Published:Updated:

"அம்மா அர்ச்சனா... ஆங்ரி புள்ள பாலா... அன்பு காட்டுங்க மக்களே" - பிக்பாஸ் நாள் - 24

பிக்பாஸ் – நாள் 24

அம்மி என்று பாலா சொன்னது அர்ச்சனாவின் காதில் ‘மம்மி’ என்று விழுந்து விட்டதோ என்னமோ... "டேய் நீ என் புள்ளடா” என்று கலங்க பாலாவும் பதிலுக்கு கலங்கினார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 24

Published:Updated:

"அம்மா அர்ச்சனா... ஆங்ரி புள்ள பாலா... அன்பு காட்டுங்க மக்களே" - பிக்பாஸ் நாள் - 24

அம்மி என்று பாலா சொன்னது அர்ச்சனாவின் காதில் ‘மம்மி’ என்று விழுந்து விட்டதோ என்னமோ... "டேய் நீ என் புள்ளடா” என்று கலங்க பாலாவும் பதிலுக்கு கலங்கினார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 24

பிக்பாஸ் – நாள் 24
அர்ச்சனாவிற்கும் பாலாவிற்கும் நிகழ்ந்த மோதல் ஆன்ட்டி கிளைமாக்ஸில் முடிந்தது. ‘அம்மா... மகனே...’ என்று பரஸ்பரம் பாசமழை பொழிந்து கொண்டார்கள். சுபம்!

(‘ஆராரிராரோ... நான் இங்கே பாட...' - என்கிற இந்தப் பாடலை சம்பந்தப்பட்ட சேனல் உபயோகிக்கக் கூடாது என்று யாராவது வழக்கு போட்டு தடையுத்தரவு வாங்கினால் நல்லது. கடந்த ஒரு நூற்றாண்டாக சென்ட்டி பேக்ரவுண்டில் சிடி தேயத் தேய இந்தப் பாடலைப் போட்டு இம்சை தருகிறார்கள்).

ஒரு பக்கம், ‘புது அம்மா’ அர்ச்சனாவின் மடியில் பாலா படுத்துக் கொள்ள, இன்னொரு பக்கம் ஷிவானி பழம் ஊட்ட... ‘வாழ்வுதான்’ என்கிற ரேஞ்சிற்கு பாலாவின் சொகுசு ராஜாங்கம் நடக்கிறது. ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ என்கிற கதையாக, ஒரு பக்கம் ஷிவானிக்கு வண்ணம் பூசிக் கொண்டே இன்னொரு பக்கம் சனத்தின் தோளில் கைபோட்டுக் கொண்டு போகிறார் பாலா.

பிக்பாஸ் – நாள் 24
பிக்பாஸ் – நாள் 24

‘கொடுத்து வெச்ச மனுஷன்யா’ என்று ரியோ உள்ளுக்குள் பொருமியிருக்கக்கூடும். அதுவரை தனக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்த அர்ச்சனா, ‘பாலா’வை மகனே என்றழைத்து உறவு கொண்டாடுவது அவருக்குள் திகைப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘வீடு பெருக்குதல்’ பிரச்னை மேலும் பெருகிக் கொண்டிருந்தது.

"குத்தினா கத்துவேன்... கத்தினா குத்துவேன்’’ என்கிற மாதிரி இடக்கு மடக்காகவே பேசிக் கொண்டிருந்த பாலாவின் அலப்பறையை சமாளிக்க முடியாமல் அர்ச்சனாவும் வேல்முருகனும் திணறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரியோ ஒரு கட்டத்தில் ‘provoke’ என்கிற வார்த்தையை வைத்து பாலாவை ‘லாக்’ செய்ய முயன்றார்.

