Published:Updated:

AKS 77: நிச்சயித்த திருமணம் நடந்தே தீரவேண்டுமா? மகள்களின் குரல்களைக் குடும்பங்கள் எப்போது கேட்கும்?

AKS 77
News
AKS 77

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (07-12-2021) வெளியான 77-வது எபிசோட் எப்படி இருந்தது?!

காயத்ரியின் தந்தைக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காயத்ரியின் அண்ணன் அவளுக்கு கால் செய்து விஷயத்தைத் தெரிவிக்கிறார். காயத்ரி அழுது கொண்டே அவசரமாக சுந்தரின் குடும்பத்துடன் கிளம்பிவருகிறாள்.

ஒன்றின்பின் ஒன்றாக பிரச்னைகள் வந்துக் கொண்டே இருக்கின்றன என்று சிவா காயத்ரியை நினைத்து வருந்துகிறான். இவ்வளவு பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று எண்ணுகிறான். காயத்ரிக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் போல் இருக்கிறது என்று சிவா புனிதாவிடம் சொல்லி வருத்தப்படுகிறான்.

AKS 77
AKS 77

எப்போதும் தன்னைப்பற்றி மட்டுமே யோசிக்கும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று வருந்தும் சூழ்நிலையில் சிவாவைப் போல் சிலர் இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. சிவா காயத்ரியை எண்ணி வருந்துகிறான். தன்னுடைய காதல் என்னவாகும் என்பதைவிட காயத்ரி இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பாள் என்று நினைக்கிறான். காதல் என்பதே காதலரின் மகிழ்ச்சியை முதன்மையாக எண்ணுவதுதானே! இன்று எல்லோருக்குமே தேவைப்படுவது சிவா, காயத்ரியிடம் காட்டும் இந்த அக்கறையும் அன்பும்தான்.

காயத்ரியின் தந்தைக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார். அதனால் அவரிடம் எந்த அதிர்ச்சியான தகவலையும் சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார். காயத்ரியை தனியாக அழைத்து உன்னால்தான் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்தது என்று காயத்ரியின் அண்ணன் சொல்கிறார். அதற்கு சற்று முன்தான் மருத்துவர் அவரிடம் இதயத்தில் அடைப்பு இருப்பதைப் பற்றி சொல்கிறார். இதயத்தில் அடைப்பு இருப்பது அவரவர் உடல் சார்ந்தது. திடீரென்று அவ்வளவு அடைப்பும் காயத்ரி பற்றி சிந்தித்த இந்த இரண்டே நாள்களில் வந்துவிட்டதைப் போல காயத்ரியின் அண்ணன் பேசுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காயத்ரிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்பதோ, அவளுக்கும் சிவாவிற்கும் காதல் இருக்கிறது என்பதோ அவளின் அண்ணனுக்குத் தெரியாது. காயத்ரி இரண்டு நாள்களாக சரியாக போனில் பேசவில்லை, கடந்த முறை ஊருக்கு வந்தபோதும் குழப்பமாக இருந்தாள் என்பதை மட்டும் வைத்து உடனடியாக ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அவள் திருமணத்திற்குத் தயங்குகிறாள் என்றும், திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தாமாகவே முடிவு செய்து கொண்டு வீட்டில் இருப்பவர்கள் பேசுகிறார்கள்.

அப்போதும் காயத்ரியின் குழப்பத்திற்கு என்ன காரணம் என்று கேட்காமல் ’உன்னுடைய நிலைமை எதுவாக இருந்தாலும் திருமணம் மட்டும் நடந்துவிட வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அப்பாவிற்கு உன்னால்தான் உடல்நிலை சரியில்லாமல் போகிறது என்ற பெண் பிள்ளைகள் மேல் குற்றம் சுமத்துவது இன்றும் சர்வ சாதாரணமாகத் தொடர்கிறது. காயத்ரி கடந்தமுறை ஊருக்கு வந்தபோது சந்தேகம் இருந்ததாகச் சொல்லும் காயத்ரியின் தந்தையோ, அண்ணியோ வெளிப்படையாக அவளிடம் பேசியிருந்தால் இன்று இவ்வளவு தீவிரமான பிரச்னையாக ஆகியிருக்காது.

AKS 77
AKS 77

சுந்தரும் கூட ஆரம்பத்தில் காயத்ரிக்கும் சிவாவிற்கும் இடையில் காதல் இருக்கலாம் என சந்தேகம் தனக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறான். ஆனாலும் காயத்ரியின் மனதை மாற்ற முயற்சி செய்ததாகச் சொல்கிறான். ஒரு பெண்ணுக்கு வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தில் விருப்பமில்லை என்று தெரிந்தால் அவளது விருப்பம் என்ன என்று தெரிந்துக் கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்சம் திருமணத்தை நிறுத்த வேண்டும். அதை செய்யாமல், அந்தப் பெண்ணை சுற்றியிருக்கும் எல்லோரும் அவளிடம் நேரடியாக பேசாமல் மறைமுகமாக சில காரியங்கள் செய்து அதன் மூலம் அவளை தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று நம்புகின்றனர்.

