Published:Updated:

அழுகாச்சி டாஸ்குக்கு அடிஷனல் பேப்பரா அனிதா... ஆத்திரங்கள் வருகிறது மக்களே! பிக்பாஸ் – நாள் 25

பிக்பாஸ் – நாள் 25

அனிதா பேசுவதற்கு வந்தார். காலம் அப்படியே உறைந்து நின்றது. கடல் அலைகள் கலங்கின. மரங்கள் சாய்ந்தன. மழை வானத்தில் உறைந்தது. மிருகங்கள் அலறின. பூமி தன்னைத்தானே பலமுறை சுற்றி வந்து டயர்ட் ஆகி நின்றது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 25

Published:Updated:

அழுகாச்சி டாஸ்குக்கு அடிஷனல் பேப்பரா அனிதா... ஆத்திரங்கள் வருகிறது மக்களே! பிக்பாஸ் – நாள் 25

அனிதா பேசுவதற்கு வந்தார். காலம் அப்படியே உறைந்து நின்றது. கடல் அலைகள் கலங்கின. மரங்கள் சாய்ந்தன. மழை வானத்தில் உறைந்தது. மிருகங்கள் அலறின. பூமி தன்னைத்தானே பலமுறை சுற்றி வந்து டயர்ட் ஆகி நின்றது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 25

பிக்பாஸ் – நாள் 25
“டேய் நீ எனக்கு புள்ளடா... நீ எனக்கு வேணும்டா (ஆராரிராரோ...) என்று அர்ச்சனா நேற்று கதறியதைப் பார்த்தவுடன் பிக்பாஸ் மூளைக்குள் பல்பு எரிந்திருக்க வேண்டும். அதையே ‘அழுகாச்சி’ டாஸ்க்காக மாற்றி இன்று வைத்து விட்டார். பிக்பாஸில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போக்கையே தனது உத்தியாக மாற்றிக் கொள்வதுதான் அவரது ஸ்டைல்.

ஆனால், இந்த அழுகாச்சி டாஸ்க்கையே காமெடி டைமாக மாற்றக்கூடிய வல்லமை அனிதாவிடம் இருந்தது. ‘சுமங்கலி’ விவகாரத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கதறி கதறி சோக கீதம் வாசித்தவரின் கையில் பிக்பாஸ் ஷெனாய் வாத்தியத்தை தந்ததும் சும்மாவா இருப்பார்? சீஸன் 5 முடியும் வரை வாசித்துத் தீர்த்துவிட்டார். பார்த்தவர்களுக்கு அழுகை வந்ததோ, இல்லையோ… காதில் ரத்தம் நிச்சயம் வந்திருக்கும்.

என்ன நடந்ததென்று பார்ப்போம்.

பிக்பாஸ் – நாள் 25
பிக்பாஸ் – நாள் 25

‘ஒத்த சொல்லால’ என்கிற ரகளையான பாட்டுக்கு மக்கள் எழுந்து ‘லுங்கி டான்ஸ்’ ஆடினார்கள். அவர்களின் பெரும்பாலோரின் நிம்மதியை, ஒற்றை வாக்கியத்தில் அடுத்து பிக்பாஸ் கெடுக்கப் போகிறார் என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘தங்கம்’ டாஸ்க் மீண்டும் துவங்குவதாக பிக்பாஸ் அறிவித்ததும் நிஷா தலையில் கை வைத்து சோகமாக அமர்ந்து விட்டார். அர்ச்சனாவிற்கு பல் துலக்கி, வாயையும் கழுவி (உவ்வேக்!) விடும் பணி அவருக்கு கிடைத்தது. முகத்தில் சோப்பு போடும் சமயத்தில் அர்ச்சனா கண்களை மூடிக் கொண்டிருக்க, நிஷா அப்போது செய்த சேஷ்டைகள் தரமான சம்பவம்.

Morning Activity என்றொரு விஷயம் இதுவரை நமக்கு காட்டப்படவேயில்லை. இன்று காட்டப்பட்டது. பிறகுதான் தெரிந்தது. இது காட்டப்படாமலேயே இருந்திருக்கலாம். அது unseen அல்ல. Unwanted Scene.

