Published:Updated:

நிஷாவுக்கு கட் அவுட்; அனிதாவுக்கு கெட் அவுட்? ஆண்டவரே தட்டி கேட்குற நேரம் வந்துடுச்சு! பிக்பாஸ் - 67

பிக்பாஸ் - நாள் 67

அணியிடம் கலந்தாலோசிக்காமல் தானாக யோசித்துப் பேசி டாஸ்க்கை சொதப்பிய நிஷா, ‘Best performer’ ஆகும் போது, அணியின் முடிவின் படி செயல்பட்ட அனிதா, ‘Worst performer’ ஆவதில் துளி கூட நீதியில்லை. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 67

Published:Updated:

நிஷாவுக்கு கட் அவுட்; அனிதாவுக்கு கெட் அவுட்? ஆண்டவரே தட்டி கேட்குற நேரம் வந்துடுச்சு! பிக்பாஸ் - 67

அணியிடம் கலந்தாலோசிக்காமல் தானாக யோசித்துப் பேசி டாஸ்க்கை சொதப்பிய நிஷா, ‘Best performer’ ஆகும் போது, அணியின் முடிவின் படி செயல்பட்ட அனிதா, ‘Worst performer’ ஆவதில் துளி கூட நீதியில்லை. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 67

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸின் இத்தனை நாட்களில் அனிதா செய்த அலப்பறைகளுக்காக பலமுறை கிண்டலடித்திருக்கிறேன். அவரின் தொணதொணப்புகளுக்காக சிலமுறை எரிச்சல் அடைந்திருக்கிறேன். விதிவிலக்காக, கால்சென்டர் டாஸ்க்கில் ரியோவை அவர் சும்மா ‘கிழிகிழி’ என்று கிழித்ததற்காக பாராட்டவும் செய்திருக்கிறேன்.

இவற்றையலெ்லாம் தாண்டி, இந்த 67 நாட்களில் முதன்முறையாக அனிதாவிற்கு முழுமையான தார்மீக ஆதரவை தர வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. ஆம், ‘Boring performer’ தேர்வின் போது அனிதாவிற்கு எதிராக ‘அன்பு’ குரூப்பிஸம் தனது கோர முகத்தை காட்டியது மிக பட்டவர்த்தனமாக இன்று அம்பலமானது. அனிதாவின் பெயரை முறையற்ற காரணம் கூறி முன்மொழிந்தார் ரியோ.

ஓர் அடிமை தனது முதலாளிக்கு கண்மூடித்தனமான விசுவாசத்தோடு இருப்பதைப் போல, அர்ச்சனாவிற்கு ஆதரவாக அனிதாவிடம் வாக்குவாதம் செய்தார் நிஷா. ‘மலேசியா’ நிஷா வெளிவந்ததற்காக ஆரம்பத்தில் அவரை பாராட்டியிருந்தாலும் இப்போது பார்க்கும்போது அந்த நிஷா மலேசியாவிலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு முறையற்ற வகையில் பாரபட்சத்தோடு நிஷா செயல்படுகிறார்.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

ஓர் அணி சில முடிவுகளை கலந்துரையாடி எடுத்தப்பிறகு அந்த அணித்தலைவர்தான் அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கூடி கும்மப்பட்ட அனிதாவின் சார்பாக பாலாஜி சில வார்த்தைகளை திருவாய் மலர்ந்தாலும் தன்னுடைய ஆதரவை அழுத்தமாகத் தரவில்லை. மாறாக அனிதா ‘ஓய்வறைக்கு’ சென்றதைப் பற்றி கவலைப்படாமல் ஷிவானியுடன் ரொமான்ஸ் உரையாடலில் ஈடுபட சென்றுவிட்டார்.

ரோபோக்களுக்கு பெயர் சூட்டும் விஷயத்தை பொதுவில் அறிவித்ததில் மட்டும்தான் அனிதாவின் பங்கு இருக்கிறது. அதுவும் அணி கூடி முடிவு செய்த விஷயம். ஆனால் டாஸ்க்கின் போது ‘Bossy’ பட்டத்தை அதிகம் பயன்படுத்தியது பாலாஜிதான். அதில்தான் அர்ச்சனா அதிகம் புண்பட்டார். ஆனால் பாலாஜிக்கு எதிராகப் புகார் சொல்ல எவருக்கும் துணிச்சல் இல்லை. ஏன், பாதிக்கப்பட்ட அர்ச்சனாவே அதைப் பற்றி சொன்னதாக தெரியவில்லை.

இதைப் போலவே தந்தையின் மரணத்தைப் பற்றி பேசி அர்ச்சனாவிற்கு பாதிப்பு ஏற்படுத்தியது நிஷாதான். அதிலும் அவர் அணியுடன் கூடிப் பேசாமல் தன்னிச்சையாக முடிவு செய்து பேசி சொதப்பினார். இதனாலும் அர்ச்சனா அதிகம் பாதிக்கப்பட்டார். இதைப் பற்றிய உரையாடலும் அதிகம் நிகழவில்லை.

