Published:Updated:

"அனிதா... எத்தனை சதவிகிதம் வனிதா...?" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 4

Bigg Boss Tamil Season 4

எங்கள் அம்மா ஏறத்தாழ பன்னிரெண்டு பேருக்கு ஒற்றை ஆளாக, எத்தனையோ வருடங்கள் சத்தமில்லாமல் சமைத்துப் போட்டார்கள். அவங்களுக்கு கோயில்தான் கட்டணும் போல. பிக்பாஸ் வீட்ல ஒரு வேளை சோறு பொங்குவதற்குள் ஒராயிரம் பிரச்சினைகள். அய்யய்யயோ.. முடியல.

Published:Updated:

"அனிதா... எத்தனை சதவிகிதம் வனிதா...?" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 4

எங்கள் அம்மா ஏறத்தாழ பன்னிரெண்டு பேருக்கு ஒற்றை ஆளாக, எத்தனையோ வருடங்கள் சத்தமில்லாமல் சமைத்துப் போட்டார்கள். அவங்களுக்கு கோயில்தான் கட்டணும் போல. பிக்பாஸ் வீட்ல ஒரு வேளை சோறு பொங்குவதற்குள் ஒராயிரம் பிரச்சினைகள். அய்யய்யயோ.. முடியல.

Bigg Boss Tamil Season 4
தீபாவளி சமயத்தில் தி.நகரில் துணி எடுப்பது மாதிரி கிச்சன் ஏரியாவில் திருவிழாக்கூட்டம் மாதிரி ஆட்கள் நிற்கிறார்களே, தவிர, அங்கு சமையல் நடப்பதில்லை. சண்டைதான் பெரும்பாலும் நடக்கிறது. சோறு பொங்குவதற்குப் பதிலாக மனிதர்கள்தான் அதிகம் பொங்குகிறார்கள்.


நான் கூட்டுக்குடும்பத்தில் இருந்த போது எங்கள் அம்மா ஏறத்தாழ பன்னிரெண்டு பேருக்கு ஒற்றை ஆளாக, எத்தனையோ வருடங்கள் சத்தமில்லாமல் சமைத்துப் போட்டார்கள். அவங்களுக்கு கோயில்தான் கட்டணும் போல. பிக்பாஸ் வீட்ல ஒரு வேளை சோறு பொங்குவதற்குள் ஒராயிரம் பிரச்சினைகள். அய்யய்யயோ.. முடியல.

இன்று என்ன நடந்தததென்று விரிவாகப் பார்ப்போம்.‘அந்த வானத்தைப் போல மனம் படைச்ச நல்லவரே’ – எ பிலிம் பை பாரதிராஜா – கடைசி ஷாட் மாதிரி ஆடி ஆடி நேத்து சுரேஷ் வெளியே சென்ற போது கோபித்துக் கொண்டு பிக்பாஸ் போட்டியிலிருந்து விலகி விடுவாரோ என்று தோன்றியது. அப்படியில்லை. மாறாக ரொம்ப வருஷம் வேலை செஞ்சவர் பிரமோஷன் கேட்பது போல் “யப்பா.. என்னை கக்கூஸ் கழுவுற டீமிற்கு மாத்திடுங்கப்பா.. கக்கூஸ் கழுவறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுதான் என் வாழ்நாள் லட்சியம். லண்டன்ல விருது கூட வாங்கியிருக்கேன்” என்று சீன் போட ஆரம்பிக்க .. “என்னடா.. இது சனியன் சைக்கிள்லதானே வரும்?.. இது சமையல் கட்டுல இருந்து வருதே?” என்று ரியோவிற்கு அப்போதே கண்ணைக் கட்டியது.“உப்பு போட்டு சோறு போட்டு சாப்பிடற எவனும்.. கிச்சன் டீம்ல இருக்க மாட்டான்” என்று சுரேஷ் கூடுதல் பஞ்ச் சொன்னார். கிச்சன் பஞ்சாயத்து என்பதால் அது தொடர்பாக வசனம் பேசினார் போல. கோபத்துலயும் லாஜிக் கான்ஷியஸ் உள்ள அந்த மனிதரைப் பாராட்டியே ஆகணும்.

