சினிமா
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர் - “நான் இப்போ ஹீரோ ஆகிட்டேன்!”

ரக்‌ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரக்‌ஷன்

‘சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சியில் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தப்போ பெர்ஃபாமராகவும் இருந்திருக்கேன்

என் அப்பாதான் என் ரோல் மாடல். டிரைவராக வாழ்க்கையைத் தொடங்கியவர் இன்னைக்கு தனியார் நிறுவனங்களுக்கு கார் ரென்டல் கொடுக்கும் அளவிற்கு முன்னேறியிருக்கிறார். அவருடைய வைராக்கியமும் உழைப்பும் எனக்கும் உண்டு. பி.பி.ஓ-வில் ஆரம்பித்து பெட் பிசினஸ், சேலை பிசினஸ் வரைக்கும் பண்ணியிருக்கேன். பெருசா சாதிக்கணும் என்கிற எண்ணத்தோடு பிடிச்ச வேலையை நேசித்துப் பண்ண ஆரம்பிச்சேன்’’ என்று சொல்லும் ரக்‌ஷன் முகத்தில் உற்சாகப் பிரவாகம்.

“நான் ஸ்கூல் டிராப் அவுட் ஸ்டூடன்ட். பல இடங்களில் வேலை பார்த்திருக்கேன். சின்ன வயசிலேயே என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ‘நீ பேசாம ஹீரோவாகிடுடா’ன்னு சொல்லிச் சொல்லி, சினிமா மேல ஆசை வந்துடுச்சு. அப்பவே ஹீரோவாக நடிக்க வைக்கிறேன்னு சொன்னதை நம்பியெல்லாம் ஏமாந்திருக்கேன். அதுக்குப் பிறகு, ஏமாற்றத்தை உணர்ந்து அதிலிருந்து மீண்டு வெவ்வேறு வேலைகள் பண்ண ஆரம்பிச்சேன்.

எனக்குப் புதுப்புது வேலைகள் கற்றுக் கொள்ள ரொம்பவே பிடிக்கும். ஏதாவது பண்ணிட்டே இருப்பேன். சும்மா மட்டும் உட்கார்ந்திருக்கவே மாட்டேன். ஆசைப்பட்ட எல்லாமே டிரை பண்ணுவேன். எங்க ஏரியாவில் ஒரு பொண்ணு ராஜ் மியூசிக்கில் ஒர்க் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்க மூலமா ஆடிஷனில் கலந்துகிட்டு ராஜ் மியூசிக்கில் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன்.

ராஜ் மியூசிக்கிற்குப் பிறகு கலைஞர் டி.வி, இசையருவின்னு ஆங்கரிங் பண்ணிட்டிருந்தேன். பிறகு, விஜய் டி.வி-யில் ‘அது இது எது' நிகழ்ச்சியில் தாம்சன் அண்ணன்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்தேன். ‘கலக்கப் போவது யாரு சீசன் 5' ஆங்கரிங் பண்ண வாய்ப்பு கிடைச்சது.

ஆங்கர் to ஆக்டர் - “நான் இப்போ ஹீரோ ஆகிட்டேன்!”

ஆரம்பத்தில் டீம்கிட்ட பயங்கரமா திட்டெல்லாம் வாங்கியிருக்கேன். ‘நாலு எபிசோடு பார்ப்போம்... ஒழுங்கா பண்ணலைன்னா உன்னைத் தூக்கிடுவோம்’னு முகத்துக்கு நேராகவே சொல்லியிருக்காங்க. அப்படியெல்லாம் குழந்தைக்குச் சொல்ற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா திட்ட வேண்டிய நேரத்தில் திட்டி, பாராட்டுற நேரத்தில் பாராட்டிக் கத்துக் கொடுத்தாங்க. பிறகு, ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் அடுத்த ரெண்டு சீசனையும் நான்தான் தொகுத்து வழங்கினேன்.

‘சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சியில் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தப்போ பெர்ஃபாமராகவும் இருந்திருக்கேன். அதனால, ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியிலும் பெர்ஃபாமராக ஒவ்வொருத்தரோட காமெடி ஆக்டிலும் வருவேன். ஒவ்வொரு ஆங்கருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். அப்படி எனக்கான தனித்துவமா பெர்ஃபாம் பண்றதை நினைச்சேன். நூறு காமெடியன்கள் இருப்பாங்க... அந்தக் கூட்டத்தில் நான் தெரியுறதே பெரிய விஷயம்!

