Published:Updated:

`சிடுமூஞ்சி மேக்ஸ்' சுச்சி... லவ்வெல்லாம் இல்ல பாலாஜி... ஜெனிலியா மோடில் அனிதா! பிக்பாஸ் – நாள் 43

பிக்பாஸ் – நாள் 43

ஷிவானிக்குக் கோபம் வரும் சமயத்தில் மட்டும்தான் வீட்டு வேலை செய்வார் போலிருக்கிறது. பாலாஜி சொன்னதுக்கு உள்ளுக்குள் கோபித்துக் கொண்டு கிச்சனில் போய் வெங்காயம் வெட்ட ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 43

Published:Updated:

`சிடுமூஞ்சி மேக்ஸ்' சுச்சி... லவ்வெல்லாம் இல்ல பாலாஜி... ஜெனிலியா மோடில் அனிதா! பிக்பாஸ் – நாள் 43

ஷிவானிக்குக் கோபம் வரும் சமயத்தில் மட்டும்தான் வீட்டு வேலை செய்வார் போலிருக்கிறது. பாலாஜி சொன்னதுக்கு உள்ளுக்குள் கோபித்துக் கொண்டு கிச்சனில் போய் வெங்காயம் வெட்ட ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 43

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் வீட்டில் இன்று சில தரமான சம்பவங்கள் நடைபெற்றன. பிக்பாஸ் அண்ணாச்சி கல்லாப்பெட்டியைப் பார்த்துக் கொண்டே உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்தி்ருந்திருப்பார்.

இன்றைய நிகழ்ச்சியின் மூலம் ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் உறுதியாகியது. "பெண் போட்டியாளர்கள் இல்லாமல் ஆண்களை மட்டும் வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால் என்னவாகும்?” என்று நான் பல சமயங்களில் யோசித்துப் பார்ப்பேன். ம்ஹூம்... ஒரே நாளில் ஊத்தி மூட வேண்டியதுதான். அதுவே பெண் போட்டியாளர்களை மட்டும் வைத்து நடத்தினால் எப்படியாவது ஒரு வருடத்திற்கு சமாளித்து விடலாம்.

இந்த உலகம் இயங்குவதின் ஆதார சக்தி பெண் என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியும் உறுதிப்படுத்துகிறது.

ஓகே... 43-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

42-ம் நாளின் இரவு. இந்த நாமினேஷன் விளையாட்டின் மூலம் வீட்டில் புதிய மாற்றங்கள் நடக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். என் எதிர்பார்ப்பை அனிதா ஏமாற்றவில்லை. விழாவை செவ்வனே நடத்திக் கொடுத்தார். ‘அனிதா தன்னை நாமினேட் செய்திருக்கலாம்’ என்று ரியோவும் சோமுவும் சந்தேகத்தின் பேரில் சொல்லியிருந்தார்கள்... அல்லவா? அதில் அனிதாவிற்கு வருத்தம் போல.

இத்தனை நாட்களாக அனிதாவின் செய்கைகளை ஒருமாதிரி சமாளித்துக் கொண்டிருந்த சோம், கடந்த ஒரு வாரமாக அனிதாவுடன் நெருங்காமல் அர்ச்சனா குழுவின் நிழலில் பாதுகாப்பாக சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவருக்கு மனது கேட்கவில்லை.

அமைதியாக படுக்கையில் இருந்த அனிதாவை அணுகி “நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்டி” என்று நட்பை சோம் ரினியூவல் செய்ய ஆரம்பிக்க, தன்னுடைய விளையாட்டு பொம்மை மீண்டும் கிடைத்து விட்டதில் அனிதாவிற்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஆனால் அதை உடனே ஒப்புக் கொண்டால் அவரின் கெத்து என்னாவது? சில பல பிகுவிற்குப் பிறகு ‘சரி ஒழிஞ்சு போ’ என்று பழம் விட்டார்.

அவரின் அடுத்த டார்கெட் ரியோ. சோம் மாதிரி அவர் விளையாட்டு பொம்மை இல்லை. பீச் குதிரை. ஏறிப்பார்க்க ஆசையாக இருந்தாலும் கீழே தள்ளிவிட்டு விடுமோ என்று பயமாகவும் இருக்கும். எனவே "ரியோ வந்து என்கிட்ட பேசவேயில்ல பார்த்தியா” என்று அனத்திக் கொண்டிருந்தார்.

