Published:Updated:

அழுகை அனிதா வெர்சஸ் ஓவர் ஆக்டிங் சுரேஷ்... சிறப்பு நிகழ்ச்சிதான் அதுக்காக? பிக்பாஸ் நாள் - 22

பிக்பாஸ் – நாள் 22

சுரேஷ் x அனிதா டிராமா நள்ளிரவிற்கும் மேலாக இழுத்துக் கொண்டே சென்றது. சுரேஷ் தனது பிடிவாதத்தை விட மறுக்க, அனிதாவால் அந்தக் குற்றவுணர்வுடன் தூங்கச் செல்ல இயலவில்லை. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 22

Published:Updated:

அழுகை அனிதா வெர்சஸ் ஓவர் ஆக்டிங் சுரேஷ்... சிறப்பு நிகழ்ச்சிதான் அதுக்காக? பிக்பாஸ் நாள் - 22

சுரேஷ் x அனிதா டிராமா நள்ளிரவிற்கும் மேலாக இழுத்துக் கொண்டே சென்றது. சுரேஷ் தனது பிடிவாதத்தை விட மறுக்க, அனிதாவால் அந்தக் குற்றவுணர்வுடன் தூங்கச் செல்ல இயலவில்லை. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 22

பிக்பாஸ் – நாள் 22
‘உங்களுக்கு தனி விருந்து காத்துக் கொண்டிருக்கிறது’ என்று நேற்று கமல் சொன்ன போதே நாம் உஷாராகி இருக்க வேண்டும்.. யம்மாடி... ஏறத்தாழ நான்கு மணி நேரம்.

பண்டிகை தினங்களில், நாள் முழுக்க ஒளிபரப்பாகும் ‘சிறப்பு’ நிகழ்ச்சிகளை ஒரே அமர்வில் தொடர்ந்து பார்த்தது போன்று சோர்வை ஏற்படுத்தி விட்டது. இந்த ‘சிறப்பு’ நிகழ்ச்சி.

‘Unseen’, ‘Unwanted scene’ என்று அனைத்து எபிஸோடுகளையும் சேர்த்து பார்த்தது போன்ற உணர்வு.

அனிதாதான் இன்றைய ‘சிறப்பு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராம். ‘ஏன் நான்கு மணி நேரத்தை ஒதுக்கினார்கள்’ என்று இப்போதுதான் தெரிகிறது. அம்மணி பேசிய அத்தனையையும் கவர் செய்வதற்குள் பிக்பாஸ் டீம், மேலதிகமாக பல ஹார்ட் டிஸ்குகளை வாங்க வேண்டியிருந்திருக்கும்.

ஓகே... என்ன நடந்தது?!

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22

போருக்கு முந்தைய அமைதி போல உறங்கிக் கொண்டிருந்தது வீடு. ‘மதுர குலுங்க... குலுங்க’ பாட்டை ஹைடெஸிபலில் போட்டு மக்களை எழுப்பினார் பிக்பாஸ். இது வேல்முருகன் பாடிய பாட்டு. அவர் பாடிய பாட்டே ஒலிபரப்பாகும் போது அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்திருக்கும். இளைஞராக இருந்தாலும் பாலா பெரும்பாலான நாட்களில் மக்களுடன் சேர்ந்து ஆடாமல் ஓரமாக நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறார். இன்றும் அப்படித்தான்.

திங்கட்கிழமை. வில்லங்கமான சடங்கு நடைபெறும் நாள். ஆம். நாமினேஷன் வைபவம் தொடங்கியது. இரண்டு பேரை நாமினேட் செய்ய தேர்ந்தெடுத்து அவர்களின் புகைப்படங்களை நெருப்பில் போட வேண்டுமாம். என்னதான் விளையாட்டு என்றாலும் ஒருவரின் புகைப்படத்தை எரிப்பது குரூரமான சிந்தனை. பிக்பாஸ் இது போன்ற வழிமுறைகளை கைவிட வேண்டும்.

பூக்குழி என்று நினைத்து நெருப்புக் குண்டத்தைப் பார்த்த கவுண்டமணி போல ‘அய்யோ... நெருப்புடோவ்’ என்று மனதிற்குள் நினைத்தபடி முதலில் வந்தவர் ரம்யா. (இந்தக் கண்ணாடி அழகா இருக்குங்க!). இந்த சீஸனில் ‘டிப்ளமஸி’ என்கிற வார்த்தை நாய் படாத பாடு படும் போலிருக்கிறது. நாமினேஷனுக்கு கூட அந்த வார்த்தையை தோய்த்து எடுத்தார்கள். வேல்முருகன் மற்றும் சனத்தை தேர்ந்தெடுத்தார், ரம்யா.

பார்வையாளர்களான நாம் இந்த நாமினேஷன் சடங்கை வெறுமனே வேடிக்கை பார்க்காமல் நமக்கும் பொருத்திப் பார்த்துக் கொண்டால் பல கசப்பான உண்மைகளை கண்டறியலாம். நம்முடைய உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள், ‘நம்மைப் பற்றி இப்படித்தான் நினைப்பார்கள்’ என்று நாம் கருதிக் கொண்டிருப்போம்.

