கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: “திட்டனவங்க இனி என்னைக் கொண்டாடப் போறாங்க!”

வி.ஜே சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
News
வி.ஜே சங்கீதா

விகடன் TV

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆங்கராக கலக்கிக்கொண்டிருந்தவர், வி.ஜே சங்கீதா. நடிக்க வந்தவுடன் ஆங்கரிங் பயணத்தைத் தொடர முடியவில்லை. விஜய் டி.வி-யில் மெகா ஹிட்டான ‘கனா காணும் காலங்கள்' தொடர் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் தான் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் எக்ஸ்க்ளூசிவ் தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டு உற்சாகமாய் ‘ஆங்கர் டு ஆக்டர்' பயணம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

ஆங்கர் to ஆக்டர்: “திட்டனவங்க இனி  என்னைக் கொண்டாடப் போறாங்க!”
ஆங்கர் to ஆக்டர்: “திட்டனவங்க இனி  என்னைக் கொண்டாடப் போறாங்க!”

``ஐ.டி வேலை டு ஆங்கர்... எப்படி?’’

‘‘சொந்த ஊர் மதுரை. படிக்கும்போதே ஐ.டி வேலைக்குப் போகணுங்கிற எண்ணம் இருந்தது. கேம்பஸ்ல செலக்ட் ஆகி வேலைக்காகச் சென்னை வந்தேன். எப்பவும் கடகடன்னு ஆங்கர் மாதிரி பேசுறேன்னு ஆபீஸ்ல ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க. சன் டி.வி-யில் ஆங்கருக்காக நடந்த ஆடிஷனில் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதால கலந்துக்கிட்டேன். கிட்டத்தட்ட ஆறு மாசம் வெரைட்டி வெரைட்டியா ஆடிஷன் வச்சாங்க. ‘எப்படியும் செலக்ட் ஆக மாட்டோம். இருக்கிற வேலையை ஒழுங்கா பார்க்கலாம்’னு முடிவே பண்ணிட்டேன். திடீர்னு ஒருநாள் போன் பண்ணி லைவ் ஷோ பண்ணக் கூப்பிட்டாங்க. ‘வாழ்த்துகள்' நிகழ்ச்சிதான் என் முதல் ஷோ!’’

``ஆங்கர் பயணம் எப்படி இருந்தது?’’

‘‘முதல் நாள் அவ்வளவு பதற்றமா இருந்துச்சு. கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சிடுச்சு. புதுசா ஆங்கரிங் பண்றவங்ககூட சீனியர் ஆங்கர் இருப்பாங்க. நாம சொதப்பினாலும் அவங்க சமாளிச்சுப் பேசிடுவாங்க. ஒரு மூணு மாசம், தினமும் லைவ் முடிச்சிட்டு ஐ.டி வேலைக்குப் போய்ட்டிருந்தேன். அடுத்தடுத்து ஷோ கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆங்கர்னா என்னன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அதை விட மனசில்லை. அதனால ஐ.டி வேலையை விட்டுட்டு முழுநேர ஆங்கரானேன். சன் டி.வி, சன் மியூசிக்னு மாறி மாறி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்.’’

``சீரியல் வாய்ப்பு எப்படி வந்தது?’’

‘‘சன் டி.வி-யில் ‘அழகு' சீரியலில் நடிக்கக் கேட்டாங்க. மறுத்தேன். எனக்கு நடிக்கத் தெரியாதுங்கிறதும் அதற்கு ஒரு காரணம். சேனலில் இருந்து கேட்டதால ஓரளவுக்கு மேல மறுக்க முடியலை. ஆங்கரிங்ல வாழணும்... சீரியலில் நடிக்கணும்..! அந்த சீரியல் டைரக்டர் பொறுமையா நடிப்பு கத்துக் கொடுத்தார்.

சீரியல் பண்ணும்போது ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சிக்கு விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. பலமுறை அந்த ஷோவை நான் ஆங்கர் பண்ணியிருக்கேன். விருந்தினரா அதே நிகழ்ச்சிக்குப் போனது ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த ஆங்கரிங் சீட்டை மிஸ் பண்ணினேன். ஆரம்பத்தில் என் கேரக்டர் பாசிட்டிவாகத்தான் இருந்தது. ‘நாளையிலிருந்து இந்தக் கேரக்டர் நெகட்டிவ் ஆகப்போகுது’ன்னு சொன்னப்ப, தொடர்ந்து நடிக்க மாட்டேன்னு சொன்னேன். ரேவதி மேம், ஐஸ்வர்யா மேம் எல்லோரும் ‘நெகட்டிவ் ரோலில்தான் நடிப்புத் திறனை வெளிக்காட்ட முடியும்’னு சொல்லி நடிக்க வச்சாங்க. நினைச்சதைவிட அந்தக் கேரக்டர் பல மடங்கு ரீச் கொடுத்துச்சு. திட்டினாலும் ‘பூர்ணா'வை மக்கள் ஞாபகத்துல வச்சிருந்தாங்க. கொரோனா காலத்துல ஆர்ட்டிஸ்ட்கள் பலரால வர முடியலைன்னு சீரியலை நிறுத்திட்டாங்க. மக்கள் மாதிரி நானும் ‘பூர்ணா'வை ரொம்பவே மிஸ் பண்றேன்.’’

ஆங்கர் to ஆக்டர்: “திட்டனவங்க இனி  என்னைக் கொண்டாடப் போறாங்க!”
ஆங்கர் to ஆக்டர்: “திட்டனவங்க இனி  என்னைக் கொண்டாடப் போறாங்க!”

``நடுவுல திடீர்னு பிரேக் விட்டிருந்தீங்களே..?’’

‘‘நான் நினைச்ச மாதிரியே ‘அழகு' சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவே கேட்டாங்க. ‘அன்பே வா' சீரியலுக்கு, ‘நீங்க நடிச்சா நல்லாருக்கும்’னு கேட்டதால ஓகே சொன்னேன். அந்த கேரக்டர் எனக்கு செட்டாகலை. அதனால ரெண்டு மாசத்துலேயே விலகிட்டேன். அதே புரொடக்‌ஷனில் இருந்து ‘ரோஜா' சீரியலில் நெகட்டிவ் பண்றீங்களான்னு கேட்டாங்க. ஒரே மாதிரியான கதைக்களம் கொண்ட நெகட்டிவ் ரோலில் நடிக்கிறதுல எனக்குத் தயக்கம் இருந்துச்சு. அதனால, அதைப் பண்ணலை.

ஸ்க்ரீன்ல வரலைன்னா மக்கள் நம்மளை மறந்திடுவாங்கங்குறது உண்மைதான்! அதுக்காக நமக்குப் பிடிக்காத விஷயத்தைப் பண்ணணும்னு அவசியமில்லை. ‘உண்மையா உழைச்சோம்னா நமக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்’னு காத்திருந்தேன். விஜய் டி.வி-யிலிருந்து ‘கனா காணும் காலங்கள்' சீரியலில் பாசிட்டிவ்வான ரோலுக்காகக் கேட்டாங்க. ‘கனா காணும் காலங்கள்' மிகப்பெரிய பிராண்ட். அதுல நானும் இணைஞ்சது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இதுவரை திட்டினவங்க இனி என்னைக் கொண்டாடப்போறாங்க!’’