சினிமா
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: மாமனாராக நடிக்க ஆசைப்பட்ட எஸ்.பி.பி!

தீப்தி கபில்
பிரீமியம் ஸ்டோரி
News
தீப்தி கபில்

பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர். ஸ்கூல் படிக்கும்போதே பேச்சுப்போட்டி எல்லாத்திலும் கலந்துகிட்டுப் பரிசு வாங்கியிருக்கேன்

“எஸ்.பி.பி சார் பக்கத்துல நின்னு ஈவன்ட் பண்ணும்போது அவர்கிட்ட `எனக்காக ஒரு பாட்டு பாடுங்க’ன்னு சொன்னதும், ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ன்னு என்னைப் பார்த்துப் பாடினார். அப்படி அவர் பல அழகான நினைவலைகளை என்கிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கார்!’’ என நெகிழ்ந்து பேசத் தொடங்கினார் தீப்தி கபில். ஆங்கராகத் தன் கரியரை ஆரம்பித்தவர், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

“பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர். ஸ்கூல் படிக்கும்போதே பேச்சுப்போட்டி எல்லாத்திலும் கலந்துகிட்டுப் பரிசு வாங்கியிருக்கேன். பிளஸ் டூ படிக்கும்போது என் அப்பா ஃப்ரெண்ட் ஒருத்தர் லோக்கல் சேனல் வச்சிருந்தார். அந்த சேனலுக்காக ஆங்கரிங் பண்ணக் கேட்டாங்க. நானும், என் தங்கை தியாவும் ஆங்கரிங் பண்ணப் போனோம். ரெண்டு பேரும் சேர்ந்தும் பல நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கோம், தனித்தனியாவும் பல லைவ் ஷோக்களைத் தொகுத்து வழங்கியிருக்கோம்.

ஆங்கர் to ஆக்டர்: மாமனாராக நடிக்க ஆசைப்பட்ட எஸ்.பி.பி!
ஆங்கர் to ஆக்டர்: மாமனாராக நடிக்க ஆசைப்பட்ட எஸ்.பி.பி!

அப்படியே காலேஜ்ல கல்ச்சுரல் புரோகிராம் எல்லாத்தையும் நானே தொகுத்து வழங்க ஆரம்பிச்சேன். எப்ப லோக்கல் சேனலில் ஆங்கரா என் பயணத்தை ஆரம்பிச்சேனோ அப்பவே கார்ப்பரேட் ஈவன்ட்களையும் தொகுத்து வழங்க ஆரம்பிச்சிட்டேன். பெரும்பாலும் நான் ஆங்கருக்கான ஆடிஷனில் கலந்துகிட்டதில்லை. வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கிட்டேன். அப்படி ஜெயா டி.வி, மக்கள் டி.வின்னு ஆங்கரிங் பண்ணினேன். என் தங்கச்சி தியா சன் மியூசிக்கில் ஆங்கரானாங்க. ரெண்டு பேருடைய ஆங்கரிங் கரியரும் நல்லபடியா போய்ட்டிருந்தது. அதில் பல அனுபவங்கள் இருந்தாலும் மறக்க முடியாத அனுபவம்னா எஸ்.பி.பி சார் அனுபவம்தான்.

அவர் இசைக் கச்சேரிகளைப் பலமுறை தொகுத்து வழங்கியிருக்கேன். ‘நீ என் பக்கத்தில் நின்னாலே எனக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கு’ன்னு மேடையில் எல்லார் முன்னாடியும் என்னைப் பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், `உனக்கு மாமனாராக உன்கூட நடிக்கணும்’னு சொல்லியிருக்கார். அதெல்லாம் எப்பவும் என்னால மறக்கவே முடியாது” என்றவர், சீரியல் என்ட்ரி குறித்துப் பேசினார்.

“என்னை நம்பி, நான் நடிச்சா நல்லா இருக்கும்னு சொல்லி சன் டி.வி-யில் ‘நிலா’ சீரியலில் நடிக்கக் கூப்பிட்டாங்க. ஆக்டிங்கைப் பொறுத்தவரை யாருமே இல்லாம நம்ம முன்னாடி யாரோ இருக்கிற மாதிரி நினைச்சிகிட்டுப் பேச வேண்டியிருக்கும். மைக்ல அத்தனை கூட்டத்தை கண்ட்ரோல் பண்ணிப் பழகிட்டு திடீர்னு யாருமில்லாம நடிக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ‘செம்பருத்தி’ சீரியலும் எதிர்பாராம அமைஞ்சதுதான். ஒருநாள் கால் பண்ணி மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்திடுங்கன்னு சொன்னாங்க. காஸ்டியூம்கூட அவசர அவசரமா ரெடி பண்ணிட்டுப் போனேன்.

ஆங்கர் to ஆக்டர்: மாமனாராக நடிக்க ஆசைப்பட்ட எஸ்.பி.பி!
ஆங்கர் to ஆக்டர்: மாமனாராக நடிக்க ஆசைப்பட்ட எஸ்.பி.பி!

நம்ம மேல நமக்கு எப்பவும் நம்பிக்கை இருக்கணும் என்பதை நான் எப்பவும் கடைப்பிடிப்பேன். என்னதான் அந்தக் கதாபாத்திரம் குறித்து வெளியில் பல நெகட்டிவிட்டிகள் இருந்தாலும் என்னால முடியும்னு நம்பி நடிச்சேன். அதே மாதிரி மக்களும் என்னை ஏத்துக்கிட்டாங்க.

சமீபத்தில் ஒரு ஈவன்ட் தொகுத்து வழங்கப் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும் ஒரு பாட்டியம்மா வேகமா ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடிச்சிட்டு `ஐஸூ’ன்னு சொன்னாங்க. அந்தத் தருணம் ரொம்ப எமோஷனலா இருந்துச்சு.

என்னோட மிகப்பெரிய பலமே என்னோட குடும்பம்தான்! என் பையன் ‘கியூட்டான அம்மாவாக இருக்கே’ன்னு அடிக்கடி சொல்லுவான். அதே மாதிரி, ஸ்கிரீன்ல யாராச்சும் என்னைத் திட்டினாங்கன்னா அவங்க ஏன்மா உன்னைத் திட்டுறாங்கன்னு அடிக்கப் போயிடுவான். அந்த அளவுக்கு அம்மா செல்லம்” என்று நெகிழ்கிறார் தீப்தி.