ஆனால் அதையும் தாண்டிய அபிப்ராயங்கள் அவர்களின் மனதினுள் ஒளிந்திருக்கும். அவற்றை நாம் அறிய நேர்ந்தால், அவை நமக்கு பயங்கர கசப்பைத் தரக்கூடும். ஆனால் மனித மனம் அப்படித்தான் ஒளித்து வைக்கப்பட்ட ஆயுதங்களுடன் இயங்கும் என்கிற யதார்த்த்தைப் புரிந்து கொண்டால் நமக்கு அந்த அளவிற்கு அதிர்ச்சி வராது.

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22

சபையிலும், வீட்டிலும் பிரியத்தைக் கொட்டிய நபர்கள், தனியாக மறைவிடத்தில் நாமினேஷன் செய்யும் போது அவர்களின் மனதினுள் ஒளிந்திருந்த கத்திகள் வெளியே வந்தன. இதில் பலவற்றில் சரியான காரணங்கள் இருந்தன. அதே சமயத்தில் ‘நாமினேஷனுக்கு’ ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமே என்று சில காரணங்கள் சம்பிரதாயமாக இருந்தன. “ஃப்ரீ பாஸ் போனதுல இருந்து ஆஜித் சாப்பிட மாட்றான். வருத்தமா இருக்கான்" என்று வேல்முருகன் சொன்னது ஓர் உதாரணம். “வேல்முருகன் இன்னமும் டிப்ளமஸியை கடைப்பிடிக்கிறார்" என்று பலர் நாமினேஷன் குத்தினார்கள். ‘எதைச் சொன்னாலும் ஆரி அரை மணி நேரத்திற்கு லெக்சர் தருகிறார். எங்க நேரத்தை வீணடிக்கிறார்" என்றார் கேப்ரியல்லா. (பிக்பாஸ் வீட்டில் நேரத்தை வீணடிக்க என்ன இருக்கிறது?!)

நாமினேஷன் சடங்கு முடிந்தது. "ஒட்டுமொத்த பதினெட்டு ஊரையும் ஒதுக்கி வைக்கறேன்... அவங்க கூட யாரும் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது” என்கிற நாட்டாமை தீர்ப்பு கதையாக ஏறத்தாழ வீட்டில் இருந்த அனைவருமே இந்த முறை நாமினேட் ஆகி எவிக்ஷன் பட்டியலில் வந்தார்கள்.

சோம், வேல்முருகன், ஆஜித், நிஷா, ரியோ, அனிதா, சுரேஷ், ரம்யா, ரமேஷ், சனம் மற்றும் பாலாஜி என்று அந்தப் பட்டியல் மிக நீண்டதாக இருந்தது. கடைசியாக ஒலித்த தன் பெயரைக் கேட்டவுடன் “அதானே பார்த்தேன். என் பேர் இன்னும் வரலியேன்னு" என்பது போல் சிரித்தார் பாலாஜி சார். (மரியாதையை எதிர்பார்க்கும் இந்த பாலா... டைரக்டர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தைக் கூட பார்க்க மாட்டாரு போல).

நாமினேஷன் பட்டியல் அறிவிப்பு வெளியாகியதும் அது பற்றிய கணக்குகள் போட்டியாளர்களுக்குள் ஓடிக் கொண்டிருந்தன. “இந்த வாரம் நான் போயிடுவேன்” என்றார் சுரேஷ். (இப்படிச் சொல்லியே நூறு நாளை ஓட்டிடுவீங்கபோல) “என் குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்றேன்... என் தியாகத்தை இவங்களுக்காக வேஸ்ட் பண்ண முடியாது” என்கிற சலிப்புடன் கலங்கினார் அர்ச்சனா.

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22

“எவன் அவன்... உன் மேல கை வெச்சது. சொல்லு... கீச்சிடறேன்” என்று ஆறுதல் சொன்ன சுரேஷ், “இப்ப புரியுதா பட்டிமன்றத் தலைவரே... இது ஆனந்தக் குடும்பம் இல்ல. போட்டிக்களம்" என்று பழைய விஷயத்தை இழுத்தார் சுரேஷ் ‘காரியத்தில் கண் வைக்கும்’ ஒரே ஆள் இவர்தான். பிறகு அர்ச்சனாவை ஆற்றுப்படுத்தினார்.

“15-ம் நம்பருக்கு ஏன் என்னைத் தள்ளினீங்க? அதுக்காக கை தூக்கினீங்க... நான் உங்களுக்கு கை தூக்கியதேயில்லை” என்று வேல்முருகனிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் சனம். ‘பகவானே... இது என்ன சோதனை’ என்று பூர்ணம் விஸ்வநாதன் கலங்குவது போல, "அது வந்தும்மா... தோ பாரு குழந்தை" என்று தழுதழுத்துக் கொண்டிருந்தார் வேல்முருகன்.

