Published:Updated:

வேட்டையாடு வெறியோடு மோடில் அனிதா, ஷிவானியோடு மோதும் பாலாஜி, டிஆர்பி சண்டையில் ஆரி! பிக்பாஸ் – 78

பிக்பாஸ் – நாள் 78

அன்பு கேங்கை காலி செய்து பார்வையாளர்களிடம் நல்ல பேரை சம்பாதித்துக் கொண்டு வந்த அனிதா, தனது கோபத்தால் மீண்டும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டார் என்று தோன்றுகிறது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 78

Published:Updated:

வேட்டையாடு வெறியோடு மோடில் அனிதா, ஷிவானியோடு மோதும் பாலாஜி, டிஆர்பி சண்டையில் ஆரி! பிக்பாஸ் – 78

அன்பு கேங்கை காலி செய்து பார்வையாளர்களிடம் நல்ல பேரை சம்பாதித்துக் கொண்டு வந்த அனிதா, தனது கோபத்தால் மீண்டும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டார் என்று தோன்றுகிறது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 78

பிக்பாஸ் – நாள் 78
போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையக் குறைய வீட்டின் உக்கிரம் கூடிக் கொண்டே போகிறது. பாலாஜியும் ஷிவானியும்கூட இப்போது சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். சந்திரமுகியாக மாறிய அனிதாவின் ஆவேசம் இன்று மிகவும் கூடிவிட்டது. பல்லைக்கடித்துக் கொண்டு ஆரியை எச்சரித்தார் அனிதா.

இந்தப் பஞ்சாயத்தைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். ஆரி என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக கேட்காமலேயே ‘என் குடும்ப உறுப்பினர்களை இழுக்காதீர்கள்’ என்று அனிதா ஆவேசப்பட்டது முறையானதாகத் தெரியவில்லை. இதையே அர்ச்சனா இருந்த போதும் அனிதா கணவரின் பெயரைச் சொல்லி நகைச்சுவையாக சில விஷயங்களைச் செய்தார். அதற்கு அனிதா ஆட்சேபம் தெரிவிக்காதது மட்டுமல்லாமல் அந்தக் கிண்டலை ரசிக்கவும் செய்தார். ஆனால் ஆரியுடன் இருக்கும் கசப்பு மற்றும் முன்விரோதம் காரணமாக, அவர் சொல்வதை ஆத்திரத்துடன் தடுப்பதுதான் அனிதாவிற்கு முதன்மையாகத் தெரிந்திருக்கிறது.

இதைப் போலவே அனிதாவின் கடுமையான ஆட்சேபத்தினால் ஆரியும் இந்தக் காரணத்தை விட்டு விட்டு வேறு காரணங்களைத் தேடியிருக்கலாம். இத்தனைக்கும் அதுவொரு fun taskதான். விடாப்பிடியாக அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தார் ஆரி. (இந்த விஷயத்தை ரம்யா பிறகு சுட்டிக் காட்டியது சிறப்பு).

பிக்பாஸ் – நாள் 78
பிக்பாஸ் – நாள் 78

ஆனால் ஆரியும் அனிதாவும் மறுபடியும் ஒன்றாக அமர்ந்து ரியோவைப் பற்றி புறணி பேசப் போகும் காட்சியை விரைவில் பார்க்கத்தான் போகிறோம்.

ஓகே... 78-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்க்கலாம்.

பழைய ‘பில்லா’ படத்திலிருந்து ‘வெத்தலையைப் போட்டேன்டி’ பாடலை ஒலிபரப்பினார்கள். இந்த வார லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய குறிப்பு ஏதாவது இந்தப் பாடல் வரிகளில் ஒளிந்துள்ளதோ?! (btw.. ‘பில்லா’ படத்தை நினைவுகூரும் ஓர் அற்புதமான கட்டுரை ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரால் விகடன் தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வாசிக்கத் தவறாதீர்கள். (யாரு சொன்னா? தேவாவே சொன்னான் மோமென்ட்!).

அதென்னமோ இன்று ஷிவானி நடனம் ஆடாமல் ‘உர்’ரென்று நின்று கொண்டிருந்ததிலேயே ஏதோ அபசகுனம் தட்டியது. அது பின்னர் உறுதியாயிற்று.