‘இவங்க பண்ற அலப்பறைல இனிமே உப்பு போடாத சோறு கூட இங்க கிடைக்காது.. போலிருக்கு”
என்று ரியோவின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கும்.

பெரிய சைஸ் தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆடி ஆடி சென்ற சுரேஷ், நாட்டாமை ரம்யாவிடம் பிராது தர, அம்மணியோ. நம்மூர் அரசியல்வாதிகள் போல் உஷாராக “இதை நாங்க பொதுக்குழுவில வெச்சு கலந்து பேசிட்டு ஒரு முடிவு சொல்றேன்” என்று எஸ்கேப் ஆனார். “நிம்மதியா. ஒரு கொக்கோ விளையாட்டு விளையாட விடறாங்களா..”

சுரேஷ்
சுரேஷ்கடந்து வந்த பாதை டாஸ்க்கில் இதுவரை எட்டு பேர் பேசியிருக்கிறார்களாம். அதில் தகுதி பெற்ற நான்கு பேரை தேர்ந்தெடுக்க வேண்டுமாம். இன்னமும் பேசாத இதர எட்டு பேர்கள்தான் இந்த முடிவை எடுக்க வேண்டுமாம். இப்படியொரு கோணங்கித்தனமான அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட இன்னமும் ஒப்பாரி வைக்காத எட்டு பேர் கூடி குசுகுசுவென்று பேசினார்கள். இந்த குசுகுசுவிற்கு தலைமை பாலா.“மொள்ளமா பேசுங்க.. அவிய்ங்களுக்கு கேட்டுடப் போகுது” என்று இதை ஏதோ நோபல் பரிசு விருது போல தாழ்ந்த குரலில் பேசி விட்டு பாலா அறிவித்தது யாதெனில்… “நிஷா, வேல்முருகன், ரியோ மற்றும் ஆரி” ஆகியோர் தகுதி பெறுகிறார்கள். ஆக.. அடுத்த வார நாமினேஷனில் இடம் பெறுகிறவர்கள் கேப்ரில்லா, சனம், ரேகா மற்றும் சம்யுக்தா.

நான் ஏற்கெனவே சொன்னதுதான். ‘சிறந்த முறையில் ஒப்பாரி வைக்காவிட்டால், நாம் தோற்று விடுவோம் என்கிற நெருக்கடி காரணமாக போட்டியாளர்கள் செயற்கையான, கூடுதல் உருக்கங்களைக் கொட்ட வேண்டியிருக்கும். இது இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்தது.“யப்பா.. ஜிம்பாடி. பாலா.. தூங்கி எழுந்த சோம்பேறி மாதிரி எப்பவும் இருக்கியேன்னு நெனச்சேன். நல்லாவே அனலைஸ் பண்றே” என்று பாலாவிற்கு சான்றிதழ் வழங்கினார் சுரேஷ்.

மறுபடியும் கிச்சன்-சுரேஷ் பஞ்சாயத்து தொடர்ந்தது. ‘பப்லுவை திட்டாதீங்க’ என்கிற கதையாக ‘சுரேஷ்ஜி இல்லைன்னா.. நான் கேஸ் ஸ்டவ்வை தொடவே மாட்டேன்” என்று பாசம் காட்டினார் ரேகா ‘மேம்’. ‘நான் வேணா. கக்கூஸ் டீமிற்கு போறேன்” என்று சனம் இதற்கிடையில் சணல் கயிறு திரிக்க ஏகப்பட்ட குழப்பம்.