இயக்குநர் விசு நடிக்கும் படங்களைக் கவனித்தால், உணர்ச்சி வெடிக்கும் காட்சிகளில் அவர் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வசனம் பேசுவார். அந்தப்பாணியில் ‘provoke’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி மூச்சு விடாமல் பேசினார் ரியோ. ஒரு கட்டத்தில் அம்மையப்ப முதலியாக மாறி ‘அப்ப... வீட்டை விட்டு வெளியே போடா... ரகுவரா’ என்று சொல்லி விடுவாரோ என்று கூட தோன்றியது.

அத்தனை பேர் கார்னர் செய்தவுடன் அதுவரை திமிறிக் கொண்டிருந்த பாலா, "நான் தப்பு செய்யலைன்னு சொல்லவேயில்லையே" என்று சற்று இறங்கி வந்தார். ஆக மற்றவர்கள் அவரை எழுப்பியதை விடவும் அர்ச்சனா சொன்னதுதான் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு அர்ச்சனாதான் முதன்மையான பிரச்னை என்பதை ஒருவழியாக இணைந்து கண்டுபிடித்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 24
பிக்பாஸ் – நாள் 24

அர்ச்சனா மீண்டும் ‘துர்க்கை அம்மனாக’ மாறி பாலாவிற்கு ஆவேசமாக பதில் சொல்வது சரி. ஆனால் வேல்முருகன் எதையோ விளக்க வரும் போது அவருக்கு வாய்ப்பளிக்காமல் ‘வாயை மூடு வேலு’ என்று அவர் அதட்டுவது முறையில்லை. "கேப்டன் சொல்வதை கேட்க மாட்டியா?” என்று அர்ச்சனா இறுதியாக கேட்க “முடியாது" என்று சொல்லி விட்டு, “ஆனா.. சொல்ற விதத்துல சொல்லணும்" என்று ‘கத்தினா குத்துவேன்’ பாணியை மறுபடியும் பாலா ஆரம்பிக்க...

"யப்பா... சாமிகளா! துடைப்பத்தை எங்க கிட்ட கொடுங்க... நாங்க வேணா பெருக்கி வெச்சுட்டு வந்துடறோம்" என்று பார்வையாளர்கள் கதறும்படியாகி விட்டது. அப்படியொரு இம்சையான வாக்குவாதம்.

“முன்னரே சொல்லிவிட்டு தூங்கியிருந்தால் யாரும் உங்களை தொந்தரவு செய்திருக்கப் போவதில்லை" என்பதுதான் அனைவரும் சொல்லும் வாதம். ஆனால் அதற்கும் பாலா தயாராக பதில் வைத்திருப்பார். “அப்படிச் சொல்றதுக்கு முன்னாடியே தூக்கம் வந்துருச்சுங்க. தூக்கத்துல எப்படிச் சொல்ல முடியும்?” என்பார்.

பின்னர் சம்யுக்தாவிடம் சென்று பேசிக் கொண்டிருந்த பாலா, “காலைல நானும் வேல்முருகன் அண்ணாவும்தான் முழு அறையைக் கூட்டினோம். 'வாக்யூம் க்ளீனர் வந்துடட்டும்’னு ரமேஷ் அண்ணாவும் சொன்னாரு. இப்ப யாரும் அதைப் பத்தி வாயைத் திறக்க மாட்டேங்கறாங்க” என்று அனத்தினார்.

சபையில் என்னதான் கெத்தாக பேசினாலும், பாலாவிடமிருந்த தவற்றை பெரும்பாலோனோர் சுட்டிக் காட்டியதும் அவருக்குள் இருந்த குற்றவுணர்ச்சி விழித்துக் கொண்டது போல. கார்டன் ஏரியாவிற்குச் சென்று ரகசியமாக கண்கலங்கினார். பிறகு அடுத்த கணமே, பருத்தி வீரன் கார்த்தி மாதிரி ‘அழாதடா வீரா...’ என்று சுதாரித்து கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து வந்தார்.

