சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர் - கமல் ஊட்டிவிட்ட மீன் சாப்பாடு!

வி.ஜே பவித்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
வி.ஜே பவித்ரா

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மா கேரக்டரில் நடிக்க என்னைத்தான் செலக்ட் பண்ணியிருந்தாங்க.

‘மாடலிங், ஆங்கரிங் எனக் கலக்கிக் கொண்டிருந்தவர், வி.ஜே பவித்ரா. சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘நிலா’ தொடரின் மூலம் சீரியலுக்குள் என்ட்ரியானார்.

“காலேஜ்ல எப்பவும் ஆங்கிலத்தில் சரளமா பேசிட்டிருப்பேன். என் ஃப்ரெண்ட் சென்னையிலுள்ள EA மாலில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கணும்னு என்னைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஆங்கரிங்னா என்ன பண்ணணும், எப்படிப் பண்ணணும்னு எதுவுமே தெரியலை. அந்த நிகழ்ச்சியை சரியா தொகுத்து வழங்க முடியாம சொதப்பிட்டேன். கூட்டத்தைப் பார்த்ததும் எனக்கு பயமாகிடுச்சு. பிறகு எப்படி ஆங்கரிங் பண்ணணும்னு கத்துக்கிட்டு அதே மாலில் சூப்பரா ஆங்கரிங் பண்ணினேன். பிறகு ஆடிஷன் மூலமா ‘சுட்டி டி.வி’ ஆங்கரானேன். அங்கிருந்து சன் டி.வி ஆங்கராகிட்டேன்.

ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சப்போதான் மாடலிங்கும் பண்ண ஆரம்பிச்சேன். அழகிப் போட்டியில் கலந்துகிட்டப்போ எனக்கு எந்த விருதுமே கிடைக்காது போலன்னு ரொம்பவே ஃபீல் பண்ணிட்டு இருந்தப்போ திடீர்னு மைக்ல ‘மிஸ் சவுத் இந்தியா 2017 (MISS SOUTH INDIA 2017) பவித்ரா’ன்னு சொன்னாங்க. அந்தத் தருணம் ரொம்பவே ஸ்பெஷல்!”

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர் - கமல் ஊட்டிவிட்ட மீன் சாப்பாடு!

``சீரியல் என்ட்ரி எப்படி..?’’

“விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மா கேரக்டரில் நடிக்க என்னைத்தான் செலக்ட் பண்ணியிருந்தாங்க. ஷூட் ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடி ஆங்கரிங் பண்ணிட்டிருந்ததால சன் டி.வி-யில் சொல்லிட்டுப் போகலாம்னு முடிவெடுத்தேன். அவங்ககிட்ட இதுகுறித்துச் சொன்னதும் என்னை அனுப்பலை. அதுக்குப் பதிலா, ‘நம்ம சேனலில் பிரைம் டைம் சீரியல் தருகிறோம்’னு சொல்லி என்னை அனுப்ப மறுத்துட்டாங்க. அப்புறமாதான் ‘நிலா’ சீரியல் ஹீரோயினா என்னைத் தேர்ந்தெடுத்தாங்க. ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோம்னு இப்பவரைக்கும் ரொம்பவே வருத்தப்படுறேன்.”

``சீரியல் அனுபவம் எப்படி இருந்தது?’’

“ஆரம்பத்தில் நடிக்கும்போது என்னுடைய டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் எல்லாமே ஆங்கர் மாதிரிதான் இருந்தது. அங்கே என்கூட நடிச்சவங்க பெரும்பாலும் சீனியர் ஆர்ட்டிஸ்ட். அவங்க பர்சனலா பல விஷயங்கள் கற்றுக் கொடுத்தாங்க. அதே மாதிரி, என் டைரக்டர் நக்கீரன் சார் ரொம்ப நல்ல மனிதர். அவர் பொறுமையா என்னால முடியும்னு என்னை நம்பி நடிக்க வச்சார். அந்த சீரியலில் டூயல் ரோலில் நடிச்சிருப்பேன். என்னோட கேரக்டரை கொஞ்சம் வேறுபடுத்திக் காட்டுவதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது.”

``ஆங்கரிங்கில் மறக்கமுடியாத ஒரு மொமன்ட்..?’’

“2020-ல் பொங்கலுக்காக ‘உலகநாயகன் பொங்கல்’னு கமல்ஹாசனுடன் நடைபெற்ற ஒரு ஸ்பெஷல் ஷோவைத் தொகுத்து வழங்கினேன். எவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தாலும் எப்படி இவ்வளவு எளிமையா இருக்கார்னு அவரைப் பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். அந்த ஷோவுக்கு நடிகர் பிரபு வந்திருந்தார். அவர் வீட்டில் சமைக்கிற மீன் கமல்ஹாசனுக்குப் பிடிக்கும்னு அவர் கொண்டு வந்திருந்தார். அதை கமல் சார் சாப்பிட்டுட்டு, கூட நின்ன எங்களுக்கும் ஊட்டினார். எனக்குக் கடல் உணவுகள் சாப்பிட்டா அலர்ஜி வந்திடும்னு நான் பொதுவா அந்த வகை உணவுகளைச் சாப்பிட மாட்டேன். ஆனாலும், அவர் கையால ஊட்டும்போது வேண்டாம்னு சொல்ல எப்படி மனசு வரும், சொல்லுங்க! அந்த மொமன்ட்டை என் லைஃப்ல எப்பவும் மறக்க மாட்டேன்.”

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர் - கமல் ஊட்டிவிட்ட மீன் சாப்பாடு!

``தொடர்ந்து ஆங்கரிங், விளம்பரப் படங்கள்னு பிஸியா இருக்கீங்களே..?’’

“சீரியல் முடிஞ்சதும் சைமா விருதுகள் தொகுத்து வழங்கினேன். அப்படியே ஸ்பெஷல் ஷோக்களும் பண்ணிட்டிருந்தேன். அப்பதான் விளம்பரப் படங்களில் நடிக்கக் கேட்டாங்க. ஃப்ரீ டைம் இருக்கிறததனால கிடைக்கிற வாய்ப்பை முறையா பயன்படுத்திக்கிறேன்.”

``சீரியலில் மறக்கமுடியாத மொமன்ட்..?’’

“நான் ‘நிலா’ சீரியலில் நடிச்சப்ப கட்டின சேலைகள் பலருக்கும் பிடிச்சிருந்தது. ‘பவித்ரா சேலை கலெக்‌ஷன்’னு இன்ஸ்டாவிலும் ஃபேஸ்புக்கிலும் தனிப் பக்கமே ரசிகர்கள் ஆரம்பிச்சிருக்காங்க. அதுல அந்த சீரியலில் நான் கட்டின சேலைகளை எல்லாம் பதிவிட்டிருக்காங்க. சீரியலில் நம்மளை இந்த அளவுக்கு உன்னிப்பா ஆடியன்ஸ் கவனிக்கிறாங்கன்னு புரிஞ்சுக்கிட்ட தருணம் அது!”