Published:Updated:

`` `அம்மா மகளின் லாக்டெளன் அலப்பறைகள்'னு தலைப்பு வெச்சிடுங்க!" - அர்ச்சனா கலகல

அர்ச்சனா
அர்ச்சனா ( instagram )

`` `எனக்கு... இப்படி ஒரு பொண்ணா..!'அப்படீன்னு நானே சமயத்துல மலைச்சுப் போயிருக்கேன்னா பார்த்துக்கோங்க" - அர்ச்சனா

இந்த லாக்டெளன் நாள்களில் குழந்தைகள் வீட்டில் இருப்பதை, ஆட்டம், பாட்டம், சத்தம், சண்டை, கொண்டாட்டம், குறும்பு என்று `எந்நேரமும் வீடு கலகலப்பாக இருக்கிறதே' என சந்தோஷப்படுவதா, `சமாளிக்க முடியலைடா சாமி' என்று சலித்துக்கொள்வதா என்ற மனநிலையில்தான் பெற்றோர்கள் நாள்களைக் கடத்தி வருகின்றனர்.

Zaara - Archana
Zaara - Archana
instagram

வீட்டுக்கு வீடு வாசப்படி, பிரபலங்களின் வீடுகளுக்கும்தானே?! அந்த வகையில் `வாயாடி - பெத்த புள்ள' என அர்ச்சனா - அவர் மகள் சாரா இருவரும் லாக்டௌனில் ஆனந்த அதகளம் செய்துகொண்டிருக்கிறார்கள். அர்ச்சனாவிடம் பேசினோம்.

``எங்க வீட்டுல `பிக் மதர்'னா அது என் அம்மாவோ, நானோ இல்ல. சாராதான். எங்க எல்லாரையும் தாயா இருந்து பாத்துக்கிறா. அட ஆமாங்க, நான் சத்தியமா சொல்றேன். ``எனக்கு... இப்படி ஒரு பொண்ணா..!'அப்படீன்னு நானே சமயத்துல மலைச்சுப் போயிருக்கேன்னா பார்த்துக்கோங்க" - இன்றும் `இளமை புதுமை' அர்ச்சனாவாகவே படபடக்கிறார்.

Zaara - Archana
Zaara - Archana
instagram

``இந்த லாக்டெளனில் முதல் சவால், வீட்டு வேலைக்கு வர்றவங்க கட். அதனால எல்லாத்தையும் நாமதானே பார்த்தாகணும். என் அம்மா காலத்துல எல்லாம், சின்ன வயசிலேயே வீட்டு வேலைகளைக் கத்துக்கொடுத்துடுவாங்களாம்.

நம்ம காலத்துல, வளர்ந்ததும் தேவை வந்தப்போ நாமளே எல்லாத்தையும் செஞ்சு கத்துக்கிட்டோம். ஆனா இந்தக் காலத்துல அப்படியா..? அதனால இந்த லாக்டெளனில் எனக்கு உதவியா சாராவையும் வீட்டு வேலை செய்ய வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

நான் வீட்டைப் பெருக்கிவிட்டா, சாரா `வாக்வம்' பண்ணிடுவா. நான் பாத்திரம் தேய்க்க தேய்க்க சாரா கழுவி வெச்சுடுவா. இதுவும் நல்லா ஜாலியாதான் இருக்கு. அப்புறம் மேடம் ஆல்வேஸ் நீட் அண்டு க்ளீன்.

Zaara
Zaara
instagram

அதனால் இந்த அலமாரி, வார்ட்ரோப் அரேஞ்ச் பண்றது எல்லாமே அவளே பண்ணிடுவா. நாம அப்படியே `ஏய் அப்ரன்டீஸ்... இதை அங்க வை, அதை அப்படி செய்'னு, பெரிய ஆபீஸர் மாதிரி கெத்து காட்ட ஆரம்பிச்சுட்டோம்ல!

இந்தப் புள்ளகிட்ட பிடிக்காத விஷயம்னா... அநியாயத்துக்கு பிரசன்டபிளா இருக்கிறதுதான். ஷூட்டிங் போயிட்டு இருக்கும்போதே, எப்படா வீட்டுக்குப் போவோம், நைட்டிய மாட்டுவோம்னு இருக்கிறவ நான். இப்ப, வீட்டிலேயேதானே கெடக்கிறோம், கெஸ்ட்டு கிஸ்ட்டுன்னுகூட யாரும் வர வாய்ப்பே இல்லயேன்னு நைட்டியை வெச்சே நாள்களை ஓட்டிடுவோம்னு இருக்கேன்.

Zaara
Zaara
instagram

ஆனா இந்தப் பொண்ணு இருக்கே... அப்படியே நமக்கு உல்டா. வீட்ல இருந்தாலும் மேடம் ஒரே பளபளாதான். `ஏன்டி எதுக்குடீ துவைக்குற வேலையை இழுத்துவிடற..? ரெண்டு டிரெஸ்ஸை மாத்தி மாத்தி துவைச்சுப் போட்டுக்கிட்டா போதாதா?'ன்னு நான்தான் தலைதலையா அடிச்சுக்கிறேன். அவ காதுலகூட... ஹூஹும்.

