Published:Updated:

அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் வீடியோ: கொந்தளிக்கும் யூ-ட்யூபர்கள்... பிரச்னையின் பின்னணி என்ன?

பல காலமாகவே இந்தப் பிரச்னை குறித்து பலர் பேசிவந்தாலும் தற்போது அர்ச்சனா வெளியிட்ட 'பாத்ரூம் டூர்' வீடியோவால் இந்த விவாதம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யூ-ட்யூப் வீடியோ உலகம் எப்போதும் சர்ச்சைகளாலும், பரபரப்புகளாலும் நிறைந்தது. வாரத்துக்கு ஒரு விவகாரம் வெடிப்பதும், பின்னர் வேறொன்று கிளம்பி பூதாகரமாவதும் இங்கே வாடிக்கை. அதில் சமீபத்திய சர்ச்சையாக வெடித்திருப்பது விஜே அர்ச்சனாவுக்கும், சோலோ யூ-ட்யூபர்களுக்குமான பிரச்னை.

கடந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜே அர்ச்சனா தொடங்கி, மா.கா.பா.ஆனந்த், விஜே ப்ரியங்கா, 'குக்கு வித் கோமாளி' ஷிவாங்கி, 'சூப்பர் சிங்கர்' நித்யஶ்ரீ வரை பலரும் யூ-ட்யூபில் சேனல் தொடங்கி வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். கடந்த ஒரு வருட லாக்டௌன் காலத்தில் இப்படிப் பல டிவி பிரபலங்கள் யூ-ட்யூப் பக்கம் வந்திருக்கிறார்கள். இதுபோக தற்போது யூ-ட்யூப் என்பது ஒரு நல்ல வணிகம் என்பதால் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் சில பிரபலமான ஆர்ஜேக்களையும், விஜேக்களையும் வைத்து புதிய சேனல்கள் தொடங்கி, அதைத் தங்களின் விளம்பர யுக்தி மூலம் பிரபலப்படுத்துகிறார்கள்; பெரும்படை கொண்ட டெக்னிக்கல் டீமை வைத்து நேர்த்தியான தயாரிப்புகளை உருவாக்கி ஹிட்டடிக்க வைக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கும், யூ-ட்யூபில் பல ஆண்டுகளாக சேனல் நடத்திக்கொண்டிருக்கும் சோலோ கிரியேட்டர்ஸ்களுக்கும்தான் தற்போது முட்டல், மோதல்.

சோலோ கிரியேட்டர்ஸ் யார்?

ஒரு டீமாக பல பேர் வேலைப் பார்க்கும் அல்லது நிதியளிக்கும் யூ-ட்யூப் சேனல்கள் தவிர்த்து நிறையப் பேர், தாங்களே ஸ்க்ரிப்ட்டும் எழுதி, கேமராவையும் ஆப்ரேட் செய்து, வீடியோவும் பேசி, எடிட்டிங்கும் செய்து வெளியிடுகிறார்கள். எக்யூப்மென்ட்களுக்கான செலவுகள் தவிர்த்து இது கிட்டத்தட்ட ஜீரோ பட்ஜெட் யூ-ட்யூப் சேனல் போலத்தான். இவர்களுக்கு பெரும்பாலும் மக்கள் மத்தியில் மார்க்கெட்டிங் செய்ய எந்த சப்போர்ட்டும் கிடைக்காது. ஜீரோ சப்ஸ்க்ரைபர்களிலிருந்து தொடங்கி முழுக்க முழுக்கத் தங்களின் கன்டென்ட்டால் மட்டுமே சேனலை வளர்த்து தற்போது அதன் மூலம் ஒரு கணிசமான வருவாய் ஈட்டுவதுவரை வளர்ந்திருப்பார்கள்.

Youtube
Youtube
Image by Mizter_X94 from Pixabay

சரி, இவர்களுக்கு என்ன பிரச்னை?