தங்களின் அடிமை மீண்டும் அந்தப் பக்கம் போகிறதோ என்று அர்ச்சனாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது. (கமல் அறிமுகம் செய்த புத்தகங்களில் ஒன்று ‘அடிமையின் காதல்’ என்கிற விஷயம் இப்போது தொடர்பில்லாமல் நினைவிற்கு வருகிறது). அர்ச்சனாவின் சந்தேகம் கோபமாக மாறி ‘இவனை அப்பவே மிதிச்சிருந்தா... அவ ரியோ பக்கம் வந்திருக்க மாட்டா... அப்படி ஓரமா போய் படு’ என்று சோமை இடது கையால் அணுகியவுடன் ‘சப்ஜெக்ட் கிட்ட ஏதோ அசைவு தெரியுது’ என்பது மாதிரி சோமிற்கும் இப்போது மெலிதான கோபம் எழ, எழுந்து போய் விட்டார். ‘போட்டும் விடு. அப்பத்தான் புத்தி வரும்’ என்று அர்ச்சனை செய்தார் அர்ச்சனா.

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

‘கெஞ்சினா மிஞ்சுறாங்க. மிஞ்சினா கெஞ்சறாங்க’ என்று அனிதாவின் பிரத்யேக குணாதிசயங்களைப் பற்றி ரமேஷிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ரியோ. "ஆமாம்... அப்படி அனத்தி அனத்தியே நாமதான் தப்பு செஞ்சுட்டமோன்ற மாதிரி ஃபீல் பண்ண வெச்சு ஒரு ஸாரியை வாங்கிடுவாங்க. இதை இப்படியே விட்றக்கூடாது. அப்புறம் சாரி சொல்லிட்டே அலைய வேண்டியதுதான்" என்பது போல் கெத்தாக பேசினார் ரமேஷ். மிக அரிதாகப் பேசினாலும் ரமேஷ் சமயங்களில் சரியாகவே பேசி விடுகிறார். (மிக்ஸர் பாக்கெட்டாக இருந்தாலும் அதிலும் சமயங்களில் முந்திரி கிடைப்பதில்லையா?!)

"இந்த சோமு பய அனிதாவோட ஃப்ரெண்டுதானே. உன்னைப் பத்தி அவகிட்ட ஒரு நல்ல வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா... இவனுக்காக நாம எவ்ளோ செஞ்சிருக்கோம். ஊரே இவனை பொம்மை–ன்னு சொல்லி கிண்டல் பண்ணப்ப... அது வெறும் பொம்மையில்லை. ரிமோட் பொம்மை–ன்னு நாம ப்ரூவ் பண்ணியிருக்கோம்… இப்ப பேட்டரி தீர்ந்துடுச்சா–ன்னு தெரியல. மறுபடியும் அந்தப் பக்கம் போகுது" என்பது போல் ரியோவிடம் பிறகு அனத்திக் கொண்டிருந்தார் அர்ச்சனா.

இதர போட்டியாளர்களுக்குத் திருஷ்டி சுத்தி போடுவது, தினமும் இரவில் விபூதி வைப்பது போன்ற செயல்களின் மூலம் ‘மூக்குத்தி அம்மன்’ கேரக்டராக மாறி மக்களின் அன்பைப் பெறும் உத்தியை அர்ச்சனா கைக்கொள்கிறாரா? அல்லது அது தனது டீம் மீதுள்ள உண்மையான அன்பா என்று தெரியவில்லை.

இரவு நேரம். அனிதாவை நெருங்கிச் சென்று சோம் சமாதானம் ஆனது போல், இப்போது சோமை நெருங்கி சமாதானம் செய்ய முயன்றார் அர்ச்சனா. இதற்காகவே காத்திருந்தது போல சோமும் இருந்தார். ஏற்கெனவே விபூதி அடித்தது போல் சுற்றிக் கொண்டிருக்கும் சோமிற்கு அர்ச்சனா விபூதி பூசி விட்டுச் செல்ல... நள்ளிரவு, நல்லிரவாக முடிந்தது.

43-ம் நாள் விடிந்தது. நடனம் என்கிற பெயரில் வழக்கம் போல் சுச்சி சாமியாட ஆரம்பிக்க ‘யம்மா... பூச்சாண்டி’ என்பது போல் நாம்தான் அலற வேண்டியிருந்தது. இயற்கையின் காவலரான ரம்யா சமர்த்தாக செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். (அந்த வெள்ளை ஃப்ரேம் கண்ணாடியை அவாய்ட் பண்ணுங்க ஸ்வப்னா. உங்க அழகைக் கெடுக்குது!).