ரேகா
ரேகாஇதற்கிடையில் ‘’அனிதா… “நீயொரு 50% வனிதா” என்று மார்ஷல் ஆர்ட்ஸ் சோம் கவிதை பாடி வைக்க (சோஷியல் மீடியால பேசறது உங்களுக்கும் கேட்டுடுச்சா.. சோமு?”) “என்னை எப்படி நீ அப்படி கம்பேர் பண்ணி சொல்லலாம்.. பிக்பாஸ்.. சீனால இருந்து தீவிரவாதிகளை இம்போர்ட் பண்ணி.. எனக்கு எதிரா சதி நடக்கற மாதிரி இருக்குது.. இதெல்லாம் சரியில்லை.. பார்த்துக்கங்க” என்று காமிராவின் முன்பு அனிதா அனத்த, கூத்தில் கோமாளி மாதிரி பஞ்சாயத்து நடக்கும் போதெல்லாம் எப்போதும் பின்னால் ராவடி செய்யும் பாலா, சத்து டானிக் விளம்பரம் மாதிரி தனது கைகளை முறுக்கிக் காட்டி போஸ் கொடுத்தார்.


பஸ்ஸில் டிக்கெட் வாங்காமல் செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக் கொண்ட பையன் போல “யே. ஸாரிப்பா.. ஸாரிப்பா.. தெரியாம சொல்லிட்டேன்” என்று அனிதாவிடம் சோம் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருக்க “அவனாவது.. ஒரு முறைதான் வனிதா –ன்னு சொன்னான்.. நீ ஏதோ மெடல் வாங்கின மாதிரி அதையே மறுபடி மறுபடி சொல்லிட்டிருக்க.. வெளில இருக்கற வனிதாவிற்கே கேட்டுடும் போல” என்று ரியோ அதட்டியவுடன் சோமும் அனிதாவும் ‘பழம்’ விட்டுக் கொண்டார்கள். (என்ன கொடுமை சரவணன்!)

அனிதா
அனிதா“சனம் கூட அரைமணிநேரம் சண்டை போட்டுட்டு ‘சனம் ஒரு சர்க்கரைப் பொங்கல் –ன்னு சொல்ற சுரேஷ், என்னை மட்டும் ‘இந்த மேடம் கூட மட்டும்தான் பிரச்சினை’ ன்னு சொல்றாரு.. நான் அப்படி என்ன பண்ணிட்டேன்.. அவருக்கு பிரமோல வர்றணும்னு ஆசை.. என்னை யூஸ் பண்றார்” என்று அனிதாவின் அனத்தல் தொடர்ந்தது. (இதையும் அவர் செய்தி வாசிக்கும் குரலில் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்).‘அனிதா பாப்பா.. ரொம்ப நல்ல பாப்பாவாச்சே. சமர்த்தாச்சே. வெல்லக்கட்டியாச்சே”…. என்று இன்னொரு கோட்டிங் பெயிண்ட்டை தன் முகத்தில் தடவியவாறே. ரேகா ‘மேம்’ சான்றிதழ் அளிக்க ‘அது பாப்பாவா. போங்கம்மா. ஏதாவது வாயில வந்துறப் போவுது” என்று காண்டானார் சுரேஷ்.

நாள் 4 விடிந்தது. ‘காந்தக் கண்ணழகி’ பாட்டைப் போட்டதும் அத்தனை கண்ணழகிகளும் மேக்கப்போடு துயில் கலைந்தார்கள். ரம்யாவிற்கு பதிலாக அவரின் சாயலில் உள்ள அவரது பாட்டி வந்து விட்டார் போல என்று நாம் குழம்பிய பிறகுதான் தெரிந்தது, ரம்யா ஒரு கண்றாவியான கண்ணாடி போட்டுக் கொண்டு ஆடினார். (இதுக்கே ஆர்மில பாதி கலைஞ்சிருக்கும்!).