தங்கம் வென்ற அணியில் இருப்பவர்களைப் பற்றி தோற்ற அணியில் இருப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டுமாம். ‘விடாமுயற்சி’ என்று ரியோவைப் புகழ்ந்து ரம்யா சொல்ல, “அதாவது நீ முயற்சி செஞ்சு செஞ்சு தோத்துப் போயிட்டே இருக்கியாம்" என்று கொளுத்திப் போட்டார் சுரேஷ்.

"பாலாவோட மனசு மட்டுமில்ல... ஆளே தங்கம்தான். ஆனா கொஞ்சம் கோபம்-ன்ற சேதாரம்தான் இருக்கு" என்று மிகையாகப் புகழ்ந்தார் ஷிவானி. (இது எங்க போய் முடியப் போவுதோ?!)

பிக்பாஸ் – நாள் 25
பிக்பாஸ் – நாள் 25

“கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுப்பவர் ராஜமாதா” என்று அர்ச்சனாவைப் பற்றி சனம் அள்ளிவிட, “போன வாரம் அவங்க அரைமூடி எலுமிச்சம்பழம் தரலைன்னு கழுவி கழுவி ஊத்தினியே” என்று ஜாலியாக பாலாஜி சபையில் போட்டுக் கொடுத்து விட்டார்.

பிறகு இது தொடர்பாக சனத்திற்கும் பாலாஜிக்கும் முட்டல் ஏற்பட்டது (மறுபடியும் ‘குஷி’ திரைப்படம்). ‘நொய்... நொய்’ என்று பேசி தன்னை இம்சித்துக் கொண்டிருந்த சனத்தை நோக்கி, மைக்கை கழற்றியபடி பாலாஜி பாய, ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று ஆவலாக பார்த்தால், கேஸ் ஸ்டவ் ஆஃப் செய்யப்பட்ட பால் போல் உடனே அடங்கி விட்டார் பாலா.

இதற்கு நடுவில் 'குஷி' படத்தின் காட்சியை மேற்கோள் காட்டி ‘காமெடி’ மாதிரி எதையோ முயன்று கொண்டிருந்தார் ரமேஷ். (உங்களுக்கு வரலை... விட்டுருங்க). வெளியே அத்தனை உடற்பயிற்சி உபகரணங்கள் இருக்க, பாலாஜியின் சூட்கேஸைத்தான் பயன்படுத்துகிறார்கள் போலிருக்கிறது.

இம்சை அரசியாக இருந்தாலும் சனத்தின் ஆட்சேபத்தில் இப்போது நியாயம் இருந்தது. ‘இவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள்’ என்கிற நம்பிக்கையில் தனிமையில் சொன்ன ஒரு புகாரை, பொதுவில் போட்டுக் கொடுப்பது கெட்ட வழக்கம். பாலாஜி அதை ஜாலியாக செய்திருந்தாலும் தவறுதான்.

பாலா உத்தரவிட்டபடி அவரின் பின்னால் குடைபிடித்தபடி அலைந்தார் ஷிவானி. ஆனால் அதை அவர் தண்டனையாக நினைக்காமல் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக சந்தோஷத்துடன் செய்து கொண்டிருந்துதான் கவனிக்கப்பட வேண்டியது. மற்றவர்களுக்கு செய்ய நேரும் போது அந்த மகிழ்ச்சி அவரிடம் இல்லை என்பதையும் கவனிக்க முடிந்தது.

பாலா கேட்டுக் கொண்டபடி ஒரு திரைப்படப்பாடலை வேகமாகவும் மெதுவாகவும் ஷிவானி பாடி காட்டினார். நடக்கட்டும்!

பிக்பாஸ் – நாள் 25
பிக்பாஸ் – நாள் 25

“எழுந்திரு... உட்காரு" என்று ஒருபக்கம் நிஷாவை ரமேஷூம் ரியோவும் இணைந்து இம்சித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ‘பெண்களின் மேக்கப்பை கலைக்க மாட்டேன்’ என்று சொன்ன காரணத்திற்காக ஆரிக்கு பெண்கள் மேக்கப் போட்டு அவரை பூரியாக்கினார்கள். (ஒரு வரலாற்றுத் தலைவனைப் போய்!). அந்த மேக்கப்புடன் தனது முகத்தை கேமரா அருகே கொண்டு வந்து ஆரி காட்டிய போது நமக்கே சற்று கலவரமாகத்தான் இருந்தது.