"என்னை பிக்பாஸே நாமினேட் பண்ணியிருப்பார்" என்று இன்னொரு பக்கம் ஜாலி கமென்ட் அடித்துக் கொண்டிருந்தார் நிஷா. “ஜோக் முடிஞ்சிடுச்சா” என்று நிஷாவை, சோமுவும் ரியோவும் பதிலுக்குக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

வீடு, ‘கிராமம்’, ‘நகரம்’ என்று இரு பிரிவுகளாக பிரிந்து போட்டியிட்டு விஜயதசமி கொண்டாட்டத்தை நிகழ்த்த வேண்டுமாம். யார் யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பது காண்பிக்கப்படவில்லை. நாமாகத்தான் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

இந்த சிறப்பு தின நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ‘அனிதா’வாம். (கடவுளே!) “இங்க பாருங்க. ஒரு செடி இருக்கு… அங்க பாருங்க ஒரு மரம் இருக்கு...” என்று விளக்கிக் கொண்டேயிருந்தார். "ஏன் வாழை மரம் கட்டுறீங்க?” என்று நிஷாவிடம் விசாரிக்க “கட்டாட்டி விழுந்துடும்" என்கிற பழைய ஜோக்கை மறக்காமல் சொன்னார் நிஷா.

‘நான்கு மணி நேரத்தை எப்படி இழுப்பது’ என்று தெரியாமல் ஆளுக்கொரு பொம்மை கொடுத்து அதற்கு வண்ணம் பூச சொன்னர்கள். ஒவ்வொருவரும் நிதானமாக அலங்கரிப்பதை பார்த்த போது ஐபிஎல் ஃபைனல் மேட்ச்சே வந்து விடும் போலிருந்தது. ஒவ்வொருவரிடமும் சென்று "இவங்க என்ன பண்றாங்கன்னா” என்று லைவ் கமென்ட் கொடுத்து இம்சித்துக் கொண்டிருந்தார் அனிதா. "நிறுத்தும்மா... நாங்களே பார்த்துக்கறோம்” என்று அலற வேண்டியிருந்தது. "பொம்மை செய்யறவங்க எவ்ளோ கஷ்டப்படறாங்க தெரியுமா” என்கிற சென்டிமென்ட் டிராமாவையெல்லாம் மறக்காமல் சேர்த்துக் கொண்டார்கள்.

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22
ரணகளத்திலும் கிளுகிளுப்பாக, பாலாவும் ஷிவானியும் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். "என்னைத்தான் நிறைய பேர் நாமினேட் பண்ணியிருப்பாங்க” என்று பாலாஜி ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்க “ஆமாம்... உங்க போட்டோ பேப்பர்தான் நிறைய குறைஞ்சிருந்தது’ என்று சிஐடி சங்கராக மாறி ஆச்சர்யப்படுத்தினார் ஷிவானி.

“ஏதாவது பாட்டு பாட்றி" என்று தேவர் மகன் சிவாஜியாக மாறி ஷிவானி கேட்க, சந்தர்ப்பத்தை வீணாக்க விரும்பாத பாலாஜி, பொம்மைக்கு வண்ணம் பூசுவதை நிறுத்தி விட்டு, ‘பார்க்க பார்க்க வந்ததம்மா லவ்வுதானடி’ என்று சினிமாப் பாடலின் மூலம் ஏதோவொரு செய்தியைச் சொல்ல, ஷிவானியின் முகத்தில் பல்பு எரிந்தது. (கடவுளே! இது எங்க போயி முடியப் போகுதோ!)

அடுத்ததாக சமையல் போட்டி. நகரத்தின் சார்பில் சனமும் பாலாஜியும் ‘பாயாசத்தை’ கிளற, கிராமத்தின் சார்பில் சுரேஷூம் அர்ச்சனாவும் கேசரியைக் கிண்டினார்கள். குற்றாலம் டூர் போகும் போது ‘சுராங்கனி’ பாடுவது போல ‘கும்தலக்கா... கும்மாவா... எங்க டீம்னா சும்மாவா’ என்று வாய்க்கு வந்த ரைமிங்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக எதிரும் புதிருமாக நின்று மோதிக் கொண்டார்கள்.

“இப்ப பார்த்தீங்கன்னா... இவங்க முந்திரிப்பருப்பை நெய்ல போட்டு வறுக்கறாங்க அது செவப்பு கலர்ல மாறுது...” என்று அனிதா ஒரு பக்கம் லைவ் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்க, அர்ச்சனா கண்ணில் சமையல் பொருள் வெடித்து பட்டது, நிஷா நாற்காலியில் இடித்துக் கொண்டு விழுவது போன்ற சிறுவிபத்துக்கள் ஏற்பட்டன.

இந்தக் களேபரத்திற்கு இடையில் மிகத்திறமையாக விசில் அடித்தார் ரம்யா. (இந்தப் பொண்ணுக்குள்ள இன்னமும் என்னென்ன திறமை ஒளிஞ்சிருக்கோ?!) கேசரியும் பாயாசமும் தயார் ஆகியது. கிராமத்து அணி செய்தது ‘செட்டி நாட்டு கேசரியாம்’ நகரத்து அணி செய்தது ‘ஆர்கானிக்’ பாயசமாம். (இந்த ‘ஆர்கானிக்’ என்கிற வார்த்தை இப்போது மிகச் சிறந்த வணிக உத்தியாகி விட்டது).