ஒரு டானுக்கு அவரது வலது கரங்கள் வரிசையாக வந்து மரியாதை செலுத்துவது போல, சண்டையிட்டு ஆவேசமாக அமர்ந்திருந்த அர்ச்சனாவிற்கு ரியோ, சோம், ரமேஷ் ஆகியோர் வரிசையாக வந்து ஆதரவு அளித்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 24
பிக்பாஸ் – நாள் 24

வேல்முருகன் எப்படிப் பேசுவாரோ அப்படியே தலையாட்டி ரியோ செய்து காண்பித்து கிண்டல் அடித்த காட்சி சுவாரஸ்யம்.

இரவு... “போய் அர்ச்சனா கிட்ட பேசுடா” என்று பாலாவை சுரேஷ் உசுப்பிக் கொண்டிருக்க சாம் உள்ளிட்டவர்கள் அதை வழிமொழிந்தார்கள். வரலாற்றுச் சிறப்பு கொண்ட அந்தச் சந்திப்பு நள்ளிரவிற்கு மேல் நிகழ்ந்தது.

“நான் அம்மி அரைக்கணும்னு அந்த அர்த்தத்துல சொல்லல. அது மட்டுமில்லாம... பிக்பாஸ் வீட்ல அம்மியே கிடையாது. இந்தக் காலத்து பொண்ணுங்களுக்கு அம்மின்னா என்னன்னே தெரியாது. அப்படியிருக்கும் போது அதை நான் நிஜமா சொல்லியிருக்க முடியுமா?” என்று பாலா தன்னிலை விளக்கம் அளிக்க, அம்மி என்று பாலா சொன்னது அர்ச்சனாவின் காதில் ‘மம்மி’ என்று விழுந்து விட்டதோ என்னமோ... "டேய் நீ என் புள்ளடா” என்று கலங்க பாலாவும் பதிலுக்கு கலங்கினார்.

ஆனால் இதற்குப் போய் தன் மகளின் மீது அர்ச்சனா சத்தியம் செய்வதெல்லாம் சற்று ஓவர். ஒருவழியாக இருவரும் பரஸ்பரம் பாசமழை பொழிந்து சமாதானம் ஆனார்கள். "டேய்... உனக்கு அன்பு வேணும்டா. அதை நான் தர விரும்புறேன். அதைப் புரிஞ்சுக்கோ” என்று அர்ச்சனா நெகிழ ‘'இப்படி யாரும் தந்ததில்ல. ஸாரி... மம்மி" என்றார் பாலா.

“அழுது முடிச்சிட்டீங்களா... கூட்டம் கலைஞ்சு போனா நாங்க இங்க லைட்டை ஆஃப் பண்ணிடுவோம். கரண்ட் பில் அதிகமாவுது" என்றபடி பிக்பாஸ் அங்கு வந்து விடுவாரோ என்று நினைக்கும்படி இந்த சென்டி டிராமா நீண்டு ஒருவழியாக முடிந்தது.

“நான் ரெண்டு வாரத்துல போயிடுவேன். நீ கடைசி வரை இருக்கணும்டா... ஜெயிச்சுட்டு வரணும்...” என்று பாலாவிடம் அர்ச்சனா சொல்லிக் கொண்டிருந்ததை ஒருவேளை ரியோ அருகிலிருந்து கேட்டிருந்தால், 'அபூர்வ சகோதரர்கள்' கமல் மாதிரி, சம்பந்தப்பட்ட பின்னணி இசையுடன் கண்கலங்கியிருப்பார்.

பிக்பாஸ் – நாள் 24
பிக்பாஸ் – நாள் 24

பாலா ஏதோ ஜெயிலில் இருப்பது போலவே, "நீ நல்லவனா வெளில வரணும்டா. மக்கள் உன்னை நல்லவனா நெனக்கணும். வல்லவனா திரும்பி வா" என்றெல்லாம் உபதேசங்களை அடுக்கிக் கொண்டிருந்தார் அர்ச்சனா.