"‘சாம்பார்’ல கால்எழுத்து வருமா... சம்பார்’ன்னு எழுதணுமா?” என்று அடுப்பை ஏற்றிக் கொண்டு கிச்சன் ஏரியாவில் புது மருமகள் மாதிரி சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் அனிதா. வீட்டில் இருந்து அர்ச்சனா இதைப் பார்த்துக் கொண்டிருந்தால் ‘நான் இல்லாத அருமை இப்போது தெரியுதா’ என்று நமட்டுச் சிரிப்பு சிரித்திருக்கலாம்.

"இல்லை... ‘சம்போர்’ன்னு எழுதறதுதான் சரி" என்று அனிதாவின் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்த கேபி, "எனக்குள்ள ஒரு மல்லிகா பத்ரிநாத் ஒளிஞ்சிருக்கிற விஷயம் எனக்கே இப்போதான் தெரியுது" என்று பெருமை பீற்றிக் கொள்ள, "சுடுதண்ணியே வெக்கத் தெரியாத உங்கிட்ட கூட சமையல் பத்தி சந்தேகம் கேக்க ஆள் இருக்குது" என்று ரியோ கிண்டலடித்தார்.

"இல்ல... எங்க பழக்கப்படி சம்பார்ன்னுதான் எழுதுவோம். அதான் கேட்டேன்" என்று சமாளித்தார் அனிதா. பெண்கள் தங்கள் சமையலில் இருக்கும் குறைகளை மழுப்ப பின்பற்றும் ஆயுதங்களில் ஒன்று இதுதான்... "எங்க பக்கத்துலலாம் இப்படித்தான் செய்வோம்."

பிக்பாஸ் – நாள் 78
பிக்பாஸ் – நாள் 78

கேப்டன் ஆன பிறகாவது பாலாஜிக்குப் பொறுப்பு வரும் என்று பார்த்தால்... இன்னமும் குறும்புகள் கூடிக் கொண்டே போகின்றன. ஷிவானியின் சாக்லேட்டுகளில் சிலதை பாலாஜியோ அல்லது ஆஜித்தோ எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. "கொடுங்கடா திருட்டுப்பசங்களா... இல்லாட்டி நான் கத்துவேன்" என்று ஹைடெஸிபலில் ஷிவானி கத்த எங்கள் வீட்டு ஸ்பீக்கர் டபக்கென்று கீழே உருண்டது.

‘குழந்தைங்க, வயசானவங்க, இதயப் பிரச்சினையுள்ளவங்க, கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பலவீனமானவர்கள்... இதைக் கேட்காதீர்கள்’ என்று எச்சரிக்கை அறிவிப்பு செய்து விட்டாவது ஷிவானி கத்தியிருக்கலாம். பார்வையாளர்களுக்கே அதைக் கேட்டு காதில் ரத்தம் வரும் போது அதே வீட்டில் இருக்கும் அனிதாவிற்கு ஆட்சேபம் எழாதா என்ன?

"கத்தாதீங்க... எனக்கு தலை சுத்துது" என்று ஆட்சேபம் தெரிவிக்க "அது அவங்க ஹெல்த் கண்டிஷன். நான் என்ன பண்றது?” என்று விட்டேற்றியாக பதில் சொன்னார் ஷிவானி. ‘மலேசிய நிஷாவை’ கொண்டு வாங்க என்று உசுப்பேற்றி நிஷாவை வெளியே அனுப்பியதைப் போல ஷிவானியையும் பாராட்டுவதின் மூலம் அவரை இந்த வாரம் வெளியே அனுப்ப கமல் முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது.

இதர விஷயங்கள் கூட பெண்களுக்குக் கேட்காது. ஆனால் தன்னைப் பற்றிய வம்பு என்றால் மிகச் சரியாக கேட்டு விடும். அதைப் போலவே ஷிவானியின் அலட்சியமான கமென்ட்டை கேட்ட அனிதா, சாம்பாரை பாதியிலேயே விட்டு விட்டு படுக்கையில் படுத்துவிட்டார். பிறகு ஷிவானியின் கூச்சலைப் பற்றி கேப்டனிடம் புகார் செய்ய, பாலாஜியோ... "அதாவது, அது வந்து... அவங்க என்ன சொல்றாங்கன்னா..." என்று புது கணவன் போல் ஷிவானியிடம் பம்மிக் கொண்டே இதைச் சொன்னார்.