முன்கோபம் கொண்டிருந்தாலும் பாலா தான் ஒரு ராஜதந்திரி என்பதை நிரூபித்து விட்டார். "நான் கேப்டன் ஆனா எல்லோரையும் அம்மி அரைக்க விடுவேன்” என்று முன்பு கோபத்தில் சொல்லி விட்டாலும் அதை இப்போது தந்திரத்துடன் உண்மையாகவே செயல்படுத்தி விட்டார்.

தானே முன் உதாரணமாக அதைச் செய்வது போலவும் நிஷாவின் மீது பாவம் பார்ப்பது போலவும் பாவனை செய்து ஷிவானி, ரம்யா ஆகியோர்களை அம்மி அரைக்க விட்டார். "அம்மியில் அரைப்பதினால் ஏற்படும் ஆய பயன்கள்” என்கிற தலைப்பில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார் நிஷா. (அம்மில அரைச்சு மாமனுக்கு மீன் குழம்பு செஞ்சு போட்டா... வாழ்க்கை அப்படி கிளுகிளுப்பா இருக்குமாம்!).

தங்கம் வென்ற சிங்கங்களுக்கு ‘லக்ஸரி டாஸ்க்’ அளித்தார் பிக்பாஸ். இதில் ஒரு மாற்றம். அவரவர் எடுத்திருக்கும் புள்ளிகளின் படி தனித்தனியாக ஷாப்பிங் செய்யலாம். ‘இதில் ஏதாவது ஒரு குழப்பம் ஏற்பட்டு விடாதா’ என்கிற ஆசை பிக்பாஸிற்கு. அதிக பாயிண்ட்டுகள் உள்ளதால், ‘நான் முதலில் போகிறேன்’ என்று அடம்பிடித்துச் சென்ற பாலா, 'தன் விருப்பத்திற்கு பாதி, குடும்ப நலத்திற்கு மீதி’ என்று பொருட்களை அள்ளி வந்தார்.

பிக்பாஸ் – நாள் 25
பிக்பாஸ் – நாள் 25

தனக்கு கிடைக்கப்பட்ட புள்ளிகளை விடவும் அதிகமாக பொருட்களை எடுத்து வந்து விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார் ஷிவானி. (பொண்ணுக்கு பாடதான் வராதுன்னு பார்த்தா கணக்கும் வராது போல). பானிபூரி உள்ளிட்ட ஃபாஸ்ட்புட் வகைகளை கேபி அள்ளி வந்ததைப் பார்த்த நிஷா, “இதை அவங்க மட்டும்தான் தின்ன முடியும். நாம குடும்பத்திற்காக பொதுவான பொருட்களாக எடுத்து வந்தோம்” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

இதுதான் முந்தைய தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்குமான வேறுபாடு. இளையவர்களிடம் இருக்கும் சுயநலம் மூத்த தலைமுறையிடம் இருக்காது. அவர்கள் குடும்ப நலனிற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். "அய்யோ... பத்து ரூவாய்க்கு ஒரு பொருள் கூட இல்லையா?” என்று நிஷா புலம்பியது ஜாலியான ‘மிடில்கிளாஸ்’ மனோபவ காட்சி.

அடுத்ததாக துவங்கியது அந்த ‘அழுகாச்சி’ டாஸ்க். ‘நீங்கா நினைவுகள்’ என்பது தலைப்பு. ‘நீ என் புள்ளைடா’ என்று அர்ச்சனா கலங்கியதைப் பார்த்த பிக்பாஸ், அதையே விரிவாக்கம் செய்து டாஸ்க்காக மாற்றி விட்டார்.
பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே ‘தான் யாருடைய பிரிவுத் துயரால் கலங்குகிறோம்?’ என்பதைப் பற்றி போட்டியாளர்கள் பேச வேண்டுமாம். இதைப் பற்றிய அறிவிப்பை வாக்குமூல அறைக்குள் படிக்கும் போதே கண்கலங்கி அங்கேயே வார்ம்-அப் ஆனார் அர்ச்சனா.

பிக்பாஸ் போட்டியாளர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல. ஒரு சூழலை வெளியில் இருந்து விமர்சிப்பதை விடவும் அதன் உள்ளே இருந்து அனுபவிக்கும் போதுதான் அந்தக் கொடுமை தெரியும் என்பதிலும் மறுப்பில்லை.