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22
முடிவைச் சொல்வதற்காக நடுவர் அனிதா வந்து அமர, அவருக்கு விசிறி விட்டு காக்கா பிடித்தார் சுரேஷ். இரண்டையும் பரிசோதித்த நடுவர், “ரெண்டுமே சூப்பரா இருக்கு... ஆனா கேசரில சர்க்கரை கொஞ்சம் தூக்கல்” என்று தீர்ப்பு அளித்தவுடன் கிராமத்தின் தலை தொங்கிப் போனது. நகரத்து அணி உற்சாகத்தில் துள்ளியது. “இப்படியொரு தீர்ப்பை சொல்லிட்டு அப்புறம் கேசரில கைவெச்சா மரியாதை கெட்டுடும்” என்று ஜாலியாக எச்சரித்தார் ரியோ.

‘கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலை' என்பார்கள். அது போல தோற்றுப் போனாலும் ‘உங்க பாயசத்துல மண் இருக்கு' என்று எதிர் அணியை குறை சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டார் சுரேஷ். "நகரமா இருந்தாலும் மண் வாசனை விட்டுடாம மண்ணு போட்டு சமைச்சிருக்காங்க" என்று சுரேஷே பிறகு அடித்த கமென்ட் சிறப்பு.

மதிய உணவின் போது தான் சாப்பிட்ட இலையை சுரேஷ் கையோடு எடுத்து அப்புறப்படுத்திவிட அதற்கொரு பஞ்சாயத்து நடந்தது. விருந்தினர்கள் சாப்பிட்ட இலையை, விருந்து அளித்த வீட்டார்கள்தான் எடுக்க வேண்டும் என்கிற ஒரு மரபு இருக்கிறது. விருந்தினர்களை சங்கடப் படுத்தக்கூடாது என்பதற்காக இது உருவாகியிருக்கலாம்.

தங்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போட்டியாளர்கள் பண்டிகை வாழ்த்து சொல்ல வேண்டிய தருணம். பிரிவுத் துயரத்தையும் வெளிப்படுத்தலாம். மற்ற போட்டியாளர்கள் தங்களின் உறவினர்களை நினைத்து கண்கலங்க ஆரியும் வேல்முருகனும் ‘உலகத் தமிழர்களை’யும் இணைத்து வாழ்த்து சொன்னார்கள். (பொழச்சிப்பீங்க! ஐம்பது ஓட்டும் உங்களுக்குத்தான்).

அடுத்ததாக ‘ஏழு கல்’ விளையாட்டு. சிறுவயதில் விளையாடியதெல்லாம் நினைவிற்கு வந்தது. சுரேஷ் இதில் கலந்து கொள்ளவில்லை. இதிலும் ‘நகரத்து அணி’ வெற்றி பெற்றது. கார்டன் ஏரியா சிறியது என்பதால் அதற்கேற்ப விதிகளை மாற்றிக் கொண்டார்கள்.

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22
‘பெண்கள்தான் நம்முடைய வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றெல்லாம் பிக்பாஸ் வீட்டு ஆண்கள் பேச வேண்டும்.

ஒவ்வொரு ஆணும் அங்குள்ள பெண்களை ‘தாயே... தங்கையே. தெய்வமே’ என்று உருகி உருகிப் பேச ‘என் வழி தனி வழி’ என்கிற பாணியில் இருக்கும் பாலாஜி, "இங்குள்ள பெண்களை என் போட்டியாளர்களாக பார்க்கிறேன். ஆணும் பெண்ணும் சமம்தான். அப்படித்தான் பார்க்கணும். ஆனா அதுக்கான தகுதியை நான் இனிமேதான் வளர்த்துக்கணும். தாய்மைதான் ஆணை மாத்தும். அதை நான் வணங்குகிறேன்” என்று வித்தியாசமாக பேசி விட்டுச் சென்றார்.

சோம் பேசும் போது ஷிவானியை ‘அனுஷ்கா’ என்று குறிப்பிட்டது ஏன் என்று தெரியவில்லை. "இங்க இருக்கிற எல்லாப் பெண்களுக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம் என் அம்மா இருக்காங்க. ஆனா என் அம்மாவை ரீப்ளேஸ் பண்ண முடியாது" என்றது சிறப்பு.

“நான் தாழ்வு மனப்பான்மை கொண்டவன்ங்க. யார் கிட்ட என்ன பேசறதுன்னு தயக்கமா இருக்கும். உளறிடுவேன்... அதை உடைச்சவங்க என் மனைவிதான்” என்று ஆரம்பித்த வேல்முருகனின் உரை மிக நெகிழ்வாக இருந்தது. சக போட்டியாளர்கள் குறிப்பிட்டது போல் அவரை ‘இன்னொரு’ கோணத்தில் இன்று பார்க்க முடிந்தது.

‘அம்மா’ பாட்டு பாடினா மக்கள் கலங்கி விடுவார்கள் என்கிற உத்தியை தெரிந்து வைத்திருக்கும் வேல்முருகன், அடுத்தடுத்து சென்ட்டியான பாடல்களை தொடர்ச்சியாக எடுத்து விட ஏறத்தாழ ஒட்டுமொத்த சபையும் கண்கலங்கியது.