அர்ச்சனாவும் இங்கு ஒரு போட்டியாளர்தான். ஆனால் அவர் ஏதோ மற்றவர்களை ஊக்கப்படுத்த வந்த ‘தெய்வத்தாய்’ மாதிரி ‘நான் ரெண்டு வாரத்துல போயிடுவேன்’ என்று சொல்வது ஸ்போர்ட்டிவ்னஸ் இல்லை.

24-ம் நாள் காலை. ‘தங்கம்’ டாஸ்க் முடிந்து ரெண்டு வாரங்களாகி விட்ட நிலையில் ‘தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன்... நானே’ பாடலை தாமதப் பொருத்தமாக போட்டார் பிக்பாஸ். ‘ரவுடிப்பய ரொமான்ட்டிக் ஆனேன்’ என்கிற வரி ஒலித்த போது கேமரா பாலாவைக் காட்டியது பயங்கர குறும்பு.

“நேத்து நைட் மீட்டிங் எப்படிப் போச்சு?” என்று பாலாவின் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் உத்தேசத்துடன் வந்தார் சனம். "அதெல்லாம் இருக்கட்டும். அம்மி அரைக்கறது பொண்ணுங்க ஆரோக்கியத்திற்கு நல்லது. டெய்லி அம்மி அரைச்சா. உன் மூக்கு பெண்டு நிமர்ந்துடும். செய்றியா?” என்பது போல் பேச்சை மாற்றி விட்டார் பாலா.

“நீ சொல்றதுல்லாம் கரெக்ட் பாலா. திருக்குறள் மாதிரி இருக்கு. ஆனா நீ சொல்ற டோன்தான் சரியில்ல" என்று சனம் உபதேசம் அளிக்க "அந்த மாதிரி செட்டிங்ஸ் இந்த மாடல்ல இல்லையே" என்று பேசியபடி இருவரும் வீட்டின் உள்ளே நடந்தார்கள்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. காதல் செய்யும் நபர்கள் தேவையான தருணங்களில் மட்டும் தங்களின் நண்பர்களை உபயோகித்துக் கொள்வார்கள். அது போல் அதுவரை சனத்திடமிருந்து தள்ளி நடந்து கொண்டிருந்த பாலா, திடீரென சனத்தை பாசத்துடன் அழைத்து தோளில் கை போட்டு “நான் என்ன சொல்றன்னா?” என்றபடி தொடர்ந்து நடந்தார்.

பிக்பாஸ் – நாள் 24
பிக்பாஸ் – நாள் 24

'எலி ஏன் இப்படி திடீர்னு ஜீன்ஸ் போட்டுட்டு போகுது?’ என்று பார்த்தால் எதிரே ஷிவானி வந்து கொண்டிருந்தார். பாலா பொஸஸிவ்னஸை கிளறி விடுகிறாராம். பெண்களுக்கு இதெல்லாம் புரியாமல் இருக்குமா என்ன? "டேய். என்னைப் பார்த்துப் பேசுடா” என்று சரியாக பாயின்ட்டைப் பிடித்தார் சனம்.

“யப்பா... போட்டியாளர்களே! நேத்து குடுமிப்பிடி சண்டை போட்டு தங்கம்ன்ற பேர்ல எதையோ சேத்து வெச்சிருக்கீங்கள்ல... அதையெல்லாம் எடுத்துட்டு வாங்க. உங்க லட்சணத்தைப் பார்த்துடுவோம்" என்று அடகுக் கடை சேட்டு மாதிரி பிக்பாஸ் அழைத்தார்.

“சார்... பர்ஸ் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்க சார்! பஸ் டிக்கெட் வாங்க கூட காசில்லை" என்கிற மாதிரி ஆரி பரிதாபமாக அமர்ந்திருக்க “லாக்கரை திறங்கப்பா” என்று சுரேஷ் உற்சாகமாக குரல் கொடுத்தார். பாலாஜியின் சூட்கேஸ்தான் அந்த ‘லாக்கர்’ போலிருக்கிறது. பாடிபில்டர் பாலாஜியிடம் இருந்தால் யாரும் கை வைக்க மாட்டார்கள் என்று ரம்யா டீம் நினைத்து விட்டது போல.

