Published:Updated:

``அன்பு ஜெயிக்கும்னு இனியும் நம்புவேன்!" - `பிக்பாஸ்' அர்ச்சனா பளிச் #VikatanExclusive

`பிக்பாஸ்' அர்ச்சனா

அர்ச்சனாவுக்கு, சோஷியல் மீடியா விமர்சனங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அது குறித்துப் பேசுகையில் அர்ச்சனாவின் குரலில் எமோஷன் கூடுகிறது.

``அன்பு ஜெயிக்கும்னு இனியும் நம்புவேன்!" - `பிக்பாஸ்' அர்ச்சனா பளிச் #VikatanExclusive

அர்ச்சனாவுக்கு, சோஷியல் மீடியா விமர்சனங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அது குறித்துப் பேசுகையில் அர்ச்சனாவின் குரலில் எமோஷன் கூடுகிறது.

Published:Updated:
`பிக்பாஸ்' அர்ச்சனா

ந்த ஆண்டின் `பிக்பாஸ்’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. `மற்ற சீஸன்களைவிட இந்த சீஸன் சுமாராகவே செல்கிறது, வெளிப்படைத் தன்மை குறைவாக இருக்கிறது' என்பன போன்ற மாறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும், இந்த நிகழ்ச்சியைக் காண பெரிய பார்வையாளர்கள் கூட்டம் இருக்கவே செய்கிறது. `அன்பு ஜெயிக்கும்’ என்ற முழக்கத்துடன் விளையாடிய தொகுப்பாளர் அர்ச்சனா, நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். மகிழ்ச்சியுடன் வெளியில் வந்தவர், தன் மீதான ரசிகர்களின் பார்வை மாறுபட்டிருப்பதை அறிந்து கடும் அதிருப்தியிலும் ஆதங்கத்திலும் இருக்கிறார். நீண்ட முயற்சிக்குப் பிறகு, அர்ச்சனாவிடம் பேசினோம்.

'பிக்பாஸ்' அர்ச்சனா
'பிக்பாஸ்' அர்ச்சனா

``ஜீ தமிழ் சேனல்ல இருந்து நான் வெளியேறிட்டதாவும், பெரிய தொகை வாங்கிட்டுத்தான் `பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குள் போனதாகவும் பேச்சுகள் எழுந்திருக்கு. இந்த ரெண்டுமே உண்மையில்ல! ஜீ தமிழ் சேனல்ல ஆறு வருஷம் ராணி மாதிரி தொகுப்பாளரா வேலை செஞ்சேன். ஆனா, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலை செஞ்சேனே தவிர, அந்த சேனலின் ஊழியரா நான் செயல்படல. என்னோட தனிப்பட்ட வளர்ச்சிக்காக அந்த சேனல்ல இருந்து வெளியேறிய நிலையிலதான், எனக்கு `பிக்பாஸ்’ வாய்ப்பு வந்துச்சு. ரெண்டு வெவ்வேறு காட்சிகளைத் தவிர, இதுக்கு முந்தைய மூணு சீஸன் `பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் நான் பார்த்ததே இல்ல.

நான் ரொம்பவே எமோஷனல் டைப். கோபம், அழுகை ரெண்டையும் உடனே வெளிப்படுத்திடுவேன். ஆனால், எதையும் எதிர்கொள்ளும் போல்டான கேரக்டர். அன்புதான் நம்ம வாழ்க்கையை இயக்கும் அஸ்திவாரம்னு உறுதியா நம்புவேன். `பிக்பாஸ்’ வாய்ப்பு வந்தப்போ, அன்பால எல்லாப் போட்டியாளர்களையும் ஒத்துமையா இருக்க வெச்சு, எல்லோருக்கும் பிடிச்ச ஒரு மனுஷியா இருந்துட்டு உற்சாகமா வெளிய வருவோம்னுதான் அந்த நிகழ்ச்சிக்குள் போனேன். `டாக்டர்’ பட டப்பிங் வேலைகளாலதான் உள்ளே போக ரெண்டு வாரம் தாமதமாச்சு. அடிப்படையான டாஸ்க், எலிமினேஷன் புராசஸ் பத்தி மட்டும் தெரிஞ்சுகிட்டு அன்பு ஜெயிக்கும்கிற நம்பிக்கையுடன் ஓப்பன் மைண்டோடுதான் நிகழ்ச்சிக்குள்ள போனேன்.