இந்த நிகழ்வில், இறுதியாக அர்ச்சனா சொன்ன குறிப்பு முக்கியமானது. "இங்க எட்டு ஆண்கள் இருக்காங்க. என்றாலும் பெண்களாகிய நாங்கள் மிக பாதுகாப்பாக உணர்கிறோம். அந்த சூழலை ஏற்படுத்திய ஆண்களுக்கு நன்றி” என்றார். இதுதான் ஆண்களுக்கு கிடைக்கக்கூடிய உண்மையான அங்கீகாரம். பணிச்சூழல் முதற்கொண்டு சக பெண்கள் இவ்வாறு உணரும் வகையில் ஒவ்வொரு ஆணும் கண்ணியமான எல்லையில் நடந்து கொள்ள வேண்டும். (அப்படின்னா... சேரன் x மீரா மிதுன் விவகாரம் இந்த சீஸன்ல வராது போலிருக்கு).

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22
அடுத்ததாக விளக்கு பூஜை. பானையில் அரிசி போடும் போது ‘சுமங்கலிங்கள்லாம் மொதல்ல வாங்க’ என்று சுரேஷ் அழைக்க அருகிலிருந்த அனிதா முதலில் வந்தார். (இந்த இயல்பான விஷயம் பிறகு பெரிதாக வெடிக்கப் போகிறது என்பதை அப்போது யாரும் அறியவில்லை).

‘நான் பண்ணலாமா?’ என்று தயங்கி நின்ற நிஷாவை இழுத்துப் பிடித்து செய்ய வைத்தார் அர்ச்சனா. ஒருவேளை மத ரீதியான தயக்கம் நிஷாவிற்குள் இருந்தது போல.

கிராமம் x நகரம் என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இப்படியான தலைப்பில் என்னவெல்லாம் கிளிஷேவான பேச்சுகள் நடைபெறுமோ அத்தனையும் வெளிப்பட்டது. ‘இந்தியாவின் முதுகெலும்பு. கிராமம்', ‘மாட்டு வண்டில போறது சுகம்’ என்று நிறைய விஷயங்களை அடித்து விட்டார்கள்.

‘சென்னையின் மாட்டுவண்டி ஆட்டோதான்’ என்கிற புதிய கண்டுபிடிப்பை எடுத்துவிட்டார் ரம்யா. உண்மைதான். டிராஃபிக்கில் செல்லும் போது அப்படித்தான் ஆகி விடுகிறது. ரம்யாவிற்கு பிக்பாஸ் வீட்டின் உள்ளேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்களா என்று தெரியவில்லை. அவர் பேசுவதெற்கெல்லாம் கைத்தட்டவும் விசிலடிக்கவும் ஆள் நிறைய இருக்கிறது.

‘கிராமத்து வாழ்க்கைதாங்க சுகம்’ என்று நாஸ்டால்ஜியா பேசும் எவரும் கிராமத்திற்கு திரும்புவதில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. கிராமம் பற்றி மக்கள் சொன்னது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும் அதை அதிகமாக ரொமான்டிசைஸ் செய்ய வேண்டியதில்லை.

கிராமத்து மக்கள் வெள்ளந்தியானவர்கள் என்பதிலும் உண்மையிருக்கத்தான் செய்கிறது என்றாலும் அங்குதான் சாதி குறித்த பிரக்ஞையும் பாகுபாடுகளும் வன்முறையும் நிறைய இருக்கின்றன. புதிதாக ஒரு அந்நியர் வந்தால் ‘நீங்க என்ன ஆளுங்க... தம்பி’ என்று கேட்டு அவரது சமூகத்தை அறிந்து கொண்ட பின்னர்தான் அதற்குத்தக்க மரியாதை கிடைக்கும்.

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22

இந்த விஷயத்தை அனிதா பேசும் போது சரியாக எடுத்துரைத்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட இன்னொரு விஷயம்தான் விடிய விடிய பஞ்சாயத்து ஆகும் சூழலுக்கு இட்டுச் சென்று விட்டது.

மங்கல தினத்தன்று நடக்கும் சடங்குகளில் கைம்பெண்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். இது சம்பந்தப்பட்ட பெண்களின் மனதை புண்படுத்தும் விஷயம். ‘உடன்கட்டை ஏறுவதை’ ஒழிப்பதில் தொடங்கி பல சமூகப் போராட்டங்கள் இது தொடர்பாக நிகழ்ந்திருக்கின்றன. பிறகுதான் சமூகம் இந்த விஷயத்தில் மெல்ல மாறத் துவங்கியிருக்கிறது.

இந்த விஷயத்தைக் குறிப்பிட முனைந்த அனிதா, அதற்காக தன்னையே உதாரணமாகக் கொண்டு ‘எனக்கும் அது போல் நிகழ்ந்திருந்தால்...’ என்பது போல் பேசியது நிச்சயம் அபஸ்வரம். அதிலும் மங்கல நாளில் இப்படிப் பேசுவதை பெரியவர்கள் ரசிக்க மாட்டார்கள். ‘என் கருத்துதானே... என் குடும்பத்தை உதாரணம் காட்டிதானே ஒரு பொது விஷயத்தைக் கண்டித்திருக்கிறேன்.. அதற்கு எனக்கு சுதந்திரம் இல்லையா?’ என்றெல்லாம் அனிதா சொல்லலாம்.