ஆனால் வெறும் இருபது நாட்கள் பிரிவிற்கே மக்கள் இப்படி கண்கலங்குவது சற்று மிகையாக இருக்கிறது. பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஆண்டுக்கணக்கில் தங்களின் குடும்பத்தினரை பிரிந்திருக்கும் லட்சக்கணக்கான மக்களை சற்று நினைத்துப் பார்க்கலாம். தங்கள் வீட்டில் நிகழும் பல சுவையான தருணங்களை, சுவாரஸ்யங்களை, அனுபவங்களை தியாகம் செய்து விட்டு நினைவேக்கத்துடன் பணிச்சூழலில் மூழ்கியிருப்பார்கள். தங்களின் குழந்தை வளர்ந்து வருவதை கண்எதிரே பார்க்கும் அனுபவம் முதற்கொண்டு பல இழப்புகள் அவர்களுக்கு நேரும். அவர்களோடு ஒப்பிடும் போது பிக்பாஸ் போட்டியாளர்களின் இழப்பு சிறியதுதான்.

பிக்பாஸ் – நாள் 25
பிக்பாஸ் – நாள் 25

ரம்யாவும் கேப்ரியல்லாவும் அழக்கூடாது என்கிற முடிவுடன் வந்திருந்தாலும் அவர்களால் முடியவில்லை. "எங்க அம்மா ரொம்ப கண்டிப்பு. அதனாலேயே அவங்களை எனக்குப் பிடிக்காது. ஆனா நான் வளர்ந்தப்புறம் பேசி செட் ஆயிட்டோம். அவங்களை மிஸ் பண்றேன்" என்று கலங்கினார் கேபி. “அர்ச்சனா திருஷ்டி எடுத்தபோது எங்க அம்மா ஞாபகம் வந்துச்சு" என்று கண் கலங்கினார் ரம்யா.

இதைப் பார்த்த ஷிவானிக்கும் தன் தாயின் நினைவு வந்திருக்க வேண்டும். அடக்க முடியாமல் கலங்கிக் கொண்டிருந்தார்.

“அண்ணாமலை படத்துல வர்ற மாதிரி சைக்கிள் ஓட்டி கஷ்டப்பட்டு அதுக்கு அப்புறம் கார் வாங்குற நிலைமைக்கு உயர்ந்தவர் என் அப்பா. மத்தவங்க காசுக்கு ஆசைப்பட மாட்டாரு. அவர்தான் என் ஹீரோ. என் பசங்களுக்கும் நான் ஹீரோவாக இருக்க ஆசைப்படறேன்” என்று ரமேஷ் பகிர்ந்து கொண்ட அனுபவத்தில் தோல்வியடைந்த ஒருவரின் வருத்தமும் ஆறுதலும் உத்வேகமும் இருந்தது.

தன் மகனையும், பிரிந்திருக்கும் (?!) கணவரையும் நினைவுகூர்ந்து சுருக்கமாக பேசிச் சென்றார் சம்யுக்தா. “பாலாஜியைப் பார்த்தா என் பையன் ஞாபகம் வருது" என்று சுரேஷூம் மெலிதாக கண்கலங்கினார்.

“எங்க அம்மா என்கிட்ட அனத்திக்கிட்டேயிருப்பாங்க... அப்பல்லாம் எனக்கு கோபமா வரும். இப்பதான் புரியது. அவங்களுக்கு பேச யாருமில்லைன்னு என்கிட்ட பேச ட்ரை பண்ணயிருக்காங்க. இனிமே அவங்க எவ்ளோ பேசிட்டு இருந்தாலும் கேட்டுட்டே இருப்பேன்” என்று ரியோ பகிர்ந்த அனுபவத்தில் இன்றைய தலைமுறையினருக்கான செய்தியுள்ளது. தனது மனைவி, மகளையும் மிஸ் பண்ணுவதாக ரியோ கூறினார்.