ஆனால், அனைத்திற்கும் சேர்த்து பலிகடாவாக ஆக்கப்பட்டவர் அனிதா மட்டுமே. தனித்துவிடப்பட்ட அனிதாவிற்கு ஆதரவாக நின்றவர் ரம்யா ஒருவர்தான். அவரின் பக்கம் இருந்த நியாயத்தை சொன்னதோடு மட்டுமல்லாமல், அனிதாவின் புலம்பலுக்கு ஆறுதலும் சொன்னார்.

தன் தரப்பு நியாயங்களை அழுத்தமாகவும், உணர்ச்சிகரமாகவும் அனிதா விளக்கிய பிறகும் யாரும் அதைப்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

‘Boring performer’ தேர்வில் நடக்கும் அரசியலை, அதிலுள்ள குளறுபடிகளை, வெளிப்படும் தனிப்பட்ட பகைமைகளைப் பற்றி கமல் ஏற்கெனவே கண்டித்து பேசியிருக்கிறார். இந்த வாரம் அனிதாவிற்கு நிகழ்ந்த அநீதி குறித்து அவர் சம்பந்தப்பட்டவர்களை வன்மையாக கண்டிப்பார் என்று நம்புவோம். குறிப்பாக ‘அன்பாயுதம்’ ஏந்தி நிற்கும் அர்ச்சனா டீமின் ‘குரூப்பிஸத்தை’ அழுத்தமாக எதிர்ப்பார் என்றும் நம்புவோம்.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

ஓகே... 67வது நாளில் என்ன நடந்தது?

தங்கள் அணி மூன்று ரோபோக்களை செயலிழக்க வைத்துவிட்ட விஷயத்தை பெருமிதத்துடன் கேமரா முன்னால் சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘'டெல்லிக்குப் போனியா... தாஜ்மஹாலை பார்த்தியா?'’ என்றெல்லாம் அனிதாவை வைத்து மொக்கையாக அர்ச்சனா முயன்று கொண்டிருக்க, சோம் அதில் குறுக்கிட்டார். அவர் ரியோவை விநோதமாக அழைத்து வந்தார். ரியோ பீன் பேகை இரு கைகளாலும் முன்பக்கத்தில் பிடித்து வைத்துக் கொண்டிருக்க, அந்தத் தோற்றம் விநோதமாக தெரிந்ததால் அனிதாவால் சிரிப்பைத் அடக்க முடியவில்லை.

அர்ச்சனா அணி சிறப்பாக தாக்குப் பிடித்ததைப் போல் பாலாஜி அணி தாக்குப் பிடிக்கவில்லை. விரைவிலேயே ‘பொத்... பொத்...’ என்று விழுந்தார்கள். (manufacturing defect உள்ள ரோபோக்கள் போல). அல்லது எதற்கு இந்தத் தண்டனைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டார்களோ... என்னமோ!

"தண்டால் போஸில் இருந்த பாலாஜியிடம் வம்படியாக ஒரு இதயத்தை அர்ச்சனா பிடுங்கிச் சென்றார்" என்று நேற்று சொல்லியிருந்தேன். "அது முறையற்றது" என்று பிக்பாஸ் அறிவித்து விட்டார் போல. பாலாஜி மறுபடியும் ஒரு இதயத்துடன் சுற்றிக் கொண்டிருந்தார்.

‘முட்டை வைத்தியம்’ ஆஜித்திடம் வெற்றிகரமாகப் பலித்து விட்டதால், வேறு உத்திகளை யோசிக்கத் தெரியாமல் அந்த முட்டையையே மறுபடி மறுபடி ‘ஆம்லேட்’ போட்டுக் கொண்டிருந்தது அர்ச்சனா அணி.

அனிதாவை அழைத்து முகத்தில் முட்டை தடவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வேறு எந்த புகாருடனோ வந்த ரம்யா, ‘என்னை பல்தேய்க்க வெச்சாங்க’ என்று சொன்னதைக் கேட்டவுடன் தன் உத்தியை மாற்றிக் கொண்டார் அர்ச்சனா. ‘'முட்டையை வெச்சு பல் தேய்க்க வைக்கலாம்’' என்று அவர் டெரரான ஐடியாவிற்குச் சென்று ‘அனிதாவோட பிரஷ்ஷை எடுங்க’ என்று சொல்ல “வேற பிரஷ்ல பண்ண வைக்கலாம்’ என்கிற ‘உவ்வேக்’ ஐடியாவைத் தந்தார் சோம்.

