Published:Updated:

தெய்வத்திருமகள் அனிதா, ஷிவானியின் அந்த ஜோக், அன்புள்ள ஆல்கஹால் கடிதம்! பிக்பாஸ் – நாள் 36

பிக்பாஸ் – நாள் 36

இந்தக் காட்சிகளையெல்லாம் ஏதோ அவார்டு படம் மாதிரி நீளமாக காட்டிக் கொண்டிருந்தார் பிக்பாஸ். வேறு கன்டென்ட் இல்லை போல. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 36

Published:Updated:

தெய்வத்திருமகள் அனிதா, ஷிவானியின் அந்த ஜோக், அன்புள்ள ஆல்கஹால் கடிதம்! பிக்பாஸ் – நாள் 36

இந்தக் காட்சிகளையெல்லாம் ஏதோ அவார்டு படம் மாதிரி நீளமாக காட்டிக் கொண்டிருந்தார் பிக்பாஸ். வேறு கன்டென்ட் இல்லை போல. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 36

பிக்பாஸ் – நாள் 36

முன்பெல்லாம் தீபாவளி பண்டிகை வரப்போவதன் அறிகுறி என்பது குறைந்தது பத்து நாட்களுக்கு முன்பிருந்தே தெரிய ஆரம்பித்து விடும். சிறுபிள்ளைகள் ‘கேப்’ பட்டாசு வெடிக்கும் சத்தம் என்பது அதன் முக்கியமான அறிகுறி. இன்னொரு பக்கம் பெரியவர்கள் வாங்கப் போகும் துணிமணிகளுக்காகவும் செய்யப்போகும் பட்சணங்களுக்காகவும் திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் எல்லாம் இப்போது மிகவும் சுருங்கி விட்டன. வாட்ஸ்அப் வாழ்த்து, டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பிரபல இனிப்பு கடைகளில் வாங்கிய ஸ்வீட் ஆகியவை முடிந்து மாலையில் இருபதடி நீளத்திற்கு சரவெடிகளை வாங்கி பத்தாயிரம் ரூபாயை சில நிமிடங்களில் வெடித்து தரையையும் வானத்தையும் அழுக்காக்குவதோடு ‘ஹேப்பி தீபாவளி’ ஒரே நாளில் முடிந்து விடுகிறது.

பிக்பாஸ் – நாள் 36
பிக்பாஸ் – நாள் 36

ஆனால், பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்பே அதன் வார்ம்-அப்பை தொடங்கி விட்டார்கள். ‘தீபாவளி... தீபாவளி’ என்கிற பாடலைப் போட்டு மக்களை எழுப்பி விட்டார்கள். சங்கு சக்கரம் போல மக்கள் ஆடத் துவங்கினார்கள். தலைமுடியை விரித்துப் போட்டு விநோதமாக ஆடிய சுச்சியைப் பார்க்க சற்று கலவரமாகத்தான் இருந்தது.

“தமிழில் பேச வேண்டும் என்று சுற்றறிக்கை வந்திருக்கிறது. எனவே ‘குட்மார்னிங்கை’ தவிர்த்து விட்டு ‘காலை வணக்கம்’ என்று சொல்லிப் பழகுவோம்” என்று காலையிலேயே உபதேசத்தை ஆரம்பித்தார் ஆரி ப்ரோ. "‘காலை வணக்கம்’ என்பதை ‘நன்னாள்’ என்று சொல்லலாமா?” என்று தன் தமிழ்த் திறமையைக் காட்டினார் அனிதா. ‘Good day’ என்பதின் தமிழாம் அது. இது பேன்ற ஆர்வக்கோளாறு மாணவர்களை இளம் வயதில் ‘முந்திரிக்கொட்டை’ என்பார்கள்.

**

வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் அடுப்பு மூட்டுவதற்கு முன்பே பிரச்னை புகைய ஆரம்பித்தது. "சாம்பார் வைக்க பருப்பு இல்லையே.. என்ன செய்றது?" என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தார் அனிதா. (நிச்சயம்… இது நன்னாள்தான்).

முன்பு அணி பிரிக்கும் போதே ஆரி மிகத்தெளிவாக கிச்சன் வேலைகளைப் பிரித்துக் கொடுத்து விட்டார். "ஒவ்வொரு வேளையும் என்ன மெனு என்பதை ரியோ சொல்ல வேண்டும். இதற்கு தேவையான பொருட்கள் இருப்பதையும் அதைப் பங்கிட்டு வைப்பதையும் அனிதா பார்த்துக் கொள்ள வேண்டும்".