பிக்பாஸ் – நாள் 25
பிக்பாஸ் – நாள் 25

“இருபது வருஷமா தொடர்ந்து ஓடிட்டே இருக்கேன்... எனக்கு ரெஸ்ட் தேவைப்படுது” என்று கலங்க ஆரம்பித்த அர்ச்சனாவின் குரலில் நடுத்தரவயதுப் பெண்களின் சலிப்பும் துயரமும் தெரிந்தது. "எங்க அம்மா கூட நிறைய சண்டை போட்டிருக்கேன். அதுக்கெல்லாம் ஸாரி" என்று கலங்கிச் சென்றார். “நான் சீக்கிரம் வெளியே வந்துடுவேன்" என்று அவர் மறுபடி மறுபடி சொல்வது நிச்சயம் ஸ்போர்டிவ்னஸ் கிடையாது. அதுக்காகவா அவர் இங்கே வந்தார்?!

புயல் எச்சரிக்கை. இந்தப் பகுதியை கவனமாக கடந்து செல்லவும்.

அடுத்து ஆரம்பித்தது அந்த ‘வர்தா’ புயல். ஆம்... அனிதா பேசுவதற்கு வந்தார். ‘வணக்கம். செய்திகள் வாசிப்பது அனிதா சம்பத்’ என்று அந்த கின்னஸ் சாதனையைத் துவங்கினார்.

காலம் அப்படியே உறைந்து நின்றது. மலைகள் புரண்டன. கடல் அலைகள் கலங்கின. மரங்கள் சாய்ந்தன. செடிகள் ஒடிந்தன. மழை வானத்தில் உறைந்தது. மிருகங்கள் அலறின. பறவைகள் சரிந்தன... பூமி தன்னைத்தானே பலமுறை சுற்றி வந்து டயர்ட் ஆகி நின்றது.

ஆனால் – அனிதா அப்போதும் தனது பேச்சை நிறுத்தவில்லை. தொடர்ந்து பொழிந்து கொண்டேயிருந்தார். அவர் தன் கணவரின் பிரிவினால் சோகம் அடைவது நெகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் அதற்காக மிகச் சாதாரணமான நிகழ்வுகளைக் கூட பெரிய அளவில் பில்டப் செய்து தொலைக்காட்சி சீரியல் போல இழுத்துக் கொண்டே சென்றதுதான் போட்டியாளர்களை மட்டுமன்றி பார்வையாளர்களையும் சங்கடப்படுத்தி விட்டது.

இப்போதெல்லாம் பிக்பாஸ் டீமிற்கே அனிதா ஒரு காமெடி பீஸாகி விட்டார். அவரை வைத்து நிறைய குறும்பு செய்கிறார்கள். “இதெல்லாம் டெலிகாஸ்ட் ஆகுமா?” என்று குழந்தைத்தனமாக கேட்கும் அனிதா, அத்தனை வெள்ளந்தியானவரா என்ன? இத்தனைக்கும் மீடியா துறையில் இருப்பவர் அவர்.
பிக்பாஸ் – நாள் 25
பிக்பாஸ் – நாள் 25

"இவங்க கொஸ்டின் பேப்பரை மாத்தி எடுத்து வந்துட்டாங்களா என்ன?” - எப்போதும் அமைதியாக இருக்கும் ஆஜித்தே அனிதாவை கிண்டலடிக்கும் அளவிற்கு நிலைமை கை மீறிப் போனது. ரம்யாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தனது மொட்டைத்தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார் சுரேஷ். ஷிவானியும் பாலாஜியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். எக்ஸ்பிரஷனே வராத ரமேஷ் கூட சிரித்ததுதான் காலத்தின் கோலம்.

இதர போட்டியாளர்கள் தன்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிப்பதையும் பொறுமையிழந்து தவிப்பதையும் அனிதா பார்க்கவேயில்லையா அல்லது பார்த்தும் மும்முரமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை.

பார்வையாளர்களின் மனநிலையை அறிந்து சுருக்கமாகவும் ஆழமாகவும் பேசி முடிப்பதுதான் ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகு. பேச்சாளர் பேசுவது ரொம்பவும் போரடித்தால் கைத்தட்டி அவர்களுக்கு சமிக்ஞை தருவது நம் ‘பின்பென்ச்’ மரபு. அதையே ரம்யாவும் செய்து பார்த்தார்.