சொல்லப்போனா, நான்லாம் மொத்தமா எல்லா வேலையையும் முடிச்சுட்டு குளிக்கிற கேஸு. ஆனா, காலங்காத்தால `குட்மானிங் டியர்'ன்னு சொல்றதுக்கு அவ ரூமை தொறந்து எட்டிப் பாத்தா, குளிச்சு முடிச்சு நல்லா டிரெஸ் பண்ணிட்டு, கண்ணாடி முன்னாடி தலைவாரிட்டு நிக்கும்.

Zaara - Archana
Zaara - Archana

`ஏன்டி, ஏதோ ஆபீஸ் போறமாதிரி கெளம்புற..? `வாக்வம் ' போடப் போறதுக்கு அழகா டிரெஸ் பண்ணிட்டு வர்றது உலகத்திலேயே நீயாதான்டி இருப்ப'ன்னு சொல்லுவேன். ஆனாலும் இன்னிக்கு வரைக்கும் இதே கதைதான் ஓடிட்டு இருக்கு.

நான் சும்மா சலிச்சுக்கிட்டாலும், அவகிட்ட இருக்கிற இந்தப் பழக்கத்தை நான் ரொம்பவே ரசிப்பேன். ஏன்னா, எனக்கு அதுமட்டும்தான் வரும். அவளை மாதிரி இருக்கிறதுக்குச் சுட்டுப்போட்டாலும் வராதே..." என தனக்கே உரித்தான தொனியில் பேசிக்கொண்டிருந்தவரிடம்...

``என்னதான் நீங்க செல்லமா சலிச்சுக்கிட்டாலும், இந்தக் காலத்துல இப்டி பொறுப்பான ஒரு பொண்ணான்னு ஆச்சர்யமா இருக்கு. நீங்க அம்மாவா, உங்க பொண்ணு உங்களுக்கு அம்மாவான்னே டவுட்டா இருக்கு" என்றதும், சாரா வருகிறார் பேச.

``இதை எல்லாரும் கேட்டு கேட்டு, எங்கம்மாவுக்கு இந்த கமென்ட் பழகிப்போச்சு. ஆனா, எங்கம்மா என்னைப் பத்தி சொல்றதெல்லாம் கம்ப்ளெயின்ட் கிடையாது. இதுக்குப் பேருதான் சலிச்சுக்கிட்டே சந்தோஷப்படறது'' என்று அர்ச்சனாவைப் பார்த்து கண்ணடிக்கிறார் சாரா.

Zaara's Art Work
Zaara's Art Work
instagram

``சரி, சாராவை இப்போ எப்டி பாராட்டுறேன்னு மட்டும் பாருங்களேன்...'' என்று மீண்டும் கலகலவென ஆரம்பித்தார் அர்ச்சனா. ``மேடத்துக்கு சின்ன வயசுல (!) இருந்தே ஆர்ட் அண்டு கிராஃப்ட்னா அல்வா சாப்புடற மாதிரி. டிராயிங், பெயின்டிங், கிராஃப்ட் வொர்க்ன்னு விதவிதமா பண்ணிட்டே இருப்பா.

இவ வயசுல என்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போனா, எத்தனை சாக்லெட் வாங்குறது, அம்மாகிட்ட எத்தனை பொம்மைக்கு பிட்டு போடறதுன்னு யோசிப்பேன். ஆனா இவ ஏதாச்சும் ஒரு கிராஃப்ட் கிட் வாங்காம வீட்டுக்கு வந்ததா சரித்திரமே இல்லை. அநியாயத்துக்கு, மளிகைக் கடைக்குப் போனாகூட ஒரு பென்சில் பாக்ஸை வாங்கினாதான் உயிரே வரும் இவளுக்கு.

Zaara
Zaara
instagram

நான்லாம் ஜிலேபியை பிச்சுபோட்டமாதிரி எழுதுவேன். ஆனா, இந்த லாக்டெளன்ல சாரா, எழுத்துகளை டிசைன் டிசைனா எழுதுற `கேலிகிராஃபி' கோர்ஸை ஆன்லைன்ல கத்துக்கிட்டு இருக்கிறா. அப்புறம் குக்கிங்லயும் செம்ம ஆர்வமா இருக்குறா. பாஸ்தா பண்றது, பேக்கிங்னு கலக்குறா. இதுல மட்டும் எப்படிப் பாராட்டுறேன் பாத்தீங்களா... ஏன்னா நாமல்லாம் வஞ்சனையில்லாம சாப்புடற கூட்டம்ல!

