Published:Updated:

"ரஜினியின் அந்தக் கமென்ட், 'தளபதி'க்கு ஆர்கானிக் கேக், 'பூபூ' எனக்கு எழுதிய கடிதம்!" - அர்ச்சனா ஷேரிங்ஸ்

''திருமணத்துக்குப் பிறகு எடை கூடிட்டீங்கனு பலரும் கேட்கிறாங்க. ஒருத்தரோட உடலைக் கேலி பண்றது ரொம்ப ஈஸி. ஆனா, என் உடலமைப்பு ஏன் இப்படி மாறிடுச்சுனு நான் யாருக்கும் விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.''

அர்ச்சனா
அர்ச்சனா

சின்னத்திரையில் மறக்க முடியாத முகம் என்றால் அர்ச்சனாவாகத்தான் இருக்கும். செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளினி எனப் பன்முகம் கொண்ட 'சரிகமப' அர்ச்சனாவுடன் ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்தால் என்ன என்ற எண்ணத்தைச் செயல்படுத்தினோம். வாழ்க்கைப் பயணம் தொடங்கி, தற்போது அவர் எதிர்கொள்ளும் சவால்கள் வரை, விகடன் நிருபர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் சளைக்காமல் பதில் அளித்தார், அர்ச்சனா.

"ஏன் உங்க பொண்ணு கழுத்துல ருத்திராட்ச மாலை எப்போதும் போட்டிருக்காங்க?"

"என் பொண்ணு சாராவுக்கு 8 வயசுல ஒரு மேஜர் ஆபரேஷன் நடந்துச்சு. கடவுள்தான் காப்பாத்த முடியும்ங்கிற நிலைக்குப் போயிட்டா. அந்த நேரத்துல என் அம்மா கழுத்துல ஒரு ருத்திராட்ச மாலை போட்டிருந்தாங்க அதை அவ கையில பிடிச்சுக்கிட்டே இருந்தா. இதைப் பார்த்துட்டு, கடவுள்கிட்ட குழந்தையைக் கொடுத்து வாங்கிக்கோனு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். அதேபோல வேண்டிட்டு அந்த மாலையைக் கொடுத்துட்டேன். திருப்போரூர் முருகன் கோயில்ல இருந்து ஒரு ருத்ராட்ச மாலை வந்துச்சு. அப்போ இருந்து சாரா கழுத்திலேயேதான் அந்த மாலை இருக்கு"

''நான் பண்ற நிகழ்ச்சிகளுக்கு இணை தொகுப்பாளர்களே இல்லை. ரெண்டுபேருக்கும் சேர்த்து நானே பேசிடுறேனே. அப்புறம் எதுக்கு இன்னொரு தொகுப்பாளர். நான் இணை தொகுப்பாளரோட பண்ண ஒரே நிகழ்ச்சி 'காமெடி டைம்'தான்''.
- அர்ச்சனா

"உங்கள் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?"

"ரஜினியின் அந்தக் கமென்ட், 'தளபதி'க்கு ஆர்கானிக் கேக், 'பூபூ' எனக்கு எழுதிய கடிதம்!" - அர்ச்சனா ஷேரிங்ஸ்

"இந்தக் கேள்விக்குப் பதில் சீக்கிரமே சொல்றேன். திருமணத்துக்குப் பிறகு எடை கூடிட்டீங்கனு பலரும் கேட்கிறாங்க. உடலைக் கேலி பண்றது ரொம்ப ஈஸி. ஆனா, என் உடலமைப்பு ஏன் இப்படி மாறிடுச்சுனு நான் யாருக்கும் விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் என்னால உடல் எடையைக் குறைக்க முடியாதுனும் இல்லை. இப்படி என்னைக் கேலி பண்ண நபர்களுக்காகவே உடல் எடையைக் குறைச்சு 'இளமை புதுமை' அர்ச்சனாபோல திரும்பி வரேன். அதுக்கு அப்புறம் மறுபடியும் என்னால எடை கூட முடியும். ஆனா, என்னைக் கேலி செஞ்சவங்களோட குணத்தை மாத்த முடியாது. இப்படிப் பேசிட்டோமேனு அவங்களை ஃபீல் பண்ண வைக்கிறதுக்காகவே எடையைக் குறைச்சுட்டு வர்றேன்."