ஒருமாதிரியாக இதை சமாளித்துக் கொண்டிருந்த அனிதா, நாக்கில் முட்டையை தேய்க்கச் சொன்னபோது அருவருப்பு தாங்காமல் வாந்தி வருவது போல் முகத்தைச் சுளிக்க, உடனேயே அவருக்கு மவுத்வாஷ் வழங்கி ‘சாரி’ என்று சொல்லி ஒரு இதயத்தைப் பிடுங்கி விட்டார் அர்ச்சனா. "எனக்கு முட்டை ஸ்மெல் பிடிக்காதுன்னு அர்ச்சனா அக்காவிற்கு தெரியும். என்னை வெச்சு செய்யப் போறாங்க" என்று முன்பு அனிதா கூறியது இப்போது உண்மையாயிற்று.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

ஆரியின் நிலைமை பாவம். ரமேஷிற்குக் கால் அமுக்கிக் கொண்டிருந்தார். (அப்ப கூட தனக்கு சொகுசாக இருக்கும்படியான டாஸ்க்தான் தருகிறார், ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி). ‘எனக்கு வீட்ல பிடிச்ச இடம் டாய்லெட்தான். யாரு டாய்லெட் போனாலும் எனக்குப் பிடிக்கும்’ என்கிற சற்று அருவருப்பான வசனத்தை பாலாஜியைப் பேச வைத்து சிரித்து மகிழ்ந்தார், ‘மென்குத்தல்’ ரம்யா.

ஆஜீத், அனிதா ஆகியோரைத் தொடர்ந்து பாலாஜிக்கும் முட்டை வைத்தியத்தை செய்து கொண்டிருந்தது அர்ச்சனா அணி. ‘நான் இதை மரியாதைபூர்வமாக செய்கிறேன். நீயும் அது போல் செய்’ என்றார் அர்ச்சனா. எனில் அனிதாவிற்கு தன்னுடைய பிரஷ்ஷை வைத்து பல் தேய்க்கச் சொல்லியிருக்கக்கூடாது. பாலாஜிக்கு ஒரு நியாயம். அனிதாவிற்கு ஒரு நியாயமா?

ஒரு பாடிபில்டருக்கு முட்டையை சாப்பிடுவது என்பது எளிதானது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், ‘'பாலாஜி அதிக முட்டைகளை எடுத்து விடுகிறார்’' என்று நிஷா புகார் செய்தார். "எனக்கு புரோட்டின் தேவைப்படுது” என்று பாலாஜியும் காரணம் சொன்னார். எனவே பாலாஜிக்கு இது எளிதான வேலையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

பாலாஜி இந்தத் தண்டனையை ஒரு மாதிரியாக சமாளித்தாலும் முட்டையை கொப்பளிக்கும் போது வாந்தி வருவது போன்ற ஒலியைத் தர, "அருவருப்பு வந்துடுச்சு. அவ்வளவுதான் வேலை முடிஞ்சது" என்று அவசரம் அவசரமாக இதயத்தைப் பிடுங்கிச் சென்றார் அர்ச்சனா.

“நீங்க சிரிச்சீங்கன்னா... இன்னொரு இதயத்தையும் பிடுங்கிடுவேன்" என்பது போல் பாலாஜியிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா. இதை அவர் நிஷாவிடமும் சொன்ன நினைவு. ரோபோக்களிடமிருந்து இரண்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தச் செய்ய வேண்டும் என்பதுதான் டாஸ்க். ரோபோ ஒருமுறை சிரித்து இதயத்தைப் பறிகொடுத்து விட்ட பிறகு சிரிப்பதைக் குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றுதான் தோன்றுகிறது.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

அர்ச்சனாவின் முடிவை பாலாஜி ஏற்றுக் கொள்ளவில்லை. "நான் அருவருப்பு ஆகவில்லை. மஞ்சள் கரு தொண்டையில் சிக்கிக் கொண்டதை சரி செய்தேன். அவ்வளவுதான்" என்று பிறகு தனது அணியிடம் அனத்திக் கொண்டிருந்தார்.

மற்றவர்களுக்கு முட்டை என்றால் தன் செல்லத் தம்பி ரியோவிற்கு மட்டும் ‘அஹிம்சை முறையில்’ தண்டனை தர முடிவு செய்தார் ‘அன்பு’ அர்ச்சனா. (ஏன் இந்தப் பாரபட்சம்?!) இவர் காலில் விழுவாராம். அதற்காக ரியோ சங்கடப்படுவாராம். (என்னய்யா பித்தலாட்டம் இதெல்லாம்?!) ‘'எனக்கு கோபம் வந்தது. ஆனால் முகத்தில் காட்டவில்லை'’ என்கிற விநோதமான காரணத்தை ரியோ சொன்னாலும் ஒரு இதயத்தை அன்போடு பிடுங்கிவிட்டு பதிலுக்குக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார் அர்ச்சனா.