ஆனால் துவரம் பருப்பு இருப்பதை முதலிலேயே அனிதா உறுதிப்படுத்திக் கொள்ளாததால் காலையில் எழுந்து விழிக்க பிரச்னை ஆரம்பித்தது. ‘பொங்கலுக்கு வத்தக்குழம்பு செய்யலாமே’ என்று ரியோ யோசனை கொடுக்க, "அய்யே... பொங்கலுக்குப் போயா வத்தக்குழம்பு?" என்று முகம் சுளித்தார் அனிதா. இது விஷயமாக அனிதாவிற்கும் ரியோவிற்கும் மெலிதான வாக்குவாதம் வளர்ந்தது. ''சாப்பிடத் தெரியும்ல’' என்று அனிதா சொன்ன கமென்ட்டிற்கு முகம் சுருங்கினார் ரியோ.

பிக்பாஸ் – நாள் 36
பிக்பாஸ் – நாள் 36

துவரம் பருப்பு இல்லாததால் பாசிப்பருப்பு வைத்து ‘டிபன் - சாம்பார்’ வைக்கலாம் என்று அனிதாவிற்கு ஐடியா வர, சனத்திற்கு அப்போதுதான் சமூகப் பொறுப்பு பொங்கிக் கொண்டு வந்து “அப்ப மத்தியானத்திற்கு இன்னொரு சாம்பார் வைக்கணுமா... கேஸ் வேஸ்ட் ஆகும்” என்று ஆட்சேபிக்க ''பிக்பாஸ் கிட்ட நான் பேசிக்கறேன்” என்று கெத்து காட்டினார் அனிதா. உள்ளே போய் அரைமணி நேரம் அழுது மூக்கைச் சிந்தினால் பிக்பாஸ் மிரண்டு ஓக்கே சொல்லிடுவாரு–ன்றது அவர் பிளானாக இருக்கலாம்.

இதற்கிடையில் அங்கு தூங்குமூஞ்சியுடன் வந்த சோம், அனிதாவை நட்புரீதியில் விதம் விதமாக கிண்டல் செய்து கொண்டிருந்தார். “நாங்க கிச்சன் டீம்ல இருந்த போது சமையல் எப்பவோ ரெடி ஆயிடுச்சு... இப்ப இன்னமும் காபி கூட ரெடியாகல. பாத்திரத்திற்குள்ள ரொம்ப எட்டிப் பார்க்காத. விழுந்துறப் போற” என்றெல்லாம் அவர் செய்த கிண்டலை ரசிப்பது போன்ற முகபாவத்துடன் இருந்தாலும் அனிதாவிற்குள் மெல்ல வெறுப்பு ஏறுவது தெரிந்தது.

ஒரு கட்டத்தில், சோமைப் போலவே ரியோவும் இணைந்து கிண்டல் செய்யத் துவங்க, அந்தக் கணத்தில் அனிதாவின் வெறுப்பு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியது.

சோம் கிண்டல் செய்த போது வெளிவராத கோபம், ரியோ செய்ததும் அம்மணிக்கு வர ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில் “ஆரி கூட உங்களுக்கு ஏதாவது பிராப்ளமா?" என்று அனிதா சனத்தை கேட்க “நான் எப்ப பிரச்னைன்னு சொன்னேன்?" என்று சனம் பதிலுக்கு மல்லுக்கட்ட அவர்களுக்குள்ளும் இன்னொரு பக்கம் புகை கிளம்பத் துவங்கியது.

இந்தக் காரணங்களினால் அனிதா அங்கிருந்து விலகிச் சென்று படுக்கையில் வீம்பாக படுத்துக் கொள்ள ரியோ கோபமானார். பிறகு வந்த கேப்டன் ஆரியிடம், "என்ன ப்ரோ... இப்படில்லாம் பண்றாங்க. சாப்பிடற சாப்பாடு ஒட்டாது” என்று ரியோ புகார் செய்தார்.