ஒவ்வொருவராக வாக்குமூல அறைக்குச் சென்று டூப்ளிகேட் தங்கத்தைக் கொட்ட அதை எடை போடுவதற்காக மிஷின் எல்லாம் வைத்திருந்தார் பிக்பாஸ். ‘துணியோட போடணுமா?’ என்று புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டார் நிஷா. எடை கூட வரும் என்பது அவரின் கணக்கு போல.

இதில் அதிகபட்சமான எடை கொண்ட ‘தங்கத்தை’ பாலா சேகரித்து வைத்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்ரியல்லாவும் ரம்யாவும் இருந்தார்கள்.

‘யார் அதிக எடை தங்கம் வைத்திருக்கிறார்களே... அவர்கள்தான் வெற்றியாளர்’ என்றுதானே அறிவிக்க வேண்டும்? அதுதானே நியாயம்? ஆனால் கோக்குமாக்கு விதிகளுக்குப் பெயர் போன பிக்பாஸ் அதைச் செய்யவில்லை. பித்தலாட்டமாக ஒரு காரியம் செய்தார்.

பிக்பாஸ் – நாள் 24
பிக்பாஸ் – நாள் 24

யார் எவ்வளவு தங்கம் வைத்திருந்தார்கள் என்பதை அறிவிக்காமல், வீடு மூன்று அணிகளாகப் பிரிந்து கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாம். எந்தக் கூட்டணி அதிக எடை தங்கத்தை வைத்திருக்கிறதோ அவர்களே வெற்றியாளர்களாம்.

தேர்தல் காலக் கூட்டணி போல கசகசவென்று பேரங்களும் வாக்குவாதங்களும் நடந்தன. குரூப்பிஸம் இல்லையென்று ரியோ தொடர்ந்து பிடிவாதம் காட்டிக் கொண்டிருக்கிறார், இல்லையா?! அது தவறு என்று நிரூபிக்கும் விஷயத்தை பிக்பாஸ் வீடே தன்னிச்சையாக செய்து கொட்டியது.

அர்ச்சனா தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு ஒன்று கூட்டணி அமைக்க, பாலாவின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு உருவானது. ஷிவானியுடன் சிலர் இணைந்தார்கள். இதுதான் பிக்பாஸ் வீட்டின் குழுக்கள். இதை அவர்களே அம்பலப்படுத்திக் கொண்டார்கள்.

பாலாவிடம் அதிக அளவு தங்கம் இருப்பது அனைவருக்கும் தெரியும். எனவே அவரிடம் கூட்டணி கொள்ள சிலர் ஆசைப்பட்டார்கள். ‘டேய் என்னைச் சேர்த்துக்கோடா’ என்று துவக்கத்திலேயே வாய் விட்டு கேட்டு விட்டார் சனம்.

ஆனால் ‘காரியக்கார கந்தனான’ பாலா, தன்னுடன் முதலில் இருந்தே கூட்டணி வைத்திருந்தவர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்று சொல்லி விட்டார். இதனால் சனத்திற்கு வருத்தம். அதை விடவும் ஷிவானிக்கு அதிக வருத்தம். ‘தேவைங்கற போது மட்டும் அன்பு காட்டறான்... மத்த சமயத்துல அல்வா கொடுத்துடறானே’ என்று அவர் வருத்தமடைந்து, "நான் தனி அணியா நிக்கறேன்” என்று அறிவிப்பு செய்தார். நடனமாடும் போது தனியாக நின்று ஆடும் அதே பழக்கத்தை இங்கும் வீறாப்பாக காட்ட முடிவு செய்தார் போலிருக்கிறது.