தனக்கு சிரிப்பு வந்தபோது அதை ஒப்புக் கொள்ளாமல் முன்பு அழும்பு செய்த கேபி, இப்போதோ ‘'ரியோவிற்கு கோபம் வந்துச்சு. கோபம் வந்துச்சு... நான் பார்த்தேன்... அச்சுக்கா... அச்சுக்கா…'’ என்று கூவிய போது சற்று எரிச்சலாக வந்தது. (வெஷம்...வெஷம்). ‘அச்சுக்கா’விடம் விசுவாசத்தை நிரூபிக்க கேபி செய்யும் அலப்பறைகள் ஓவராக இருக்கின்றன.

ரியோவின் இன்னொரு இதயத்தைப் பறிக்கும் திட்டத்துடன் அவரை நடனம் ஆடச் சொன்னார் அர்ச்சனா. இதற்கு ஆஜீத் ஜிப்ரீஷில் பாட வேண்டும். ‘சொப்பன சுந்தரி நான்தானே’ என்கிற பாடலை அவர் கன்னாபின்னாவென்று மாற்றிப் பாட ‘டக்’கென்று சிரித்து விட்டார் ரியோ. அவரின் இந்தச் செயல், தன்னிச்சையாக வந்த சிரிப்பாக இல்லாமல் விட்டுக் கொடுத்தது போல்தான் இருந்தது. ரியோவின் இந்த நாடகத்தின் மூலம் கிடைத்த வெற்றிக்கு, ‘ஆஸ்கர் விருது’ வாங்கிய அறிமுக நடிகை போல துள்ளிக் குதித்து வெறிக்கூச்சல் போட்டார் அர்ச்சனா. ரியோவின் டிராமாவைக் கண்டு வெறுப்புடன் வெளியே சென்றார் பாலாஜி.

ஆக... ஆரி மட்டும்தான் பாக்கி. பாட்டு ஐடியா ‘வொர்க்அவுட்’ ஆகி விட்டதால் (?!) அதை ஆரியிடமும் முயற்சி செய்தார் அர்ச்சனா. அப்போது ஆஜீத் கேட்ட ஒரு கேள்விக்கு ஆரி பதில் சொன்னதால் "இரண்டு ரோபோக்கள் தங்களின் இடையே பேசக்கூடாது. செக்ஷன் 360CA2-ல் தெளிவாக போட்டிருக்கிறது" என்கிற அற்பமான காரணத்தைச் சொல்லி ஆரியின் இதயத்தைப் பிடுங்கினார் அர்ச்சனா.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

இப்படியாக இன்று அர்ச்சனா பல இடங்களில் போங்காட்டம் ஆடியதைப் பார்க்க முடிந்தது. அவசரம் அவசரமாக இதயத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். ‘உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வருவதுதான் முக்கிய டாஸ்க்’ என்கிற ஆரியின் விளக்கத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரியை எளிதில் உடைக்க முடியாது என்பதால் இப்படி குறுக்கு வழியை அர்ச்சனா உபயோகித்தது போலவே பட்டது.

தமிழிலும் ஜிப்ரீஷிலும் அனிதாவை செய்தி வாசிக்கச் சொன்னார்கள். அவர் பிக்பாஸ்ஸின் அப்போதைய நிலவரத்தை தமிழிலும், சப்டைட்டில் போல ‘கர்ரேபுர்ரே’ என்று செக்கோலோவாஸ்கியா மொழியிலும் உடனுக்குடன் மொழிபெயர்த்துச் சொன்னார். சந்தடி சாக்கில் எதிரணி செய்த போங்காட்டங்களையும் அதில் இணைத்திருக்கலாம்.

இந்த டாஸ்க் முடிந்ததற்கான பஸ்ஸர் அடித்தது. (ஹப்பாடா!). இந்த மகிழ்ச்சியை அர்ச்சனாவின் தோளைக் கடித்து கொண்டாடினார் ரியோ. (உவ்வேக்!).

"முட்டை வைத்தியத்தில் நான் தோற்று விட்டதாகச் சொன்னதில் அநீதி நடந்துள்ளது இது பற்றி விசாரணை கமிஷன் வேண்டும்" என்று அர்ச்சனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் பாலாஜி. அந்தச் சமயத்தில் ‘'நீங்க சரியா ஒத்துழைக்காம இருந்தீங்க’' என்று ஷிவானி உண்மையைச் சொன்னதால், ‘'நீயுமா... என்னைக் குத்தறே?” என்று பிறகு கண்கலங்கினார் பாலாஜி. ‘குறும்படம்’ போட்டு இவர் செய்த அழும்பை சபையில் வெளிப்படுத்தியதால் ஏற்கெனவே இவர் வருத்தத்தில் இருக்கிறாராம். அப்போது யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையாம்.