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

பாதியில் திரும்பி வந்த போதிதர்மர் மாதிரி உடம்பில் போர்வையைச் சுற்றிக் கொண்டு படுக்கையில் அம்போவென்று அமர்ந்திருந்தார் அனிதா. அவரைச் சுற்றி ‘ஏண்டி... கதை கேளேன்’ என்று வம்பு பேசும் பாட்டிகள் மாதிரி அமர்ந்திருந்தார்கள் சனமும் சுச்சியும். ‘இந்த சோமுப்பயலை ஒருவழியா செட்டில் பண்ணியாச்சு. ஆனா ரியோ பய கைல சிக்க மாட்டேன்றான்’ என்பது போல் அனிதா சொல்ல, ‘அதெல்லாம் காரியம் நல்லபடியா முடியும் தாயி. நீ மூக்கைச் சிந்தி முடிக்காத காரியம் இந்த உலகத்துல உண்டா?' என்பது போல் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் சனம்.

கார்டன் ஏரியாவில் லாந்திக் கொண்டிருந்த ரியோவை நெருங்கிய அனிதா "அஞ்சு நிமிஷம் பேசலாமா?” என்று கேட்க "அய்யோ... சனி திசை நமக்கு பாத்ரூம் டோர் வழியா வருதே" என்று நினைத்துக் கொண்டாரோ... என்னவோ... ‘"கிச்சனுக்கு எந்த வழியா போகணும்?" என்று கேட்டு அது காட்டப்பட்டவுடன், "அங்க எனக்கு வேலையில்ல... நான் இந்தப் பக்கம் போறேன்" என்பது போல் வேறு திசையில் சென்று எஸ்கேப் ஆகிவிட்டார் ரியோ.

"யப்பாடா... தப்பிச்சோம்டா சாமி... அஞ்சு நிமிஷம் பேசணுமாமே... அஞ்சு நிமிஷம்னா அனிதாவோட டிக்ஷனரில அது அஞ்சு மணி நேரமாச்சுதே" என்பது அவரின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்.

கிச்சன் ஏரியா. தோசைக்காக பாலாஜியும் சுச்சியும் காத்துக் கொண்டிருந்தார்கள். பாலாஜி ஏற்கெனவே ஒன்றை மொக்கி விட்டு அடுத்ததற்காக காத்துக் கொண்டிருந்தார். ‘எனக்கு.. எனக்கு...’ என்று அவர் வாய் விட்டு கேட்டும், அர்ச்சனா தோசையை சுச்சி தட்டில் போட பாலாஜிக்கு கோபம் வந்து விட்டது. எழுந்து சென்று விட்டார். சுச்சிக்கு வழக்கம் போல் நண்டு மண்டையைப் பிறாண்டியது ‘என்னாலதானா, என்னாலதானா?’ என்று இந்தியன் தாத்தா போல அவர் கதற ஆரம்பித்து ‘நான் நகைச்சுவைக்குத்தானே சொன்னேன்’ என்று அனத்த ஆரம்பித்தார்.

அப்போது அர்ச்சனா சொன்ன ஒரு வசனம் பிக்பாஸையே திகைக்க வைத்திருக்கும். "சுச்சி... சுச்சி... கிச்சன் ஏரியால சண்டை நடந்தா எனக்குப் பிடிக்காது”. ரத்த பூமியை சுத்த பூமியாக அர்ச்சனா சித்திரிக்க முயல்வது அபாண்டமானது.

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

இன்று முழுவதும் அனிதாவின் கண்ணிலேயே பட்டு விடக்கூடாது என்பதற்காக ரியோ மிகவும் மெனக்கெட்டார் போலிருக்கிறது. சோமிடமிருந்து கீரைக் கட்டை வலுக்கட்டாயமாக பிடுங்கி சமையல் கட்டில் உட்கார்ந்து பிரிக்க ஆரம்பித்து விட்டார். இதை அவர்கள் கிண்டலாக பேசிக் கொண்டிருக்கவும் அனிதா அந்தப் பக்கமாக உலவிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. “யம்மாடி... கீரை உடம்புக்கு நல்லது–ன்னு சொல்லுவாங்க. உண்மைதான் போலிருக்கு. இன்னிக்கு கீரையாலதான் என் உடம்பு தப்பிச்சது" என்பது ரியோவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்."

