சினிமா
Published:Updated:

“நிறைய நிறைய திட்டு வாங்கியிருக்கேன்!”

சாம்
பிரீமியம் ஸ்டோரி
News
சாம்

அடுத்த கட்டத்துக்குப் போகணும்னா அதற்கான முயற்சிகளையும் நாம எடுத்தே ஆகணும். இப்ப ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன்

‘‘சன் மியூசிக்கில் ஆங்கராக நுழைந்த சமயம், லைவ் ஷோ ஒன்றை சீனியர் ஆங்கர் ஒருத்தருடன் சேர்ந்து தொகுத்து வழங்கிட்டிருந்தேன். அந்த ஷோவை டைரக்ட் பண்றவங்க லைவ்வில் எனக்கு நேரா நின்னுட்டு, எனக்குப் பேசவே தெரியலைன்னு சொல்லி, கண்டபடி திட்டினாங்க. பிரேக் விட்டதும் ரொம்ப உடைஞ்சு அழுதேன். பிறகு, என்னை நானே சரி செய்துகிட்டு, திட்டினவங்ககிட்ட இருந்தே பாராட்டு வாங்கினேன்’’ என்றவாறு பேசத் தொடங்கினார் சாம். தற்போது, சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘அருவி’ தொடரிலும், விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

“அப்பா தள்ளுவண்டிக் கடை வச்சியிருந்தாங்க. காலேஜ் படிச்சிட்டிருக்கும்போது தெரிஞ்ச அண்ணன் மூலமா சன் மியூசிக் ஆடிஷனில் கலந்துகிட்டேன். நிச்சயமா நமக்குக் கிடைக்காதுங்கிற மைண்ட் செட்டோடதான் இருந்தேன். காலேஜ்ல இருந்து டூர் போயிருந்தோம். அந்த டூர்ல இருக்கும்போதுதான் போன் பண்ணி நான் செலக்ட் ஆகிட்டேன் என்கிற தகவலைச் சொன்னாங்க.

“நிறைய நிறைய திட்டு வாங்கியிருக்கேன்!”

தள்ளுவண்டி வச்சிருக்கிறவரோட பையன் சன் மியூசிக் மாதிரியான டி.வி சேனலில் வர்றதுன்னா கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அப்பா, அம்மாவுக்கு அவ்வளவு பெருமை! ஆங்கரிங்னா என்னன்னு எனக்குத் தெரியாது. சின்ன வயசில நடிக்கணும்னுதான் ஆசைப்பட்டிருக்கேனே தவிர, ஆங்கரிங் நான் கனவிலும் நினைச்சுப் பார்க்காத மிகப்பெரிய வாய்ப்பு. கொஞ்ச கொஞ்சமா கத்துக்கிட்டு ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட ஒரு வருடப் போராட்டத்துக்குப் பிறகு என் முகம் பலருக்கும் பரிச்சயமாக ஆரம்பிச்சது.

நடிக்கணும் என்பதுதான் என் ஆசை என்பதால் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்துட்டே இருந்தேன். காலேஜ் படிச்சிட்டிருக்கும்போதே 75 ரூபாய் சம்பளத்துக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடிச்சிருக்கேன். அந்த அனுபவம் இருந்ததனால தெரிஞ்ச மேனேஜர், காஸ்டிங் டைரக்டர்ஸ்கிட்டலாம் பேசிட்டே இருந்தேன்.

2011-ல் சன் டி.வி-யில் ‘அழகி’ சீரியலில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியலில் சின்ன கேரக்டரில் நடிச்சேன். பிறகு, திருமுருகன் சாருடைய ‘அந்த பத்து நாட்கள்’ என்கிற சீரியலில் நடிச்சேன். அதில் என் நடிப்பைப் பார்த்துட்டு சார் ‘கார்த்திகைப் பெண்கள்’ சீரியலில் லீடு ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ராடன் புரொடக்‌ஷனில் ‘சிவசங்கரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ன்னு தொடர்ந்து மூன்று புராஜெக்ட்ஸ் பண்ணினேன். விகடன் டெலிவிஸ்டாஸின் ‘தெய்வமகள்’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல் எனக்கு பயங்கரமான ரீச் கொடுத்துச்சு.

“நிறைய நிறைய திட்டு வாங்கியிருக்கேன்!”

