சினிமா
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர் - “நியூஸ் படிச்சுட்டு அழுதிருக்கேன்!”

அபி நவ்யா
பிரீமியம் ஸ்டோரி
News
அபி நவ்யா

காலேஜ் போய்ட்டே கேப்டன் டி.வி-யில் ஒர்க் பண்ணிட்டிருந்தேன். ஆறேழு மாதம் வரையில் டிரெயினராக எல்லா வேலையும் கத்துக்கிட்டேன்

“சின்ன வயசில இருந்தே டீச்சர் ஆகணும்னு எங்க வீட்ல சொல்லிச் சொல்லியே வளர்த்தாங்க. ‘கண்டிப்பா நாம டீச்சர் மட்டும் ஆகக் கூடாது’ன்னு ஆரம்பத்தி லேயே முடிவு பண்ணிட்டேன்!’'- புன்னகைக்கிறார் அபி நவ்யா. நியூஸ் ஆங்கராக வலம் வந்துகொண்டிருப்பவர் தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘கயல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

“சொந்த ஊர் திருச்சி. காலேஜுக்குக்கூட சென்னைக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க. யூஜி ஊரிலேயே படிச்சு முடிச்சேன். நல்லா படிப்பேன் என்பதால் சென்னைக்குப் போய் பிஜி படிக்கிறேன்னு சொன்னப்ப வீட்ல பெரிய அளவில் மறுப்பு சொல்லல. சரின்னு அனுப்பி வெச்சாங்க. லயோலா காலேஜில் எம்.எஸ்ஸி விஸ்காம் படிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். அந்தச் சமயம் என் ஃப்ரெண்ட் மூலமா கேப்டன் டி.வி-யில் நியூஸ் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. ‘சரி, டிரை பண்ணிப் பார்க்கலாம்’னு அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டு எம்.எஸ்ஸி முடிவைக் கைவிட்டுட்டு ஒரு வருட ஜர்னலிசம் கோர்ஸ் சேர்ந்தேன்.

ஆங்கர் to ஆக்டர் - “நியூஸ் படிச்சுட்டு அழுதிருக்கேன்!”

காலேஜ் போய்ட்டே கேப்டன் டி.வி-யில் ஒர்க் பண்ணிட்டிருந்தேன். ஆறேழு மாதம் வரையில் டிரெயினராக எல்லா வேலையும் கத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு நியூஸ் ரீடிங் வாய்ப்பு கொடுத்தாங்க. டிரெயினரா இருந்தப்பவே ஒரு செய்தியை எப்படி வாசிக்கணும்னு கத்துக்கிட்டதனால நேரடி ஒளிபரப்பில் செய்தி வாசிக்கும்போது திணறாமல் வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

பிறகு, ராஜ் டி.வி-யில் ‘வெள்ளித்திரை' என ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். சனி, ஞாயிறு ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் சினிமாத் துறை சார்ந்த பிரபலங்களை பேட்டி எடுப்பேன். அதில், பல அனுபவங்கள் கிடைச்சது. அங்கிருந்து நியூஸ் ஜெ டி.வி-யில் நியூஸ் ஆங்கராக செலக்ட் ஆனேன். இப்ப வரை அங்கேதான் நியூஸ் ரீடிங், சினிமா செய்திகள், செலிபிரிட்டி நேர்காணல் போன்றவற்றைப் பண்ணிட்டிருக்கேன். நியூஸ் படிக்கும்போது, குழந்தைங்களுக்கு எதிராக நடக்கிற வன்முறை, சிலருடைய மரணம், விபத்து செய்திகள் எல்லாமே ரொம்ப எமோஷனலா இருக்கும். முகத்தை எப்பவும்போல இயல்பா வச்சிக்கிட்டுதான் செய்திகளைப் படிச்சாகணும். படிச்சு முடிச்சதும் எமோஷனலாகி அழுத மொமன்ட்ஸ் நிறையவே இருக்கு. சமீபத்தில், ஒரு இயக்குநரை நேர்காணல் பண்ணியிருந்தேன். அவர் என்னைப் பார்த்துட்டு ‘உங்களைப் பார்க்க ஒரு சாயலில் சாய் பல்லவி மாதிரி இருக்கு’ன்னு சொன்னார். என் மனசுக்கு அந்தப் பாராட்டைக் கேட்கும்போது சந்தோஷமா இருந்தாலும் என்னைச் சுற்றி உள்ளவங்க இப்பவரைக்கும் அதைச் சொல்லியே என்னைக் கலாய்ச்சிட்டு இருக்காங்க. அழகான நியூஸ் ஆங்கர் என்கிற பயணம் இப்பவரை நான்கரை வருடங்களாகத் தொடர்ந்துட்டு இருக்கு’’ என்றவரிடம், சீரியல் என்ட்ரி குறித்துக் கேட்டேன்.