மறுபடியும் இன்னொரு கிச்சன் பஞ்சாயத்து. “எவ்ளோ அரிசி போடணும்.. அனிதா மேடத்திற்குத்தான் இது தெரியும்.. கேட்டுட்டு வாங்க” என்று நாளைய ப்ரோமோவிற்கான பிளானிங்கை இப்போதே சுரேஷ் திட்டமிட்டு கேட்க “ஏம்மா. சனம்.. அரிசியை தண்ணில எப்படி போடணும்? பாக்கெட்டைப் பிரிச்சு போடணுமா.. கவரோட அப்படியே போடணுமா?” என்று ரேகா விளக்கம் கேட்டார். “பாசுமதி ரைஸ்ஸை ஊறப் போட்டா அதுக்குப் பேரு பாயாசம்.. இருங்க .. நான் மேக்கப்பை முடிச்சுட்டு வர்றேன்” என்று சனம் பதிலளிக்க ‘திருப்பதிக்கே லட்டா.. எனக்கே மேக்கப்பா.. நீ முடிச்சுட்டு வர்றதுக்குள்ள.. நூறாவது நாள் பிக்பாஸே வந்துடும்” என்று அங்கிருந்து நடையைக் கட்டிய ரேகா, பின்பு சனம் சொன்னதைப் பற்றி ஆரியிடம் புறம் பேசி நக்கலடித்தார்.

கடந்த வந்த பாதை – இப்போது அனிதாவின் டர்ன். “நான் அழப் போறதில்லை.. சிம்பதி கிரியேட் பண்ணப் போறதில்லை’ என்று ஆரம்பித்தாலும் இடையில் அனிதாவின் உரை அப்படித்தான் நகர்ந்தது. “ஒன்றரை மணி நடப்பேன். ஷூ ஓட்டையா இருக்கும். பெண்களுக்கான பிரச்சினை இருக்கும். அதை சரி செய்வதற்கான சூழல் இருக்காது” என்றெல்லாம் சோகக் கதையைச் சொன்னார்.

அனிதா
அனிதாஇந்த டாஸ்க்கின் விதி தரும் நெருக்கடி, பேச்சாளர்களை இப்படிப் பேச வைத்திருக்கலாம். என்றாலும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து இளமைப்பருவத்தை பிரச்சினையில்லாமல் கடந்து ஆனால் கல்லூரிப் பருவத்தை பல சிரமங்களுடன் கடந்து காதல் திருமணத்திற்குப் பின் இப்போதுதான் ‘செட்டில்’ ஆகியிருக்கும் அனிதாவின் விவரிப்பு நிறைய இளைஞர்களுக்கு உத்வேகம் தந்திருக்கலாம்.

‘பல பேர் மிடில் கிளாஸ் வாழ்க்கையை சாபம்-ன்ற மாதிரி சொல்லுவாங்க. ஆனா அது ஒரு வரம். அவங்களுக்குத்தான் கஷ்டம் நல்லா தெரியும்.. அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்காதீங்க.. நான்தான் என் குடும்பத்தின் கனவுகளையும் சேர்த்து சுமக்கிறேன்” என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார் அனிதா. கல்லூரிப் பருவத்தில் ரயிலில் நிறைய பயணம் செயததாலோ.. என்னவோ.. நான்-ஸ்டாப் எக்ஸ்பிரஷன் டிரையின் மாதிரி கடகடவென்று சொல்லிச் சென்றார்.“ரேகா மேம் சிடுசிடு –ன்னு பேசறாங்க” என்று சனம், அனிதாவிடம் புகார் சொல்லி சிணுங்க, ரேகாவின் சப்போர்ட்டை இழந்து விடக்கூடாது என்று நினைத்தாரோ. என்னவோ.. ‘அவங்க சொல்ற விதம் கொஞ்சம் ஹார்டா இருக்கும். ஆனா பொய் சொல்லலைல்ல” என்று ஜாக்கிரதையாக பேசி எஸ்கேப் ஆனார் அனிதா.

கடந்த வந்த பாதை – ஷிவானி: “நான் குழந்தையா இருக்கறப்பவே .. நடிகையாகணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆக்சுவலி.. நான் எங்க வயத்துல இருந்தப்ப.. ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்தப்பவே நான் ஒரு கலைஞின்னு அதுல தெரிஞ்சது–ன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க.. என்னோட கலைத் தாக நச்சரிப்பு தாங்க முடியாம எங்கப்பா சாத்தூர்ல இருந்து சென்னைக்கு ஷிப்ட் ஆனார். அந்தக் காலத்துலயே ஃபேஸ்புக்ல போட்டோ போட எங்க அம்மா அனுமதிப்பாங்க.. இங்க விஜய் டிவி சீரியல்ல முதல்ல ஓரமா நின்னேன். அப்புறம் நடுவுல நின்னேன். இப்ப பிக்பாஸ் மேடைல நிக்கறேன்” என்று சுருக்கமாக தன் பிளாஷ்பேக்கை முடித்துக் கொண்டார் ஷிவானி.

