Published:Updated:

``என் சூழல் வயித்துல இருக்க என் குழந்தைக்குத் தெரியும்!" - நெகிழும் அறந்தாங்கி நிஷா

நானும் என் குழந்தையும் சேர்ந்து இப்போ காமெடி பண்ணிட்டு இருக்கோம். பொறக்குறதுக்கு முன்னாடியே என் குழந்தை காமெடி பண்ண ஆரம்பிச்சிடுச்சு.

ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா
ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா

பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காமெடி ஷோ மேடையை தன் அசாதாரண பேச்சாற்றலால் தெறிக்கவிட்டவர் 'அறந்தாங்கி' நிஷா. இன்று சினிமாவிலும் மின்னத் தொடங்கிவிட்டார். நேற்று நிஷாவுக்கும் அவரின் கணவர் ரியாஸ் அலிக்கும் திருமண நாள். இன்ஸ்டாகிராமில் நிஷாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. கூடவே அவரின் ரசிகர்கள் அவரை செல்லமாகக் கடிந்துகொள்கின்றனர். என்ன விஷயம் என்று விசாரித்ததில் 7 மாத கர்ப்பிணியான நிஷா, ஓய்வில் இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் சென்று வந்திருக்கிறார். அதுமட்டுமன்றி தொடர்ந்து விஜய் டிவியின் சேம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார். கர்ப்பிணிப் பெண் இப்படி ஓய்வில்லாமல் இருக்கலாமா என்று பலர் அவரை அக்கறையுடன் கடிந்து கொள்கின்றனர். சிலர் சற்றுக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து நிஷாவிடமே கேட்டோம்...

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

``நான் துபாய் போய்டு ரெண்டு நாள் முன்னாடிதான் வந்தேன். என்னை ஏர்போர்டல பார்த்த எல்லோருமே ஏன் இந்த சமயத்துல டிராவல் பண்றீங்கன்னு கேட்டாங்க. எல்லோருமே என் மேல இருக்க அக்கறையில், அன்பில்தான் கேட்குறாங்க. இந்த மாதிரி நேரத்துல டிராவலே பண்ணக் கூடாதுன்னு சிலர் அட்வைஸ் பண்ணாங்க. ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப தைரியமா இருக்கேன். வயித்துல இருக்க என் பிள்ளையும் தைரியமா இருக்கு. என்னோட தன்னம்பிக்கைய இப்போவே என் குழந்தைக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன்.

இந்த இடத்துக்கு வர என் வாழ்க்கையில் நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். கொஞ்சம் சோர்வாகி ஒரு வருஷம் ரெஸ்ட் எடுத்தேன்னா இத்தனை நாள் நான் ஓடி உழைச்சதுக்கு அர்த்தமே இல்லாம போய்டும். என்னால முடிஞ்ச அளவுக்கு நான் உழைக்கிறேன். நானும் என் குழந்தையும் சேர்ந்து இப்போ காமெடி பண்ணிட்டு இருக்கோம். பொறக்குறதுக்கு முன்னாடியே என் குழந்தை காமெடி பண்ண ஆரம்பிச்சிடுச்சு. ஒரு பேமெண்ட்ல ரெண்டு பேர் வேலை பார்க்குறோம். என் கணவர்கிட்ட பெர்மிஷன் கேட்டிருக்கேன். குழந்தை பிறந்ததும் ரொம்ப நாள் ஓய்வெடுக்க மாட்டேன். புரொகிராம் கிளம்பிடுவேன்னு சொல்லியிருக்கேன். அவர் உன் உடல்நிலை ஒத்துழைச்சா தாராளமா போன்னு சொன்னார். நான் இவ்வளவு ரிஸ்க் எடுக்க காரணம் என் வேலை எனக்கு அவ்வளவு பிடிக்கும். என் வாழ்க்கையில நான் நிறையா அடி வாங்கியிருக்கேன். போராடியிருக்கேன். என் கணவர் அரசு வேலை பார்த்தாலும் பொருளாதார ரீதியா கஷ்டத்துலதான் இருக்கோம். எல்லா போராட்டத்தையும் தாண்டி மேல வர்றது ரொம்ப கஷ்டம். அந்த இடத்தை நான் தக்க வெச்சிக்க நினைக்கிறேன். என் வயித்துல இருக்கும் என் குழந்தைக்காகவும் சேர்ந்துதான் ஓடுறேன். சில சமயம் கால்கள் வீங்கிடும். சோர்வா இருக்கும். அந்தச் சமயத்துல என்னோட காமெடி ஷோ வீடியோக்களைப் பார்ப்பேன். எனக்கு நானே என்கரேஜ் பண்ணிப்பேன். என்னால முடியும்... அவ்வளவு சீக்கிரத்துல சோர்ந்திடக் கூடாதுன்னு நினைச்சிப்பேன்.

ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா
ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா

டெலிவரிக்கு முன்னாடிநாள்கூட நான் மேடையில் நடிச்சிட்டுதான் இருப்பேன்னு என் கணவர்கிட்ட சொல்லுவேன். அதற்கு அவர் `நீ விஜய் டிவியிலேயே குழந்தையையும் பெற்றெடுத்திடு'ன்னு கலாய்ப்பார். என்னோட இந்த சுறுசுறுப்பும் உற்சாகமும் நம்பிக்கையும் என் குழந்தைக்கும் தொற்றிக்கொள்ளும். என் குழந்தைகிட்ட இப்போவே சொல்ல ஆரம்பிச்சிட்டேன். `அம்மா உனக்கும் சேர்த்துதான் ஓடுறேன். பொறந்த உடனே நீயும் என்னை மாதிரி சுறுசுறுப்பா இருக்கணும்’னு சொல்லிட்டு இருக்கேன். என் குழந்தை என்னை புரிஞ்சிக்கும் ’’ என்று நெகிழ்ந்தவரிடம் திருமண நாளுக்கு கணவர் என்ன கிஃப்ட் கொடுத்தார் என்று கேட்டேன்.

அதை ஏன் கேட்குறீங்க... நள்ளிரவு 12 மணிக்கு கிஃப்ட் கொடுப்பாருன்னு விழிச்சிகிட்டு இருந்தேன். ஒண்ணும் கொடுக்கல. 1 மணி வரைக்கும் பேசிட்டு இருந்தோம் அப்பவும் கொடுக்கல. காலைல கொடுப்பாருன்னு பார்த்தேன். அப்பவும் கொடுக்கல. அப்புறம் வெட்கத்தைவிட்டு நானே கேட்டேன். ஏங்க... கிஃப்ட் ஏதும் கொடுக்கலையான்னு. அதற்கு அவர் வயித்துல வளரும் நம்ம புள்ளதான் இந்த வருஷ கிஃப்ட்ன்னு சொல்லிட்டார். அப்புறம் வழக்கம்போல் புடவை எடுத்துக் கொடுத்தார். நானும் அவருக்கு மேட்சிங்கா டிரெஸ் எடுத்துக் கொடுத்தேன். இதையெல்லாம் தாண்டி அவரோட புரிதல், அன்பு இதுதான் அவர் எனக்குத் தினம் தினம் கொடுக்குற பரிசு. தினமும் உறவினர்கள் அவருக்கு கால் பண்ணி ``அவளை ஏன் ஷூட்டுக்கு அனுப்புற. வீட்லையே இருக்கச் சொல்லு’’ன்னு சொல்றாங்க. அதற்கு அவர் `நிஷாவுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்யட்டும். அந்தக் குழந்தைக்கு ஏதும் ஆகாம அவ பார்த்துப்பா’ன்னு சொல்லுவார். இந்தப் புரிதல்தான் அவர் எனக்குக் கொடுக்குற மிகப்பெரிய கிஃப்ட்.

ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா
ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா

அப்புறம் கடவுள் புண்ணியத்துல எனக்கு பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தையா இருக்கணும். என்னோட இந்த ஆசை நிறைவேறிட்டா இந்த வருஷம்தான் மகிழ்ச்சியான வருஷம். எந்தக் குழந்தையா இருந்தாலும் ஏத்துக்கணும்னு நான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவேன். ஆனால், பெண் குழந்தை மீதான என் ஆசை அதிகரிச்சிட்டே இருக்கு. என் அம்மாவும் நானும் எல்லா சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் பலமா இருந்தோம். அதே மாதிரி எனக்கு என் பொண்ணு பக்கபலமா இருக்கணும்’’ என்றார் ஏக்கத்துடன்.