ஆங்கர் to ஆக்டர் - “நியூஸ் படிச்சுட்டு அழுதிருக்கேன்!”

“என்னுடைய ஃப்ரெண்ட் மூலமா சன் டி.வி-யில் ‘பிரியமானவள்' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியலில் நடிக்கும்போது நான் ரொம்ப சின்னச் பொண்ணு மாதிரிதான் நேர்ல இருப்பேன். சீரியலில் கல்யாணமான பெரிய பொண்ணு மாதிரி தெரியணும்னு விக் எல்லாம் வெச்சு பெருசா பொட்டு வைக்கலாம்னு சொன்னாங்க. ஸ்கிரீன்ல பார்க்கும்போது பெரிய பொண்ணு மாதிரி தெரிஞ்சேன். அந்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு. அந்த சீரியலுக்குப் பிறகு, விஜய் டி.வி-யில் ‘சிவா மனசுல சக்தி' என்கிற சீரியலில் நடிச்சேன். இப்ப ஜீ தமிழில் ‘சித்திரம் பேசுதடி' என்கிற தொடரிலும், சன் டி.வி-யில் ‘கயல்' தொடரிலும் நடிச்சிட்டு இருக்கேன்’’ என்றவர் படங்களிலும் நடித்திருக்கிறார்.

“நான் நடித்த முதல் திரைப்படம் ‘பூமி.’ அந்தப் படத்தில் நடிக்கும்போது ஷாட்டுக்கு கொஞ்சமா மேக்கப் போட்டு போயிருந்தேன். நான் நார்மலா கொஞ்சம் கலரா இருக்கிறதனால என்னை முகம் கழுவிட்டு வரச் சொல்லிட்டாங்க. முகம் கழுவிட்டு எந்த மேக்கப்பும் போடாம அந்தப் படத்தில் நடிச்சேன். அது ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. ‘பத்து தல' படத்தில் ஒரு நாள் ஷூட்டிங்கிற்குப் போய்ட்டு வந்திருக்கேன். அதுதவிர, பட வாய்ப்புகள் எதுவும் வரலை. வந்த வாய்ப்புகளையும் தள்ளிப்போட வேண்டியதாகிடுச்சு’’ என்றவர், அதற்கான காரணத்தையும் பகிர்ந்துகொண்டார்.

ஆங்கர் to ஆக்டர் - “நியூஸ் படிச்சுட்டு அழுதிருக்கேன்!”
Aakash

“என்னுடைய நண்பரின் நண்பர், தீபக். இப்போ ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘என்றென்றும் புன்னகை' தொடரில் கதாநாயகனா நடிச்சிட்டு இருக்கார். ஃப்ரெண்டா பேச ஆரம்பிச்சோம். ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சிருந்தது. அவரே எங்க வீட்லயும் அவர் வீட்லயும் பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினார். வருகிற ஜனவரி 27-ம் தேதி எங்களுக்குக் கல்யாணம். கல்யாணம் முடிஞ்சதும் குடும்பம் சார்ந்த சில கமிட்மென்ட்ஸ் இருக்கும் என்பதால் இப்போதைக்கு படம், சீரியல் ரெண்டையும் தள்ளிப் போட்டிருக்கேன்’’ என்ற அபி நவ்யாவுக்கு வாழ்த்துகள் சொன்னேன்.