'பிக்பாஸ்' அர்ச்சனா
'பிக்பாஸ்' அர்ச்சனா

பார்வையாளர்களைப்போல சுரேஷ் சாரை நானும் கோபக்காரராதான் முதல்ல நினைச்சேன். ஆனா, அவர் ரொம்பவே தன்மையானவர்னு உள்ளே போன பிறகுதான் தெரிஞ்சது. அப்போதான், உள்ள நடக்குறதுக்கும், வெளியிலுள்ள மக்கள் அதைப் புரிஞ்சுக்கிறதுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறதை உணர்ந்தேன். நான் உள்ளே நுழைஞ்சப்போ, எல்லோரும் அன்புடன் என்னை வரவேற்க, பாலா மட்டும் என்னைத் தலைவலியா நினைச்சான். அவன்மேல உண்மையான அன்பைத்தான் வெளிப்படுத்தினேன். அதை அவன் நம்பவேயில்லைங்கிறதையே போன்ல பேசுற டாஸ்க்லதான் தெரிஞ்சுகிட்டேன். அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அவன் என்னைப் போட்டியாளரா மட்டும்தான் ட்ரீட் பண்ணினான்.

ஒவ்வொரு வாரமும் நான் சரியான காரணங்களுக்காகத்தான் சிலரை நாமினேஷன் செஞ்சேன். ஆனா, சிலர் அப்படியெல்லாம் செய்யல. அதேபோல என்னோட ஃபிரெண்டா இருந்தாலும் நிஷாவை சில நேரம் நியாயமான காரணங்களுக்காகக் கண்டிச்சேன். அதெல்லாம் பார்வையாளர்கள் கண்ணுக்குப் பெரிசா தெரியல. எல்லா இடத்துலயும் நம்ம பண்ற விஷயத்தைக் கவனிக்கிறதையே வேலையா வெச்சு சில போட்டியாளர்கள் செயல்படுவாங்கன்னு நினைக்கல. அதை வெளிய வந்துதான் தெரிஞ்சுகிட்டேன்.

`பிக்பாஸ்' அர்ச்சனா
`பிக்பாஸ்' அர்ச்சனா

என் அப்பாவைப் பத்தி நிஷா பேசின ஒரு தருணம் என்னை ரொம்பவே பாதிச்சது. ஒரு கட்டத்துல நானும் அதைத் தவறா எடுத்துக்காம நிஷாகிட்ட மனம்விட்டுப் பேசினேன். அதோடு அந்த வலி எனக்குப் போயிடுச்சு. இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பாசிட்டிவ்வா கடந்து வந்தேன். ஆனா, என்னோட அப்பா விஷயம் உட்பட பலவும் மக்களால ஜோக்கா பார்க்கப்பட்டதுதான் எனக்குப் பெரிய வலியா இருக்கு. அப்படி நான் என்ன பண்ணிட்டேன்? `அவரை முன்னிலைப்படுத்தினேன், இவரை முன்னிலைப்படுத்திட்டேன்'னு சொல்றாங்க. போட்டியாளர்கள்கிட்ட கேட்டா தெரியும். எல்லோர்கிட்டயும் சகஜமா, அன்பாதான் பழகினேன். அது வெளியே காட்டப்படாதது என் தப்பா?

ரியோ, நிஷா உட்பட நாங்க ஆறு பேரும் டாஸ்க் இல்லாத நேரங்கள்ல சிரிச்சுப் பேசினோம். அதேபோல இன்னொரு டீமும் இருந்தாங்க. அவங்க மேல குரூப்பிசம்ங்கிற வாதத்தை நாங்க முன்வைக்கல. ஆனா, அந்தப் பேச்சை எங்க மேல முன்வெச்சு சிலர் தந்திரமா விளையாடினாங்க. குரூப்பிசம் இல்லைனு நிரூபிக்க ரொம்பவே போராடினேன். இதை ஒருமுறை கமல் சார்கிட்டகூட கேட்டேன். அவர்கூட இல்லைனுதான் சொன்னார். இதைத் தவறா கணிச்சு பார்வையாளர்கள்ல சிலர் கருத்து சொல்ல, பலரையும் அதை முழுசா நம்பி சோஷியல் மீடியாக்கள்ல எதிர்வினையாற்றி இருக்கிறதை இப்ப பார்த்து ரொம்பவே நொந்து போனேன். என்மேல கொஞ்சம் கோபத்தை வெளிப்படுத்தினவங்களோட டிரஸ்ஸைக்கூட நான் துவைச்சுப் போட்டேன். அதெல்லாம் அவங்க எங்கயும் வெளிப்படுத்தவும் இல்லை; நினைச்சும் பார்க்கல” என்று ஆதங்கப்படும் அர்ச்சனாவுக்கு, சோஷியல் மீடியா விமர்சனங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அது குறித்துப் பேசுகையில் அர்ச்சனாவின் குரலில் எமோஷன் கூடுகிறது.