"இது ஒரு கேம். எமோஷனை சோதிக்கற டாஸ்க்... அப்படித்தான் இருக்கும். நாளைக்கு உன்னையும் குத்துவேன்" என்றெல்லாம் பிக்பாஸை ஒரு கேமாக மட்டுமே பார்க்கிற பாலாஜிக்குள்ளும் ‘ரத்தம் vs தக்காளி சட்னி’ தத்துவம் ஒளிந்து கொண்டிருந்ததை அவருடைய கண்கலங்கலின் மூலம் பார்க்க முடிந்தது. ‘சரிடா.. சாரி’ என்று நெருங்கி வந்து தேற்றிக் கொண்டிருந்தார் ஷிவானி.

இந்தச் சமயத்தில் ‘பச்சை முட்டையை நான் இதுவரை டேஸ்ட் பண்ணதில்லை’ என்று பாலாஜி சொன்னது விநோதமாக இருந்தது. ஒரு பாடிபில்டர் பேசற பேச்சா இது?! இதை முட்டை கூட நம்பாது.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

நாள் 67 விடிந்தது. பாட்டு வரி எதுவும் இல்லாமல் குத்து இசையை மட்டும் போட்டார் பிக்பாஸ். ‘ரோபோ’ டாஸ்க் முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் மக்கள் ‘இறங்கி குத்தி’ ஆடினார்கள்.

‘ரோபோ’ டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட இருவரைத் தேர்ந்தெடுக்கும் தருணம் வந்தது. இதில் ஆச்சர்யகரமாக ரம்யாவின் பெயர் அதிகம் அடிபட்டது. ஏனெனில் இந்த டாஸ்க்கில் ரம்யா தொடர்பான காட்சிகள் அதிகம் நமக்கு காட்டப்படவில்லை. என்றாலும் மிக சகிப்புத்தன்மையோடும் சுவாரஸ்யத்தோடும் அவர் செய்ததாக நிறைய பேர் சொன்னார்கள்.

இதைப் போலவே பாலாவின் பெயரும் நிறைய அடிபட்டது. அர்ச்சனாவின் பெயரை ரியோ மட்டும் சொன்னார். நமக்கு காட்டப்பட்ட காட்சிகளின் படி அர்ச்சனாவும் இந்த டாஸ்க்கிற்காக அதிகம் சிரமப்பட்டார். எனவே அவருடைய பெயர் நிறைய முறை வந்திருக்க வேண்டும். ‘அர்ச்சனா ஸ்ட்ராங்க்... அவங்களை முதல்ல டார்க்கெட் பண்ணலாம்’ என்று பாலாஜி தந்த ஐடியாவை ஆரி சபையில் அவிழ்த்து விட, பாலாஜிக்கு சர்காஸ்டிக்காக வணக்கம் சொன்னார் அர்ச்சனா.

இறுதியில் ‘ரோபோ டாஸ்க்கின்’ சிறப்பான பங்கேற்பாளர்களாக பாலா மற்றும் ரம்யா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அடுத்ததாக ‘வாரம் முழுவதும் முழு ஈடுபாட்டோடு’ செயல்பட்ட நபரின் தேர்வு. இதில் நிஷாவின் பெயரை பெரும்பான்மையோர் சொன்னார்கள். ஆக இந்தப் பகுதியில் தேர்வானவர் நிஷா.

சோம் தனது பரிந்துரையை சொல்லும் போது ‘அவன்... இவ’ என்பது போல் பெயரைத் தெளிவாக குறிப்பிடாமல் ‘வழவழவென்று’ சொல்லிச் சென்றார். இது அவர் வழக்கமாக செய்வது. இந்தக் கட்டுரைக்காக நான் குறிப்பெடுக்கும் போது ‘சோம் யாரைச் சொன்னார்’ என்று சிலமுறை குழம்பியிருக்கிறேன். இதை இன்று பிக்பாஸ் சரியாகப் பிடித்து விட்டார். ‘பெயரைத் தெளிவாகச் சொல்லி நாமினேட் செய்யுங்கள்’ என்று அவர் சோமிற்கு அறிவுறுத்தியது சரியான விஷயம்.