யூ-ட்யூபில் புதிதாகக் களமிறங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களின் வளர்ச்சிக்கு ஒருவகையில் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதுதான் இவர்களின் குற்றச்சாட்டு. நேற்று யூ-ட்யூபில் நுழைந்த பிரபலங்கள் மிகவும் குறைவான காலகட்டத்திலேயே தங்களின் பாப்புலாரிட்டியால் நிறைய சப்ஸ்கிரைபர்களை சம்பாதித்து அதிகமான வியூஸைப் பெற்று வருவாய் ஈட்டிவிடுகிறார்கள். குறிப்பாக கார்ப்ரேட்கள் இந்த பிசினஸில் உள்ளே நுழைந்து பல்வேறு சேனல்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் இந்த யூ-ட்யூப் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை (Monopoly) பெற்றுவிடுகிறார்கள் என்பதுதான் இவர்களின் குற்றச்சாட்டு. சினிமாவில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரித்து வெளியிடும் நிறுவனங்களுக்கும் இருக்கும் பிரச்னைதான் இங்கேயும் இன்னொரு வகையில் எட்டிப் பார்க்கிறது.

சோலோ கிரியேட்டர்ஸ் vs கார்ப்ரேட் யூ-ட்யூபர்ஸ்:

பல காலமாகவே இதுகுறித்து பலர் பேசிவந்தாலும், தற்போது நடந்த ஒரு பிரச்னையால் இந்த விவாதம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விஜே-வான 'பிக்பாஸ்' அர்ச்சனா தன் மகளுடன் இணைந்து தொடங்கிய லைஃப்ஸ்டைஸ் சேனலான 'வாவ் லைஃப்'-ல் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் அவர்களின் வாழ்க்கைமுறை, ஒரு நாள் எப்படியிருக்கிறது, அவர்கள் வீட்டின் சமையலறை டூர், வார்ட்ரோபில் என்னவெல்லாம் இருக்கிறது, கிச்சன் டூர், ஃப்ரிட்ஜ் டூர் வரை கன்டென்ட் போட்டிருக்கிறார்கள். அனைத்துமே நல்ல வியூஸை ஈட்டியுள்ளன. சமீபத்தில் இதன் தொடர்ச்சியாக தங்கள் வீட்டின் பாத்ரூம் டூர் வீடியோவையும் அவர்கள் வெளியிட, அதுதான் சர்ச்சையாகி இருக்கிறது. சோலோ யூ-ட்யூபர்கள் பலர், 'இதெல்லாம் கன்டென்ட்டா?' என்ற வகையில் அதைக் கலாய்த்து ஸ்பூஃப் செய்தும் ட்ரோல் செய்தும் ரியாக்ஷன் வீடியோக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பிரச்னை என்னவென்றால், இவர்களில் பலரும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கின்றனர். அர்ச்சனா தொடங்கி அவர் குடும்பத்தினர், அவர் மகள் என எல்லோரையும் கீழான முறையில் விமர்சித்து வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கின்றன. அவை நிறைய வியூஸைப் பெற, அதுவரை அப்படியான வீடியோக்களை செய்திடாதவர்கள்கூட களமிறங்கி அதே டைப் வீடியோக்களைச் செய்திருக்கின்றனர். இந்நிலையில் அப்படியான வீடியோக்களை செய்தவர்களுக்கு 'காப்பிரைட் வயலேஷன் ஸ்ட்ரைக்' (எச்சரிக்கை) யூ-ட்யூபிலிருந்து வந்திருக்கிறது. எவ்வளவு பெரிய சேனலாக இருந்தாலும் மூன்று முறை இந்த காப்பிரைட் வயலேஷன் ஸ்ட்ரைக்கைப் பெற்றுவிட்டால் அது அந்த சேனலையே முடக்கிவிடும். இந்த காப்பிரைட் ஸ்ட்ரைக் அர்ச்சனா தரப்பிலிருந்து வந்ததாகப் பல யூ-ட்யூப் சேனல்கள் குற்றம் சாட்டுகின்றன.

