Published:Updated:

‘திடீர் புற்றுநோய், மூன்றே மாதங்கள், கலைந்த கனவுகள்!’ - ஆனந்த கண்ணனுக்கு என்ன நடந்தது?

மனைவியுடன் ஆனந்த கண்ணன்
மனைவியுடன் ஆனந்த கண்ணன்

அதுவரை குடும்பத்தினரைத் தவிர யாருக்குமே ஆனந்த கண்ணனின் உடல்நிலை குறித்துத் தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், அவரை உற்சாகப்படுத்த சினிமா, சின்னத்திரை மற்றும் பிற துறையிலுள்ள முக்கியமான சில நண்பர்களுக்கு மட்டும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளர்களாகப் பலர் பணியாற்றினாலும், அதில் சிலர் மட்டுமே சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாகப் புகழ்பெறுகின்றனர். அவர்களில் ஒருவரான ஆனந்த கண்ணனுக்கு, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அறிமுகமே தேவையில்லை. சன் டிவி-யின் நட்சத்திரத் தொகுப்பாளராகத் திகழ்ந்தவர். இவர் பேட்டி காண்பதாக இருந்தால், உச்ச நட்சத்திரங்கள்கூட குஷியாவார்கள். பெண் ரசிகர்கள் படையை அதிகம் கொண்டிருந்த ஆனந்த கண்ணன், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

குடும்பத்தினருடன் ஆனந்த கண்ணன்
குடும்பத்தினருடன் ஆனந்த கண்ணன்

2011-ல் மீடியாவில் புகழுடன் இருந்தபோதே, தனது பூர்வீகமான சிங்கப்பூரில் குடியேறினார். தமிழ் மொழி மற்றும் கிராமியக்கலைகள்மீது அதிகமான பற்று கொண்டவர். தான் கற்ற பாரம்பர்ய தமிழ்க் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள், கதைகள் வாயிலாக அந்த நாட்டிலுள்ள மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆனந்த கண்ணனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பித்தப்பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், அறுவை சிகிச்சையின் மூலம் உடனடியாக பித்தப்பையை நீக்கியுள்ளனர்.

பிறகு, வீட்டில் ஓய்விலிருந்தபடியே வழக்கமான பணிகளைக் கவனித்துள்ளார். ஆனால், சில காலத்திலேயே ஆனந்த கண்ணனின் உடல்நிலையில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. `கல்லீரலிலும் புற்றுநோய் பரவி, நான்காம் கட்ட நிலையில் இருக்கிறது’ என்று மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலைக் கூறியுள்ளனர். தொடர் சிகிச்சைகளால் உடலளவிலும் மனதளவிலும் சற்று சோர்வடைந்த ஆனந்த கண்ணன், வீட்டிலிருந்தபடியே அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

ஆனந்த கண்ணன்
ஆனந்த கண்ணன்

அதுவரை குடும்பத்தினரைத் தவிர யாருக்குமே ஆனந்த கண்ணனின் உடல்நிலை குறித்துத் தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், அவரை உற்சாகப்படுத்த சினிமா, சின்னத்திரை மற்றும் பிற துறையிலுள்ள முக்கியமான சில நண்பர்களுக்கு மட்டும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆனந்த கண்ணனுக்கு நம்பிக்கையூட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு ஆனந்த கண்ணனின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வரும் வழியிலேயே ஆனந்த கண்ணனின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனந்த கண்ணனின் மரணம், பலருக்கும் நம்ப முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குழுவினருடன் ஆனந்த கண்ணன்
குழுவினருடன் ஆனந்த கண்ணன்

ஆனந்த கண்ணனின் காதல் மனைவி ராணி, சிங்கப்பூரில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர். கதை சொல்லியான ராணி, ஆனந்த கண்ணனுடன் இணைந்து கிராமியக் கலைகளையும் பயிற்றுவித்தார். இவர்களின் ஒரே மகளான அவா கண்ணன் கல்லூரியில் படிக்கிறார். கிராமியக்கலைகளில் அனுபவம் பெற்ற மூத்த கலைஞர்களைத் தேடிச்சென்று அருகிவரும் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டு, தன் குழுவினருக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஆனந்த கண்ணன். அதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துடும்பு மற்றும் பறை இசைப் பயிற்சிக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்துப் பேசியபோது, கிராமியக் கலைஞனாகவே மாறிப்போன உணர்வில் சிலாகித்துப் பேசினார்.