பிக்பாஸ் – நாள் 36
பிக்பாஸ் – நாள் 36
ஒரு வீட்டில் எந்த வேலையை வேண்டுமானாலும் ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம். ஆனால் சமையல் பணி மட்டும் தொடர்ந்து நடந்தேயாக வேண்டும். பெரும்பாலான வீடுகளில் பெண்கள் இந்தப் பணியை செவ்வனே பொறுப்புடன் செய்வதால்தான் வீடு தொடர்ந்து இயங்குகிறது.

“எங்களுக்கெல்லாம் காலையிலேயே டீ குடிச்சாதான் தெம்பு வரும்.. இப்ப இல்லையே. என்ன பண்றது?!” என்று ஆடிக் கொண்டே நிஷா சொல்ல, “அப்ப சுடுதண்ணி குடிங்க” என்று ஒரு மகத்தான ஜோக்கை (?!) அடித்தார் ஷிவானி. பிக்பாஸ் வீட்டில் அவர் சொன்ன முதல் ஜோக் இது. (ஆர்மிக்காரர்கள் எவரேனும் இருந்தால் இந்தத் திருநாளை கொண்டாடலாம்).

கிச்சனுக்கு திரும்பி வந்த அனிதாவிடம் ‘'ஏன் கோச்சுக்கிட்டே... உன் கோபம் பச்சையா தெரியுது’' என்று ரியோ கேட்க “நான் பருப்பை ஊற வெச்சுட்டுதான் போனேன்" என்று மழுப்பினார் அனிதா. என்னங் அம்மணி... அது என்ன துணியா... ஊற வெச்சி சாயந்திரம் தோய்க்கறதுக்கு.

காலை வேளையில் சமையல் அறையில் பெண்கள் இயங்குவதைப் பார்த்தால்தான் தெரியும், Multi tasking என்றால் என்னவென்று. ஒருபக்கம் விசில் சத்தம் போட, இன்னொரு பக்கம் காய்கறி அரிந்து கொண்டே... இன்னொரு கையால் காபியும் போட்டுக் கொண்டிருப்பார்கள். அனிதாவைப் போல பருப்பை ஊற வைத்து விட்டு படுக்கையில் சாய்ந்து விட்டால் ஒருவேளை உணவு மட்டுமே சமைக்க முடியும். அதுவும் அரைகுறையாக!

“கடைசி வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு அப்புறம் சொல்ல வேண்டியது" என்று காரணமில்லாமல் ரியோ மீது அனிதா கோபித்துக் கொள்ள "நான் இருக்கிற பிரச்னையை தீர்க்கத்தானே முயற்சி செய்தேன்?!” என்று புலம்பினார் ரியோ.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனா, உள்ளே இருந்த துவரம் பருப்பு பாக்கெட்டை வெளியே எடுத்துக் கொடுத்தார். ஆனால் திரிசங்கு சொர்க்கம் மாதிரி ‘டிபன் சாம்பாருக்கான’ ஏற்பாடுகள் நடந்து விட்டன.

பிக்பாஸ் – நாள் 36
பிக்பாஸ் – நாள் 36

பிறகு வந்த ஆரி ப்ரோவும் அனிதாவிடம் மாட்டிக் கொண்டார். “இப்ப துவரம் பருப்பு கிடைச்சிடுச்சு. என்ன பண்ணலாம்?” என்று ஆரி கேட்க "பாசிப்பருப்புல சாம்பார் வைக்க முடியாது” என்று அனிதா கத்த, ‘எரிமலை எப்படி பொறுக்கும்?’ என்பது போன்று சைலன்ட்டாக முறைத்தார் ஆரி.

இந்தக் காட்சிகளையெல்லாம் ஏதோ அவார்டு படம் மாதிரி நீளமாக காட்டிக் கொண்டிருந்தார் பிக்பாஸ். வேறு கன்டென்ட் இல்லை போல.

ஆக... இந்த வாரத்தில், அனிதாவின் புண்ணியத்தில் கிச்சன் ஏரியாவில்தான் அதிக கலாட்டாக்கள் நடக்க வாய்ப்புண்டு. மக்களுக்கு சோறு கிடைப்பதிலும் சிரமம் ஏற்படலாம். ‘'ஏண்டா கேப்டன் ஆனேனோன்னு இருக்கு’' என்று சாம் சலித்துக் கொண்டதைப் போலவே ஆரியின் பாடும் இந்த வாரம் திண்டாட்டமாகலாம்.