விமர்சனங்களைச் சந்திக்க முடியாமல் அவர் இவ்வாறு செய்கிறார் என்பது இவர்களின் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது. அர்ச்சனாவின் 'பாத்ரூம் டூர்' வீடியோவை கலாய்த்து ரியாக்ஷன் வீடியோ விட்டவர்களில் 'தி பிரியாணி மேன்' சேனலின் அபிஷேக் ரபியும் ஒருவர். அவரின் வீடியோ இதே பிரச்னையால் நீக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் வீடியோ காலில் அர்ச்சனா பேசி தன் தரப்பு விளக்கத்தையும் அளித்துள்ளார். அதை அவர் தன் சேனலில் வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார்.

ரபியிடம் இந்த சர்ச்சை குறித்துப் பேசினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூ-ட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர்... எந்த பிளாட்பார்மாக இருந்தாலும், அது பொதுத் தளம். யார் வேண்டுமானாலும் அங்கே வீடியோக்கள் செய்யலாம். அதற்கு அவர்களுக்கு உரிமையிருக்கிறது. டிவியில் இருக்கிறார் என்பதற்காக ஒருவரை யூ-ட்யூபில் வீடியோ போடக்கூடாது என்று சொல்வது நியாயமாகுமா?

"யார் வேண்டுமானாலும் இங்கே வீடியோக்கள் செய்யலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. குக்கரி வீடியோக்கள் பிரபலமான சமயம் வனிதா விஜயகுமார் போன்றோர் குக்கிங் தொடர்பான சேனல்களைத் தொடங்கினர். இதில் எந்தவித பிரச்னையும் இல்லை. இப்படி இருக்கையில்தான் சில பிரபலங்களின் சேனல்களுடைய 'விளம்பர ரேட்' பற்றிக் கேள்விப்பட்டேன். ஒரு வீடியோ பொதுவாக 5 மில்லியன் வியூஸ்களைத் தொடுகிறது என்றால் அதற்கென்று சில ஆயிரங்கள் வருமானமாக வரும். விஜய் டிவி ப்ரியங்கா ஹாஸ்பிட்டலில் அட்மிட்டான வீடியோக்கள் நல்ல ரீச்சானது. அது 5 மில்லியனை சுலபமாகத் தொட்டது. இந்த இயல்பான வருமானத்தையும் தாண்டிய ஒரு வருமானம்தான் இந்த 'விளம்பர ரேட்'.

நிறைய செலிபிரிட்டிகள் யூ-ட்யூப் விளம்பர வருமானத்தைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் பல நிறுவனங்களின் விளம்பரங்களைத் தங்களின் வீடியோக்களோடு இணைத்து அதை மக்களுக்குப் பரிந்துரை செய்வதன் மூலம் கூடுதலாகச் சம்பாதிக்கத் தொடங்கினர். இவ்வகையான 'Influencer Marketing' யுக்திகளை இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்கள் செய்துவருகிறார்கள். அது அவர்களின் வெளி. ஆனால், யூ-ட்யூப் என்பது சோலோ கிரியேட்டர்களுக்கான வெளி. அதிலும் இவர்கள் வந்து இத்தகைய செயல்களைச் செய்வது வருத்தமளிக்கிறது.

'தி பிரியாணி மேன்' அபிஷேக் ரபி
'தி பிரியாணி மேன்' அபிஷேக் ரபி

குறிப்பாக கார்ப்பரேட் ஃபண்டட் சேனல்கள் சோலோ யூ-ட்யூபர்களைக் காட்டிலும் குறைவான விலைக்கு இந்த 'விளம்பர ரேட்'டை ஃபிக்ஸ் செய்கின்றனர். அவர்களுக்குப் புகழ் வெளிச்சம் அதிகம் என்பதால் வணிக நிறுவனங்களும் அவர்களின் பின்னால் சென்றுவிடுகின்றன. வெறும் 3,000 ரூபாய்க்கு விளம்பரம் செய்யும் கார்ப்பரேட் சேனல்களும் இங்கே இருக்கின்றன.14 நிமிட வீடியோவில் 3 நிமிடங்கள் விளம்பரம், அதற்குக் குறைவான ரேட்.