இதுவரைக்கும் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. அடுத்து வந்ததுதான் வில்லங்கமான பகுதி. சுவாரஸ்யம் மற்றும் ஈடுபாடு குறைவாக இருந்த இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பகுதி. ரணகளமான விவாதம் இப்போது ஆரம்பித்தது.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

"முதல்ல எந்திரிச்சி பேசி மத்தவங்களை இன்ஃப்யூளன்ஸ் பண்ணிடுவான்" என்கிற புகார் பாலாஜியின் மீது ஏற்கெனவே உண்டு. அதை நிரூபிப்பது போல இந்த முறையும் அனுமதி கேட்டு முதலில் எழுந்த பாலாஜி ‘ரமேஷ் மற்றும் அர்ச்சனா’ பெயரைச் சொன்னார். தன்னுடைய பெயர் சொல்லப்பட்டதிற்கு வழக்கம் போல் கோபப்பட்டு ரமேஷ் பேச ‘'யப்பா... பயமாயிருக்கு'’ என்று தன் ஆட்சேபத்தை தெரிவித்தார் பாலாஜி. பாலாஜியின் ஆட்சேபம் நியாயமானது. முகத்தில் அடிப்பது போல் ரமேஷ் பேசினால் அவர் பெயரைக் குறிப்பிட மற்றவர்கள் தயங்குவார்கள்.

டாஸ்க் சுவாரஸ்யம் குறைந்து போனது தொடர்பாக அர்ச்சனாவிற்கான காரணத்தை பாலாஜி குறிப்பிட்டது முறையானதாக இல்லை. தந்தையின் மரணத்தை நிஷா இழுத்ததால் அர்ச்சனா ‘பிரேக்’ ஆன அந்தக் குறிப்பிட்ட தருணம் தவிர, இதர சமயங்களில் அவரது பங்களிப்பு சிறப்பாகவே இருந்தது. எதிர் அணியினரின் நிறைய சேஷ்டைகளை பொறுத்துக் கொண்டார். ஆனால் அவர் மனிதராக மாறிய போது சில இடங்களில் போங்காட்டம் ஆடியதும் உண்மைதான்.

பாத்திரம் கழுவும் அணியில் இருந்தாலும் கிச்சன் பக்கமே ரமேஷ் வரவில்லை என்கிற காரணத்தை சொன்னார் ரம்யா. ஏறத்தாழ பாலாஜி சொல்லிய அதே காரணம்தான். ஆனால் ரம்யா சிரித்துக் கொண்டே ஊசி ஏற்றியதால் ரமேஷிற்கு உறைக்கவில்லை.

ரியோ வந்த போதுதான் கூடவே பிரச்னையும் ஆரம்பம் ஆகியது. அனிதாவின் பெயரை முன்மொழிந்த ரியோ, ‘'ரோபோ டைட்டில்களை சொன்னார்'’ என்று அதற்கு காரணத்தைச் சொன்னார். இந்தப் பட்டங்கள் பிற்பாடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கல்வெட்டில் எழுதியது போல் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்றுவிடுமாம்.

ரியோவின் இந்தக் குற்றச்சாட்டு முறையானதல்ல. அணியாக கூடிப் பேசும் போது இதைப் பற்றி அவர் கறாராக ஆட்சேபித்திருக்க வேண்டும். அப்படியே ஒருவர் இதை மீறிச் செல்வதாக இருந்தால் ‘எனில் இதற்கான பின்விளைவுகளை நீங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று முதலிலேயே தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும். அணியாக கூடிப் பேசி முடிவு செய்துவிட்டு பிறகு ஒருவரை மட்டும் சபையில் போட்டுக் கொடுப்பது முறையானதல்ல.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

"நானும் நிஷாக்காவும்தான் சேர்ந்து பேசினோம்" என்று பதில் சொன்னார் அனிதா. இதை நிஷா ஏற்றுக் கொள்ளவில்லை. ஷிவானிக்கு ‘மேக்கப் ரோபோ’, ரம்யாவிற்கு ‘சாஃப்ட் ஹர்ட்’ என்று தேர்வு செய்தவரே நிஷாதான். ஆனால் தனது அணி என்று வரும் போது மட்டும் ‘சுகமான சோமு’ என்று ஜாக்கிரதையான பெயராக வைப்பாராம். சோமு கூட அதிகம் பிரச்னையில்லை. அதுவொரு மொக்கை ரோபோ. ஆனால் ‘என் தலைவி மேல யாருடா கைய வெச்சது?’ என்று மட்டும்தான் நிஷா வெளிப்படையாக கேட்கவில்லை. மற்றபடி ‘Bossy’ என்று பெயர் சூட்டியதில்தான் நிஷா மற்றும் ரியோ அதிகம் காண்டானார்கள். எனில் அர்ச்சனா இது தொடர்பாக அவர்களிடம் நிறையப் புலம்பி ‘மைண்ட் வாஷ் செய்திருப்பார்’ என்று யூகிக்கத் தோன்றுகிறது.