``சிங்கப்பூர்ல மலாய், தமிழ், சைனீஸ், ஆங்கிலம்னு நாலு தேசிய மொழிகள் இருக்கு. இங்க ஆறு சதவிகிதத்தினர் மட்டுமே தமிழர்கள். ஒவ்வொரு பள்ளி வகுப்பறையிலயும் சராசரியா 2 - 3 மாணவர்கள் மட்டுமே தமிழர்கள். தமிழுக்குத் தொடர்ந்து உயிரூட்டலைன்னா, அடுத்த சில தலைமுறைகள்ல இந்த நாட்டுல தமிழ் பேசுறவங்க எண்ணிக்கையும் தமிழ் பாரம்பர்யமும் இல்லாமப் போகவும் வாய்ப்பிருக்கு. அதனால, தமிழர் என்கிற அடையாளத்தைத் தக்கவெச்சுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கு. அதுக்காகத்தான் பல சிரமங்களையும் கடந்து கிராமியக்கலைகளைப் பரப்பும் முயற்சியைச் செய்திட்டிருக்கோம்” என்று பெருமிதத்துடன் கூறியவர், இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்.

பயிற்சி வகுப்பில் ஆனந்த கண்ணன்
பயிற்சி வகுப்பில் ஆனந்த கண்ணன்

ஆனந்த கண்ணனின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பேசினோம். ``கடந்த சில வருஷங்களாவே கிராமியக்கலைகளுக்காக நேரங்காலம் பார்க்காம வேலை செஞ்சார். ஆனாலும், உடல்நிலைக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தார். ஆனந்த கண்ணன் ரொம்பவே ஜாலியான கலகலப்பான நபர்னு பலருக்கும் தெரியும். அவர் குடும்பத்துல இதுக்கு முன்னாடி யாருக்கும் கேன்சர் வந்ததில்ல. ஆனா, இவருக்கு இந்த பாதிப்பு எப்படி வந்துச்சுன்னுதான் ஆச்சர்யமா இருக்கு. சிங்கப்பூர்ல முன்னணி ஆஸ்பத்திரியிலதான் அவர் சிகிச்சை எடுத்துகிட்டார். ஆனந்த கண்ணனுக்கு மருத்துவத்துறையிலும் பழக்கமானவங்க இருக்காங்க. அதனால, சிங்கப்பூர் தவிர, தமிழகத்துல இருக்கும் மருத்துவர்கள் பலர்கிட்டயும் அவரோட மெடிக்கல் ரிப்போர்ட்டை அனுப்பி, ஆலோசனை பெற்று உரிய முறையிலதான் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கு.

``எனக்கு என்ன ஆனாலும் கிராமியக்கலைகளைப் பரப்பும் நம்ம வேலைகள் தொடர்ந்து நடக்கணும்”னு சொல்லியிருந்தார். அதனால, அவருக்கான சிகிச்சைகள் ஒருபக்கம் போயிட்டிருந்தாலும், தொடர்ந்து பயிற்சி வேலைகள் தடையில்லாம நடந்துட்டிருந்துச்சு. நண்பர்கள் பலரும் போன்ல, வீடியோகால்ல அவருக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. கொரோனா சிக்கலால, அந்த நேரத்துல பக்கத்துல இருந்து அவருக்கு நம்பிக்கையூட்டவும், இப்போ அவருக்கு நேர்ல அஞ்சலி செலுத்தவும் பலருக்கும் வாய்ப்பு அமையல.

ஆனந்த கண்ணன்
ஆனந்த கண்ணன்

ஸ்கூல் காலத்திலேயே மாணவர்களுக்கு கிராமியக்கலைகளைப் பயிற்றுவிக்கும் முயற்சியைச் செய்திட்டிருந்தார். உலகின் பல நாடுகள்லயும் இந்த முயற்சியை விரிவுபடுத்தணும்ங்கிறது ஆனந்த கண்ணனின் கனவு. அதுக்காகவே, தமிழ்ல முன்னணி சேனல்கள்ல இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்தும்கூட, அதையெல்லாம் ஏற்க மறுத்துட்டார். கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்ததுபோல மூணே மாதங்கள்ல எல்லாமே முடிஞ்சுடுச்சு. ஆனந்த கண்ணனோட இழப்பை ஏத்துக்க கஷ்டமா இருக்கு. அவரோட குடும்பத்தினரும், குழுவினரும் ஆனந்த கண்ணனின் கனவுகளை நிறைவேற்ற நிச்சயமா உழைப்பாங்க” என்று கவலையுடன் முடித்தனர்.

ஆனந்த கண்ணன் விதைத்துச் சென்றிருக்கும் பணிகள் விருட்சமாக வளரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு