றெல்லாம் அதிகாரம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது என்று தெளிவுப்படுத்துகிறாள். நம் சமூகத்தில் திருமண உறவில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு அடிபணியாமல் வாழ்வதற்காகத்தான் பலரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை தேர்ந்தெடுக்கிறார்கள். திருமண உறவில் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றெல்லாம் பேசினாலும் இன்னமும் பொது சமூகத்தில் அது பெரும்பாலும் ஆண்களின் தலைமையிலேயே இயங்குகிறது. இன்றும் வெளியில் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் பல விஷயங்களில் கணவரிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள் அதிகம்.
இந்தக் கட்டுப்பாடுகளில் விருப்பம் இல்லாமல்தான் புனிதா பரத்தின் காதலை ஏற்றுக் கொண்டாலும் லிவ்-இன் உறவைத் தேர்ந்தெடுக்கிறாள். அதுபோக புனிதாவிற்கு தனது கரியர்தான் எல்லாவற்றையும்விட முதன்மையானது. பரத்துக்கும் அது நன்றாக தெரியும். புனிதா திருமணம் வேண்டாம் என்று சொல்வதுகூட தன்னுடைய கரியரில் அவளுக்கு இருக்கும் கனவுகளை அடைவதற்கு திருமணம் மற்றும் குழந்தைகள் தடையாக இருக்கும் என்று அவள் எண்ணுவதால்தான் என்பதை பலமுறை கூறியிருக்கிறாள்.
புனிதா பரத்துடன் இருக்கும் உறவில் நேர்மையாக இருக்கிறாள். அதனால் பல விஷயங்களையும் Straight forwardஆக அணுகுகிறாள். எல்லாம் இருந்தும் புனிதாவுக்கு கிஷோரின் நோக்கம் புரியவில்லை என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கின்றது. எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் ஏதாவது ஒரு சிறிய விஷயத்தில் தவறு செய்வது மனித இயல்பு என்பதற்கு புனிதா கிஷோரை நம்புவது நல்ல உதாரணம்.
கவிதா பாண்டியனை வெறுப்பேற்றுவதற்காக ராஜேஷுடன் வெளியில் சென்றது தவறு என்று உணர்கிறாள். அதை ராஜேஷிடம் சொல்லி வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்கிறாள். ராஜேஷ் கவிதாவிடம் எங்காவது வெளியில் சென்று வரலாமா என்று கேட்கிறான். கவிதா இப்போது இருக்கும் சூழ்நிலையில் தான் நல்ல ஆதரவாக இருக்க விரும்புவதாகவும், நிச்சயமாக இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் கவிதாவுடன் சேர முயற்சி செய்யவில்லை என்று ராஜேஷ் சொல்கிறான்.
தான் ராஜேஷை பயன்படுத்திக் கொண்டது அவனை எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கக் கூடும் என்பது கவிதாவுக்கு புரிந்துவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிஜ வாழ்வில் இப்படி நடக்கும்போது பலரும் தங்களுடைய தவறை புரிந்து கொள்வது இல்லை. அப்படியே புரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை. கவிதாவைப் போல் புரிந்து கொள்வதும், சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கோருவதும், அதற்காக வருத்தப்படுவதும் தேவையில்லாத குற்ற உணர்வுக்கு ஆளாவதை தடுக்கும்.
பாண்டியனிடம் தன் காதலை சொல்ல முடியாத இந்தச் சூழ்நிலையில் கவிதாவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ராஜேஷ் மட்டும்தான். அப்படி இருக்கும்போது ராஜேஷ் மீண்டும் தன்னுடன் இணைவதற்காகத்தான் இப்படி ஆறுதலாக இருக்கிறான் என்கிற சந்தேகம் ஏதாவது ஒரு கட்டத்தில் வரக்கூடும். அதை அறிந்து ராஜேஷ் முன்னமே தானாக கவிதாவிடம் விளக்கம் சொல்லிவிடுகிறான். ராஜேஷை போல எதிரில் இருப்பவர்களின் மனதை அறிந்து அவர்களுக்காகவும் சேர்த்து சிந்திப்பது உறவுகளுக்குள் ஒரு கம்ஃபர்ட் ஸ்பேசை உருவாக்கும்.