இதில் என்ன கூடுதல் வேடிக்கை என்றால் கிச்சன் டீமின் தலைவராக நியமிக்கப்பட்டவர் ‘ரமேஷ்’. ஆனால் வழக்கம் போல் ஐம்பத்தைந்து டிகிரியில் சாய்ந்து கொண்டு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரை யாருமே தொந்தரவு செய்யவில்லை. கொடுத்து வெச்ச மனுஷன்!

“நான் பிரச்னையை தீர்க்கத்தான் ட்ரை பண்றேன். அவ ஏன் எதுக்கு எடுத்தாலும் கோச்சுக்கறா?” என்று அனிதாவின் சமையல் அறை அலப்பறைகளைப் பற்றி வெளியில் வந்து சோமிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ரியோ. "நீ வேணா கிச்சன் டீமுக்கு வந்துடறியா?” என்று அவர் ஷிவானியை நோக்கி கேட்க அவரோ கான்வென்ட் பாப்பா போல ‘வரமாத்தேன் போடா’ என்பது போல் செல்லம் கொஞ்சி பதில் சொன்னார். அம்மணி கிச்சனுக்கு வந்திருந்தால் முந்திரிப்பருப்பில் சாம்பார் வைத்திருப்பார்களாக்கும்!

மறுபடியும் ரியோ கிச்சன் பக்கம் சென்ற போது ‘தெய்வத் திருமகள்’ விக்ரம் மாதிரி அப்பாவியாக கைநீட்டினார் அனிதா. ரியோவிடம் சமாதானத்திற்கு வந்திருக்கிறாராம். கடவுளே... ஒருவேளை உலை கொதிக்கறதுக்குள்ள... ஓராயிரம் பிரச்னைகள்!

**

பிக்பாஸ் – நாள் 36
பிக்பாஸ் – நாள் 36
நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. இதற்காக போட்டியாளர்களின் புகைப்படங்கள் பதிக்கப்பட்ட பட்டாசுகளையெல்லாம் மெனக்கெட்டு உருவாக்கியிருந்தார்கள். ஆர்ட் டிபார்ட்மென்ட்டின் உழைப்பிற்கு ஒரு சபாஷ்! ‘யார் பெயரை நாமினேட் செய்கிறோமோ... அவரின் வெடியிலிருந்து மருந்து அள்ளி இடையிலுள்ள கும்பத்தில் போட வேண்டும்.

‘'எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். கிட்ட நெருங்கவே பயமாக இருக்கிறது'’ என்கிற காரணம் சொல்லப்பட்டு அனிதாவின் பெயர் நிறைய முறை அடிபட்டது. ‘'ஒரு க்ரூப்புடன் மட்டுமே பழகுகிறார்’' என்று சுச்சியின் பெயரும் நிறைய முறை உச்சரிக்கப்பட்டது. சனத்தின் பெயர் சொல்லப்படாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். நாமினேஷனுக்கு இடையில் சனம் அடிக்கடி கிச்சன் பக்கம் செல்ல ‘சனம்... காபி பவுடர் வாங்கி எங்களுக்கு கட்டுப்படியாகலை’ என்று பிக்பாஸ் சொல்ல நினைத்தாரோ... என்னமோ... ‘'அடிக்கடி எழுந்து போகாதீங்க'’ என்று ஆட்சேபித்தார்.

சனம் மற்றும் அனிதாவிற்கு ‘முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ்’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார் சம்யுக்தா. (செமயா இருக்கு).

நாமினேஷன் சடங்கு முடிந்து எவிக்ஷன் பிராசஸிற்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு பெயராக சொல்லப்பட “ஹே... நீயும் இருக்கியா?” என்று மக்கள் பரஸ்பரம் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அனைவருடைய பெயர்களையும் சொல்லிக் கொண்டே வந்தார் பிக்பாஸ். விட்டால் ‘கேமரா 13-ஐ ஆப்ரேட் செய்கிறவர், டீ கொண்டு வருகிறவர், பில்டிங்கின் பக்கத்து வீட்டுக்காரர்’ ஆகியோரைக் கூட நாமினேட் செய்து விடுவாரோ என்று திகிலாக இருந்தது.