எல்லாருக்குமானதுதான் யூ-ட்யூப். அதில் ரேட்டை ஃபிக்ஸ் செய்வதற்கு இவர்கள் யார், இது எங்களையும் சேர்த்துதானே பாதிக்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் இத்தகைய பிரபலங்களின் சேனல்களுக்குத்தான் விளம்பரங்கள் கொடுக்க நினைப்பார்கள். பல வருடமாக ஓர் இடத்தைப் பிடிக்க இங்கே பாடுபட்டு வரும் சோலோ யூ-ட்யூபர்களுக்கு இதனால் சிக்கல் ஏற்படுகிறது. இதைத்தான் தவறு என்று நான் சுட்டிக்காட்டுகிறேன்.

இதை கார்ப்ரேட்கள் செய்யட்டும். டிவி பிரபலங்கள் ஏன் இப்படியான விளம்பரங்கள் செய்கிறார்கள்? அவர்களுக்கு வருமானம் ஈட்ட ஒரு வேலை இருக்கிறது. எங்களுக்கு அப்படியில்லையே! வனிதா போன்றோர் இன்றுவரை தங்களுடைய சேனல்களில் தனிப்பட்ட விளம்பரங்களோ, பரிந்துரையோ செய்வதில்லை. அப்படி இருக்கலாமே!

வியூஸ்களுக்காக பாத்ரூம் டூர், மருத்துவமனையில் அட்மிட்டானது எனப் பல வீடியோக்கள் செய்வதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. அதையும் செய்துவிட்டுத் தனிப்பட்ட விளம்பரங்களையும் எதற்காகச் செய்கிறீர்கள்? எல்லா வழிகளிலும் எங்களை ஏன் முடக்குகிறீர்கள்? விளம்பர வருமானம் வந்தால்தான் இங்கே சில சேனல்கள் ஒரு வீடியோவே போடமுடியும். அவர்களெல்லாம் இனி எங்கே போவது? இன்னொரு புறம், வியூஸ் வேண்டுமென்பதற்காக சில டிவி பிரபலங்களே மூன்றாம் தர, நான்காம் தர யூ-ட்யூபர்களோடு இணைந்து வீடியோக்கள் செய்கின்றனர்.

'ஜாயின்' பட்டன் என்று யூ-ட்யூபில் ஒன்று இருக்கிறது. ஃபண்ட் இல்லாத சேனல்களுக்கு அவர்களின் சப்ஸ்கிரைபர்களே உதவலாம். இதனைப் பல பிரபலமான சோலோ யூ-ட்யூபர்கள் பயன்படுத்துகிறார்கள். பணமில்லாதவர்கள் இதைச் செய்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால், அதிகப் பணம் படைத்த டிவி பிரபலங்களே தங்களின் யூ-ட்யூபில் 'ஜாயின்' பட்டனை வைத்திருக்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது? அவர்களின் பர்சனல் குணத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், ப்ரொஃபஷனலாக இது சரியான அணுகுமுறை இல்லையே'' என்றார் அவர்.

இதற்கு என்னதான் தீர்வு?

YouTube
YouTube
Pixabay

" 'விமர்சனங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வேன். ஆனால், பலரால் தனிமனித தாக்குதலுக்கு ஆளானேன். என் மகளையும் தவறாகப் பேசுகின்றனர். அதனால்தான் காப்பிரைட் ஸ்ட்ரைக் செய்தேன்' என்று அர்ச்சனா கூறுகிறார். அப்படியான யூ-ட்யூபர்களும் இங்கே இருக்கத்தானே செய்கின்றனர்? இதற்கு என்னதான் தீர்வாக இருக்க முடியும்?" என்று ரபியிடம் கேட்டேன்.

