Published:Updated:

``லாரா `பேட்டிங்'கானு கேட்டார்... நான் `ஈட்டிங்'னேன்'' - ஸ்போர்ட்ஸ் ஆங்கர் பாவனா!

பாவனா

`என்ன தெரியும்'ங்கிற கேலியைச் சமாளிக்கணும்னா `எவ்வளவு தெரிஞ்சுக்க முடியுமோ அவ்வளவு தெரிஞ்சுக்கணும்'னு முடிவெடுத்தேன்’

``லாரா `பேட்டிங்'கானு கேட்டார்... நான் `ஈட்டிங்'னேன்'' - ஸ்போர்ட்ஸ் ஆங்கர் பாவனா!

`என்ன தெரியும்'ங்கிற கேலியைச் சமாளிக்கணும்னா `எவ்வளவு தெரிஞ்சுக்க முடியுமோ அவ்வளவு தெரிஞ்சுக்கணும்'னு முடிவெடுத்தேன்’

Published:Updated:
பாவனா

பாவனா பாலகிருஷ்ணன்... தமிழ்த் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமான நாளில், உச்சரிப்புக்காக அதிகம் கலாய் வாங்கியவர். அன்று அந்தக் கேலி கிண்டல்களைச் சட்டை செய்யாமல் புறந்தள்ளியதாலேயே, இன்று காம்பியரிங்கில் எந்தத் தமிழ்ப் பொண்ணும் தொடாத உச்சம் தொட்டிருக்கிறார். ஆம், ஃபன் நிறைந்த கேம் ஷோ, மியூசிக் ரியாலிட்டி ஷோ என என்டர்டெய்ன்மென்ட் ஏரியாவிலிருந்து ஸ்போர்ட்ஸ் பக்கம் வந்திருக்கும் தமிழின் முதல் ஆங்கர் இவர். கபடி, ஐ.பி.எல்-லைத் தொடர்ந்து, உலகக் கோப்பைக் கிரிக்கெட்டிலும் மைக் பிடித்த பாவனாவிடம் பேசினேன்...

பாவனா
பாவனா

``கேலி, கிண்டலுக்குப் பயந்து பயணத்தைத் தொடங்காமலேயே சிலர் பின் வாங்கிடுவாங்க. சிலரோ அந்தப் பயணத்தையே பந்தயமாக்கிடுவாங்க. நான் இரண்டாவது டைப். என் உச்சரிப்பைக் கலாய்ச்சதை நான் கண்டுக்கலை. ஏன்னா குரல்ங்கிறது இறைவன் தந்த வரம். ஆனா `சூப்பர் சிங்கர்ல வர்றாளே... இவளுக்கு இசை பத்தி என்ன தெரியும்'ங்கிற மாதிரியான கமென்ட்டுகள்தான் பொட்டுல அடிச்ச மாதிரி எனக்கு ஒரு விஷயத்தை உணர்த்துச்சு. என்ன தெரியும்'ங்கிற கேலியைச் சமாளிக்கணும்னா `எவ்வளவு தெரிஞ்சுக்க முடியுமோ அவ்வளவு தெரிஞ்சுக்கணும்'னு முடிவெடுத்தேன்.

உதாரணம் சொல்லணும்னா, ஷோவுல போட்டியாளர் ஒரு பாடலைப் பாடறார்னா, அந்தப் பாட்டுக்கான சிச்சுவேஷன் தொடங்கி, பாடலைப் பாடியவர், இசையமைத்த மியூசிக் டைரக்டர், ஷூட்டிங் லொகேஷன்னு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்குவேன். இதுல எவ்வளவு விஷயங்களைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முடியுமோ அவ்வளவு கடத்த முயற்சி செய்வேன். `ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய போதும், நடனம் தொடர்பா நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா சமயங்கள்ல `எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டற திமிர் இது'ன்னு நெகட்டிவான விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது. `லைட்டா இன்ஃபர்மேஷன் தந்தோமா.. கெக்கபிக்கேனு சிரிச்சோமா.. போதும்ங்கிற காம்பியரிங் ஏரியாவின் இன்னொரு மனோபாவமும் என்னை டிஸ்டர்ப் செஞ்சது. ஆனா எதையும் காதுல வாங்கிக்காம என் ரூட்டுல பயணிச்சதாலேயே என்னால சாதிக்க முடிஞ்சது.