சுரேஷ்
சுரேஷ்“இது ப்ரோமோ கன்டென்ட்டுக்கு கூட தேறாதே” என்று நிஷா கமெண்ட் அடிக்க, கூட்டம் கலகலத்தது.

ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். இன்று ஷிவானியின் ஒப்பனையும் உடையலங்காரமும் அத்தனை அட்டகாசமாக இருந்தது. ஆர்மி ஆரம்பிக்கலாமோ என்கிற மெல்லிய சபலம் கூட எட்டிப் பார்த்தது. ஆனால் – “கருமம்.. அந்த கூலிங்கிளாஸை கழட்டித் தொலைடா” என்று பாஸ் என்கிற பாஸ்கரனில், சந்தானம் ஆர்யாவிடம் சொல்வது போல, ‘தலையின் இரண்டு பக்கமும் கொம்பு வைத்து’ ஷிவானி வரும் போதெல்லாம் ‘ஒனிடா டிவி விளம்பரத்தில் வரும் சாத்தானைப் பார்ப்பது போல் எரிச்சலாகி விடுகிறது.

அடுத்து வந்தவர் சுரேஷ். “வாஸ்து படி என் வாய்தாங்க பிரச்சினை” என்று பேச்சின் இடையே இவர் சொன்னதுதான் ஹைலைட். அதுதான் அசலான அக்மார்க் வாக்குமூலம்.

“வசதியான குடும்பம். அப்பாவை ஞாபகம் இல்லை. அண்ணன்தான் எங்களை வளர்த்தார். ஆனால் கல்யாணம் ஆனவுடனே அவர் போயிட்டார். நானும் எங்க அம்மாவும் பெரிய வீட்டுல இருந்த ஒரு ரூம்ல தனியா கஷ்டப்பட்டோம். ஆனா மத்தவங்க எங்களை பணக்காரங்க –ன்னு நெனச்சுக்குவாங்க.. கீழே இருந்து மேல வர்றது கூட பிரச்சினையில்ல. மேல இருந்து கீழே விழறது இருக்கே. அது கொடுமை.”

சுரேஷ்
சுரேஷ்


“நான் கஷ்டப்படும் போதெல்லாம் யாராவது எனக்கு கைகொடுப்பாங்க. அவங்களைத்தான் கடவுளா நான் பார்க்கறேன். டிவில வாய்ப்பு வந்தது. அப்புறம் ஆஸ்திரேலியா போய் ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சு. பீச் ஹவுஸ் வாங்கற அளவுக்கு நல்லா சம்பாதிச்சோம். அப்புறம் பையனுக்கு கேன்சர் வந்தது. பொழக்கவே மாட்டான்-ற நிலை. ‘இயற்கை மருத்துவத்தின்’ மூலமா பொழச்சுட்டான். அதனால நான்வெஜ் பிஸ்னஸை மூடிட்டேன். எங்க மருமக இப்போ கர்ப்பமா இருக்காங்க” என்கிற மகிழ்ச்சியான தகவலோடு தன் உரையை முடித்த சுரேஷ்,

“நான் கடுமையான போட்டியாளரா இருப்பேன். யார் ஜெயிச்சாலும் எனக்கு சந்தோஷம்தான். யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சுக்கங்க. கம்மியா பண்ணியிருப்பேன். இனிமே ஜாஸ்தியா பண்றேன்” என்கிற வாஸ்து வாய் எச்சரிக்கையோடு மேடையில் இருந்து இறங்கினார்.‘ரேகா’ மேம் மேக்கப் கலையாமல் தூங்கிக் கொண்டிருக்க, அதை ஆட்சேபிக்க வேண்டிய ‘காப்டன்’ ரம்யாவோ, தன் கூட்டாளிகளோடு சேர்ந்து ‘கெக்கே.. பிக்கே’ என்று சிரித்துக் கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டு நாய், பாரின் டூர் போயிருந்ததோ. என்னமோ.. ஆளைக் காணோம்.