இந்த வரிசையில், யாருமே நாமினேட் செய்யாத நிஷாவின் பெயர் உச்சரிக்கப்பட்டபோதே தெரிந்து போயிற்று. இது பிக்பாஸ் திருவிளையாடல் என்று. ‘தீபாவளியை முன்னிட்டு இந்த வாரம் நாமினேஷன் கிடையாது’ என்று பிக்பாஸ் ‘பெப்பே’ காட்ட மக்கள் உற்சாகமானார்கள்.
பிக்பாஸ் – நாள் 36
பிக்பாஸ் – நாள் 36

“சோம்தான் என்னோட போட்டியாளர். ஆனா அவர் போட்டி போடவே மாட்டேன்கிறார். இங்கு தைரியமா அடிச்சு ஆடணும்... வித்தியாசமா திங்க் பண்ணணும்" என்பது போல் சுச்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ‘ராஜமுந்திரி’ பாலாஜி. "அனிதா ரொம்ப அளகா.. இருக்காங்கள்ல" என்று அனிதாவின் புகைப்படத்திற்கு திருஷ்டி சுற்றிப் போட்டார் சுச்சி.

**

அடுத்ததாக ‘எழுதுகிறேன் ஒரு கடிதம்’ என்பது போல் ஒரு டாஸ்க். வருகிற தீபாவளிக்கு யாருடைய இழப்பினால் அதிகம் தவிக்கிறோமோ, அவருக்கு ஒரு கடிதம் எழுதலாம்.

மக்கள் தேர்வு எழுதுவது போன்ற அமைதியுடன் ஆங்காங்கே அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தனர். ‘அன்புள்ள பொண்டாட்டிக்கு’ என்று தலைப்பு மட்டும் எழுதி விட்டு வழக்கம் போல் பித்து பிடித்த போஸில் அமர்ந்திருந்தார் ரமேஷ். சாமும் அர்ச்சனாவும் எழுதும் போதே அதிகம் கலங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ்ப் பேச்சில் சிறந்து விளங்கும் அனிதா ‘போன வர்ஷம்’ என்று எழுதியிருந்ததைப் பார்க்க முடிந்தது.

இங்கு ஒரு இடைச்செருகல். கமல் மட்டும் சுயபுராணம் சொன்னால் கேட்கிறீர்கள் அல்லவா? மற்றவர்களின் கடிதங்களைப் படிப்பதை அநாகரிகம் என்று கருகிறவன் நான். நான் மாணவப் பருவத்தில் இருந்த போது 'நேருவுக்கு மகள் எழுதிய கடிதங்கள்’ என்பது பாடப்பகுதியாக வந்த போது ‘அடுத்தவங்க லெட்டரை படிக்கக்கூடாது’ என்று அந்த போர்ஷனைப் படிக்காமல் தேர்வில் தோற்றுப் போகுமளவிற்கு இளம் வயதிலேயே ‘ஜென்டில்மேனாக’ இருந்தேன்... ஆனால் இந்தக் கட்டுரைக்காக அடுத்தவர்களின் கடிதங்களை எட்டிப் பார்க்க நேர்ந்துவிட்டது.

**

பிக்பாஸ் – நாள் 36
பிக்பாஸ் – நாள் 36

அடுத்த டாஸ்க்கின் பெயர் ‘இப்பவே கண்ணைக் கட்டுதே’. (எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு. பிக்பாஸ்). முழங்கால் உயரமுள்ள ஒரு குச்சியின் மீது நெற்றியை வைத்து பத்து முறை சுற்ற வேண்டும். பின்பு பத்தடி தூரத்தில் உள்ள சுவரைத் தொட்டு விட்டு திரும்ப வேண்டும். இதற்காக ‘கம்பி மத்தாப்பு’, ‘புஸ்வாணம்’ என்று வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்தது. இதற்கு ஆரி நடுவராம்.

வேகமாகச் சுற்றி விட்டு எதிரே நகரும்போது தலை சுற்றி தள்ளாடி வரும். அதையும் சமாளித்து செல்ல வேண்டும். அதுதான் இந்தப் போட்டியில் இருந்த வேடிக்கை.

முதல் போட்டி பாலாஜிக்கும் ரமேஷிற்கும் இடையில் நடந்தது. தலை சுற்றினாலும் சமாளித்துக் கொண்டு வெற்றி பெற்றார் பாலாஜி. அடுத்தது சோம் மற்றும் சாம். ‘பப்பரப்பே’ என்று கீழே விழுந்தார் சோம். (என்னங்க... மார்ஷியல் ஆர்ட்ஸ்லாம் போயிருக்கேன்னு சொன்னீங்க?!) இவருடைய சகாவான அனிதாவும் இதே போல் ‘பொதேர்’ என்று கீழே விழுந்து எழுந்தார்.

