Published:Updated:

"என் பொண்ணு வர்ற வரை பார்த்துக்கலாமா?"- அனிதா சம்பத் என்ட்ரியை பக்கத்து வீட்டில் பார்த்த தந்தை!

அனிதா சம்பத்
அனிதா சம்பத்

போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாள் நிகழ்ச்சியை, அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி. சம்பத் வீட்டில் டிவி இல்லாததால் பக்கத்து வீட்டில் பார்த்திருக்கிறார்.

பிக்பாஸ் நான்காவது சீசன் கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. ஷிவானி, சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத் என ஆளாளுக்கு சர்ச்சை கிளப்பும் வகையில் பேசுவதும், சேனல் அந்தப் பேச்சுகளை 'ப்ரோமா'வாக்கி எதிர்பார்ப்புகளை எகிற வைப்பதுமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அந்த முதல் நாள் நிகழ்ச்சியை, அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் வீட்டில் டிவி இல்லாததால் பக்கத்து வீட்டு டிவியில் பார்த்திருக்கிறார்.

அனிதா சம்பத்
அனிதா சம்பத்

"அனிதா வரும் வரை பார்த்துக் கொள்கிறேன்"என‌ பக்கத்து வீட்டுக்காரரிடம் அனுமதி வாங்கிப் பார்த்தது குறித்து சம்பத்திடம் கேட்டேன்.

"எனக்குச் சொந்த ஊர் திருவாரூர் பக்கத்துல ஒரு கிராமம். ஆனா குடும்பம் இப்ப சென்னையில இருக்கு. நான் மட்டும் அப்பப்ப சொந்த ஊருக்குப் போறதும் வர்றதுமா இருந்துட்டிருக்கேன். ஊர்ல போனா வந்தா மட்டுமே தங்குறதால அங்க இருக்கிற வீட்டுல டிவி கிடையாது.

சில முக்கியமான வேலைகள் இருந்ததால, கொரோனா லாக் டௌன் தொடங்குறதுக்கு முன்னாடி தற்செயலா ஊருக்குப் போயிருந்தேன். அங்க போன அடுத்த சில நாட்கள்ல ஊரடங்கு போட்டுட்டதால, சென்னை திரும்ப முடியாம அங்கேயே இருந்துட்டேன்.

பிக் பாஸ் ஷோ பத்தின பேச்சு தொடங்கினப்பவே, கூப்பிடறாங்கப்பானு சொல்லிட்டிருந்தா என் பொண்ணு. எந்த முடிவையும் தெளிவா எடுக்கிற பொண்ணுங்கிறதால, 'எது சரின்னு தோணுதோ அதைப் பண்னும்மா'னு சொன்னேன்.

பிக்பாஸ் அனிதா சம்பத்
பிக்பாஸ் அனிதா சம்பத்

முதல் நாள் ஷோவுல என் பெயரையெல்லாம் கமல் சார்கிட்டச் சொல்லுவான்னு எனக்குத் தெரியாது. 'பிக் பாஸ்' வீட்டுக்குள் நுழையற அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆசையாத்தான் இருந்தது.

எங்க ஊர் கிராமம்கிறதால, அங்க சீரியல்களைத்தான் விரும்பிப் பார்ப்பாங்க. அதனால என்ன செய்யறதுன்னு யோசிச்சு, தயங்கித் தயங்கித்தான் என் பக்கத்து வீட்டுகாரங்ககிட்ட, 'என் பொண்ணு டிவியில வர்றாளாம்; கொஞ்ச நேரம் பார்த்துக்கலாமா'னு கேக்கலாம்னு போனேன். நல்லவேளையா அவங்களும் அப்ப பிக்பாஸ் நிகழ்ச்சியைத்தான் பார்க்கப் போறதாச் சொன்னாங்க.

பாஸ்மதியா பாத்ரூமா? ரியோ v சுரேஷ்; சென்டிமென்ட் நிஷா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 8

சரினு உட்கார்ந்து சரியா என் பொண்ணு வர்ற வரைக்கும் பார்த்தேன். ஷோவுல கமல் சார்கிட்ட என் பெயரை அவ சொன்னப்ப, என்னை அறியாம என் கண்ணுல தண்ணி வந்திடுச்சு.

என் பக்கத்து வீட்டுக்காரர், இருந்து முடியற வரைக்கும் பார்த்துட்டுப் போங்கனு வற்புறுத்தினார். ஆனாலும் என் பொண்ணு வர்ற வரைக்கும் பார்த்துட்டுக் கிளம்பிட்டேன்" என்றார் சம்பத்.

அடுத்த கட்டுரைக்கு