எனவே ரம்யா அண்ட் கோ.. நாய்களாக மாறி குரைக்கத் துவங்க.. தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த ரேகா எழுந்தார். அவர் கோபம் கொள்வாரோ.. என்று பார்த்தால் “பசங்களா.. நீங்க கத்தினதுல.. ஸ்ருதி சேரலை.. பஞ்சமத்துல பங்க்ச்சர் ஆயிடுச்சு.. இப்ப நான் சொல்லித் தர்றேன்” என்று உவ்வ்வ்வ் என்று பத்து நாள் பட்டினி கிடந்த பொமரனியன் மாதிரி உறுமிக் காண்பிக்க “இது த்ரோட் இன்பெக்ஷன் வந்த நாய் போலிருக்கு’ என்றார் சுரேஷ்.அழுவாச்சி டாஸ்க்கில் அடுத்து வந்தவர் ‘ஜித்தன்’ ரமேஷ். அனிதா பேசும் போது ‘சிலர் born with silver spoon’ என்று சொன்ன சமயத்தில் காமிரா சரியாக ரமேஷைக் காட்டியது. அது ரமேஷிற்கு உறுத்தியதோ என்னமோ “எங்க குடும்பம் சாதாரணமானது.. ஸ்பூன் வாங்கக் கூட முடியாது. பல சிரமங்களுக்கு அப்புறம்தான் அலுமினியம்.. ஸில்வர்.. தங்கம்’ன்னு எங்க வாழ்க்கை உயர்ந்தது”


“எம்பிஏ பெயில் ஆயிட்டேன். அப்பதான் ‘ஜித்தன்’ பட வாய்ப்பு கிடைச்சது.. என்னால நம்பவே முடியல.. அது எங்க அண்ணன் ஜீவாவிற்கு இருக்கும்னு நெனச்சேன்.. அந்தப் படம் நல்லாப் போச்சு.. அந்த மிதப்பு தலைக்கு ஏறிடுச்சு. அதுக்கு வந்த நிறையப் படங்களை கேள்வி கேக்காம ஒத்துக்கிட்டேன்.. அப்படியே கீழே விழுந்தேன். அவார்டு பங்க்ஷன், கல்லூரி விழா என்று எங்கே போனாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க.. எங்க அப்பா பத்தியும் அண்ணன் பத்தியும்தான் விசாரிப்பாங்க. ஜெயிச்சுக்கிட்டே இருந்தாதான் இங்க மதிப்பு –ன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

“என்னடா. இவங்க அப்பா பெரிய தயாரிப்பாளர்தானேன்னு சிலர் நெனக்கலாம். அவரு என்னை ரெண்டு அல்லது மூணு முறைதான் கைதூக்கி விட முடியும். அதுக்கப்புறம்தான் நானாதான் நடக்கணும்.. இல்லைன்னா அவரும் கீழே விழுந்துடுவாரு.. ‘உனக்கான நாள் ஒண்ணு வரும்.. அன்னிக்கு அந்த சான்ஸை கெட்டியா பிடிச்சுக்கோ’-ன்னு அப்பா சொன்னாரு. பிக்பாஸ் வாய்ப்பு வந்திருக்கு. இனிமேலாவது எனக்கு நல்லது வரும்னு நெனக்கறேன்” என்றார் ரமேஷ்.இந்த டாஸ்க்கில் பேசிய பலரும் தங்களின் இளமைப்பருவ சிரமங்களோடு தங்களின் பிள்ளைகள் எதிர்கொண்ட விபத்துக்களையும் பற்றி கூடுதல் சென்ட்டியாக இணைத்துக் கொண்டார்கள். இது நிஷா துவங்கி வைத்த போக்கின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