பிறகு ஷிவானியும் அனிதாவும் நேரடியாகப் பேசி பரஸ்பர பிறாண்டலுடன் சாரி கேட்ட அந்த அழகு இருக்கிறதே! Purely a girl thing! பெண்களுக்கு மட்டுமே வரும் உடல்மொழி பிறாண்டல் அது.

‘தப்பு செய்யறது எனக்குப் பிடிக்காது... ஆனா செய்யறது நானா இருந்தா ஓகே’ என்பது போல் பார்த்திபன் ஒரு படத்தில் வசனம் பேசுவார். இதைப் போல, கத்துவதைப் பற்றி அனிதா ஆட்சேபிப்பது ஒரு முரண்தான்.
பிக்பாஸ் – நாள் 78
பிக்பாஸ் – நாள் 78

திங்கட்கிழமை. எனவே நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. கேப்டன் பாலாஜியை நாமினேட் செய்ய முடியாது. அன்பு கேங் சிதறுண்டதைப் போலவே பாலாஜி குரூப்பும் சிதைய ஆரம்பித்திருக்கிறது. ஷிவானி, ஆஜித்தின் பெயர் அதிகம் அடிபட்டது. எதிர் பக்கம் கேபியின் பெயர் சில முறை சொல்லப்பட்டது. ஆனால் ஒன்று... இந்த முறை கூட ‘அன்பு கேங்’ தன் அணியில் ஒருவரையும் நாமினேட் செய்யவில்லை. அத்தனை கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள்.

ஆக... இந்த வார எவிக்ஷன் பிராசஸ் பட்டியலில் நாமினேட் ஆனவர்கள்: ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித் மற்றும் கேபி. தன் பெயர் இல்லாததைக் கண்டு வழக்கம் போல் ரியோ ஆச்சர்யமடைந்தார். தனிக்காட்டு ராஜாவான ஆரி தன் பெயர் முதலிலேயே வரும் என்பதை சரியாக யூகித்து அது நிஜமானவுடன் ‘ஹே’ என்று பெருமிதம் அடைந்தார்.

"நாமினேஷன் பிராசஸ் முடிவடைந்தது. உங்கள் அன்றாட வேலைகளைப் பார்க்கலாம்" என்றார் பிக்பாஸ். (என்னாத்த வேலை இருக்கு?!) பிக்பாஸின் அறிவிப்பிற்குப் பதில் சொல்லும் விதமாக "உங்களை எப்போ பார்க்கலாம்?” என்று ரம்யா கேட்டது ‘க்யூட்’. தனது ஹைடெஸிபல் கூக்குரலின் மூலம் ரம்யாவின் குறும்பைப் பாராட்டினார் ஷிவானி.

‘நாங்க நாலு பேர்... எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது’ என்கிற ‘காக்க காக்க’ வசனம் போல... ரியோ, சோம், கேபி ஆகிய மூவரும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள். கேபியின் பெயர் இந்த வாரம் நாமினேட் ஆகியிருப்பதால், "நீ இந்த வாரம் போயிடுவல்ல.. எங்க வீட்ல இந்த தகவலைச் சொல்லிடறியா?” என்று ரியோவும் சோமுவும் இணைந்து கிண்டல் செய்து கொண்டிருக்க ‘ஹாங்’ என்று சிணுங்கினார் கேபி.

பிக்பாஸ் – நாள் 78
பிக்பாஸ் – நாள் 78

வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் ஒரு புதிய கலவரம் உருவாக ஆரம்பித்தது. லெமன், முட்டை வரிசையில் இந்த முறை பால். கோப்பைகளில் பாலை ஊற்றும்படி ஷிவானியிடம் கேபி கேட்டுக் கொண்டார் போலிருக்கிறது. கேப்டன் ஆன கெத்தோடு, ரேஷனை கண்காணிக்கும் நோக்கில் ஷிவானியின் செய்கையில் பாலாஜி தலையிட அம்மணிக்கு கோபம் வந்து விட்டது. "கேட்டாங்க... பால் ஊத்த வந்தேன். நான் என்னமோ பாலை எக்ஸ்ட்ராவா ஊத்தின மாதிரி கணக்கு கேட்டா” என்று கோபித்துக் கொண்ட ஷிவானி வெளிநடப்பு செய்து விட்டார்.