மத்தபடி இந்த லாக்டெளன்ல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா உக்கார்ந்து பாடுறது, டான்ஸ் பண்றதுனு எங்களோட அலப்பறையை எல்லாம் வீடியோ எடுத்து சோஷியல் மீடியால அப்லோட் பண்றது, நான், அம்மா, சாரான்னு மூணு தலைமுறையும் ஒண்ணா உக்கார்ந்து பழைய படங்களைப் பாக்குறதுன்னு ஒரே அதகளம் பண்ணிட்டு இருக்கோம். இந்த பேட்டிக்கு `அம்மா மகளின் லாக்டெளன் அலப்பறைகள்'னு தலைப்பு வெச்சுட்டா பொருத்தமா இருக்கும்." - தொகுத்து வழங்கும் ஸ்டைலிலேயே பேசினார் அர்ச்சனா.

Archana - Zaara
Archana - Zaara
instagram

``ஆங்... இன்னொரு விஷயம். ஷூட்டிங்குக்கு என்னோட ஹேர்ஸ்டைலிஸ்ட் வரலைன்னா, நான் டிவியில் சந்திரமுகி ஹேர் ஸ்டைல்லதான் வந்து நிக்கணும். இத்தனை வருஷமா ஃபீல்டுல இருந்தும் மேக்கப்கூட சமாளிச்சுடுவேன், ஆனா ஹேர்ஸ்டைல்ல நான் ரொம்ப வீக். வீட்டுலகூட, தூங்கி எழிந்ததும், இந்த `பாடி சோடா' வடிவேலு மாதிரி மண்டை மேல ஒரு கொண்டைய போட்டுட்டு சுத்துறவ.

ஆனா, சாராகிட்ட யாராச்சும் தலையைக் கொடுத்தா போதும், சும்மா தபேலா வாசிக்கிற மாதிரி, அவளோட கை அப்படி இப்படின்னு விளையாடி, கடைசியில அழகா ஒரு ஹேர்ஸ்டைல் வந்திடும். இதெல்லாம் எங்கதான் கத்துக்கிறாளோ. என்ன, போரடிக்குதுன்னா உடனே `அம்மா தலையைக் காட்டேன்னு' பின்னாடியே வந்து உயிர வாங்கிடும்.

Zaara
Zaara
instagram

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சுன்னு சொல்லுவாங்க. சாராவுக்காக என்னை காக்கான்னுகூட சொல்லிக்குவேன். அந்தளவுக்கு அவ சுத்தமான, தங்கமான பொண்ணு. இந்த லாக்டெளன்ல நான் அவகிட்ட நெறைய விஷயங்கள் கத்துக்கறேன்.

சின்ன குழந்தைய நாம தூக்கிப்போட்டு பிடிப்போம். அது திரும்பவும் நம்ம கையில கரெக்டா வந்துடும்ன்னு நம்பிட்டு, பயப்படாம சிரிச்சுக்கிட்டே இருக்கும். சாராகிட்ட, இயல்பாவே நம்பிக்கை, பொறுமை எல்லாமே இருக்கிறதோடு எப்பவுமே நேர்மறையா சிந்திக்குற பொண்ணு.

லாக்டௌனில் எடை அதிகரிக்காமல் பராமரிக்க... 5 எளிய உடற்பயிற்சிகள்! 

நான், `எப்படா இந்த கொரோனா ஒழியும்'னு அடிக்கடி சலிச்சுக்குவேன். ஆனா சாரா, `இப்பதான் நாமெல்லாம் வீட்ல ஒண்ணா இருக்கோம். நெறைய டைம் கிடைச்சிருக்கு. சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும். அப்புறம் திரும்ப எப்பவும் மாதிரிதான் டேஸ் இருக்கப்போகுது'ன்னு ரொம்ப நம்பிக்கையா பொறுமையா சொல்லுவா. என்ன மாதிரியான சிச்சுவேஷன்லயும் எப்படி பொறுமையா அமைதியா இருக்கிறதுன்னு அவகிட்ட கத்துக்கிட்டு இருக்கேன்.

Archana's Family
Archana's Family
instagram

சாரா, இந்தக் குழந்தைப் பருவத்திலேயே தாய்மை குணம், கருணை, பொறுமைன்னு நல்ல குணங்களோடு இருக்கறதை நெனச்சா சந்தோஷமா இருக்கு. வளர்ந்து பெரியவளானா ஒரு நல்ல மனிதியா இருப்பான்னு பெரிய நம்பிக்கை இருக்கு. ஓர் அம்மாவா எனக்கு அது பெருமையாவும் இருக்கு" என்று முடிக்கும்போது அர்ச்சனாவிடம் கொஞ்சம் நெகிழ்ச்சி.

``வழக்கம்போல நீயே எல்லாத்தையும் பேசி முடிச்சிட்ட! இப்டிதான்... வாயாடி பெத்த புள்ளையா இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா வாயாடி?!" - தன் அம்மாவை ஹேப்பி மூடுக்கு மாற்றுகிறார் சாரா!

வீட்டிலிருந்தபடியே வேலை... ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க 10 வழிகள்! #VikatanPhotoCards
அடுத்த கட்டுரைக்கு