ரம்யாவின் கதைதான் இன்னமும் வேடிக்கை. தலை சுற்றி எதிர்திசையில், தெலுங்கு பிக்பாஸ் செட் பக்கம் நோக்கி நடந்தவரைப் பிடித்து அமர்த்தி வைத்தார்கள். இவா்கள் கூட்டமாக விழுந்ததைப் பார்க்கும் போது ‘அப்பாலே போ சாத்தானே’ என்று பேய்களை விரட்டும் ‘ஆவியெழுப்புதல் கூட்டம்’ போலவே ஒரு கணம் தென்பட்டது

பிக்பாஸ் – நாள் 36
பிக்பாஸ் – நாள் 36

ஜாலியாக நடந்து முடிந்த இந்தப் போட்டியில் ‘புஸ்வாணம்’ அணி ‘புஸ்’ ஆகாமல் வெற்றி பெற்றது. கம்பி மத்தாப்பு அணி இரண்டாக மடங்கிக் கொண்டது. போட்டியில் கீழே விழுந்தவர்களைப் பற்றி பிறகு கதறக் கதற கிண்டலடித்து தீர்த்தார் நிஷா. சனத்தின் இமேஜ்தான் அதிக டேமேஜ். ஆனால் நல்லவேளையாக அவர் கிச்சன் ஏரியாவில் இருந்தார்.

**

தீபாவளி பண்டிகைக்கு குறிப்பிட்ட நபருக்கு பிக்பாஸ் கடிதம் எழுதச் சொன்னார்.. அல்லவா? அந்த அந்தரங்கமான கடிதங்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்புவார்கள் என்று பார்த்தால் அதை பொதுவில் படிக்கச் சொன்னார் பிக்பாஸ். (அடப்பாவிகளா!).

தன் மகன் ‘சர்க்கரை’யை பிரிந்திருக்கும் கசப்புணர்வை நெகிழ்ச்சியுடன் சொன்னார் சாம். இப்படியே ஒவ்வொருவரும் தங்களின் பிரிவுத் துயரை வெளிப்படுத்தினர். சிலருடைய கடிதங்கள் வித்தியாசமாக இருந்தன. ‘தன் வீட்டு நாய்க்குட்டியை (சோட்டு) பிரிந்திருப்பதை’ நகைச்சுவையாக எழுதியிருந்தார் சோம்.

"யம்மோவ்... தீபாவளிக்கு நீ செய்யற கறிக்குழம்பு... ஸ்ஸ்ஸ்… அய்யோ. அதை மிஸ் பண்றேன்” என்பது போல் நாக்கைச் சப்புக் கொட்டினார் நிஷா. பாலாஜி தன் அம்மாவிற்கு எழுதிய கடிதம் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தது. பிக்பாஸ் வீட்டில் ராவடியாக நடந்து கொள்ளும் பாலாஜியின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் – நாள் 36
பிக்பாஸ் – நாள் 36

இருப்பதிலேயே ரகளையான கடிதம் ரியோவுடையது. ‘அன்புள்ள ஆல்கஹாலுக்கு. ஒவ்வொரு பண்டிகையையும் உன்னோடு கொண்டாடத் தவறுவதில்லை’ என்று அவர் ஆரம்பிக்க சபை வெடித்து சிரித்தது. தன் மனைவியையும் குழந்தையையும் பிரிந்திருப்பதை அதனுடன் இணைத்திருந்தார் ரியோ. (ரியோவின் ஜாலியான பாணியை அறிந்த பிறகுதான் ‘ஓ... இது வெளியில் அனுப்பப்படும் கடிதம் இல்லை போல...' என்று புரிந்துகொள்ள முடிந்தது.)

பிக்பாஸின் ‘வாய்ஸ்ஓவர்’ ‘ஹேப்பி தீபாவளி’ சொல்வதோடு நிகழ்ச்சி முடிந்தது. இன்றைய நாளின் தலைப்பை ‘எரியாத புஸ்வாணம்’ என்று வைத்திருக்கலாம்.