'வேலை செய்யறவனுக்கு வேலை கொடு... வேலை செய்யாதவனுக்கு ஃபேனைப் போடு’ என்றொரு நடைமுறை பழமொழி பணியிடங்களில் நீண்ட காலமாக உலவுகிறது. சிலர் தங்கள் வேலையை மட்டுமல்லாமல் பொது வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் செய்வார்கள். அவர்களுக்கே அதிக வேலைகள் சொல்லப்படும். ஆனால், வேறு சிலர் தங்கள் பணி மட்டுமில்லாது எந்த வேலையையும் செய்யாமல் கள்ள மெளனத்துடன் ஓதுங்கியிருப்பார்கள். அப்படியே வேலை சொல்லப்பட்டாலும் அதில் குளறுபடி செய்வார்கள். ‘இவங்க கிட்ட சொல்றதை நாமளே செய்துடலாம்’ என்று ஆர்வத்துடன் வேலை செய்பவர்கள் இவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஏறத்தாழ ஷிவானியும் இந்த கேட்டகிரிதான்.

"தன்னுடைய விளையாட்டு பொம்மையான பாலாஜி, கேப்டன் ஆன திமிறில் தன்னையே கேள்வி கேட்பதா?” என்று ஷிவானிக்கு கோபம் வந்து விட்டது. பாலாஜியிடம் உள்ள ஒரு சிறப்பு என்னவெனில், ‘அன்பு கேங்’ மாதிரி தன் அணி செய்யும் தவறுகளை ஸ்பாட்டில் அப்படியே மறைத்து பூசி விடாமல் அங்கேயே கேள்வி கேட்டு விடுவார். இதன் மூலம் அவர் ‘குரூப்பிஸம்’ பழகாதவர் என்கிற இமேஜ் கிடைத்து விடும்.

ஆனால் புது கணவன் போல ஷிவானியிடம் தனியாகச் சென்று கெஞ்சி மன்னிப்பு கேட்டு விடுவார். இப்போதும் அதுவே நடந்தது. ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்ட பிறகு பரஸ்பரம் பாவனையாக ‘சாரி’ சொல்லிக் கொண்டார்கள். "நானுன்றதாலதான் உனக்கு கோபம் வந்ததா?” என்று பாலாஜி கேட்டது சரியான பாயின்ட். இதுவே வேறு எவராவது கேப்டன் என்றால் ஷிவானி சைலன்ட்டாக போயிருப்பார். இதுவரை அவரது குரல் இப்படி உயர்ந்து நாம் பார்த்ததில்லை. உரிமையுடன் வந்த கோபம் இது. ஆனால் பாலாஜியின் லாஜிக்கை மறுத்தார் ஷிவானி.

பிக்பாஸ் – நாள் 78
பிக்பாஸ் – நாள் 78

கிறிஸ்துமஸ் நெருங்குவதால் அது தொடர்பான அலங்காரங்கள் பிக்பாஸ் வீட்டில் செய்யப்பட்டிருந்தன. புதிய உறுப்பினராக கிறிஸ்துமஸ் தாத்தா மூலையில் நிப்பாட்டி வைக்கப்பட்டிருந்தார். அவரிடம் சென்ற ரம்யா, "நாமினேஷன் பிராசஸ்ல உள்ளே ஒருத்தர் போயி எல்லோர் மேலயும் இருக்கற காண்டையல்லாம் கொட்டிட்டு ரெண்டு பேரை மட்டும் நாமினேட் பண்ணியிருப்பார். யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்" என்று தாத்தாவிடம் ரகசியம் பேசினார். "ஆரின்னுதான்னே நெனக்கறீங்க?” என்று பிறகு தாழ்ந்த குரலில் கேட்டு விட்டு, "ஹிஹி... நான்தான் அது" என்று விஷமச் சிரிப்பு சிரிக்க, "அடேங்கப்பா... இது புது டைப் விஷ பாட்டில்டோவ்!" என்று பிரமித்தார் கூட இருந்த ஆஜித். வீட்டின் புகைச்சல்களுக்கு இடையில் இது போன்ற ஜாலியான காட்சிகள்தான் மனஆறுதல்.

உணவுப் பொருள் பங்கிடுதலில் பிரச்னை ஏற்பட்டதால் பஞ்சாயத்தைக் கூட்டினார் கேப்டன் பாலாஜி. அணி பிரிக்கும் போதே அவர் கறாராக சிலவற்றைப் பேசியிருக்க வேண்டும். ‘சோறுதான் முக்கியம்’ என்று பிறவற்றை அப்போது விட்டு விட்டதால் இந்தப் பிரச்சினை. "உணவுப் பொருள் பங்கிடுவதை கிச்சன் கேப்டனான அனிதா ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் சொன்ன போது "எனக்கு டீ, காபி போடத் தெரியாது” என்று இதை மறுத்தார் அனிதா.