''அவரைப் போன்ற ஒரு பிரபலம் விமர்சனங்களை ஏற்கிறேன் என்று கூறுவது வரவேற்கத்தக்கது. ஆனால், 'பாத்ரூம் டூர்' தொடர்பாக காப்பிரைட் ஸ்ட்ரைக் பெற்ற வீடியோக்களில் அதை நியாயமாக விமர்சனம் செய்த வீடியோக்களும் அடங்கும். அவர்கள் எந்தவொரு தரக்குறைவான விமர்சனத்தையும் வைக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக அவர்களும் இதில் சிக்கிக்கொண்டனர். இதற்கு அர்ச்சனா அவர்கள், 'எப்படி என்னால் எல்லா வீடியோக்களையும் பார்த்து, இது சரி, இது சரியல்ல என்று முடிவு செய்துகொண்டிருக்க முடியும்?' என்கிறார். நியாயம்தான். ஆனால் இதற்குதானே MCN (Multi-Channel Network) என்று ஒன்று இருக்கிறது. அவர்களின் பணிகளில் இதுவும் ஒன்றுதானே?! என்னுடைய வீடியோ ஒன்றைக் கலாய்த்து ஒருவர் வீடியோ போட்டிருந்தார். அப்போது நான் இருந்த MCN அமைப்பு என்னிடம் இதைப் பற்றிக் கேட்டது. நான் அது ஆரோக்கியமான ஒன்றுதான், நடவடிக்கை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இப்படியான பணியைத்தானே ஒரு MCN செய்யவேண்டும்?

அர்ச்சனா அவர்களின் பாத்ரூம் வீடியோவை தரக்குறைவாக ஒரு சேனல் விமர்சித்தது. ஆனால், அதில் அந்த பாத்ரூம் வீடியோ தொடர்பான ஃபுட்டேஜ்கள் இடம்பெற்றால் மட்டுமே காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுக்க முடியும். அப்படி அந்த வீடியோவில் எதுவுமில்லை. அதனால், அதில் பயன்படுத்தப்பட்ட ஒரு மீம்மை வைத்து அர்ச்சனா அந்த வீடியோவுக்கு காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்தார். அப்படிச் செய்ததற்கு அவர் சொன்ன விளக்கம் மிகவும் நியாயமானது. 'ஒரு தாயாக இப்படியான கீழான விமர்சனத்தை என்னால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?' என்று கேள்வி எழுப்பினார். இது மிகவும் சரி! எது நகைச்சுவை, எது கீழான விமர்சனம் என்று புரியாமல் கமென்ட் செய்பவர்கள், வீடியோ செய்பவர்களால் வரும் பிரச்னை இது. அதுதான் இன்று இவ்வளவு பெரிய கலவரமாக மாறியிருக்கிறது.

அர்ச்சனா என்னிடம் பேசும்போதுகூட, நியாயமான விமர்சனங்கள் செய்தவர்களின் வீடியோக்கள் சில தவறுதலாக காப்பிரைட் ஸ்ட்ரைக்கைப் பெற்றுவிட்டன. அவர்களிடம் தனிப்பட்ட முறையில் போனில் பேசி நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றார். என்னிடமும் மன்னிப்பு கேட்டார். பிளாக்கை ரிலீஸ் செய்தார். ஆனால், பொதுவெளியில் வந்துவிட்டால் இப்படியான விமர்சனங்களை நிச்சயம் சந்திக்க நேரிடும். இது தவிர்க்க முடியாதது. வனிதா தன்மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களைத் திறம்படச் சமாளித்தார். இது போல எந்தவொரு காப்பிரைட் ஸ்ட்ரைக்கையும் அவர் இதுவரை யாருக்குமே கொடுக்கவில்லை. ஆனால், அர்ச்சனா திரும்பத் திரும்ப சொன்னது விமர்சனங்கள் சரி, தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம்தான் தவறு என்பதே! அதை மறுப்பதற்கில்லை."

`பிக்பாஸ்' அர்ச்சனா
`பிக்பாஸ்' அர்ச்சனா

அர்ச்சனா என்ன சொல்கிறார்?