"உங்களைப்போலவே பிரியங்கா காப்பியடிக்கிறாங்கனு சொல்றாங்களே, அதை எப்படிப் பார்க்குறீங்க?"

"நான்தான் பிரியங்காவைக் காப்பியடிக்கிறேன்னு என்கிட்ட சொல்வாங்க. ஆனா, எங்களுக்குள்ள அப்படி எந்த ஒரு தவறான எண்ணமும் இல்லை. ரெண்டுபேருக்குமே நகைச்சுவைதான் பலம். அதனால, ஏதாவது சில விஷயங்கள் பொதுவானதா இருக்கும். நம்மளைப் பார்த்து யாராச்சும் காப்பியடிச்சா நமக்கு ஒருவித சந்தோஷம் இருக்கும்தானே. அந்த சந்தோஷம் எங்க ரெண்டுபேருக்குமே இருக்கு."

"நீங்க ரஜினி ரசிகை. உங்க பொண்ணு?"

"தளபதி ரசிகை. அவரோட பிறந்தநாளுக்கு, ஆரோக்கியமான கேக் செய்யணும்னு வாழைப்பழம், கோதுமை மாவு, ஆலிவ் எண்ணெய்னு ஆர்கானிக் பொருள்களை மட்டும் உபயோகிச்சு ஸ்பெஷல் கேக் என் பொண்ணே செஞ்சுட்டா. பிறகு, அவளே 'ஹாப்பி பர்த்டே தளபதி'னு வாழ்த்திட்டு அவளே அந்தக் கேக்கை சாப்பிட்டும் முடிச்சுட்டா."

"இப்படி 'நான்-ஸ்டாப்'பா பேசிக்கிட்டே இருக்கீங்களே, எப்படி உங்ககூட மத்தவங்க தொகுத்து வழங்குறாங்க?"

"அதனாலதான் நான் பண்ற நிகழ்ச்சிகளுக்கு இணை தொகுப்பாளர்களே இல்லை. ரெண்டுபேருக்கும் சேர்த்து நானே பேசிடுறேனே. அப்புறம் எதுக்கு இன்னொரு தொகுப்பாளர். நான் இணை தொகுப்பாளரோட பண்ண ஒரே நிகழ்ச்சி, 'காமெடி டைம்'தான். உருவ கேலி பண்ணக்கூடாது, மத்தவங்க மனசைப் புண்படுத்துற மாதிரி பேசக்கூடாது. இதெல்லாம்தான் ஒரு தொகுப்பாளினியா நான் எப்போவும் நினைக்கிற விஷயங்கள். இத்தனை வருடத்துல நான் கத்துகிட்ட விஷயம், நாமதான் ஜோக்கரா இருக்கணுமே தவிர மத்தவங்களை ஜோக்கர் ஆக்கிடக் கூடாது. அதைத்தான் இப்போவரை ஃபாலோ பண்றேன்."

"திறமையை சிலர் மதித்தாலும், பாலியல் துன்புறுத்தல் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. இதை எப்படிக் கடந்து வர்றீங்க, மற்ற பெண்களுக்கு உங்க ஆலோசனை என்ன?"

"பாலியல் துன்புறுத்தல்னு சொன்னாலே உடல் சார்ந்துதான் சொல்றோம். ஆனா, உடலையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு. ஒருத்தர் பார்க்கிற பார்வையே நம்மளைக் கஷ்டப்படுத்துச்சுனா, அதுவும் முறைகேடான செயல்தான். இதுபோல நிலைமை எனக்கு ஏற்பட்டுச்சுனா, சமூக வலைதளங்கள்ல பதிவு பண்ணிட்டு இருக்கமாட்டேன். அங்கேயே அப்போவே பதிலடி கொடுத்திடுவேன். சமூகத்துல பெரிய மாற்றம் வர்ற வரைக்கும் இதுபோல துன்புறுத்தல்கள் இருந்துக்கிட்டேதான் இருக்கும். எல்லாத்தையும் சந்திக்கத் தயாரா இருக்கணும். எதுக்கும் பயப்படக்கூடாது. அடிக்கிறதுன்னா அடிச்சிடணும். மத்தவங்க வந்து காப்பாத்துவாங்கனு இருக்கக்கூடாது."