ஷிவானியை தனியாக விட மனமில்லாமல் ரம்யாவும் கேப்ரியல்லாவும் அவருக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தார்கள். ‘எட்டு பேர் கொண்ட அணி’ பலமாக இருக்கும் என்பதால் அதை ஆட்சேபித்தார் பாலா. ‘நான் நியாயமா விளையாட முயற்சி பண்றேன்’ என்று அவர் சொன்னது ஒருவகையில் அது சரிதான். அதிக தங்கம் வைத்திருப்பவர்கள் ஒரு அணியாகவும், இல்லாதவர்கள் ஓரணியாகவும் இருக்கும் போது சமநிலையற்ற தன்மை ஏற்படும்.

தனது தங்கத்தைப் பறிகொடுத்த ஆரியை தியாகம் செய்ய அர்ச்சனா முடிவு செய்ய, அதையும் ஆட்சேபித்தார் பாலா. "தங்கம் நிறைய வைத்திருப்பவர்கள் இன்னொரு அணிக்கு ஆதரவு அளிப்பதுதான் சிறந்ததாக இருக்கும்" என்பது அவரது கருத்து. மீண்டும் கசமுசா ஏற்பட்டு அர்ச்சனா இருக்கும் அணிக்குத் தாவும் ராஜதந்திரத்தை பாலா முடிவு செய்து அதை ரகசியமாக சுரேஷ் குழுவிடம் சொல்லி விட்டுச் சென்றார். ‘தாய் இருக்கிற இடத்தில்தானே. பிள்ளையும் இருக்கும்’ எனவே கன்றுக்குட்டி பசுமாட்டைத் தேடி ஓட, இருவரும் பாசத்துடன் கட்டிக் கொண்டார்கள்.

ஒருவழியாக கூட்டணி அமைந்து முடிந்ததும் அர்ச்சனா டீம் அதிக அளவு தங்கத்தை வைத்திருப்பதாக தெரிவித்த பிக்பாஸ், அந்தக் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவித்தார். பிறகுதான் அங்கு ஒரு ட்விஸ்ட். வெற்றி பெற்ற அணி எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லையாம். சொந்தமாக விதிகளை உருவாக்கிக் கொண்டு மற்றவர்களிடம் வேலை வாங்கலாமாம்.

அதுவரை பிக்பாஸிடம் ‘லவ்யூ’ என்று கொஞ்சிக் கொண்டிருந்த நிஷா இதைக் கேட்டதும், ‘டாய். பிக்பாஸா... இதெல்லாம் நல்லால்ல... ஒத்துக்கவே முடியாது’ என்று பொங்கி விட்டார்.

எதிர்தரப்பு ஆசாமிகளை எப்படியெல்லாம் இம்சை செய்யலாம் என்று வெற்றி பெற்ற அணி ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருந்தது. புலிகேசி ரேஞ்சிற்கு ஐடியாக்களை சிதற விட்டார் ரியோ.

அர்ச்சனா, சோம் ஆகியோர் உணவருந்திக் கொண்டிருக்கும் போது ‘ஷிவானி ஆட வேண்டும்... ரம்யா பாட வேண்டும்’ என்று கட்டளையிட்டார் இளவரசர் சோம். “ஹே... ஹே... என் ஸ்வப்னா புத்திசாலிடா. அவளை யாரும் ஏமாத்த முடியாது” என்கிற வசனம் போல் இங்குதான் ரம்யாவின் சமயோசிதம் வெளிப்பட்டது. ‘போடா... போடா... புண்ணாக்கு. போடாத தப்புக் கணக்கு’ என்கிற பாடலை அப்போது ரம்யா பாட, சோம் முகத்தில் அசடு வழிந்தது. தான் அசிங்கப்பட்டது போதாது என்று, "சரி... அடுத்து அர்சசனாவிற்கு ஒரு பாட்டு பாடுங்க" என்று அவரையும் கோத்து விட முயன்றார் மங்குனி இளவரசர்.