டயலாக், பஞ்ச் என எதையும் மிஸ் பண்ணாம ஆன் ஸ்பாட் அடிச்சிடுவேன். அதுதான் எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்துச்சு. சிவகார்த்திகேயன் அண்ணாகூட அதைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியிருக்காங்க.

‘கலக்கப்போவது யாரு’ பார்த்துட்டு சிம்பு அண்ணன் தான் முதன்முதலா என்னைப் பாராட்டினாரு. ‘ஷோ பார்த்தேன்... பயங்கரமா பண்ணிட்டிருக்கே’ன்னு பேசினாங்க. டீம்ல யாரோ கலாய்க்கிறாங்கன்னு ஆரம்பத்தில் நான் நம்பவே இல்லை. பிறகுதான் பேசுறது உண்மையாகவே சிம்பு அண்ணன்னு தெரிஞ்சது” என்றவரிடம் ‘நடிக்க வாய்ப்பு எப்படிக் கிடைத்தது’ என்று கேட்கவும், சிரிக்கிறார்.

ஆங்கர் to ஆக்டர் - “நான் இப்போ ஹீரோ ஆகிட்டேன்!”

“ ‘கலக்கப் போவது யாரு’ பார்த்துட்டு அது மூலமாதான் கிடைச்சது. ‘ஒரு படம் பண்ணப் போறோம்... செகண்ட் லீடு ரோலில் நடிக்கிறீங்களா’ன்னு கேட்டு போன் பண்ணுனாங்க. ‘துல்கர்தான் பண்றாரு... அவர் கூட டிராவல் பண்ற மாதிரியான கேரக்டர்னு சொன்னாங்க. தேசிங் அண்ணா ‘எப்ப ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொல்லுங்க... மீட் பண்ணலாம்’னு சொன்னார். ‘நாளைக்கே வரேன்... உடனே மீட் பண்ணிடலாம்’னு போயிட்டேன். அவர் நேர்ல என்னைப் பார்த்துட்டு ‘நீயும் துல்கரும் அண்ணன், தம்பி மாதிரி இருக்கீங்க... எப்படி ஃப்ரெண்ட் கேரக்டருக்கு செட் ஆகும்’னு கேட்டுட்டு, ‘யோசிச்சுச் சொல்றேன்’னு சொல்லிட்டார். ‘கண்டிப்பா இந்த கேரக்டர் நான் பண்ணியே ஆகணும்’னு சொன்னேன். இதுக்கு முன்னாடி ரெண்டு படங்களில் நடிச்சிருக்கேன். நடிச்சிருக்கேன்னு நான் சொன்னாதான் பலருக்கும் தெரியும். கதை அவர் சொன்ன உடனே எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு... ‘நானே நடிக்கிறேன்’னு சொன்னேன். யோசிச்சிட்டு, ‘சரி, நீயே நடி’ன்னு சொல்லிட்டார். பாசிட்டிவான ஆரம்பமா இந்தப் படம் எனக்கு இருந்துச்சு. ஒட்டுமொத்த டீமோட கடின உழைப்பு, படம் வெற்றியடைந்தது. பலருக்கும் என் நடிப்பு பிடிச்சிருந்தது” என்றவரிடம் அடுத்த திட்டம் குறித்துக் கேட்டேன்.

“இப்ப ‘குக்கு வித் கோமாளி சீசன் 3'-ல் ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கேன். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல ரீச் கொடுத்தது. பிக்பாஸ் மாதிரிதான் லைவ் கன்டென்ட் எல்லாரும் கொடுப்பாங்க. ஒவ்வொருத்தரும் பேசிட்டு இருப்பாங்க. ஆங்கரா நான் புகழ்கிட்ட கன்டென்ட் எடுக்க வேண்டிய அவசியமில்லை. புகழ் அவராகவே கன்டென்ட் கொடுத்துட்டிருப்பாரு... ஆங்கரா அங்கே என்னோட ரோல் வேற! ஒண்ணு, அவர்கூட சேர்ந்து பஞ்ச் அடிக்கிறது; இல்லைன்னா, ரெண்டு பேர் பேசிட்டிருக்கும்போது மூணாவதா ஒருத்தர் சம்பந்தம் இல்லாம உள்ளே நுழைஞ்சிட்டாருன்னா அந்தக் காமெடியைக் கெடுக்காம பார்த்துக்கிறது என் ரோலா இருக்கும். இதுதவிர, ரெண்டு படங்களில் கதாநாயகனாக நடிச்சிட்டிருக்கேன். சீக்கிரமே அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்’' என்கிறார் ரக்‌ஷன்.