அடுத்ததாக நாமினேஷன் சடங்கு. ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடக்கும் வில்லங்கமான வைபவம். இந்த நாளைப் பொறுத்துதான் மக்கள் அம்பியாகவோ, ரெமோவாகவோ, அந்நியனாகவோ மாறுவார்கள்.

இன்று நடந்த நாமினேஷனில் சுச்சிதான் முதலிடத்திற்கு வந்தார். வந்த நாளில் இருந்தே அவர் இதர போட்டியாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ‘இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலைடா நாராயணா’ என்பது போல் பெரும்பாலான பார்வையாளர்களும் அவரைப் பற்றி நினைக்கிறார்கள்.

சுச்சி ஒரு காலத்தில் புகழ்பெற்ற ஆர்ஜேவாக இருந்தவர். பாடகர், எழுத்தாளர், சமையல் கலை அறிந்தவர் என்று பல திறமைகளைக் கொண்டவர். ஆனால் தன் தனித்தன்மையை இங்கு வெளிப்படுத்தாமல் பாலாஜியின் நிழலாக தொடர்வது பரிதாபமாக இருக்கிறது.

நாமினேஷன் ஹிட்லிஸ்ட்டில் அடுத்த இடத்தைப் பெற்றவர் அனிதா. ஏற்கெனவே சொன்னதுதான். அனிதாவிற்காக எதிர்க் காரணங்களை விளக்கவே வேண்டியதில்லை. அனிதா என்கிற பெயரே போதும். எளிதில் உணர்ச்சிவசப்படுவது, தான் நினைப்பது மட்டுமே சரி என்று வீம்பு செய்வது, தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மண்டையை உடைத்துக் கொள்வது, மூக்கைச் சிந்தி காரியம் முடிக்க நினைப்பது என்று பல அடிப்படையான பிரச்னைகள் அவரிடம் உள்ளன. இதை கமல் உட்பட பலரும் சுட்டிக் காட்டியும் அவர் துளியும் தன்னை மாற்றிக் கொள்வதாக இல்லை. தான் பேசுவதைத் தடுத்தால், பிக்பாஸையே நாமினேட் செய்கிற அளவிற்குக் கொலைவெறியில் இருக்கிறார்.

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

நாமினேட் வரிசையில் சொல்லப்பட்ட காரணங்கள் சில சுவாரஸ்யமாக இருந்தன. ‘நான் –சின்க்’ என்று சுச்சிக்குக் காரணம் சொன்னார் ரமேஷ். ‘சிடுமூஞ்சி மேக்ஸ்’ என்கிற வசீகரமான பட்டப்பெயரை அனிதாவிற்குச் சூட்டி மகிழ்ந்தார் சாம். (இது தனக்கானது என்று அறியாமல் பிறகு அனிதாவே விழுந்து விழுந்து சிரித்ததுதான் காலக்கொடுமை). ‘காதல் கண்ணை மறைக்குது’ என்கிற காரணத்தைச் சொல்லி பாலாவை நாமினேட் செய்தார் ஆரி. "‘வெளில யாரு தூண்டி விட்டாங்க’ என்று கமல் கேட்ட போது ஷிவானியின் பெயரை பாலாஜி சொல்லவில்லை. அவர் விளையாட்டில் இருந்து விலகி கொண்டிருக்கிறார்" என்று அதற்கு விளக்கம் அளித்தார் ஆரி.

உள்ளே சொல்லப்பட்ட காரணங்களை பிக்பாஸ் வெளியே கசியவிட மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஆனால், பாலாஜி மட்டும் சூடாகி விட்டார். ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல அவரே தன்னை காட்டிக் கொள்ளும் வகையில் குதிக்க ஆரம்பித்து விட்டார். அவர் சும்மா இருந்திருக்கலாம். ஆனால், அப்படி சும்மாவும் பாலாஜியால் இருக்க முடியாது என்பதுதான் அவரது குணாதிசயம். ‘எவனாவது காதல் கீதல்னு சொன்னீங்கன்னா... நடக்கறதே வேற... அதுக்கா இங்க வந்திருக்கிறோம்... கிறுக்குப்பசங்க’ என்பது போல் அவர் சபையில் எகிற ரியோவிற்கு மண்டையில் ‘சுர்’ என்றது. “ஏன் சோமை கூட யாராவது சொல்லியிருக்கலாம்" என்று அர்ச்சனா சொன்னது சரியானது.

ஆக... இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் – சுச்சி, அனிதா, ஆரி, சோம், சாம், பாலா மற்றும் ரியோ.