‘'அணியாகச் சேர்ந்து முடிவு செய்து விட்டு இப்போது என்னை மட்டும் தனியாக குறிப்பிடுவது ஏன்?'’, ‘'அணித்தலைவர் பாலாஜி சொன்னதைத்தானே நான் செய்தேன்?'’, ‘'டைட்டில் வைத்தது என் தவறு என்றால். நீங்கள் வைத்ததும் தவறுதானே?’', ‘'கோபம் வரும்படி செய்வதும் டாஸ்க்கின் ஒரு பகுதிதானே?'’ என்று பல சரியான கேள்விகளை அனிதா கேட்டாலும் எவரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

"டாஸ்க் நல்லா வரணும்னு நெனச்சு நான் பண்ண ஒரு விஷயத்திற்காக ‘ஈடுபாடு குறைவானவர்’ என்று பட்டம் சூட்டுவது அநீதி" என்று அனிதா சொல்லும் பாயின்ட் நியாயமானது. "என் பெயரை நீங்க ஆரம்பிச்சு விட்டுட்டு போகணும்னு நெனக்கிறீங்க போல" என்று ரியோவிடம் அனிதா சொன்னபோது அதற்கு பலத்த ஆட்சேபம் தெரிவித்தார் ரியோ. "நான் சொன்ன வார்த்தையை மாற்றிச் சொல்லாதீர்கள்" என்று பதிலுக்கு ஆட்சேபித்தார் அனிதா.

எனவே இது குறித்த கோபத்தில் இருந்த அனிதா, தன் முறை வரும் போது ரியோவின் பெயரைக் குறிப்பிட்டு, "கேபியைத்தான் அவர் அதிகம் எடுத்துக்கிட்டார். அணித்தலைவரின் முடிவைக் கேட்டுதான் நான் செயல்பட்டேன். அதனால்தான் ‘பட்டப்பெயர்களை’ பொதுவில் அறிவித்தேன். ஆனால் என் பெயரை மட்டும் இப்போது கோத்து விடுகிறார்கள். அப்போது புரியவில்லை. இப்போதுதான் புரிகிறது" என்று அவர் சொன்ன போது ‘கோத்து விடுகிறார்கள்’ என்கிற வார்த்தைக்கு புண்பட்டு ஆவேசமாக எழுந்து வந்து விவாதித்தார் நிஷா. விளக்கம் சொல்ல வந்த பாலாஜியை ‘இருடா’ என்று என்று ஆவேசமாக தடுத்தார்.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

"ஜாலியாகத்தான் நான் பெயர் வெச்சேன். அதனால சிரிப்பு வரவழைக்க முடியும்" என்பது நிஷா சொல்லும் காரணம். "சிரிப்பு வரவழைப்பதற்கு சில பட்டப் பெயர்களைச் சூட்டியது போல, கோபம் வரவழைப்பதற்கும் சில பெயர்களைச் சூட்டலாம்தானே... அதுவும் டாஸ்க்கின் ஒரு பகுதிதானே?” என்று அனிதாவின் சார்பாக நியாயமாக பேசியவர் ரம்யா மட்டும்தான்.

"இது என்னோட முடிவுதான்... நிஷாவும் அவங்களா சொந்தமா பண்ணி சொதப்பினாங்க" என்று சபையில் பாலாஜி சொன்னதற்குப் பாராட்டு. ஆனால் அனிதாவிற்கு எதிராக எழுந்த அத்தனை கூச்சல்களுக்கும் அணித்தலைவராக அவர் அழுத்தமாகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும்.

'‘தனக்கு குறும்படம் போட்டார்கள். யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை’' என்பதற்காக கண்கலங்கும் பாலாஜி, இன்னொருவரும் அது போல் வீண்பழியில் விழும் போது உடனே சென்று காப்பாற்றுவதுதான் நியாயமான விஷயம். நிஷாவின் சொதப்பலை குறிப்பிட்ட பாலாஜி, அதற்குப் பதிலாக அர்ச்சனாவை ‘Boring performer’ஆக நாமினேட் செய்தது முரண்.

அணியிடம் கலந்தாலோசிக்காமல் தானாக யோசித்துப் பேசி டாஸ்க்கை சொதப்பிய நிஷா, ‘Best performer’ ஆக ஆகும் போது, அணியின் முடிவின் படி செயல்பட்ட அனிதா, ‘Worst performer’ ஆவதில் துளி கூட நீதியில்லை.

"அர்ச்சனாவை அதிகம் புண்படுத்த வேண்டாம் என்று அணித்தலைவர் சொல்லியிருந்த பிறகும் நிஷா சென்று தந்தையின் மரணத்தைப் பற்றி அர்ச்சனாவிடம் பேசி சொதப்பியிருக்கிறார். எனில் நிஷாவின் பெயரை நீங்கள் ஏன் நாமினேட் செய்யவில்லை?” என்று அனிதா கிடுக்கிப்பிடி போட்டதற்கு ,"அவங்களை best perfomer’-ல சொல்லியிருக்கேன்" என்று சம்பந்தமில்லாமல் பதில் சொன்ன ரியோ, "யப்பா... யாராவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்களேன்" என்று வெளிப்படையாகவே கதறினார்.