'bigg boss' archana
'bigg boss' archana

``நான் போட்டியில் இருந்த 67 நாள்கள்ல, 60 நாள்கள் சமையல் வேலைகளைச் செஞ்சு, ஏழு நாள்கள் கிச்சன் மென்ட்டாரா இருந்தேன். எல்லா டாஸ்க்கையும் ஆக்டிவ்வா செஞ்சேன். எந்தத் திட்டமிடலும் பிளானிங்கும் இல்லாம எதார்த்தமாதான் விளையாடினேன். நான் உள்ளே போன மூணாவது வாரம் நாமினேஷன் லிஸ்ட்ல இருந்தேன். அந்த வாரம் சேவ் ஆனேன். பிறகு, நான் வெளியேறியதுக்கு முந்தின வாரம்தான் மறுபடியும் நாமினேஷன் லிஸ்ட்ல வந்தேன். இடைப்பட்ட காலத்துல போட்டியாளர்கள் ஒருமித்த குரல்ல என்னை நாமினேஷன் செய்யல. போட்டியாளர்கள்கிட்ட நான் காட்டும் அன்பு சரியா இருக்குதுனுதான் நினைச்சேன். அதை மக்கள் சரியா புரிஞ்சுக்கலையோனுதான் வருத்தமா இருக்கு.

ஃபேமிலியை விட்டு ரொம்ப நாள் என்னால இருக்க முடியாது. 40 நாள்கள்தாம் அந்த நிகழ்ச்சியில் இருப்பேன்னு நம்பினேன். ஆனா, கூடுதலா மூன்று வாரங்கள் இருந்தேன். வெளிய வரும்போது ரொம்பவே மகிழ்ச்சியாதான் வீட்டுக்கு வந்தேன். ஆரத்தி எடுத்து அம்மா வரவேற்றாங்க. குடும்ப நபர்களுடன் அன்புப் பரிமாற்றம் நடந்துச்சு. ஆனா, அவங்க எல்லோரின் முகத்திலும் பெரிசா சந்தோஷம் இல்ல. பெரிய வலியும் ஏமாற்றமும் இருக்கிறதை தாமதமாதான் புரிஞ்சுகிட்டேன். அடுத்த நாள் அவங்க உடைஞ்சு அழுதாங்க. நடந்ததையெல்லாம் சொன்னாங்க. சோஷியல் மீடியாவைப் பார்த்தேன். ஒரு கேம் ஷோவுக்கு மீறிய விஷயமா என்மீதான விமர்சனங்கள் இருப்பதைத் தெரிஞ்சு கலங்கினேன்.

`பிக்பாஸ்' அர்ச்சனா
`பிக்பாஸ்' அர்ச்சனா

என்னால ஏத்துக்கவே முடியல. நான் போட்டியில் இருந்த எபிசோடுகளை ஓரளவுக்குப் பார்த்தேன். அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி. உடனே ஜித்தன் ரமேஷும் நிஷாவும் என்னைப் பார்க்க வந்தாங்க. பிறகு, என்னை ஓரளவுக்குத் தேத்திகிட்டேன். என் குடும்பத்தினர் ஒருதுளிக்கூட என்னைத் தவறா மதிப்பிடல. `அம்மாவை முழுசா நம்பினதுக்கு நன்றி’ன்னு மகள்கிட்ட உருக்கமா சொன்னேன். `நான் உன்னைப் பார்த்துக்கிறேன்மா’ன்னு இப்பவரை அவதான் எனக்கு ஆறுதல் சொல்றா. சரியா சாப்பிடாம, தூக்கம் இல்லாம டிப்ரெஷன்ல இருக்கேன். நான் தவறான முடிவெடுத்துட்டேனோன்னு குடும்பத்தினர் பயப்படுறாங்க. என் கையில அதிக நேரம் போன் தராம, யாராச்சும் ஒருத்தர் என்கூடவே இருக்காங்க. இப்படியொரு குடும்பம் இல்லைனா, இந்நேரம் நான் இருந்திருக்க மாட்டேன்.