ஆனால் அவர் பேசியது... இன்னொரு தனி நபரையும் – அதாவது அவரது கணவரையும் - இணைத்து குறிப்பதாக இருக்கிறது. அனிதாவின் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளையும் பாதிப்பதாக இருக்கிறது என்பதை அனிதா கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொன்று, ‘விளக்கு பூஜை’ நடக்கும் போது ‘சுமங்கலில்லாம் மொதல்ல வாங்க’ என்பது போல் சுரேஷ் சொல்லி விட்டார். இதற்குப் பொருள், ‘திருமணமான பெண்கள் முதலில் செய்யுங்க.. அதற்குப் பிறகு கன்னிப் பெண்கள் வரட்டும்’ என்று திருமணமான பெண்களுக்கு தரப்படும் முன்னுரிமை அது. அந்தப் பொருளில் கூட சுரேஷ் சொல்லியிருக்கலாம்.

அனிதா சொல்ல வந்ததின் உள்ளடக்கம் முற்போக்கானது என்பதில் மறுப்பில்லை. ‘சமூகத்தில் பெரும்பாலாக நடக்கும் சமூக அநீதியை என்னை உதாரணம் காட்டிதானே கண்டித்தேன்’ என்பது அவரது வாதம். இது அனிதா பக்கத்தின் நியாயம்.
பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22

அனிதா பேசியதை பிக்பாஸ் வீட்டிலுள்ள இளைய தலைமுறை ‘இது ஒரு மேட்டரே இல்லை’ என்பது போல் கடந்து சென்றதை கவனித்திருக்கலாம். முந்தைய காலத்தில் சென்டிமென்ட்டாக பார்த்திருந்த பல ஒவ்வாத விஷயங்களை இளைய தலைமுறையினர் புரிந்துணர்வுடன் இப்போது இயல்பாக கடந்து போவது நல்ல விஷயம்தான்.

வயதில் மூத்தவர் என்பதால் அனிதா பேசிய அமங்கலமான பேச்சு சுரேஷிற்கு பலத்த ஆட்சேபத்தை தந்தது. சுரேஷ் மட்டுமல்ல, சபையில் அமர்ந்திருந்த அர்ச்சனா, நிஷா போன்றோருக்கும் கூட முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் சுரேஷ் மட்டுமே இதை விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார்.

ஏனெனில் அனிதா பேசும் போது சுரேஷ் செய்த காரியத்தை உதாரணம் காட்டி சொன்னதை சுரேஷ் தன்மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு விட்டார். ‘அவர் ஒரு பழைமைவாதி’ என்று சுட்டிக் காட்டுவது போல் அனிதாவின் உதாரணம் அமைந்து விட்டது. இதுதான் சுரேஷின் பிடிவாதமான கோபத்திற்கு காரணம் என்று தோன்றுகிறது.

இது மட்டுமல்லாமல், பிக்பாஸ் வீட்டின் அனைத்து கேமராக்களும் தன்னையே பார்க்க வேண்டும் என்றால் அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது சுரேஷிற்குத்தான் நன்றாக தெரிந்திருக்கிறது. எனவேதான் ஒரு சச்சரவிற்கான விதையை அவரே தூவுகிறார்; தண்ணீர் விட்டு வளர்க்கிறார்; கவனமாக பார்த்துக் கொள்கிறார்; பிறகு நல்ல அறுவடையை செய்து விடுகிறார்.

அனிதா சொன்னதையொட்டி சாப்பிடாமல், வெளியே வராமல், நாற்காலியில் உட்காராமல் பல நாடகங்களை சுரேஷ் நிகழ்த்திவிட்டார். இது பொதுவாக வீடுகளில் சில மூத்தவர்கள் செய்யும் அதே தந்திரங்கள். ‘வீட்டில் தனக்கு முக்கியத்துவம் குறைகிறது’ என்கிற காம்ப்ளெக்ஸ் எழும் பெரியவர்கள், ‘தன்னைப் பிறர் கவனிக்க வேண்டும்’ என்பதற்காக பல கவனஈர்ப்பு உத்திகளை மேற்கொள்வார்கள். சாப்பிடாமல் பிடிவாதம் பிடிப்பது முதற்கொண்டு தன்னை வருத்திக் கொண்டு அனுதாபம் தேடுவார்கள். ஏறத்தாழ குழந்தைகள் செய்யும் அதே விஷயம்தான் இது.

சுரேஷ் செய்ததும் இதுவேதான். சுரேஷ் செய்த காரியங்கள் மற்றவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தின. இதுதான் பெரியவர்களும் எதிர்பார்ப்பது. அவர்களின் நோக்கமும் அதுதான். குறிப்பாக அனிதா அதிக அளவில் குற்றவுணர்ச்சியை அடைந்து மன்னிப்பு கேட்க முன் வந்ததையும் சுரேஷ் நிராகரித்துச் சென்றது அராஜகம்.
பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22

எப்போதுமே உள்ளூர் திருவிழாக்கள் முதலில் பயபக்தியுடன் சாமி பாடல்களுடன் ஆரம்பிக்கும். பிறகு நேரம் நகர நகர சினிமாப்பாடல்களுக்கு தாவும். இன்னமும் சற்று போனால் முக்கல் முனகல் பாடல்கள் கூட ஒலிபரப்பாகும்.