பிக்பாஸ் – நாள் 24
பிக்பாஸ் – நாள் 24
என்னதான் வெற்றி பெற்றாலும் அர்ச்சனா அணி மிதவாத குறும்புகளையே செய்தது. எதிர் அணியை கடுமையாக புண்படுத்தும் விதத்தில் எதையும் செய்யவில்லை. ரியோ இது தொடர்பான எளிய விதிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

வேல்முருகன் பாட ஆரம்பிக்கும் போதெல்லாம் மற்றவர்கள் வந்து தன்னால் ஆட வேண்டுமாம். (அய்யோ! வேல்முருகன் பாட ஆரம்பித்தால் அது ‘சிறப்பு’ நிகழ்ச்சியாக எட்டு மணி நேரத்திற்கு நீளுமே?) ‘Juke box’ என்றவுடன் ஆஜித் பாட வேண்டுமாம். (அப்படியாவது அவரை பாட வைங்கப்பா!).

தாவிக் கொண்டே சென்று வானிலை அறிக்கை வாசிக்க வேண்டும் என்கிற கட்டளையை அனிதாவிடம் இட்டார் ரியோ. மற்ற சமயங்களில் ‘அய்யாங்’ என்று குழந்தைத்தனமாக பேசினாலும் செய்தி வாசிக்கும் தருணம் வருகிற போது மட்டும் அனிதாவின் குரலில் ஒரு வசீகரமான மாயம் ஏற்பட்டு விடுகிறது. ‘ரீவைண்ட்’ பண்ணுங்க என்று ரியோ சொல்ல "அய்யாங். எப்படி முடியும்?” என்று சிணுங்கி மறுபடியும் குழந்தை மோடிற்கு போனார் அனிதா.

‘சம்பந்தமில்லாம வந்து வாதம் பண்ண மாட்டேன்’, ‘முந்திரிக்கொட்டை மாதிரி முந்த மாட்டேன்’ என்கிற வாக்கியங்களை அதிக முறை சொல்ல வைத்து சனத்தை ஜாலியாக பழிவாங்கினார் பாலாஜி.

‘இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்று பிக்பாஸ் அறிவித்த அடுத்த கணமே அதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் வீறு கொண்டு எழுந்து தங்களை இம்சித்தவர்களை பழிவாங்க கிளம்பினார்கள். வேல்முருகன் படுக்கையில் சென்று பதுங்கிக் கொள்ள, சோம் பாத்ரூம் நோக்கி ஓடினார். ரியோவை துரத்திச் சென்று அனிதாவும் நிஷாவும் இணைந்து தூக்கிப் போட்டு மிதித்தார்கள்.

ஆனால், அத்தனைக் களேபரத்திற்கு இடையிலும் ஒரு காவியக் காட்சி எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. தனக்கு பழம் ஊட்டச் சொல்லி ஷிவானிக்கு ‘இனிய’ தண்டனையை பாலா சொல்லியிருப்பார் போலிருக்கிறது. ஆனால் பிக்பாஸ் தண்டனையை நிறுத்தியும் ‘இன்னும் சாப்பிடுங்க... மாமா’ என்பது போல் தொடர்ந்து பாலாவிற்கு ஊட்டிக் கொண்டிருந்தார் ஷிவானி. (என்னவே நடக்குது இங்க?)

பிக்பாஸ் – நாள் 24
பிக்பாஸ் – நாள் 24

"ஹலோ... டாஸ்க் நிறுத்தியாச்சு... கெளம்பு... காத்து வரட்டும்" என்று ஷிவானியை ஜாலியாக எச்சரித்தார் சம்யுக்தா.