“ஏன் அதை உங்களுக்குன்னு எடுத்துக்கறீங்க. ஏன் எங்களுக்கெல்லாம் காதல் வராதா? நாங்கள்லாம் லவ் பண்ண மாட்டோமா. வாங்கடா காதல் பண்ணலாம்!" என்று சனம் ஜாலியாக கூவ ஆரம்பித்துவிட்டார். அதென்னமோ இன்று சனம் உற்சாக மனநிலையில் இருந்தார். ‘நான் சின்க்’ என்கிற பட்டத்தை தானே வாங்கி சூட்டிக் கொண்டார். “என்னது. நான் நாமினேஷன் லிஸ்ட்ல இல்லையா?” என்று அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. (நமக்கும்தான்)

சனமிடம் அனத்திவிட்டு தன் படுக்கையறையின் அருகில் வந்த பாலாஜி, தன்னிச்சையாக விசிலடித்த பாட்டு எது என்பதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. ‘ஓஹோ... சனம்... ஓஹோ சனம்’ என்கிற பாட்டைத்தான் அவரது மனம் விசிலடித்துக் கொண்டிருந்தது. (அப்ப 'குஷி' பார்ட்-2 கன்ஃபர்ம்).

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

‘வெளில போனவுடனே முதல் வேலையா இந்த எபிசோடை பார்த்து ‘காதல் கண்ணை மறைக்குது’ன்னு சொன்னது யாருன்னு கண்டுபிடிக்கணும்’ என்று ஆஜித் ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்தார். தான் இயல்பாக சொன்னதொரு காரணத்தை பிக்பாஸ் வெளியில் போட்டுக் கொடுத்து விடுவார் என்றோ, அது பெரிய சர்ச்சையாகும் என்றோ ஆரி எதிர்பார்த்திருக்க மாட்டார்.

"விஷயம் தெரிஞ்சா இந்தக் கிறுக்கன் என்ன பண்ணுவான்னு தெரியலையே” என்று பாலாஜி பக்கத்திலேயே பீதியுடன் உலவிக் கொண்டிருந்தார் ஆரி. போதாதற்கு பாலாவின் படுக்கை பக்கத்தில்தான் ஆரியின் படுக்கையும். சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். ‘சரி அடிவாங்கறதுக்கு தயாரா இருப்போம்’ என்பது போல் கிச்சன் சேரை எடுத்து எக்சர்சைஸ் செய்தார். தன் காலை தானே பிடித்து தாலாட்டி யோகா செய்தார். ஆரியின் நிலைமை பாவம்.

“நாம பேசறதையெல்லாம் ஒரு மணி நேரம் கேட்டா... கேட்டவன் கிறுக்கனாயிடுவான். அப்புறம் கண்ணாடியை பார்த்து தன் மூஞ்சில தானே காறித் துப்பிப்பான்" என்பது போல் சுயபகடி செய்து கொண்டே பாலாஜி செல்ல ‘ஆஹ்ஹா’ என்று வழக்கம் போல் சிரித்துக் கொண்டு பின்னாலேயே போனார் ஷிவானி.

பாலாஜி சொன்னதை அரையும் குறையுமாக கேட்ட ரியோ கோபத்தில் பாத்ரூம் கதவை எட்டி உதைத்துக் கொண்டு போக மக்கள் பதறிக் கொண்டு ஓடிவந்தார்கள். ‘இது லவ் மேட்டராத்தான் இருக்கணும்... இருங்கடா நானும் வர்றேன்’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் கூட்டத்துடன் இணைந்து ஓடுவார். அதே போல் பாசிப்பருப்பு சாம்பாரை பாதிலேயே போட்டுவிட்டு அனிதாவும் வேடிக்கை பார்க்க ஆவலாக ஓடி வந்தார்.

ஆரியைப் போலவே ரியோவிற்கும் ‘பாலாஜி கை நீட்டி விடுவானோ’ என்கிற அச்சம் உள்ளுக்குள் இருந்தது போல. எனவேதான் பாலாஜி சொன்னது ‘காதக் கிழிச்சிருவேன்’ என்பதாக அவருக்குக் கேட்டு இருக்கலாம். ‘இத்தனை தண்டியா இருக்கான். அடிச்சுருவானோ’ என்று வேல்முருகன் வெளிப்படையாகவே பயந்து கொண்டிருந்தார். ஆனால் ஆரியும் ரியோவும் உள்ளுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல.