பிக்பாஸ் வீடும் அதற்கு விதிவிலக்கில்லை. அடுத்ததாக சினிமாப் பாடல்களுக்கு கேப்ரியல்லாவும் ஷிவானியும் ஆடுவார்கள் என்று அனிதா அறிவித்தார். தயக்கத்துடன் எழுந்து வந்த கேப்ரியல்லா பிறகு இசைக்குள் கலந்து தன்னிச்சையாக குத்தாட்டம் போட்டார். இசையின் மகத்துவம் அது. ‘மியூசிக்கை போடாதீங்க... என்னால ஆடாம இருக்க முடியாது’ என்று ஒரு திரைப்படத்தில் பிரபுதேவா கதறுவார்.

‘தாரை தப்பட்டை’ திரைப்படத்திலிருந்து ஒலித்த அட்டகாசமான இசை கேப்ரியல்லாவை மட்டுமல்லாமல் பலரையும் ஆட வைத்தது.

அடுத்ததாக ஷிவானி ஆட வந்தார். காலை வேளைகளில் ஷிவானி எப்போதுமே தனியாகத்தான் ஆடுவார். அதே போல் இப்போதும் மேடையில் அவர் மட்டும் ஆடிக் கொண்டிருக்க இதர மக்கள் கீழே உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். ‘பிக்பாஸ் அங்கிள்... ரெண்டாவது டைம் எனக்குப் பிடிச்ச பாட்டு போட்டீங்க. தேங்க்ஸ் அங்கிள்’ என்று பிறகு கேமரா முன்பு கொஞ்சிக் கொண்டிருந்தார் ஷிவானி.

அடுத்ததாக ஒரு நகைச்சுவை நாடகமாம். பிக்பாஸ் குரலை நன்றாகவே மிமிக்ரி செய்ய சோம் முயன்றார். தமிழை சனம் தப்பும் தவறுமாக உச்சரிப்பது, புரிந்து கொள்வது போன்றவற்றையொட்டி இந்த நகைச்சுவை அமைந்தது. ஆனால் ஓரிடத்தில் ‘சனத்தை’ இழுத்து சாணம் என்பது போல் சோம் அழைத்தது ஓவர். இந்த நிகழ்ச்சி சற்று மொக்கையாகச் சென்றாலும் "கிச்சன்ல கேஸ் விடக்கூடாது” போன்ற நகைச்சுவைகள் புன்னகையை வரவழைத்தன.

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22

சென்னை நகரத்தை பெருமைப்படுத்துவதைப் போன்றதொரு பாட்டை ஆஜித் பாட அதற்கு வாயாலே சப்தம் எழுப்பி இசை தந்தார் சோம். (பாடும் திறமையை வேல்முருகன் நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் அதே சமயத்தில் ஆஜித் அடக்கி வாசிப்பது ஏன் என்று தெரியவில்லை).

அடுத்ததாக ஒரு தெருக்கூத்து. லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய மூவருக்கும் இடையில் ‘யார் முக்கியத்துவம் வாய்ந்தவர்’ என்கிற கலகத்தை நாரதர் உருவாக்கி விட அதையொட்டி இந்த நாடகம் அமைந்தது.

முப்பெரும் தேவியராக, சம்யுக்தா, கேப்ரியல்லா, அர்ச்சனா நடித்தார்கள். சிவனாக ஆரி முறைத்துக் கொண்டு வந்தார். ‘நான் கடவுள்’ படத்திற்காக ஆர்யாவிற்குப் பதிலாக ஆரியை பயன்படுத்தியிருக்கலாம். அப்படி உக்கிரமாக கேரக்டருக்குள் இறங்கி விட்டார் ஆரி. ஆனால் இவரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் துர்க்கையாக நடித்த அர்ச்சனா. முகத்தில் மஞ்சள் தடவி, பெரிய குங்குமம் வைத்து நாக்கை நீட்டி உக்கிரமாக நடனமாடினார். அனைவரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, ஆஜித் மட்டும் அர்ச்சனாவின் ஓவர் ஆக்டிங்கை பார்த்து சிரித்தது மன்னிக்க முடியாத பிழை. (சாமி... கண்ணைக் குத்திடும்ப்பா!)

ஆனால் இந்த இடத்தில் சுரேஷின் மனதைரியத்தைப் பாராட்ட வேண்டும். அசுரன் வேடத்தில் நடிக்க முன்வந்தது மட்டுமல்லாமல், அர்ச்சனா தூக்கிப் போட்டு மிதிப்பதையும் பொருட்படுத்தாமல் கீழே கிடந்து ஈடுபாட்டுடன் நடித்தார். வதம் செய்த துர்க்கைக்கும் நாக்கு வெளியே இருந்தது. வதம் செய்யப்பட்ட அசுரனுக்கும் நாக்கு வெளியே தள்ளியது.

ஒருவழியாக இந்த அசுரவத நாடகம் முடிந்தது. ஆனால் இதில் என்னவொரு அவல நகைச்சுவை என்றால் நேற்றுதான் ‘அசுரர் – தேவர்’ அரசியலைப் பற்றி கமல் பேசி விட்டுச் சென்றார். அதற்கு மறுநாளே அசுரர்களை தீயவர்களாகவும் அழிக்கப்பட வேண்டியவர்களாகவும் செய்யும் நாடகத்தை மக்கள் நிகழ்த்தியது ஒரு முரண்.