தொகுப்பாளினி பாவனா
தொகுப்பாளினி பாவனா

டிவியில என்னோட ஆங்கரிங்கைப் பார்த்துட்டே, கார்ப்பரேட் நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டாங்க. நான் தொகுத்து வழங்கிய ஒரு கார்ப்பரேட் நிகழ்ச்சிதான் ஸ்போர்ட்ஸ் ஆங்கரிங் பக்கம் என்னைக் கூட்டி வந்தது'' என்றவர், `ப்ரோ கபடி', கிரிக்கெட் விளையாட்டைத் தொகுத்து வழங்கிய அனுபவத்தைப் பேசும்போது மெய் சிலிர்க்கிறார்...

``கபடி விளையாட்டைத் தொகுத்து வழங்கத் தயாரானபோது, அந்த ஆட்டத்துக்கான உடையைப் போட்டுக்கிட்டு நான் கபடி ஆடாதது ஒண்ணுதான் பாக்கி. மத்தபடி மும்பைக்கு கூட்டிப் போய் பதினைஞ்சு நாளுக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுத்தாங்க. `கபடி வீரராவது எப்படி'னு புத்தகமே போடலாம். அந்தளவுக்கு பயிற்சி தந்துதான் என்னைக் களத்துல இறக்கி விட்டாங்க. இந்த இடத்துலதான் பொழுதுபோக்கு சேனல்களுக்கும் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிஞ்சது. மும்பையில நான் முதல் நாள் பயிற்சி எடுத்துக்கப் போனப்ப அங்க எனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள் இப்பவும் ஞாபகம் இருக்கு... `விளையாட்டு தானேனு விளையாட்டா எடுத்துக்காதீங்க. ஒண்ணு ரெண்டு வார்த்தைகள் தவறிட்டாலும் போதும்; வருஷக் கணக்குல உங்களை மீம் போட்டுத் தாளிப்பாங்க. சேனலே சேதாரம் ஆகிடும்'னாங்க.

பாவனா
பாவனா

தமிழே தெரியாம தமிழ் சேனல்ல ஆங்கரா சேர்ந்த தைரியத்தை மறுபடியும் வரவழைச்சுக்கிட்டு கபடி பண்ணினேன். அடுத்து? உலகத்துல அதிகம் பேருக்குப் பிடிக்கிற விளையாட்டைத் தொட வேண்டாமா? கிரிக்கெட் கிரவுண்டுலயும் இறங்கியாச்சு'' என்றவரிடம்,

``ஸ்போர்ட்ஸ் ஆங்கரிங் என்றால், `ஃபன் சுத்தமாகத் தேவையில்லையா'' என்றேன்.

''யார் சொன்னது? மேற்கிந்தியத் தீவுகளுக்கும் தென்னாப்ரிக்காவுக்கும் இடையேயான மேட்ச். மும்பை ஸ்டூடியோவுல இருந்து நான் பேசிட்டிருக்கேன். அரங்கத்துக்கு லாரா வந்திருக்கார். கிடைச்ச கேப்ல `சார் நானும் உங்களை மாதிரி லெஃப்ட் ஹேண்ட்தான்'னு அவர்கிட்டச் சொல்றேன். `ஓ அப்படியா'ன்னவர் சிரிச்சுகிட்டே `பேட்டிங்கா பௌலிங்கா'ங்கிறார். நான் `நோ பேட்டிங்; ஒன்லி ஃபார் ஈட்டிங்'னு சொல்றேன். அந்த இடம் எப்படி இருந்தது தெரியுமா' எனச் சிரிக்கிறார்.