'பாத்ரூம் கழுவத் தெரியாது. டீ, காபி போடத் தெரியாது...’ என்று ஒரு சராசரி நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அடிப்படையான பல விஷயங்கள் கூடத் தெரியாமல் "எனக்கு மரியாதை கொடுங்கள்" என்று உரிமையுடன் கோருவதில் மட்டும் அனிதா குறைவைப்பதில்லை. இவர் இன்னொரு வகை ஷிவானி. அனிதாவின் பொறுப்பற்ற பதிலால் அதிருப்தியுற்ற பாலாஜி "கிச்சன் கேப்டனை மாத்தி்யிருப்பேன். போனாப் போகுதுன்னு விட்டுட்டேன்" என்று பிறகு முனகிக் கொண்டிருந்தார். தலைவர் பொறுப்புன்னா சும்மாவா?!

'இன்னமும் பெருசா எதுவும் நிகழலையே’ என்று எதிர்பார்த்த பிக்பாஸ் ‘மாட்டினியா’ என்கிற டாஸ்க்கை உருவாக்கினார். இரண்டு பேர் வந்து நிற்க வேண்டும். ஒருவர் கை நீட்ட இன்னொருவர் அதை மடக்குவதற்குள் அடித்து விட வேண்டுமாம். (சின்னப்புள்ளத்தனமா இருக்கு!) எனில் வென்றவர் குடுவையில் இருக்கும் ஒரு சீட்டை எடுத்து வாசித்து அந்தத் தலைப்பில் தோற்றவரை என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாமாம். (பிக்பாஸ் விஷமக்காரன்!).

முதலிலேயே களை கட்டியது. ரம்யாவும் ஆரியும் வந்தார்கள். அந்தச் சமயத்தில் டாஸ்க் பற்றி ஆரியிடம் அனிதா விளக்கம் சொன்னதற்கு ‘தெரியும்மா’ என்று சலித்துக் கொண்டார் ஆரி. ‘யார் யாரை நாமினேட் பண்ணுவீங்க’ என்ற ஆரியின் கேள்விக்கு ‘ஆரி மற்றும் கேபி’ என்று உண்மையான பதிலைச் சொன்னார் ரம்யா.

பிக்பாஸ் – நாள் 78
பிக்பாஸ் – நாள் 78

அடுத்ததாக வந்தவர்கள் ஆரி மற்றும் ரியோ. "நடந்த சண்டையை மாத்தலாம்னு நெனச்சா எதை மாத்துவீங்க?” என்று ஆரி கேட்க "தவறான புரிதலில் அனிதாவுடன் நடந்த சண்டையை" என்று சொல்லி விட்டுச் சென்றார் ரியோ.

“இந்த வீட்டில் தன்னை பெரிதாகவும் மற்றவர்களை குறைவாகவும் எடைபோடும் ஆசாமி யார்?" என்று பாலாஜி சொல்லும் போதே பதில் ‘ஆரி’ என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விட்டது. இதையே பதிலாக சொன்ன அனிதா, “நான் ஆரியை ‘நரி’ன்னு சொன்னதுல இருந்து என்னை மட்டம் தட்டி அவர் என்னை பழிவாங்கிட்டே இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது” என்று சொல்லி விட்டு பின்னிணைப்பாக, “ரியோகிட்ட கேட்ட கேள்வி கூட ‘அனிதா’ன்னு பதில் வர்ற மாதிரியான கேள்வியாத்தான் தெரிஞ்சது" என்றது வீண்பழி. ஆரி அப்படி திட்டமிட்டு கேட்டது போல் தெரியவில்லை.

“இப்ப நீங்க கூட என் பேர் வர்ற மாதிரிதான் பிளான் பண்ணி கேட்டீங்கன்னு நானும் சொல்லலாமா?" என்று லாஜிக்காக மடக்கினார் ஆரி. பாலாஜி குறி வைத்ததும் அதைத்தான். இது தொடர்பாக ஆரியும் அனிதாவும் ஒருவரையொருவர் சர்காஸ்டிக்கான பிறாண்டல்களின் மூலம் பரஸ்பரம் கீறிக் கொண்டார்கள். ‘நீங்கள்லாம் நடிகர்கள். நான் செய்தி வாசிக்கறவ’ என்று சொல்வதின் மூலம் தனக்கு நடிப்பு வராது என்று நிரூபிக்க முயன்றார் அனிதா. போட்டியாளர்கள் பணியாற்றுகிற துறையையெல்லாம் பிக்பாஸ் வீட்டில் இழுக்கக்கூடாது என்று சொன்னவரும் இதே அனிதாதான்.