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

‘காதக் கிழிச்சிருவேன்னு பாலாஜி சொல்றான். அனிதா அனத்தலைக் கேட்டு கேட்டு ஒரு பக்கம் காது ஏற்கெனவே போயிடுச்சு. இன்னொன்னும் போனா நான் என்னதான் பண்ணுவேன்’ என்பது போல் இன்று முழுக்க புலம்பிக் கொண்டிருந்தார் ரியோ. பிறகு ஆஜித்திடமும் சென்று அவர் புலம்ப, ‘சின்னப்பையன் நான் என்னடா செய்வேன்’ என்பது மாதிரியே ஆஜித்தின் நிலைமையும் இருந்தது. இரண்டு அணிகளுக்கு இடையே அல்லாடிக் கொண்டிருந்தார்.

‘'என்னைப் பத்தி தனியா எது வேணா சொல்லுங்க... ஏத்துக்கறேன்... ஆனா இதுல இன்னொரு பேரும் சம்பந்தப்படுது'’ என்பதுதான் பாலாஜியின் கோபமாம். ஷிவானியின் பெயர் கெடும் என்று பாலாஜி உண்மையாகவே நினைத்திருந்தால் அவரிடம் தனியாக விவாதித்துவிட்டு பிறகு சபையில் தன் ஆட்சேபத்தை நிதானமான முறையில் எடுத்து வைத்திருக்கலாம். அதை விட்டு ‘நானேதான் எங்கும் முன்னால் நிற்பேன்’ என்று கத்திக் கொண்டிருந்தால் எப்படி?

‘யப்பா. எங்களுக்கும் வெக்கம் வேலாயுதம். சூடு சூலாயுதம்லாம் இருக்கு. காதல் வந்தா நாங்களே சொல்லுவோம்’ என்று ரியோவின் கோபத்திற்கு எதிர்வினையாக கார்டன் ஏரியாவில் கத்திக் கொண்டிருந்தார் பாலாஜி. ‘நானும் எதையாவது போட்டு உடைக்கட்டுமா’ என்று அவர் கேட்டபோது பிக்பாஸிற்கு உள்ளுக்குள் திக்கென்று ஆகியிருக்கும். ‘சண்டையை வாயில போடுங்கடா. ஏற்கெனவே கார்பென்டர் பில் செட்டில் பண்ணாம பாக்கி நிக்குது’.

சுச்சி மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டார். ‘பாலாஜி... நீ சொன்னதுல நியாயம் இருக்கு’ என்று அவர் மறுபடியும் பாலாஜியின் பக்கம் சாய்ந்த போது நமக்குத்தான் இப்போது பாயைப் பிறாண்ட வேண்டும் போல் இருந்தது. முடியல!

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

‘ஓம் சாந்தி!’ என்று ஜபித்தபடி, கோபத்தை அடக்க மணி உருட்டிக் கொண்டிருந்த பாலாஜி, பிறகு ஷிவானியை நோக்கி “நீ ஓகேதானே... காதல் வந்தா நானா சொல்றேன். புரியுதா... ஆனா வராது...” என்றவுடன் ஷிவானியின் கண்களில் 'இவன் என்ன நம்மளை இப்படி டீல் பண்றான்' என்கிற சிறிய எரிச்சல் தெரிந்தது. "நாம ஃபிரெண்ட்ஸ்ஸாதானே பழகறோம்.. இவனுக ஏன் இப்படிப் பேசறாங்க” என்று பாலாஜி சொல்ல ‘அதானே?’ என்றார் ஷிவானி பலவீனமாக.

ஷிவானிக்குக் கோபம் வரும் சமயத்தில் மட்டும்தான் வீட்டு வேலை செய்வார் போலிருக்கிறது. பாலாஜி சொன்னதுக்கு உள்ளுக்குள் கோபித்துக் கொண்டு கிச்சனில் போய் வெங்காயம் வெட்ட ஆரம்பித்து விட்டார்.

இதற்கிடையில் ‘சிடுமூஞ்சி மேக்ஸ்’ என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு பாட்டெழுத ஆரம்பித்து விட்டார் சுச்சி. ஏதோ வாலியும் வைரமுத்துவும் இணைந்து விவாதிப்பதைப் போல சுச்சியும் பாலாவும் பாடல் வரிகளை இணைந்து யோசித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒண்ணுமில்ல. வண்டின்னு சொன்னா. அடுத்து கிண்டின்னு சொல்வாங்க... அவ்ளோதான் மேட்டர்.

‘ஓ... இதைப் பாட்டாவே பாடிட்டீங்களா... இந்த மாதிரி வரலாற்றுச் சம்பவம் நடக்கறப்ப என்னையும் கூப்பிடுங்கப்பா... நானும் சாட்சியா இருக்கேன். வரலாறு முக்கியம்’ என்பது போல் ஓடிவந்து இணைந்து கொண்டார் சனம். சுச்சியும் பாலாஜியும் இதை ராப் பாடலாகப் பாட அதற்கு நடனமாடினார் சனம். பக்கத்திலிருந்த ஆரி, சனத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார். பாலாஜியை கூல் பண்ண ட்ரை பண்றாராம்.

பாலாஜியும் ஷிவானியும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘நீ பாட்டுக்கு ஜாலியா பாட்டு பாடிட்டு இருக்கே... நானும் தனியாப் பேசலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'' என்ற ஷிவானி வெங்காயம் வெட்டும் போது கையில் ஒரு துளி ரத்தம் வந்ததை போகிற போக்கில் சொல்வது போன்ற பாவனையுடன் அண்டர்லைன் செய்து அழுத்தமாக சொல்ல ‘என்னது ரத்தம் வந்துச்சா?’ என்று அந்தப் பக்கம் டபுள்ஆக்ட்டில் இறங்கினார் பாலாஜி.

‘நான் ரத்தம் சிந்தினதை தெரிஞ்சிக்கிறதை விடவும் உனக்கு ராப் பாட்டு முக்கியமா...’ என்பது போல ஷிவானி கோபப்பட்டார். பாலாஜி இப்போது கீழே இறங்கி வருவார் என்பது அவரின் நோக்கம் போல.

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

ஆனால் பாலாஜியோ ‘சரி... இனிமே டிஸ்டர்ப் பண்ணாத’ என்று சர்காஸ்டிக்காக சொல்லி விலகிச் சென்றார். இரு பறவைகளும் வெவ்வேறு திசையில் பறக்க ஆரம்பித்தன. பாலாஜி ஷிவானியுடம் வந்து மீண்டும் கெஞ்சி பேசப் போகும் காட்சியை மறுபடி பார்க்கத்தான் போகிறோம். என்னவொன்று, சோமைப் போல் அல்லாமல் பாலாஜி கெத்தாக கெஞ்சுவார். அவ்வளவுதான் வித்தியாசம்.

பாலாஜி உண்மையாகவே தன் காதைக் கிழித்து விடுவாரோ என்கிற அச்சம் ரியோவிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது போல. பாலாஜியுடன் நேராக அமர்ந்து பிரச்னையை முடித்துவிட்டார். ‘நான் அப்படிச் சொல்லலை’ என்று பாலாஜி சொன்னவுடன் ‘அப்ப தப்பு என் மேலதான்... ஸாரி’ என்று ராஜதந்திரத்துடன் எழுந்து விட்டார் ரியோ.

ஆண்களின் இடையே நடக்கும் சண்டைகள் இப்படித்தான். ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. ‘சரி வா மச்சி… சரக்கடிக்கப் போலாம்’ என்று உலக யுத்தத்தையே ஒரமாக வைத்து விட்டு உடனே சமாதானமாகி விடுவார்கள். சிறிய விஷயத்தைக்கூட அழகான திரைக்கதையாக்கி பல நாட்கள் இழுக்கும் பெண்களின் திறமை இவர்களிடம் கிடையவே கிடையாது.

‘இந்த ரியோ பய காலைல இருந்து டபாய்ஞ்சுக்கிட்டே இருக்கானே’ என்கிற வெறுப்பில் அமர்ந்திருந்த அனிதாவை கூல் செய்ய பிக்பாஸ் நினைத்தாரோ என்னமோ... வாக்குமூல அறைக்கு அழைத்தார். சுச்சியின் ஆவி இப்போது அனிதாவிற்குள் புகுந்து விட்டதோ... என்னமோ! வீடே திகைத்துப் போகும் அளவிற்குப் படுக்கையில் நின்று குதியாட்டம் போட்டார் அனிதா.

‘கன்னுக்குட்டி’ என்று அழைக்கப்படுவதாலோ என்னமோ, தாய் மாட்டை நோக்கி ஓடும் கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக்குதித்து பிக்பாஸ் அறைக்குச் சென்ற அனிதா, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஜெனிலியாவே வாயடைத்துப் போகும்படி கிறுக்குத்தனமாக மண்டையை ஆட்டி தன் அன்பைத் தெரிவித்தார். பிக்பாஸ் இது போல் நிறைய கிறுக்குத்தனங்களை தனியறையில் பார்த்திருப்பார். எனவே அலட்டிக் கொள்ளாமல் டாஸ்க் லெட்டரை சபையில் படிக்கச் சொன்னார்.