''மறைந்த சிட்டி பாபுவை மிஸ் பண்றீங்களா?''

''அவ்வளவு அழகா பேசக் கூடியவர். யாரையும் புண்படுத்திப் பேசக்கூடாது, உருவகேலி கூடாது என்பதில் தெளிவா இருப்பார். செலிபிரிட்டி திருமணம் என்றாலே எக்கச்சக்க பிரபலங்கள் வருவாங்க. ஆனா, என் திருமணத்திற்கு வந்த ஒரே ஒரு பிரபலம் சிட்டி பாபு சார்தான்.''

''ரஜினியைப் பேட்டி எடுத்த அனுபவத்தைப் பகிருங்களேன்?''

அர்ச்சனா
அர்ச்சனா

''மின்னல் மாதிரி உள்ளே வந்தார். எதைப் பற்றிப் பேசப் போறோம்னு கேட்டார், சொன்னோம். "ஒன்லி '2.0'தான்"னு சொல்லிட்டார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியைப் பேட்டி எடுக்கிறோம். நானும் அவருடைய தீவிர ரசிகை. ரொம்ப டிரிக்கியான கேள்விகளை வைத்திருந்தோம். பேட்டி முடியும் வரை சீட்டு நுனியில உட்கார்ந்தே கேள்வி கேட்டேன். பேட்டி முடிந்த அடுத்த நாள், அவங்க வீட்டுக்கு 'ஜி தமிழ்' டீமே போனோம். அவங்க வீட்டுல மோர் கொடுத்தாங்க. சூப்பரா இருந்துச்சு. என் தோளில் கைப்போட்டு போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார், ரஜினி சார். அப்போ நான் தொகுப்பாளர் கமலைப் பார்த்து சிரிச்சேன். 'அவர் பெயர் கமல் சார்'னு சொன்னேன். போட்டோ எடுத்த பிறகு, 'நீ இன்னொரு தடவை இந்தப் பக்கம் வரக்கூடாது'னு சிரிச்சார். மறக்க முடியாத அனுபவம் அது.''

''வைஜயந்தி ஐ.பி.எஸ் மாதிரி கேரக்டர் கொடுத்தா நடிப்பீங்களா?''

''நடிக்க கூப்பிட்டு, அந்தக் கேரக்டர் கொடுத்தா, நிச்சயமா நடிப்பேன்."

''உங்க அம்மாவைப் பற்றி ஓரிரு வார்த்தை?''

''அம்மா என்றால் அன்பு. நான் நியூஸ் ரீடரா இருந்து, வீஜே ஆனேன். அப்போ, அப்பா உயிரோடு இல்லை. அப்போது எனக்கு நிறைய சினிமா வாய்ப்பு வந்தது. வீட்டுக்குப் பணத்தோடு வந்து, நடிக்கக் கேட்டாங்க. அப்போ சினிமாவில் நடித்தால் குடும்ப மானம் போயிடும்ங்கிற ரீதியான நிலை இருந்தது. அப்பாவின் மறைவு ஒரு பக்கம், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல் ஒரு பக்கம். அப்போ எங்க அம்மாதான், 'பதில் சொல்லவேண்டிய ஆள் நீ மட்டும்தான். உன்னைக் கண்ணாடியில் பார்த்துப் பயப்படாம இருந்தாலே, நீ தைரியமா வேலையைச் செய்யலாம்'னு சொன்னாங்க. அம்மா இப்போவரை எனக்கு மிகப்பெரிய பலம்.''

''குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

'' 'நீ மூடு' என்பதும் தவறான வார்த்தைதான். இப்போ நிறைய குழந்தைகள் 'ஃபிஷ்' என்ற வார்த்தையைத் தவறான வார்த்தைக்குப் பதிலாகப் பேசுவதை நானே பார்த்திருக்கிறேன். கார்ட்டூனில்கூட, 'மொட்டை மண்டையா'னு சொல்றாங்க. இதையெல்லாம் தவிர்க்க டெலிவிஷனுக்கும் சென்சார் போர்டு வரணும். வந்தா, நல்லா இருக்கும்."

''சாரா இப்போது டீன்-ஏஜை எட்டவிருக்கிறார். அவரைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறீர்களா?''

''என் குழந்தை பிறந்தபோது, குழந்தை வளர்ப்பு பற்றித் தெரியாது. கிட்டத்தட்ட நாங்க ரெண்டுபேருமே ஒன்றாகத்தான் வளர்ந்தோம். டீன்-ஏஜ் பருவத்திலும் ரெண்டுபேரும் ஒன்றாகத்தான் வளருவோம். சூழ்நிலைகள்தான் வளர்ச்சியைக் கொண்டு செல்லும். நிறைய இடங்களில் என் அம்மா நல்லது, கெட்டதை எடுத்துச் சொல்வாங்க. என் அம்மா எனக்கு வழிகாட்டியா இருக்காங்க. நிறைய குடும்பங்களில் அது இல்லைனு நினைக்கிறேன். என் மாமனார், மாமியாரும் சென்னையில்தான் இருக்காங்க. நிச்சயம் அவர்களுடைய ஆலோசனைகள், அனுபவங்கள் உதவியா இருக்கும்.''

அர்ச்சனா - சாரா
அர்ச்சனா - சாரா

''இப்போ இருக்கும் குழந்தைகள், பெற்றோருடன் ப்ரண்ட்லியாக இருக்கிறார்களா?''

''சென்னை மாதிரியான நகரங்களில் இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் ப்ரண்ட்லியாகத்தான் இருக்கிறார்கள். குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இப்போ நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுடன் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்.''

''உங்களை மிகவும் கவர்ந்த பேச்சாளர்?''

'' 'பட்டிமன்றம்' ராஜா அவர்களைப் பிடிக்கும். இயல்பாக நடக்கக்கூடிய விஷயங்களை, யதார்த்தமாகச் சொல்லக்கூடியதில் வல்லவர்."

'' 'சரிகமப லிட்டில் சாம்' நிகழ்ச்சியில் விழித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுடன் பழகிய அனுபவம்?''

''அந்த நிகழ்ச்சியில் ஒருமுறை 'லெட்டர் ரவுண்டு' வெச்சோம். அந்த செட்டில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும், லெட்டர் எழுதலாம் என்பதுதான் கான்செப்ட். சஹானா என்கிற குழந்தைக்கு நான் 'பூபூ'னு பெயர் வெச்சேன். 'பூபூ'னு கூப்பிட்டால் எங்கிருந்தாலும் நான் இருக்கும் திசைக்குத் திரும்புவாள். சஹானாவால் பார்க்க முடியாது. இருந்தாலும், 'எனக்கு உங்க வீட்டைப் பார்க்கணும்போல இருக்கு. எப்போ கூட்டிக்கிட்டுப் போவீங்க. எனக்கு சாராவைப் பார்க்கணும்போல இருக்கு'னு சொல்லிக்கிட்டே இருப்பா. எனக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதில், 'இந்த செட்லயே என் அம்மா நீங்கதான்'னு எழுதியிருந்தாங்க. இதைவிட நான் என்ன பெரிதாக சம்பாதித்துவிட முடியும். நான், தீபக், ஜி தமிழ் டீம் என எங்களால் முடிந்த அளவுக்கு இதுபோன்ற இயலாதவர்களுக்குப் படிப்பு, அடிப்படைத் தேவைகள் என ஸ்பான்ஸர் செய்து கொண்டிருக்கிறோம். உதவி செய்கிற விஷயத்தை இப்போதெல்லாம் வெளியில் சொன்னால்தான் அதன் மூலமாக சிலர் உதவி செய்ய முன் வருகிறார்கள்.''