சிறப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும், அனிதாவின் பேச்சில் இருந்த அபஸ்வரத்தை ரியோ அவரிடம் நயமாக எடுத்துரைத்தார்.

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22

முன்பே விவரித்த படி அனிதாவின் பேச்சிலிருந்த பிசிறை சுரேஷ் விடுவதாக இல்லை. தன்னை உதாரணம் காட்டி அனிதா பேசியதால் தன்மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டார் சுரேஷ். “நானும்தான் ஆங்கரா இருந்திருக்கேன்... ஒரு ஆங்கர் இப்படி பேசலாமா?’ என்று ‘எச்சி தெறிக்கும்’ பழைய பஞ்சாயத்துக்களையும் தூசு தட்டி வெளியே எடுத்தார்.

ஆனால் அனிதாவின் பேச்சை பாலா, சனம், ஷிவானி போன்ற இளம்தலைமுறையினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக பாராட்டவே செய்தார்கள். ‘நானா இருந்தா, இதுக்கும் மேல செஞ்சிருப்பேன்’ என்றார் பாலா.

சுரேஷின் இந்த நாடகம் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டே போனாலும் மக்கள் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை. அடுத்து சினிமா பாடல்களின் வரிகளை சைகையின் மூலம் தெரிவித்து கண்டுபிடிக்கும் விளையாட்டிற்கு வந்தார்கள்.

‘நாற்காலியில் உட்காரமாட்டேன்’ என்று அங்கும் வீம்பு பிடித்து சூழலின் மகிழ்ச்சியைக் குலைக்கும் வேலையில் ஈடுபட்டார் சுரேஷ். ‘உக்காருங்க தாத்தா’ என்று உரிமையுடன் வற்புறுத்திய கேப்ரியில்லாவிடமும் கடுமையாக கோபித்துக் கொண்டு பிறகு சமாதானமாகப் பேசினார்.

பெரியவர்கள் முரண்டு பிடித்தாலும் இளையதலைமுறையினர் அதைப் புரிந்து கொண்டு பல இடங்களில் விட்டுக் கொடுத்துச் சென்றது சிறப்பான விஷயம். (பாலாஜி மட்டும் இதைச் செய்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது).

சினிமாப் பாடல்களின் வரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு ஆரம்பித்தது. சரியாகவே போய்க் கொண்டிருந்த இந்த விளையாட்டில், தனக்கு கொடுக்கப்பட்ட வரிகளை சரியாக வெளிப்படுத்த முடியாமல் திணறினார் ஷிவானி. ‘பிஸ்தா சும்மாக்கிறா’ என்கிற சொற்களை சமிக்ஞையில் காட்டுவது சிரமம்தான். உணவு சாப்பிடுவது போன்ற சைகையை ஷிவானி தொடர்ந்து காட்ட, ‘கடலை உருண்டையா... உலக உருண்டையா...’ என்று சாப்பிடும் பொருட்களையெல்லாம் மக்கள் அடுக்கினார்கள். ‘இப்படி டான்ஸ் ஆடி காட்டியிருக்கலாம்ல’ என்று சம்பந்தப்பட்ட பாடலின் நடன அசைவை ரம்யா செய்து காட்டியது க்யூட் ஆன காட்சி.

விளையாட்டில் கலந்து கொள்ளாமல் ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும் ‘ரவுடி பேபி’ பாடலை முதலில் கண்டுபிடித்தது சுரேஷ்தான். தனது கோபத்தை குறைத்து விட்டு விளையாட்டில் அவர் ஈடுபாடு காட்டியது நல்ல விஷயம்.

பிக்பாஸ் – நாள் 22
பிக்பாஸ் – நாள் 22
சுரேஷ் x அனிதா டிராமா நள்ளிரவிற்கும் மேலாக இழுத்துக் கொண்டே சென்றது. சுரேஷ் தனது பிடிவாதத்தை விட மறுக்க, அனிதாவால் அந்தக் குற்றவுணர்வுடன் தூங்கச் செல்ல இயலவில்லை. அனிதாவின் சார்பாக இந்த விஷயத்தை ரியோ மிகச்சரியாக கையாண்டார்.

அப்படியும் விடாமல் அனிதா மன்னிப்பு கேட்க முன்வர ‘உன் கால்ல வேணுமின்னா விழறேன்’ என்று சுரேஷ் ஓவர் ஆக்ட் செய்தது அராஜகத்தின் உச்சம். இந்தப் பஞ்சாயத்தை மறுநாளைக்கு அனிதா ஒத்தி வைத்திருக்கலாம். ஆனால் சிறிய விஷயமென்றாலே மண்டைக்குள் நண்டு பிறாண்டும் அனிதாவால் அப்படி சும்மா இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கான மனநெருக்கடியை சுரேஷ் ஏற்படுத்தி விட்டார்.

இனிமேல் – பிக்பாஸ் ‘சிறப்பு நிகழ்ச்சி’ என்றால் ஜாக்கிரதையாகி விட வேண்டும் என்பதே இன்றைய நாளின் நீதி.