அப்படி செய்து வைக்கும் திருமணத்தில் அந்தப் பெண்ணோ, அவளைச் சார்ந்தவர்களோ, அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளோ எப்படி நிம்மதியாக இருப்பார்கள் என்கிற சிறிய விஷயம் கூட இந்தச் சமூகத்தில் யாருக்கும் இன்னும் புரிவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காயத்ரியை நினைத்து தனது அண்ணன் வருந்துவதாகவும், இரண்டு நாள்களுக்கு முன்பு ஜோசியக்காரரை பார்க்கச் செல்லலாம் என்று தன்னிடம் சொல்லிக் கொண்டு இருந்ததாகவும் காயத்ரியின் அத்தை சொல்கிறார். இது நம் வீடுகளில் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் பிரச்னை வந்தாலும் நடக்கும் நிகழ்வுகள். பிரச்னைகள் வரும்போது உடனடியாக ஜோசியத்தை நம்பி செல்வதே தவறுதான். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போகும்போது மருத்துவரை நம்பாமல் அப்போதும் ஜோசியத்தை நம்பும் பிற்போக்குதனங்களை என்னவென்று சொல்வது?

தனக்கு ஆபரேஷன் செய்வதால் உயிருக்கு ஆபத்து நேரும் என்று எண்ணிக் கொண்டு காயத்ரியின் தந்தை அவளது திருமணத்தை இந்த வாரம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். எல்லோருக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கிறது. காயத்ரி மட்டும் அழுதுக் கொண்டே இருக்கிறாள். நம் குடும்பங்களில் இது போன்ற திருமணங்கள் நடப்பதை பார்த்திருக்கிறோம். பெண்ணிடமும் மாப்பிள்ளையிடமும் ஒரு வார்த்தை கேட்கலாம் என்று சொல்லும்போது ஏற்கெனவே முடிவு செய்த விஷயம்தானே அவர்களிடம் கேட்க என்ன இருக்கிறது என்று சுந்தரின் அப்பா மறுத்துவிடுகிறார்.

AKS 77
AKS 77

இங்கே திருமணத்திற்கு பிறகான பிரிவு அல்லது விவாகரத்து என்பதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளும் அளவு சமூகம் மாறிவிடவில்லை. ஒருமுறை திருமணம் செய்துவிட்டால் அதன் பிறகு எக்காரணம் கொண்டும் பிரிவை குடும்பத்தில் இருப்பவர்கள் ஆதரிப்பதில்லை. அதுபோக ஊர், உறவுக்காரர்கள் என்று பல்வேறு காரணங்கள் சொல்லி முடிந்த அளவு பிடிக்காத வாழ்க்கையை அனுசரித்து வாழ வேண்டும் என்கிற போதனை தான் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. பிரிவு ’நார்மலைஸ்’ ஆகாத ஒரு சமூகத்தில் குறைந்தபட்சம் திருமணத்தின் போது திருமணம் செய்து கொள்பவர்களிடம் தீவிரமாகக் கலந்தாலோசித்து செய்வதுதான் திருமண வாழ்வை குறைவான பிரச்னைகளோடு வாழ்வதற்கு வழி செய்வதாக இருக்கும்.

புனிதாவை கிஷோர் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைக்கிறான். புனிதா கிஷோரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் பரத் வேறு ஒரு பெண்ணை தனது வண்டியில் அழைத்துக் கொண்டு செல்வதை பார்க்கிறாள். புனிதாவுக்கு ஆன்சைட் செல்வதற்கான ஆஃபர் லெட்டரை கிஷோர் கொடுக்கிறான். கிஷோர் புனிதாவை மது அருந்த சொல்கிறான். மது தன்னை Dominate செய்வதை உணர்ந்ததாகச் சொல்லி அதற்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை என்று புனிதா மறுத்து விடுகிறாள். கிஷோர் பரத் பற்றி தவறாகப் பேசுகிறான். பரத்தை எப்படி தேர்வு செய்தாய் என்று கேட்கிறான். இந்த முறை புனிதாவுக்கு பரத் பற்றி கிஷோர் பேசுவது பிடிக்கவில்லை. அவளுக்கு முதன்முறையாக கிஷோரின் மேல் சந்தேகம் வருவது போல அவளின் முகபாவனைகள் இருக்கின்றன.

AKS 77
AKS 77
புனிதா பரத் சொல்வதை இப்போதாவது புரிந்து கொள்வாளா? அல்லது கிஷோர் புனிதாவின் மனதை மாற்றிவிடுவானா?
காயத்ரியின் திருமணத்திற்கு ஓரிரு நாட்களே இருக்கின்ற சூழ்நிலையை காயத்ரி எப்படிச் சமாளிக்கப் போகிறாள்?

காத்திருப்போம்!