கெட்ட வார்த்தைபோல, காமெடியா, கேலியா பேசுற அளவுக்கு என்னால அன்புங்கிற வார்த்தை பார்க்கப்படுறதை நினைச்சு ரொம்பவே வருத்தப்படுறேன். உள்ளே எதுவும் ஸ்கிரிப்ட் கிடையாது. எல்லாம் இயல்பா நடக்கும் விஷயங்கள்தான். `பிக்பாஸ்’ நிகழ்ச்சி மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதை ஒரு போட்டியா அவங்க சரியாதான் நடத்தியிருக்காங்க. ஒருநாள் நிகழ்வுகளை 45 நிமிஷத்துல எப்படியெல்லாம் சுவாரஸ்யமா காட்ட முடியுமோ அப்படிக் காட்டியிருக்காங்க. ஆனா, மற்ற 23 மணிநேரத்துல என்ன நடந்ததுனு மக்களுக்குத் தெரியாததுதான் என்னை மாதிரியான சிலருக்குப் பெரிய பின்னடைவு.

`பிக்பாஸ்' அர்ச்சனா
`பிக்பாஸ்' அர்ச்சனா

போட்டிக்கும் உண்மைக்கும், எதார்த்தத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைப் பார்வையாளர்கள் சரியா கணிக்கத் தவறிட்டதா நினைக்கிறேன். `பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குள் போனதே தவறான முடிவோனுகூட தோணுது. `என் மீதான உங்க கணிப்பு உண்மையில்லை'னு நான் எப்படிக் கத்திச் சொன்னாலும் மக்கள் ஏத்துப்பாங்களா? அடுத்த மூணு மாசத்துக்கு குடும்பத்துக்கு மட்டுமே நேரம் செலவிடப் போறேன். இப்போதைக்கு இன்னொரு மீடியாவுல உடனே நான் வேலை செய்வேனான்னு தெரியலை. அந்த மனநிலையும் எனக்கு முழுசா இல்ல.

மக்கள் என்னைத் தவறா நினைச்சதுகூட பரவால்ல. ஆனா, பலரும் சோஷியல் மீடியாவுல என்னைப் பத்தி எழுதின விஷயங்களைச் சொல்ல வாய் கூசுது. `பிக்பாஸ்’ல கலந்துகிட்டது நான்தானே! இதுல என் குடும்பத்தினரையும் என் கேரக்டரையும் தவறா சித்திரிச்சு அசிங்கமா எழுதுறதும் பேசுறதும் எந்த வகையில நியாயம்? சுலபமா திரைமறைவுல இருந்து எதை வேணா எழுதி ஒரு பெண்ணை எளிதா காலி பண்ணலாம்னு சிலர் நினைக்கிறாங்க. இது சம்பந்தப்பட்டவரையும் அவர் குடும்பத்தினரையும் எப்படிப் பாதிக்கும்னு தெரிஞ்சா இப்படியெல்லாம் எழுத மாட்டாங்க.

`பிக்பாஸ்' அர்ச்சனா
`பிக்பாஸ்' அர்ச்சனா

`பிக்பாஸ்’ல இருந்து நான் வெளிய வரும்போது மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் அழுதாங்க. `அன்புக் கோழி’ன்னு என்னை அன்புடன்தான் அனுப்பினாங்க. அது கொஞ்சம் மகிழ்ச்சியா இருந்துச்சு. எனக்கு முன்பா வெளியேறிய எல்லாப் போட்டியாளர்கள்கிட்டயும் எந்த வெறுப்பும் இன்றி அன்புடன் பேசினேன். இப்பவும் அவங்களோடு தொடர்ந்து பேசுறேன். `பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லாப் போட்டியாளர்களையும் அழைச்சு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வேன். என்ன நடந்தாலும் அன்பு ஜெயிக்கும்னு இனியும் நம்புவேன்” என்று முடித்தார்.

ஒருவர்மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால், தனிப்பட்ட தாக்குதல், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான விமர்சனங்கள் நல்ல மாற்றங்களுக்கு வழிவகை செய்யாமல், மேற்கொண்டு வேதனைகளையே அதிகரிக்கும். இத்தகைய விமர்சனங்கள், நாளை நம்மீதும் திரும்பலாம் என்பதை நெட்டிசன்கள் உணர வேண்டும்.