Published:Updated:

விகடன் TV: அப்போ டான்சர்... இப்போ சீரியல் நடிகை!

ஹேமா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேமா

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு டான்ஸ் ஆடியிருப்பேன். ஒவ்வொரு படத்தில் ஆடும்போதும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும்.

டான்சராக நமக்கு அறிமுகமான ஹேமா சன் டிவியில் ஒளிபரப்பாகும் `அன்பே வா' தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்திருக்கிறார்.

``எனக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸ்னா பிடிக்கும். ஆனா, டான்ஸ் கிளாஸுக்கெல்லாம் போனதில்லை. சும்மா டிவியில் பார்த்து ஆடுவேன். என்னுடைய அக்கா டான்சர். அவங்க மூலமா `மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் பின்னாடி நடனம் ஆடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. நான் டான்ஸ் ஆடப் போறேன்னு சொன்ன மறுநொடியே எங்க வீட்ல போகக்கூடாதுன்னு தடை போட்டாங்க. சாப்பிடாம யார்கிட்டேயும் பேசாம பிடிவாதம் பிடிச்சு சம்மதம் வாங்கினேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் அந்த ஷோவில் இருந்தேன். பிறகு, என்னுடைய அக்கா மூலமா டான்ஸர் கார்டு வாங்கினேன்.

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு டான்ஸ் ஆடியிருப்பேன். ஒவ்வொரு படத்தில் ஆடும்போதும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். பின்னாடி ஆடிட்டு இருந்தப்போ திடீர்னு முன் வரிசையில் ஆட இடம் கிடைச்சது. எனக்குக் கிடைச்ச வாய்ப்பை சரியாப் பயன்படுத்திக்கிட்டேன். அதுமட்டுமில்லைங்க, அசிஸ்டென்ட் கோரியோகிராஃபராகவும் இருந்திருக்கேன்.

சமீபத்தில் `ரகிட ரகிட' பாட்டில் என்னைப் பார்த்துட்டு பலரும் சமூகவலைதளங்களில் கமென்ட் பண்ணியிருந்தாங்க. என் ஃப்ரெண்ட்ஸ் என்னைப் பற்றி வந்த மீம் எல்லாம் காட்டினாங்க. ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. அந்தப் பாட்டு ஷூட் பண்ணும்போது தனுஷ் சாருக்கு ரொம்பக் காய்ச்சல். காய்ச்சலில் எப்படி கார்ல இருந்து குதிச்சு இவர் ஆடப் போறாருன்னு எல்லோரும் பார்த்துட்டிருந்தோம். ஆனா, எல்லோரையும் வியக்க வைக்கிற அளவுக்கு ஒரே டேக்ல செம எனர்ஜியோட ஆடினாரு.

விகடன் TV: அப்போ டான்சர்... இப்போ சீரியல் நடிகை!

எனக்கு விஜய் சாருடைய டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். `புலி' படத்தில் அவர்கூட சேர்ந்து ஆடின அனுபவம் ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்துச்சு’’ என்றவரிடம், `அன்பே வா' சீரியல் குறித்துக் கேட்டோம்.

`` `ரோஜா' சீரியலில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடப் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்துட்டு அந்த சீரியலுடைய டைரக்டர் உங்களுக்கு நடிக்க ஆர்வம் இருக்கான்னு கேட்டாங்க. இருக்குன்னு சொல்லவும் அடுத்த புராஜெக்ட்ல சொல்றேன்னு சொன்னாங்க. அப்படித்தான் `அன்பே வா' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. சீரியலில் நடிக்க வந்தாலும் எப்பவும் டான்ஸை விட மாட்டேன். டான்ஸ்தான் எனக்கான அடையாளம்..!'’