‘'இந்த வீட்டில் யார் ரொம்பவும் டீமோட்டிவேட்டடா இருக்காங்க?'’ என்கிற கேள்வியை ஷிவானி ஆரியிடம் கேட்டார். அனிதாவை முன்னிறுத்தி ஆரி சொன்ன பதிலில் அனிதாவின் கணவர் பெயர் வந்தபோது அனிதா பொங்கி விட்டார். ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என்கிற பாடலை பாடாத குறையாக "என் ஃபேமிலி மெம்பர்ஸை இதுல இழுக்காதீங்க" என்று ஹிஸ்டீரிக்கலாக பல்லைக் கடித்துக் கொண்டே கத்தினார். (வேட்டையாடவே வெறியோட சுத்தறான்!).

பிக்பாஸ் – நாள் 78
பிக்பாஸ் – நாள் 78

"நான் என்ன கான்டெக்ஸ்ட்ல சொல்ல வந்தேன்னா…” என்று ஆரி சொன்னதை முடிக்க விடாமல் தன் ஆட்சேபத்தை இன்னமும் பலமாக வைத்தார் அனிதா. மற்றவர்களும் இதை ஆட்சேபிக்க அதே விஷயத்தை இன்னொரு டோனில் சொன்னார் ஆரி. ‘நீங்கதான் TRP கேம்’ என்று பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள்.

"பழைய விஷயங்களை மனதில் சுமந்து கொண்டு சுற்றும் நபர் யார்?” என்கிற ஷிவானியின் கேள்விக்கு தன்னை நேர்மையாக சுட்டிக் காட்டிக் கொண்டார் ரியோ. ‘எனக்கு இறக்கி வைக்க நேரமாகும்’ என்கிற விளக்கத்தையும் கூடவே அளித்து விட்டார்.

மீண்டும் அனிதா – ஆரி ஜோடி களத்தில் இறங்கியது. ஆக்ரோஷமான சண்டை இன்னமும் நடக்கும் என்று பிக்பாஸ் எதிர்பார்த்திருப்பார். ஆனால் விவாதம் திசை மாறியது. "பாலாஜி ஃபைனல் வரணும்ன்ற மாதிரியே ஷிவானி ஆடறாங்க" என்று ஆரி பதில் சொன்னதற்கு பலத்த ஆட்சேபத்தை தெரிவித்தார் ஷிவானி. ‘வாய்ப்பில்ல ராஜா’ என்று ஜாலியாக ஆட்சேபித்து இதில் பாலாஜி குறுக்கிடும் போது "அவங்களைப் பேச விடுங்க. அவங்க தனித்தன்மை வெளியே வரட்டும்" என்று ஆரி ஆட்சேபித்தார். அர்ச்சனாவின் தயவில்தான் பாலாஜி கேப்டனே ஆக முடிந்தது என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

''இந்த வீட்டில் நிகழ்ந்த அநீதியான விஷயம் என்ன?’ என்று கேபி கேட்டதற்கு ‘அனிதா ஜெயிலுக்குப் போனதில் அநீதி நடந்திருக்கிறது’ என்று நேர்மையான பதில் சொன்ன ஆரிக்குப் பாராட்டு. "தன்னோட சிறப்பைச் சொல்லி ஆடறது ஒரு கேம். இன்னொருத்தரு குறையைச் சொல்லி ஆடறது இன்னொரு கேம். ரெண்டாவது விஷயத்தை ஆரி பண்றாரு" என்று அடுத்த கேள்விக்கு ரம்யா பதில் சொன்னார். ‘யார் கூட எதுக்கெடுத்தாலும் சண்டை?’ என்ற கேள்விக்கு பாலாஜியை கைகாட்டினார் ஆரி.