‘'எங்க வீட்டுக்கார் என்னை கன்னுக்குட்டின்னுதான் கூப்பிடுவார்’ என்று அனிதா சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரை நிறுத்தும் விதமாக ‘கன்னுக்குட்டி'’ என்று குரல் கொடுத்தார் ரம்யா. அப்போதும் அனிதாவிற்குப் புரியவில்லை. ஒரு சிரிப்பைத் தந்துவிட்டு தனது பேச்சைத் தொடர ஆரம்பித்தார்.

பிக்பாஸ் – நாள் 25
பிக்பாஸ் – நாள் 25

“அடுத்தது எங்க அம்மா பத்தி சொல்லப் போறேன்” என்று அடுத்த உலகப் போருக்கு அனிதா தயாராக, ‘உள்ள சுட்டு வெச்ச சப்பாத்தியெல்லாம் இந்நேரம் வறட்டியாகி இருக்குமே. இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க யாருமேயில்லையா?" என்று மக்கள் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்த போது ஆபத்பாந்தவனாக வந்தார் சம்யுக்தா. ‘அனிதாம்மா... ரொம்ப லெங்க்த்தா போவுதும்மா. எங்களுக்கு நெஜமாவே அழுகை வந்துடும் போலிருக்கு" என்று இடைமறித்து காப்பாற்றினார்.

இப்படியாக, ‘காலைல ஆறு மணி இருக்கும்... கோழி கொக்கரோன்னு கூவுச்சு’ என்கிற ரோபோ சங்கரின் அந்தக் காமெடி ஒருவழியாக நிறைவிற்கு வந்தது.

அனிதா பேசியது கூட பரவாயில்லை. இந்த டாஸ்க் முடிந்த போது "நான் பாட்டுக்கு பேசிட்டே போவேன். பிக்பாஸ் அதை எடிட் பண்ணி ‘அழகா’ காண்பிப்பாரு... இன்னும் கூட நெறய சொல்ல வேண்டியிருந்தது" என்று அடிஷனல் பேப்பராக வாங்கிக் கொண்டேயிருக்கும் மாணவன் மாதிரி சம்யுக்தாவிடம் சொல்லி விட்டு அடுத்து அவர் சொன்னதைக் கேட்டு பலருக்கு மயக்கமே வந்திருக்கலாம்.

“எனக்கு ஸ்பேஸே தர மாட்டேன்றீங்க” (கமல் பயங்கரமா கிண்டலடிச்சும் அம்மணி அடங்க மாட்டேங்கறாங்களே!)

அடுத்து வந்தவர் நிஷா. இவரின் பேச்சும் உடல்மொழியும் சுவாரஸ்யமாக இருந்தது. அனிதா படுத்திய சோதனைக்கு சற்று ஆறுதலாக இருந்தது. "நான் ரொம்ப பொஸஸிவ்னஸ் உள்ளவ. எல்லா அன்பும் எனக்குத்தான் கிடைக்கணும்னு நெனப்பேன். என் உயிருக்கு உயிரான தம்பியை மிஸ் பண்றேன். அப்புறம் என் மச்சான்... அவர் வாங்கித் தந்த நைட்டியை அவராவே நெனக்கறேன்” என்றார் நிஷா. (அதான் ஹஸ்பண்ட் மாதிரியே நைட்டியையும் அடிச்சுத் துவைக்கறீங்க போல).

பிக்பாஸ் – நாள் 25
பிக்பாஸ் – நாள் 25

‘எனக்கு டைமே பத்தலை’ என்று சம்யுக்தாவிடம் அனிதா அனத்திக் கொண்டிருந்ததோடு இன்றைய நிகழ்ச்சி முடிந்தது. ‘தோ... பார்றா... இன்னமும் அவங்க பேசி முடிக்கலையாம்” என்பது மாதிரியே தூரத்தில் இருந்த ஆஜித்தும் ரம்யாவும் நமட்டுச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில், ஆர்யாவிடம் சந்தானம் எரிச்சலோடு சொல்வார். “டேய்... அந்த கூலிங்கிளாஸை முதல்ல கழட்டித் தொலைடா.. கர்மம்”.

அது போல் பிக்பாஸில் என்ன நடந்தாலும் எப்படியாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால், அது முடியும் சமயத்தில் ஒரு ‘வாய்ஸ் ஓவரில்’ நீதி சொல்கிறார்கள். அதை மட்டும்தான் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை.