Published:Updated:

அனிதாவின் பாசிப்பருப்பு வெடிகள், ரியோவுக்கு விழுந்த அடிகள், அர்ச்சனாவின் வலிகள்! பிக்பாஸ் – நாள் 59

பிக்பாஸ் – நாள் 59

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த டாஸ்க்கை ‘தரமான சம்பவமாக’ பயன்படுத்திக் கொண்ட அனிதாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். மற்றவர்களைப் போல் ஒருவரையொருவர் மயிலிறகால் தடவிக் கொண்ட போலித்தனத்தை அனிதா செய்யவில்லை. பாராட்டுக்கள்! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 59

Published:Updated:

அனிதாவின் பாசிப்பருப்பு வெடிகள், ரியோவுக்கு விழுந்த அடிகள், அர்ச்சனாவின் வலிகள்! பிக்பாஸ் – நாள் 59

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த டாஸ்க்கை ‘தரமான சம்பவமாக’ பயன்படுத்திக் கொண்ட அனிதாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். மற்றவர்களைப் போல் ஒருவரையொருவர் மயிலிறகால் தடவிக் கொண்ட போலித்தனத்தை அனிதா செய்யவில்லை. பாராட்டுக்கள்! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 59

பிக்பாஸ் – நாள் 59
கால்சென்டர் டாஸ்க்கில் இன்று ரியோவை அனிதா பாசிப்பருப்பு சாம்பாராக போட்டு தாளி்த்து விட்டார். அடிவெளுத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி’ என்று ரியோ உள்ளுக்குள் கதறியிருக்கக்கூடும். பெரும்பாலோனோர் இந்த விளையாட்டை ‘லுலுவாயாக’ விளையாட, அர்ச்சனா, ரம்யா, பாலாஜி (ஒருவகையில்), அனிதா போன்றவர்கள்தான் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும்.

கால்சென்டர் டாஸ்க் முடிந்ததும் பிக்பாஸ் விட்டு விடுவார் என்று பார்த்தால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் வைத்தார். "சில சவாலான திருப்பங்கள் இனிதான் நடைபெற உள்ளன’' என்கிற நேற்றைய வாய்ஸ் ஓவர் அறிவிப்பிற்கான பொருள் இன்றுதான் புரிந்தது.

ஓகே... 59வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘ஜித்து ஜில்லாடி’ என்கிற பாட்டை போட்டு மக்களை எழுப்பி விட்டார் பிக்பாஸ். "எதற்காக இந்தப் பாட்டைப் போட்டார்?” என்று யோசித்து மேட்ச் செய்ய முயன்றேன். இந்தப் பாடலில் விஜய்யின் கூலிங்கிளாஸ் நிறம் மாறிக் கொண்டேயிருப்பதைப் போல பிக்பாஸ் மனிதர்களும் அடிக்கடி நிறம் மாறுகிறார்கள் என்பதை குறிப்பதற்காக இருக்குமோ? (எப்பூடி?!).

பிக்பாஸ் – நாள் 59
பிக்பாஸ் – நாள் 59

மார்னிங் டாஸ்க் என்கிற ரோதனையை நீண்ட நாள் விட்டு வைத்திருந்தார்கள். ஃபுட்டேஜ் போதவில்லையோ. என்னமோ, இன்று மறுபடியும் காண்பித்தார்கள். ‘குமாரு’ என்கிற சொல்லை சோம் விதவிதமாக சொல்லிக் காட்ட வேண்டுமாம். பரவாயில்லை, சோம் நன்றாகவே சமாளித்தார். ரம்யாவை இவர் சற்று நெருக்கமாக கிண்டலடித்தும் அவர் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டார்.

ஆனால், அர்ச்சனாவும் சனமும் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. ‘Bossy குமாரு’ என்று உற்சாகமாக கேபி கூவினதற்கு அர்ச்சனா கோபித்துக் கொண்டார். அதை உணர்ந்த கேபி ‘அர்ச்சனா மன்னிச்சிடுங்க’ என்று பிறகு சொன்ன போது ‘ஓகே...’ என்பது மாதிரி தலையசைத்த அர்ச்சனா, பிறகு நீண்ட நேரத்திற்கு உம்மென்று இருந்தார். ரியோவும் நிஷாவும் இதற்குப் பதறிப் போனார்கள். "நீங்க ஃபீல் ஆனா... நானும் ஃபீல் ஆவேன்க்கா...” என்று உருகினார் நிஷா. ஏனோ இந்த ஜோடியைப் பார்த்தால் தமிழ்நாட்டின் தலையாய தோழியர் ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை.

கேபி மன்னிப்பு கேட்டும் அன்பின் வடிவமான அர்ச்சனாவால் அந்தச் சிறிய பெண்ணை மன்னிக்க முடியவில்லை. (‘அன்பு ஜெயிக்கும்-னு நம்பறியா... நம்ப மாட்டேன்’). தன்னுடைய டீம் மெம்பர்களை, அர்ச்சனா ஏறத்தாழ அடிமைகள் போல் நடத்துவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ‘வாயை மூடு வேலு’ என்று கத்தி கத்தியே... ஒருவர் பாவம் வெளியே சென்று விட்டார். ‘Bossy’ என்கிற வார்த்தை அர்ச்சனாவை கோபப்படுத்துகிறது என்றால் அதில் உண்மை இருக்கிறது என்றே பொருள்.

இதன் மூலம் தெரிய வருகிற உண்மை என்னவெனில், அந்த டீமிற்குள் கேபிக்கு அர்ச்சனா இன்னமும் அட்மிஷன் போடவில்லை. ஏனெனில் இதையே அவரது டீமைச் சேர்ந்த யாராவது சொல்லி கிண்டல் செய்திருந்தால் அர்ச்சனாவிற்கு இத்தனை கோபம் வந்திருக்காது.

இந்த ‘மொக்கை குமாரு’ டாஸ்க் தொடர்பாக இன்னொரு பஞ்சாயத்தும் நடந்தது. ‘தன்னிடம் flirt செய்ய வேண்டும்; தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்’ என்கிற விளையாட்டை சோம் சனத்திடம் செய்யச் சொன்னார். டாஸ்க்கின் போது இதை இயல்பாகச் செய்து விட்ட சனம், பிறகு தனது வழக்கமான ‘டியூப்லைட்’ பாணியில் கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். ‘நான் அந்த மாதிரியெல்லாம் இங்க செஞ்சிருக்கேனா? என்னை அவமானப்படுத்திட்டே. மக்கள் அப்படித்தான் என்னை நினைச்சிப்பாங்க’ என்று ‘அனிதா’ மோடிற்கு மாறி அனத்தத் துவங்க, முழு சரணாகதி அடைந்து ‘மன்னிச்சிடுங்க’ என்றார் சோம். (பயந்துட்டியா குமாரு!?).

பிக்பாஸ் – நாள் 59
பிக்பாஸ் – நாள் 59

'‘கால் சென்டர் டாஸ்க்ல இவங்க சேஃப் கேம் விளையாடறாங்க’' என்கிற உண்மையை பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா. ‘வேர்க்கடலை சாப்பிடறவங்க எல்லாம் ஜெயிக்கக்கூடாது’ என்று பாலாஜி சொல்ல ‘அவங்களைத்தானே மக்கள் தொடர்ந்து ஜெயிக்க வைக்கறாங்க’ என்று ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீதும் தைரியமாக பழிசுமத்தினார் அனிதா. (உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்குங்க அனிதா!).

கால் சென்டர் டாஸ்க் தொடர்ந்தது. ஷிவானி Vs ரம்யா என்கிற சுவாரஸ்யமில்லாத ஜோடி. “நீங்கதானே ரம்யா... நீங்கதானே ஷிவானி" என்று மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் நீண்ட வருடம் கழித்து சந்தித்ததைப் போன்று இருவரும் பேசிக் கொண்டார்கள். "ரம்யா… பாண்டியன். கிச்சன்ல நீங்க வெட்டுவீங்க ஆனியன்" என்று ஷிவானி அடித்த ஜோக்கை கேட்டால் ‘பழைய ஜோக்' தங்கதுரையே செம காண்டாகியிருப்பார்.

‘நான் எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பேன்’ என்று பெருமையடித்துக் கொண்ட ரம்யா, ‘இந்த 13 பேர்ல ரெண்டு பேரை நாமினேட் பண்ணணும்’ என்கிற கேள்விக்கு ‘ஆரி மற்றும் ஆஜீத்’ பெயரைக் குறிப்பிட்டார். செல்லத் தம்பியாக இருந்தாலும் ஆஜீத்தின் பெயரைக் குறிப்பிட்டு கடமை வீரராக இருந்த ரம்யாவிற்கு பாராட்டு. "இறுதி நிலையில் யார் யாரெல்லாம் வருவார்கள்?” என்கிற கேள்விக்கு "நான், பாலா, சோம், ரியோ, ஷிவானி" என்று ரம்யா சொன்னபோது தராசு முள் கன்னாபின்னாவென்று தடுமாறியது. இறுதிப் போட்டிக்கு சோம் மற்றும் ஷிவானிக்குத் தகுதியே இல்லை என்று ரம்யாவிற்கு நன்றாகவேத் தெரியும். என்றாலும் ஷிவானியின் பெயரை ஏன் சொல்ல வேண்டும்? அங்குதான் ஸ்வப்னாவின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டது.

'ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே... காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே’ என்கிற பாட்டு மாதிரியே சிரித்து சிரித்துப் பேசினாலும் சுற்றி வளைத்து வேண்டுகோள் வைத்து ஷிவானியை போனை வைக்க வைத்து விட்டார் ரம்யா. இதன் மூலம் அடுத்த வாரமும் ஷிவானி நாமினேட் ஆவார். (இந்த வாரம் தவற விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம்).

பிக்பாஸ் – நாள் 59
பிக்பாஸ் – நாள் 59

அடுத்து ஆரம்பித்தது அந்த ஆக்ரோஷமான போட்டி. பாலாஜிக்கும் ஆரிக்கும் உரையாடல் துவங்கிய போதும் கூட இப்படித்தான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதில் ஆரிக்குப் பதில் அளிக்க சந்தர்ப்பமே அளிக்கப்படாததால் அது ஒன்சைட் கேமாக போய்விட்டது. எனவே இதைத்தான் உண்மையில் ‘ஆக்ரோஷமான’ போட்டி என்று சொல்ல வேண்டும்.

‘என் பிரதர் மார்க் அங்க இருக்காரா?’ என்று ஜோவியலாக ஆரம்பித்தாலும் போகப் போக பட்டையைக் கிளப்பினார் அனிதா. மெல்ல மெல்ல சூடு ஏற்றிக் கொண்டே சென்ற இந்த உரையாடலில் ரியோ தன் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறியது வெளிப்படையாகத் தெரிந்தது. இதுவே டாஸ்க் அல்லாமல் இருந்தால் நிச்சயம் வெடித்திருப்பார்.

‘முதல்வன்’ திரைப்படத்தில் அர்ஜூன் vs ரகுவரன் இன்டர்வியூ காட்சியின் இன்னொரு வெர்ஷன் என்று இதைச் சொல்லலாம். (சற்று ஓவர்தான். பொறுத்துக் கொள்ளுங்கள்). ஆனால் திரைப்படத்தில் இவர்தான் ஹீரோ... இவர்தான் வில்லன் என்கிற துல்லியமான வரையறை இருந்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் அப்படிப் பிரிக்க முடியாது. எல்லோரிடமும் இரண்டும் கலந்தே இருக்கிறது.

அனிதாவின் ‘Rapid fire’ கேள்விகளை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி ‘பயபுள்ள நம்மள மிஞ்சிடும் போலிருக்கே’ என்று உள்ளூற நினைத்துக் கொண்டிருக்கலாம். ஷிவானிக்கு போர் அடிக்க ஆரம்பித்ததோ என்னவோ கண்ணை மூடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். தன் செல்லத்தம்பி ரியோ அனிதாவால் வறுக்கப்படுவதை உம்மென்ற முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் நிஷா. "தலைவலி மாத்திரைல்லாம் போட்டுக்கிட்டீங்களா?” என்று கேள்வி நேரம் ஆரம்பிப்பதற்கு முன்பே ரியோவை ஜாலியாக எச்சரித்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 59
பிக்பாஸ் – நாள் 59

அனிதாவிடம் உள்ள ஓர் அடிப்படையான பிரச்னை, அவர் பேசும் போது யாராவது குறுக்கே பேசி விட்டால் அவருக்குக் கொலைவெறி வந்துவிடும். அதே சமயத்தில் அவர் எப்போது பேசி முடிப்பார் என்பது அவருக்கே தெரியாது. அதுவரை காத்திருக்கும் பொறுமையும் எதிராளிக்கு போய் விடும். எனவே எப்படி செயல்பட்டாலும் எதிரே இருப்பவர் ‘பாசிப்பருப்பு சாம்பாராக’ கொதிக்க வைக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

"நான் சொல்றதை கரெக்ட்டா புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்லுங்க" என்று கண்டிப்பான குரலில் அனிதா இடைமறிக்கும் போதெல்லாம் ரியோவின் முகம் மாறியது. போன சீசனில் நடந்த விஷயத்தையெல்லாம் அனிதா தூசு தட்டி எடுத்து வந்ததைப் பார்க்கும் போது அவருக்கு நிகழும் சிறு விஷயங்களைக் கூட அவர் மறக்கவோ, மன்னிக்கவோ தயாராக இல்லை என்று தோன்றுகிறது.

அனிதா கேட்ட கேள்விகளைப் பற்றிய விவரங்களை எல்லாம் எழுதினால் இந்தக் கட்டுரை பத்து பாகங்களாக நீளும். எனவே சம்பந்தப்பட்ட காட்சியைப் பார்த்து இன்புறவும். எடிட் செய்யப்பட்ட காட்சி நேரத்திலேயே இந்த உரையாடல் இருபது நிமிடங்களுக்கும் மேலாக நீளுகிறது என்றால் எடிட் செய்யப்படாத வடிவத்தைப் பார்த்தவர்கள் நிச்சயம் பாயைப் பிறாண்டியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

குண்டு அடிபட்டு வீழும் ரகுவரன் ‘that was a good interview’ என்று இறுதியில் வாக்குமூலம் தருவது போல, அடிபட்ட முகத்துடன் வெளியே வந்த ரியோ ‘good call’ என்று அனிதாவை வெறுப்புடன் பாராட்டினார்.

"உன்னை Poke பண்ண மாதிரி எதுவும் பேசலைன்னு அனிதா சொன்னா" என்று சோம் இந்த உரையாடலைப் பற்றி விசாரித்த போது ‘எதே’ என்ற முகபாவத்தைக் காட்டிய ரியோ, "ஹீரோ இமேஜ்... தேவையில்லாத ஆணின்னு நெறய விஷயங்களைக் கேட்டு அசிங்கப்படுத்திட்டா மச்சான்'’ என்று புலம்பும் ரேஞ்சிற்கு சென்றார்.

"என்னுடைய பதில்கள் திருப்தி அளித்ததா?" என்று கால்சென்டர் ஊழியர் ரியோ கேட்டபோது, "பல பதில்கள் திருப்தி அளிக்கலை... இருந்தாலும் பொறுமையா பதில் சொன்னதுக்கு நன்றி" என்றபடி தானே போனை வைத்து விட்டார் அனிதா. இதனால் அடுத்த வாரம் அவர் நாமினேஷன் ஆவார். "நானே விட்டுக்கொடுக்கலாம்னுதான் முதல்ல நினைச்சிட்டு இருந்தேன்" என்று ஆஜித்திடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரியோ. ஆனால் அனிதாவின் ராவடிகளைப் பார்த்தவுடன் மனம் மாறியிருக்க வேண்டும்.

பிக்பாஸ் – நாள் 59
பிக்பாஸ் – நாள் 59
ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த டாஸ்க்கை ‘தரமான சம்பவமாக’ பயன்படுத்திக் கொண்ட அனிதாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். மற்றவர்களைப் போல் ஒருவரையொருவர் மயிலிறகால் தடவிக் கொண்ட போலித்தனத்தை அனிதா செய்யவில்லை. பாராட்டுக்கள்!

கால் சென்டர் டாஸ்க்கில் அடுத்த ஜோடி ரமேஷ் vs நிஷா. சீரியஸ் காட்சி முடிந்த பிறகு பார்வையாளர்களை இளைப்பாற வைக்க காமெடி டிராக் ஒன்றை போடுவார்கள் அல்லவா? அப்படியே இந்த உரையாடல் நடந்தது.

‘நீங்க வெறும் தாஸா... இல்ல லாடு லபக்கு தாஸா’ என்கிற காமெடி மாதிரி ‘நீங்க வெறும் நிஷாவா... அறந்தாங்கி நிஷாவா’ என்கிற பயங்கரமான காமெடியுடன் (?!) உரையாடலைத் துவக்கினார் ரமேஷ். இவர் பார்வையாளர்களுக்குத்தான் மிக அமைதியான, டல்லான ஆசாமியாக தோற்றமளிக்கிறார். ஆனால் அவர் நிஷாவிடம் மட்டும் நிறைய குறும்புகளை, ஜோக்குகளை அள்ளித் தெறிக்கிறார் போலிருக்கிறது. இவை நமக்கு காட்டப்படுவதில்லை. நிஷாவின் எதிர்வினைகளில் இருந்து ரமேஷ் ஒரு பயங்கரமான குசும்பு ஆசாமி என்பதை உணர முடிகிறது. ‘அய்யோ... இவன் கிட்டயா மாட்டினோம்’ என்பது மாதிரியே நிறைய இடங்களில் ஜாலியாக சிரித்து பதறிக் கொண்டிருந்தார் நிஷா.

அனிதாவாவது போன சீசனில் விவகாரத்தை கையில் எடுத்தார். ஆனால் ரமேஷோ, முதல் சீஸனில் நடந்த விஷயத்தையெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார். ‘Eviction free கார்டை’ ரமேஷிடமிருந்து நிஷா ஜாலியாக பிடுங்கியதெல்லாம் சென்ற நூற்றாண்டில் நடந்த சம்பவம். ஏதோ பேச வேண்டுமே என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. சண்டை போட வைக்கலாம் என்று பிளான் செய்த பிக்பாஸின் மூக்கைத்தான் இவர்கள் நன்கு உடைத்தார்கள்.

‘Nomination topple card’ஐ நிஷா தவறவிட்ட விவகாரத்தை மீண்டும் ரமேஷ் கிளப்பிய போது "அதற்காக நான் ரொம்ப ஃபீல் பண்றேன்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் நிஷா. "டாஸ்க் வரும் போது ரியோவை தம்பி என்றெல்லாம் நெனைக்க மாட்டேன். போட்டியாளராகத்தான் பார்ப்பேன்" என்றெல்லாம் அள்ளிவிட்ட நிஷா, ரமேஷ் வற்புறுத்தியதால், "சின்ன விஷயங்களுக்கு கூட அதிகமா குழப்பிப்பான்" என்கிற காரணத்தைச் சொல்லி ரியோவை (லுலுலாய்க்கு) நாமினேட் செய்தார்.

பிக்பாஸ் – நாள் 59
பிக்பாஸ் – நாள் 59

நிஷா சிணுங்கி சிணுங்கி பதில் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்து சுற்றியிருந்தோர் அமைதியாக வெடித்து சிரித்தார்கள். ‘ஒரு பாட்டு பாட்றி’ என்று தேவர்மகன் சிவாஜி மாதிரி ரமேஷ் கேட்க, அதற்கு சூப்பர் சிங்கர் ராஜலஷ்மி மாதிரி ஒரு நாட்டுப்புற பாடலை நிஷா எடுத்து விட, அது நாட்டுப்புற பாடலாக அல்லாமல் காட்டுத்தனமாக இருந்ததால், "மேடம்... நாங்க எல்லோரும் வேணா நாமினேட் ஆயிடறோம். நீங்க பாட்டு மட்டும் பாடாதீங்க" என்று சுற்றி வந்து அவர்கள் வேண்டிக் கொள்ள நிஷாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பாடத் துவங்கிய அடுத்த நிமிடமே ‘போதும் நிறுத்துங்க’ என்று சொல்லி ரமேஷூம் பங்கப்படுத்தினார்.

இவர்களின் காமெடி ராவடியைக் கண்ட ஆரி தரையில் படுத்தே விட்டார். ஆனால் கிளுகிளுப்பிலும் ரணகளமாக வீட்டின் உள்ளே ஒரு காட்சி ஓடிக் கொண்டிருந்தது. பாலாஜி ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருக்க, அவருக்கு பழத்தை ஊட்டிக் கொண்டிருந்தார் ஷிவானி. (மனுஷன் வாழறான்யா!).

"நிஷாக்கா நிச்சயம் ரமேஷிற்கு விட்டுக் கொடுத்துவாங்க'’ என்று காலையிலேயே அனிதா ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்படியே ஆயிற்று. தானே போனை வைத்து அடுத்த வார நாமினேஷில் இடம் பெற்றார் நிஷாக்கா. (மக்களை சந்திச்சிட்டு வாங்கக்ககா... ஆனா வந்துடுவீங்களாக்கா?!)

ஆக... ஒருவழியாக இந்த கால்சென்ட்ர் டாஸ்க் இத்துடன் நிறைவடைந்தது. மக்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது "கிச்சன்ல குப்பை அடைச்சிக்கிச்சு... போக மாட்டேங்குது" என்கிற புகாருடன் வந்தார் அனிதா. வீட்டில் நாம் சாதாரணமாகச் சரி செய்யும் விஷயம் இது. போலவே சிங்க்கில் குப்பையைப் போடக் கூடாது என்கிற அடிப்படையான விஷயம் கைகழுவுகிறவர்களுக்கும் தெரிய வேண்டும். சட்டையை மடித்துக் கொண்டு ரியோ கிளம்பியதைப் பார்த்தால் அதைச் சரி செய்ய போவது மாதிரிதான் தெரிந்தது.

பிக்பாஸ் – நாள் 59
பிக்பாஸ் – நாள் 59

அப்பாடா! கால்சென்டர் டாஸ்க் முடிந்ததே என்று மக்கள் கால் நீட்டி நிம்மதியாக அமரும் சமயத்தில் அதில் ஒரு ட்விஸ்ட்டை வைத்தார் பிக்பாஸ். இந்த டாஸ்க்கை நன்றாக கையாண்டவர் முதல் சுமாராக கையாண்டவர்கள் வரை 1 முதல் 13 வரை வரிசைப்படுத்த வேண்டும். இதை அவர்களே கூடி கலந்துரையாடி முடிவு செய்ய வேண்டும். ('அடிச்சிக்கிட்டு சாவுங்கடா' என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாம்).

முன்பெல்லாம் எந்தக் கலந்துரையாடலாக இருந்தாலும் பொதுவாக சுரேஷ்தான் தலைமை தாங்குவார். (இதையே eviction free card டாஸ்க்கிலும் ஒரு உத்தியாக அவர் பயன்படுத்தினார்). இப்போது இந்த இடத்தில் ஆரி வந்து அமர்ந்திருக்கிறார். குழப்பமான கலந்துரையாடலை கோர்வைப்படுத்தி ஒருங்கிணைக்க ஒரு புத்திசாலி தேவைப்படுகிறார். அந்த இடத்திற்கு ஆரி பொருத்தமானவர்தான்.

"எந்தெந்த காரணிகளின் அடிப்படையில் சிறந்த போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பது? அதை முதலில் வரையறுத்துக் கொள்வோம்" என்கிற சரியான கோணத்தில் உரையாடலை ஆரம்பித்த ஆரி, "கேள்வி கேட்பவர், பஸ்ஸர் அடிக்கும் வரை நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதை எடுத்துக் கொள்ளலாமா?" என்று ஆரம்பித்தார். (ஆனால் இப்படிச் செய்தவர் குறைவுதான்).

"இல்லை. தங்களின் ஸ்மார்ட்டான பேச்சினால் உரையாடலை சீக்கிரம் முடித்து வைத்ததையும் ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாம்" என்று சோமை உதாரணம் காட்டி ரம்யா ஒரு பாயின்ட் சொன்னார். இங்கு இடைமறித்த பாலாஜி, "அடிப்படையில் இந்த டாஸ்க் பதில் சொல்பவர்களுக்குத்தான் அதிக சோதனையானது. அவர்கள்தான் அதிகப்பொறுமையுடன் பதில் சொல்ல வேண்டும். எனவே அதைத்தான் முதன்மையான காரணியாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். இது மிகச்சரியான கோணம்.

“ஆங்... நீ அப்படி பேசினதால சொல்றியா?” என்று அபத்தமாக இடைமறித்தார் ரியோ. “ஆனா... பாலாஜி தம்பி... நீ எனக்கு பதில் சொல்ல சந்தர்ப்பமே தரலையே" என்று சரியாக பாலாஜியை இடைமறித்தார் ஆரி. "உரையாடலின் உள்ளடக்கம் எப்படி இருந்தது?" என்பதையும் பார்க்க வேண்டும் என்று அர்ச்சனா சொன்ன பாயின்ட்டும் சரியானது.

பிக்பாஸ் – நாள் 59
பிக்பாஸ் – நாள் 59

"பதில் சொன்னவரின் பொறுமை, கேள்வி கேட்டவரின் திறமை, உரையாடலின் உள்ளடக்கம்'’ போன்றவற்றை எடுத்துக் கொள்வோம் என்று இதைத் தொகுத்துத் தந்தார் ஆரி. இதில் போங்காட்டம் ஆடியவர்களை நிச்சயம் கணக்கில் எடுக்க வேண்டும் என்று ஆரி சொன்ன போது பெரும்பாலோனோர் ஆமோதித்தனர். பாலாஜியும் இதை வழிமொழிந்தார்.

ரம்யாவிற்கும் ரமேஷிற்கும் நடந்த உரையாடலைப் பற்றிய ஆலோசனை நடந்த போது சனத்திற்கும் ரமேஷிற்கும் இடையில் அப்போது முட்டிக் கொண்டது. "என்னைப் பேச விடாமல் தடுக்க ரமேஷிற்கு உரிமை கிடையாது" என்று சனம் தனது உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த போது ‘சட்’டென்று நிகழ்ச்சியை நிறுத்திய பிக்பாஸ் ‘நாளைக்கு வந்து பாருங்க’ என்று கிளம்பி விட்டார்.

இந்த கால்சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களாக பாலாஜி, ஆரி, அர்ச்சனா, அனிதா, ரியோ, ரம்யா, சனம் ஆகியோர்களைச் சொல்ல முடியும். இதர போட்டியாளர்கள் ஒருவரையொருவர் வலிக்காமல் அடித்தது மாதிரி நடித்தது போல்தான்பட்டது. முதல் இடத்திற்கு ஆரியைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் அவர் வாங்கிய அடி அப்படி. கப்பு அவருக்குத்தான்!