இந்த விஷயத்தைச் சுருக்கி இவ்வாறு புரிந்து கொள்ள முடியும். அர்ச்சனாவை ‘Bossy’ என்று திரும்பத் திரும்ப அழைத்ததில் அவர் நிச்சயம் காண்டாகியிருக்கிறார். ஆனால் டாஸ்க்கின் போது இதை அதிகம் செய்து அழ வைத்தது பாலாஜிதான். ரோபோவிற்கான டைட்டில்களை அறிவித்தது மட்டுமே அனிதாவின் பணி. ஆனால் பலமான போட்டியாளரான பாலாஜியை எதிர்க்க முடியாது என்பதால் அனிதாவை பலிகடாக்கி விட்டது அர்ச்சனா க்ரூப். ரியோவும் நிஷாவும் அவரின் ஆயுதங்களாக செயல்பட்டார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

அனிதாவிற்கு சபையில் அழுத்தமாக ஆதரவு தெரிவிக்காத பாலாஜி, அனிதாவிற்கான தண்டனை உறுதியானவுடன் '‘இதெல்லாம் நம்பர் கேம்’' என்று பின்பக்கமாக அவரை அழைத்துச் சென்று முனகினார். அதையே அனிதாவும் உரக்கச் சொல்லி தன் வெறுப்பைக் காண்பிக்க துணுக்குற்றுப் பார்த்தார் ரியோ.

''அனைத்திலும் ஈடுபாட்டோடு செயல்படாதவர் என்கிற தேர்வில் இவர்கள் டாஸ்க்கிற்கான காரணத்தை மட்டுமே சொன்னார்கள் நான் பெரும்பாலும் கிச்சன்ல நின்று இவங்களுக்காக வடிச்சுக் கொட்டினேன். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்களா? எனில் என் உழைப்பு வீண்தானா? சமையல் செய்யாமல் டாஸ்க்கில் பங்கெடுக்க எனக்குத் தெரியாதா? தனியாக ஆடும் நபர்களை எல்லாம் ‘குரூப்பிஸத்தின்’ மூலம் வெளியே துரத்தி விட்டு இவர்கள் மட்டும்தான் ‘குரூப்பாக’ ஃபைனலுக்கு செல்வார்களா? சனத்திற்கு பிறகு இவர்களின் டார்கெட் நானா?" என்றெல்லாம் அனிதா புலம்பியதில் பெருமளவிற்கு நியாயமுள்ளது. இவருக்கு ஆதரவாக வந்து நின்றவர் ரம்யா மட்டுமே.

அனிதாவும் ரமேஷூம் ‘ஓய்வறைக்கு’ செல்லும் போது ‘நான் பெட்ல இருக்கேன்... நீங்க எப்படின்னா போங்க’ என்பது போல் அப்போது இருக்கிற வெறுப்பில் அனிதா கூறியது காமெடியான விஷயம்.

‘'அனிதாவிற்கு இத்தனை தம் கட்டீனீர்களே? தண்டனை பெற்ற இன்னொரு நபரான ரமேஷ் பற்றி எதுவுமே சொல்லவில்லையே?’' என்று ஒருவேளை நீங்கள் கருதலாம். அதற்கு ‘ரமேஷ்’ என்கிற பெயர் மட்டுமே போதுமானது. இந்த டாஸ்க்கின் சில இடங்களில் ரமேஷ் சுவாரஸ்யமாக பங்கேற்றார் என்பது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவர் வழக்கம் போல் சொகுசாக இருந்திருக்கிறார் என்பதே மக்களின் வாக்குமூலங்களில் இருந்து தெரிய வருகிறது. எனவே அவர் இன்னமும் சொகுசாக இருக்க ‘ஓய்வறைக்கு’ செல்வதென்பது குறைந்தபட்ச தண்டனைதான். வெளியே அனுப்பப்படுவதுதான் நிரந்தர தீர்ப்பாக இருக்க முடியும்.

பிக்பாஸ் - நாள் 67
பிக்பாஸ் - நாள் 67

இத்தனை களேபரங்கள் நடந்து முடிந்த பிறகும் பாலாஜியும் ஷிவானியும் பேசிக் கொண்ட அந்த ‘ரொமான்ஸ்’ உரையாடல் இருக்கிறதே?! ஆஹா..! அற்புதம். ‘ரணகளத்திலும் கிளுகிளுப்பு’ என்பதற்குக் கச்சிதமான உதாரணம் இதுதான்.

ஒட்டுமொத்தத்தில் அனிதா ‘ஓய்வறைக்கு’ அனுப்பபப்பட்ட முடிவானது, குழு மனப்பான்மையின் மூலம் நிகழ்த்தப்பட்ட அநீதி. இதை விசாரணை சபையில் கமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும். செய்வார் என்று நம்புவோம்.