ஓகே.. இந்த உரையில் அனைவரும் பேசியதை வைத்துப் பார்த்தால், இன்று பிரபலமாக இருக்கும் நபர்கள், தங்களின் இளமைக்காலத்தில் எளிய பின்னணியில் இருந்து கிளம்பி பல்வேறு விதமான சிரமங்களையும் தடைகளையும் அவமானங்களையும் தாண்டித்தான் வந்திருக்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் இவர்களை எளிதாக கிண்டல் செய்யும் ஆசாமிகள், இந்த விஷயத்தை சற்று மனதில் வைத்துக் கொள்ளலாம்.

ரேகா
ரேகாகாட்சி மாற்றம். கிச்சன் ஏரியா. எரியாத அடுப்பில் ரேகா மேம் எதையோ சீரியஸாக சமைத்துக் கொண்டிருக்க, ‘அங்க பாருங்க.. கேஸ் ஜீரோன்னு காட்டுது.. அடுப்பு எரியல’ என்றார் அனிதா. ஆக. இவர்கள் சமைக்கிறார்களோ.. இல்லையோ. அடுப்பை மட்டும் நன்றாக எரிய விடுகிறார்கள் போல.வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் மறுபடியும் சண்டை. சனத்தை சிடுசிடுவென்ற குரலில் ரேகா ஏதோ சொல்லி விட மாமியார் –மருமகள் மாதிரி இருவரும் சற்று முட்டிக் கொண்டார்கள். பிறகு சனத்திற்கும் பாலாவிற்கும் உரசல். ‘நான் இந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு போறேன்” என்றார் பாலா.

“இதே காரியத்தை நேத்து ஒரு மொட்டை பண்ணுச்சு. அதை சப்புன்னு போடுங்க’ என்றொரு குரல் கேட்டது. யார் அது என்று பார்த்தால் ‘உப்பு போட்டு சாப்பிடற எவனும் கிச்சன் டீம்ல இருக்க மாட்டான்” என்று காலையில் சொன்ன சுரேஷ்தான் அங்கு இப்போது உரலில் வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டிருந்தார்.

சில பேர் இருப்பார்கள். கஷ்டப்பட்டு ஒரு குறிப்பிட்ட நடிகரின் குரலை சுமாராக மிமிக்ரி செய்ய கற்றுக் கொண்டிருப்பார்கள். எல்லாவற்றிற்கும் அந்தக் குரலை வைத்து மிமிக்ரி செய்து காட்டி நம் உயிரை எடுப்பார்கள். அசந்தர்ப்பமான நேரத்தில் கூட அவர்கள் அப்படிச் செய்யும் போது ‘பொக்’கென்று மூக்கில் குத்தலாம் போன்றதொரு எரிச்சல் வரும்.

அனிதா
அனிதா


அனிதா செய்யும் ‘செய்தி வாசிப்பாளர்’ மிமிக்ரியும் அப்படித்தான் ஆகி விட்டது. ஏதோ ரெண்டு முறை அப்படி பேசினதுக்கு கை தட்டினோம். ஆனால், செய்தி சானல் மாதிரி 24 மணி நேரமும் காமெடி செய்தி வாசிச்சு உயிரை வாங்கினா.. எப்படிங்க அனிதா மேடம்?பாலாவிற்கும் சனத்திற்கும் இடையே நிகழ்ந்த முட்டலைப் பார்த்து ‘என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சே.. இன்னமும் ஏதும் நடக்கலையேன்னு. பார்த்தேன். நடந்திருச்சு’’ – இப்படி ஒரு டயலாக் கேட்டது. சொன்னது யாரென்று பார்த்தால் ‘சர்ச்சைகளின் நாயகி’யான அனிதா.

சமையல் கட்டில் நடக்கும் ராவடிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரியோ ‘பாண்டியராஜன்’ முழியோடு திகைத்துப் போய் தரையில் அமர்ந்திருந்தார்.