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

‘சிரிச்சா சீரு கொள்ளாது... அழுதா ஆறு கொள்ளாது’ என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு சரியான உதாரணம் அனிதாதான். இன்னமும் ஜெனிலியா மோடிலிருந்து வெளியே வராமல் மண்டையை ஆட்டி ஆட்டி அவர் ‘டாஸ்க் லெட்டரை’ படித்ததை ஆஜித்தே கிண்டல் செய்யும் அளவிற்கு ஆகிவிட்டது நிலைமை.

வீட்டில் நிகழ்வதை அப்படியே காப்பியடித்து டாஸ்க்காக மாற்றுவதுதான் பிக்பாஸின் ஸ்டைல் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். ‘பஞ்ச் தந்திரம்’ இந்த டாஸ்க்கும் அப்படியே. மக்கள் நாமினேஷனுக்காக சொன்ன காரணங்களை சபையில் போட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல், இப்போது டாஸ்க் ஆகவும் மாற்றிவிட்டார். திரைப்படங்களில் வந்த பிரபலமான நகைச்சுவை வசனங்களை போட்டியாளர்களுக்குப் பொருத்த வேண்டும்.

‘நான் ஜெயிலுக்குப் போறேன்...’ என்கிற வசனத்தை சுச்சிக்கு கொடுத்தார் அர்ச்சனா. (பொருத்தமான சாய்ஸ்). ‘சும்மாவே இருக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா’ என்பதற்கு ரமேஷை விட்டால் வேறு சாய்ஸே கிடையாது. எனவே பாலாஜியின் இந்தத் தேர்வு மிகப் பொருத்தமானது.

‘பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மென்ட் வீக்’ டயலாக்கை சோமிற்கு கொடுத்தார் ரியோ. உண்மையில் இது ரியோவிற்கே பொருத்தமானது. இதைப் போலவே ‘என்னை திருவாரூர் பார்ட்டில கூப்ட்டாக... என் கெரகம்’ என்கிற டயலாக், ஷிவானிக்கே பொருத்தமானது. ஆனால் அதை அவர் சனத்திற்குக் கொடுத்தார். அதுவும் பொருத்தமே.

‘இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலை. நாராயணா’ டயலாக்கை நிஷாவிற்கு அளித்தார் சோம். பாதுகாப்பான சாய்ஸ். ஆனால் இதற்கு சுச்சிதான் சகல விதத்திலும் பொருத்தமானவர். ‘இவ்ளோ கலாட்டாக்கு நடுவுல மிக்சர் சாப்பிடறான்’ என்கிற டயலாக் ரமேஷிற்குப் பொருத்தமானது. ஆனால் இதை சோமிற்கு தந்து பழிவாங்கினார் அனிதா. ‘உலக நடிப்புடா சாமி’ வசனத்தை சாமிற்கு தந்து மகிழ்ந்தார் சுச்சி.

பிக்பாஸ் – நாள் 43
பிக்பாஸ் – நாள் 43

இருப்பதிலேயே அட்டகாசமானது ‘தாய்க்கிழவி... நீளமா பேசாத. மூச்சு வாங்கும்’ என்கிற டயலாக். இதை ரியோ வாசித்தபோது ஒட்டுமொத்த வீடே அனிதாவைத் திரும்பிப் பார்த்து சிரித்தது. எனவே அனிதா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘வொய் திஸ் கொலவெறி’ என்கிற ‘சூப் கேர்ள்’ பாடலை ஷிவானி க்ரூப் வெளியில் பாடிக் கொண்டிருந்தது அருமையான சூழ்நிலை பாடல். கூடவே ரம்யாவும் சாமும் இணைந்து ஆடிக் கொண்டிருந்தார்கள்.

அனிதாவின் கையில் நாளையாவது ரியோ சிக்குவாரா? தனக்கு அளிக்கப்பட்ட ‘தாய்க்கிழவி’ பட்டத்தைச் சிரித்துக் கொண்டே இப்போது பெற்றுக் கொண்டாலும் தன் வழக்கப்படி பிறகு புதிய பஞ்சாயத்தை அனிதா கூட்டுவாரா?

இந்த அதிமுக்கியமான விஷயங்களையெல்லாம் அறிந்து கொள்ள நாளைய நிகழ்ச்சியைப் பார்ப்போம்.