இதுக்கு இடையில் படிச்சிட்டு ஏதாவது வேலைக்குப் போகலாம்னு ஆறு மாத கோர்ஸ் ஒன்றைத் தேர்வு செய்து படிச்சேன். படிப்பு முடிஞ்சு கேம்பஸ்லேயும் செலக்ட் ஆகிட்டேன். ஆனா, மீடியா ஆசை துரத்திட்டே வர, இனிமேல் மீடியாதான் நமக்கு எல்லாமேன்னு மறுபடியும் இங்கேயே வந்துட்டேன்.

வி.ஜேவாக இருக்கும்போது மட்டும் திட்டு வாங்கலைங்க. சீரியலில் நடிக்க ஆரம்பிச்ச புதுசிலும் திட்டு வாங்கியிருக்கேன். ‘அழகி’ சீரியலில் நடிக்கும்போது ஒரு ஷாட் எனக்கு சரியாகவே நடிக்க வரல. ரொம்ப டேக் போய்ட்டே இருந்துச்சு. அங்க ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நிறைய பேர் இருந்தாங்க. அப்பவே ஆங்கரா என்னை கொஞ்ச பேருக்குத் தெரியும். டேக் வரலைன்னு டைரக்டர் எல்லார் முன்னாடியும் ‘இதுதான் கடைசி ஷாட்... இப்பவும் நீ ஒழுங்கா நடிக்கலைன்னா நீ நடிக்கவே லாயக்கு இல்லாதவன்’னு சொல்லிட்டாரு. அவர்கிட்ட ரெண்டு நிமிஷம் டைம் கேட்டு `இதுதான் நம்மளுடைய வேலை, சரியா பண்ணணும்’னு எனக்கு நானே சொல்லிட்டு, பதற்றமில்லாமல் ஒழுங்கா அந்த சீன் நடிச்சேன். பின்னாளில், அந்த டைரக்டரே நான் நல்லா நடிக்கிறேன்னு பாராட்டினாரு. அந்தத் தருணத்தை எப்பவும் மறக்கமாட்டேன்.

2015-ல் ஆங்கரிங் வேலையை விட்டுட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். கலர்ஸ் தமிழில் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிச்சேன். அந்த கேரக்டர் எனக்கு நிறைய ரசிகர்களை சம்பாதிச்சுக் கொடுத்துச்சு. எனக்கு சீரியலில் லீடு ரோலில் ஹீரோவா நடிக்கணும்னு ஆசை. அதற்காக தொடர்ந்து உழைச்சிட்டே இருக்கேன். இப்ப வரைக்கும் சம்பளம், கேரக்டர்னு எதையும் நான் டிமாண்ட் பண்ணினதில்லை. இப்ப எனக்கு மூணு வயசுல பெண் குழந்தை இருக்கு. அவளுக்காகவும், என் குடும்பத்துக்காகவும் நிச்சயம் சம்பாதிக்கணும் என்கிற எண்ணம் மட்டும்தான் அதிக அளவில் இருக்கு.

“நிறைய நிறைய திட்டு வாங்கியிருக்கேன்!”

இனி கேரக்டர் ரோலில் நடிக்க வேண்டாம்னு நினைச்சேன். ரெண்டு மூணுமாசம் புராஜெக்ட் எதுவும் இல்லாத நேரத்தில் நண்பர் மூலமா ‘அருவி’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அப்பதான் இந்த கேரக்டர், அந்த கேரக்டர்னெல்லாம் பிரிச்சுப் பார்க்காம நமக்குப் பிடிச்சதைப் பண்ணிட்டே இருப்போம்... நிச்சயமா அது ஒரு நாள் கை கொடுக்கும்னு அடுத்தடுத்து நடிச்சிட்டு இருக்கேன்.

விஜய் டி.வி-யில் நடிக்கணுங்கிறது நீண்ட நாள் ஆசை. ‘வேலைக்காரன்’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன். இப்ப மறுபடி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சின்ன கேமியோ பண்ணிட்டிருக்கேன். தொடர்ந்து விஜய் டி.வி-யில் அடுத்தடுத்த சீரியல்களில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும்னு நம்புறேன்.

அடுத்த கட்டத்துக்குப் போகணும்னா அதற்கான முயற்சிகளையும் நாம எடுத்தே ஆகணும். இப்ப ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன். அதில், கவர் சாங்ஸ், ஷார்ட் பிலிம் எல்லாம் டைரக்ட் பண்ணி நானே நடிச்சிருக்கேன். தொடர்ந்து, சேனலில் அடுத்தடுத்து கான்செப்ட் வீடியோக்கள் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இந்தத் தளம் நிச்சயம் வெள்ளித்திரைக்கும் என்னை அழைச்சிட்டுப் போகும்னு நம்புறேன்” என்று புன்னகைக்கிறார் சாம்.