“என்ன நடந்தது?” என்று காலையில் சனம் கேட்ட போது சொல்லாமல் மழுப்பிய பாலா, இப்போது ‘வீடு பெருக்குதல்’ பஞ்சாயத்தைப் பற்றி விலாவாரியாக ஷிவானியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். "நடந்ததைப் பார்த்து நான் கூட உங்க மேலதான் தப்பிருக்குன்னு நெனச்சிட்டேன்" என்று மீண்டும் அணி மாறினார் ஷிவானி.

சோகமான முகத்துடன் நடந்து கொண்டிருந்த சனத்தை நோக்கி "என்னடா. ஆச்சு... டல்லா இருக்கே. இங்க வா... அழணும்னு தோணிச்சுன்னா... அழுதுடு... நான் கூட அதைத்தான் டைம்பாஸிற்கு பண்ணுவேன். ரொம்ப ஜாலியா இருக்கும்” என்று வலுக்கட்டாயமாக சனத்தைக் கூப்பிட்டு அழ வைத்தார் அனிதா.

ஷிவானியுடன் பாலா கடலை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து சனம் அழுதாரோ என்னமோ... ஆனால் கடலையை விட்டு விட்டு முந்திரியை பிடித்துக் கொண்டார். "நான் ஸ்போர்டிவ்வா இருக்கறதை பாலா யூஸ் பண்ணிக்கிட்டார். ‘முந்திரிக்கொட்டை’ன்னு எனக்குப் புரியாததை சொல்ல வெச்சு என்னை காமெடி பீஸாக்கிட்டார்” என்று சனம் கலங்க, அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு சிரிப்புதான் வந்தது.

ஒன்றுமே தெரியாதது போல் விசாரிக்கும் பிக்பாஸ் போல, அங்கு வந்த பாலா "என்னாச்சு?” என்று விசாரிக்க காரணம் சொல்லப்பட்டது. "ஹலோ... அது டாஸ்க்கிற்காக பண்ணது. சொல்லி முடிச்சீட்டிங்க... அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு! இங்க யாரும் நண்பர்கள் கிடையாது. புரிஞ்சுக்கோங்க" என்று யதார்த்தமாக பேசியபடி விலகினார் பாலா.

இந்த இடத்தில் அனிதா சொன்னதுதான் திருவாசகமான வசனம். ‘இங்க யாரும் பிரெண்ட் கிடையாது சனம்... இது ஒரு கேம்’ என்று சனத்திற்கு சீரியஸாக உபதேசம் செய்து கொண்டிருந்தார் அனிதா. எனில் காலையில் குமுறி குமுறி அழுது ஊரைக்கூட்டியது யார்?

பிக்பாஸ் – நாள் 24
பிக்பாஸ் – நாள் 24
இவர்கள் செய்யும் அலப்பறைகளைக் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் இறுதியில் பிக்பாஸ் தரப்பிலிருந்து ஒரு ‘வாய்ஸ் ஓவர்’ மெசேஜ் தருகிறார்கள்... அல்லவா? அதைத்தான் தாங்க முடிவதில்லை.

மதியம் நடந்த டாஸ்க் தொடர்பான விஷயத்திற்கு மிக தாமதமாக உணர்ந்து இரவு கண்கலங்கிய சனத்தைப் பார்த்ததும் ஒரு பழைய ஜோக் நினைவிற்கு வந்தது. அதைச் சொல்லி முடிக்கிறேன்.

**

ஒருவன் இன்னொருவனை அடித்துக் கொண்டிருந்தான்.

அவ்வழியாக வந்த ஒரு பெரியவர் அடித்தவனைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார்.

"ஏம்ப்பா... அவனை அடிக்கிறே?"

"அவன் என்னை போன வாரம் தேவாங்கு-ன்னு திட்டிட்டான்"

"போன வாரம் திட்டுனதுக்கு ஏம்ப்பா இப்ப போய் அடிக்கிற?"

அடித்தவன் அதற்கு சொன்ன பதில்,

"நான் இன்னிக்குதான் தேவாங்கைப் பார்த்தேன்!"