கவிதா காலையில் அலுவலகம் செல்ல கிளம்பி கொண்டிருக்கிறாள். பாண்டியன் கவிதாவிடம் இருவரும் காலை உணவு சேர்ந்தே சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று கூறுகிறான். கவிதா ராஜேஷுடன் உணவருந்த செல்வதாகவும் இனிமேல் எதற்கெடுத்தாலும் தன்னை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் சொல்கிறாள். பொற்கொடியுடன் அதிக நேரம் செலவழிக்குமாறு கூறுகிறாள். பாண்டியனுக்கு கவிதா இப்படிப் பேசுவது கோபம் வருகிறது. கவிதா-ராஜேஷ் காதல் விஷயத்தில் பாண்டியன் கவிதாவிடம் பேசியதை அப்படியே கவிதா மீண்டும் திருப்பி பாண்டியனிடம் பேசுகிறாள். ஒருவகையில் கவிதா சொல்லும் விஷயங்கள் சரிதான். ஆரம்பத்தில் கவிதா ராஜேஷுடன் வெளியே செல்லும் போதெல்லாம் பாண்டியனையும் அழைத்துக் கொண்டு சென்றதால், ராஜேஷ் பாண்டியனின் மனம் வருத்தப்படும்படி நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கவிதாவிற்கு தனது நட்பு மற்றும் காதலை பேலன்ஸ்டாக கொண்டு செல்ல தெரியவில்லை. அந்த தவற்றை பாண்டியன் செய்வது மூலம் பொற்கொடியும் பாண்டியனை விட்டு பிரிந்து விடக்கூடாது அல்லது பொற்கொடியின் மனம் வருத்தப்படக் கூடாது என்று கவிதா எண்ணுகிறாள். இதை ஆரம்பத்திலேயே சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதால்தான் பொற்கொடியுடன் அதிக நேரம் செலவு செய்யுமாறு பாண்டியனுக்குச் சொல்கிறாள். பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான். கவிதா கிளம்பிச் சென்றதும் பாண்டியன் இவை எல்லாவற்றையும் யோசித்து வருத்தப்படுகிறான்.
சுந்தர் காயத்ரியை ஜாகிங் அழைத்து செல்வதற்காகக் காலை 5 மணிக்கு வருகிறான். காயத்ரி உடல் நலமில்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாள். மாதவிடாய் காரணமாக வயிற்று வலியால் தன்னால் வர இயலாது என்கிறாள். சுந்தர் தன் அம்மா மாதவிடாயின் போது ஒரு முறைகூட வயிற்று வலியால் சுருண்டு படுத்து பார்த்ததே இல்லை என்று சொல்கிறான். அவர் மாதவிடாயின்போது எல்லா வேலைகளையும் செய்து இருக்கிறார் என்றும் சொல்கிறான்.
அதுபோக இதுபோன்ற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் வலி சரியாகும் என்று சொல்கிறான். தான் தயிரை வைத்து ஏதோ மருந்து செய்து கொண்டு வருவதாகவும் காயத்ரியை ஜாகிங் செல்ல தயாராகுமாறு சொல்கிறான். காயத்ரி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள். சுந்தர் ஏற்கெனவே சொன்னது போல வாட்ஸப்பில் வருவதை எல்லாம் படித்துவிட்டு கடந்த நூற்றாண்டு தாத்தாக்களை போல பேசிக் கொண்டிருக்கிறான்.
பெரும்பாலான ஆண்கள் எதற்கெடுத்தாலும் தன் அம்மாவை ஒப்புமைப்படுத்துவதோடு, ‘அந்தக் காலத்தில் இப்படி எல்லாம் இல்லை... இந்தக் காலத்து பெண்கள் சோம்பேறி’ என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். ”நாங்க அந்த காலத்துல நாலஞ்சு புள்ள பெத்து வளக்கலயா? வீட்டு வேலை செய்யலையா” என்று சீரியல்களில் வரும் மாமியார்கள் சொல்வதைப் போல சுந்தர் காயத்ரியிடம் சொல்கிறான்.
இதை பார்ப்பவர்களுக்கு சுந்தர் காயத்ரியின் மீதுள்ள அக்கறையால் தானே இவற்றை செய்கிறான் என்று தோன்றலாம்.
மாதவிடாயின் போது வரும் வலியும், பிரச்னைகளும் எல்லா பெண்களுக்கும் ஒரே போல இருக்காது. ஒவ்வொருவரின் உடலைப் பொருத்து வயிற்று வலியில் இருந்து ரத்தப்போக்கு வரை பெரிய வித்தியாசங்கள் இருக்கும். முறையாக இதையெல்லாம் படித்து தெரிந்து கொள்ளாமல் 'முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' கும்பலால் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் பிற்போக்குத்தனங்களை படித்துவிட்டு அதை அப்படியே வீட்டில் இருக்கும் பெண்கள் மேல் திணிக்கும் பிற்போக்கு ஆணாதிக்கவாதிகளின் பிரதிநிதியாக சுந்தர் இருக்கிறான்.
காயத்ரி சுந்தருடன் ஜாகிங் செல்வாளா?
புனிதா - கிஷோர் கொச்சி செல்லும் விவகாரத்தில் பரத்தின் அடுத்த நகர்வு என்ன?