ரம்யாவிடம் ரியோ கேள்வி கேட்கும் முறை வந்தது. "இந்த வாரம் யார் யாரை நாமினேட் பண்ணியிருப்பாங்க. கெஸ் பண்ணி சொல்லுங்க" என்றார் ரியோ. அதற்கு ரம்யா சொன்ன பதில் ஏறத்தாழ ஐம்பது சதவீதம் சரியாக இருந்தது. தான் நாமினேட் செய்த நபர்களையும் மறைக்காமல் சொன்னார் ரம்யா.

பிக்பாஸ் – நாள் 78
பிக்பாஸ் – நாள் 78

"ரம்யாவும் பாலாவும் ஃபைனல் போறதுக்காக செட் பண்ணி விளையாடறாங்க... ரியோ கிட்டதான் அனிதா அதிகம் சண்டை போட்டிருக்காங்க. ஆனா உடனே வந்து சமாதானம் பேசியிருக்காங்க... ஆனா மத்தவங்க விஷயத்துல தன் குறையை அவங்க ஒப்புக்கவே மாட்டாங்க... பாலாஜி கூட இப்பத்தான் திருந்தியிருக்கான். முன்னல்லாம் பிடிவாதமா சாதிப்பான்..." என்றெல்லாம் ரியோ, சோமிடம் வீட்டின் அரசியலை பிறகு அலசிக் கொண்டிருந்தார் ஆரி.

"அர்ச்சனா கிட்ட நான் தனியா அழுது புலம்பிய ‘பர்சனல்’ விஷயத்தை ஒட்டுக் கேட்டுட்டு அதை பொதுவில் ஆரி சொல்வது முறையானதல்ல" என்று ரம்யாவிடம் புலம்பிய அனிதா, "வீட்ல ஏத்துப்பாங்களான்னு தெரியலைன்னு நான் சொன்னேனாம். ஏத்துக்காத அளவிற்கு நான் என்ன பண்ணிட்டேன்? திருடினேனா... கொலை பண்ணிட்டேனா... அதுக்குத்தான் எனக்கு சரியான கோபம் வந்தது... என் ஹஸ்பண்ட் பேரை ஏன் இழுக்கணும்?” என்றெல்லாம் அனிதாவின் ஆவேசம் தொடர்ந்தது.

“யாரும் ஒரு விஷயத்தை கண்டுக்கலைன்னா... அதை மீண்டும் கிளறி அதுக்கு ஆரி ஃபோகஸ் தருவாரு” என்று ஆராய்ச்சி செய்த ரம்யா, "எப்படியும் கேமரா முன்னாடி அவரு மன்னிப்பு கேப்பாரு” என்று மிகச் சரியாக யூகித்தார். அனிதா கூட இதை நம்பவில்லை. தன் எதிரியை சரியாக மதிப்பிடுவதும் ஒரு திறமைதான்.

ரம்யா சொன்னதுதான் பிறகு உண்மையாயிற்று. நள்ளிரவைத் தாண்டி ஆந்தைகளும் வெளவால்களும் உலவும் அந்தகாரத்தில் கேமரா முன்பு சென்ற ஆரி, "நான் எந்த தப்பான நோக்கத்துலயும் உங்க பேரை இழுக்க நெனக்கல... சாரி" என்று அனிதா குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது சரியான செயல்.

பிக்பாஸ் – நாள் 78
பிக்பாஸ் – நாள் 78

ஆனால், "அனிதா கிட்ட கூட மன்னிப்பு கேட்கணும்னு தோணுது... ஆனால் இதையும் சண்டை போட அவங்க ஒரு வாய்ப்பா எடுத்துப்பாங்களோன்னு பயமா இருக்கு" என்பது போல் சொன்னது முறையல்ல. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தால் உடனே கேட்டு விட வேண்டியதுதான். சுரேஷ் இருந்த போது கூட இதே போல் நிகழும் என்று அஞ்சி அனிதாவிடம் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை என்று சொன்னது நினைவில் இருக்கலாம்.

அன்பு கேங்கை காலி செய்து பார்வையாளர்களிடம் நல்ல பேரை சம்பாதித்துக் கொண்டு வந்த அனிதா, தனது கோபத்தால் மீண்டும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டார் என்று தோன்றுகிறது.

போட்டியாளர்களின் அந்தரங்கத்தை நோண்டி காட்சிப்படுத்துவதுதான் பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படையான செயலே. அதில் ஒருவர் ‘பர்சனல்’ என்று சொல்வதெல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம்?! சாதாரண சண்டையிலேயெ சட்டை கிழியும் போது ரத்தபூமியில் வெள்ளை ரோஜா பூக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?