இந்த விவகாரம் குறித்து அர்ச்சனாவிடமும் பேசினேன். "போன வருடம் லாக்டௌனில் தொடங்கப்பட்ட சேனல்தான் 'வாவ் லைஃப்'. அப்போது நான் 'பிக்பாஸ்'க்குச் செல்லவில்லை. ஜீ தமிழில்தான் இருந்தேன். கிட்டத்தட்டத் தொடக்கத்தில் இதுவும் சோலோ கிரியேட்டர் போன்ற ஒரு சேனல்தான். அர்ச்சனா என்றவுடன் சப்ஸ்கிரைபர்கள் எனக்கு வந்துவிடவில்லை. 5 லட்சம் சப்ஸ்கிரைபர்களைத் தொட எனக்கு ஒரு வருடமானது. இன்னொரு விஷயம் இது ஃபேன் பேஜ் இல்லை. அப்படி இருந்திருந்தால் இதற்கு என் பெயரையே வைத்திருப்பேனே?!

இது ஒரு லைஃப்ஸ்டைல் சேனல். இதில் சமையல் வீடியோஸ், வொர்க்அவுட் வீடியோஸ், குழந்தைகளுக்கான கிராஃபிட்டி வீடியோஸ் என்றுதான் செய்தேன். மொத்தம் 140 வீடியோக்களை இதுவரை சிரத்தையுடன் வெளியிட்டு இருக்கிறோம். புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு மணிக்கு ஷார்ப்பாக வீடியோக்களைத் தவறாமல் கொடுத்த டீமிடமிருந்து வந்ததுதான் இந்த பாத்ரூம் டூர் வீடியோவும். ஒரு லைஃப்ஸ்டைல் சேனலில் பாத்ரூம் டூர் வீடியோ என்பது சாதாரண விஷயம். என் சேனலை 71% பெண்கள்தான் ஃபாலோ செய்கின்றனர். அவர்களுக்குத்தான் நான் கன்டென்ட் செய்கிறேன். பாத்ரூம் டூர் ஒன்றும் ஸ்பான்ஸர் வீடியோ கிடையாது. அதில் ஐந்து பிராண்டுகள் பற்றிப் பேசியிருக்கிறேன். ஆனால், அது எனக்கு வொர்க்அவுட்டான ஒன்று என்பதையும் பதிவு செய்திருக்கிறேன். என்னுடைய வீட்டை யாரும் எனக்கு கிஃப்டாகக் கொடுத்துவிடவில்லை. 21 வருடமாக நான் சம்பாதித்ததில் வாங்கியது.

'பாத்ரூம் டூர்' என்ற பெயரைப் பார்த்ததும் பிடிக்கவில்லை என்றால் அதை அமைதியாகக் கடந்து போயிருக்கலாம். ஆனால், அதை ட்ரோல் செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். நான் காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்த வீடியோக்கள் அனைத்துமே தரக்குறைவான விமர்சனங்களை வைத்தவைதான். வெளியே சொல்லவே முடியாத கேவலமான வார்த்தைகள் அவை. யூ-ட்யூபில் இருக்கும் பிரச்னை ஒரு வீடியோவை ரிப்போர்ட் செய்ய 'Abusive' என்று ஒரு ஆப்ஷன் இல்லை. அவர்களுக்குத் தமிழிலிருக்கும் தகாத வார்த்தைகளும் புரியாது. ஆங்கிலத்திலிருந்தால் மட்டுமே புரியும். எனவே இதற்கு நான் காப்பிரைட் ஸ்ட்ரைக்தான் கொடுக்க முடியும். என் வீடியோவை அவர்கள் பயன்படுத்தி இருந்ததால் அந்த வழிமுறையை நான் கையாள வேண்டியதாகிவிட்டது. என் மகளைப் பற்றியும் என்னைப் பற்றியும் இப்படிப் பேசுகிறார்கள் எனும்போது எனக்குக் கோபம் வராதா? எல்லோருக்கும் இது வரும்தானே!

யூ-ட்யூப் காப்பிரைட் ஸ்ட்ரைக்
யூ-ட்யூப் காப்பிரைட் ஸ்ட்ரைக்

யூ-ட்யூப் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஒரு MCN-னிடம்தான் நான் பிசினஸை இப்போது கற்றுக்கொண்டேன். யூ-ட்யூப் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ள மட்டுமே அங்கே சென்றோம். இதுதான் உடனேயே சோலோ கிரியேட்டர்ஸ் vs கார்ப்ரேட் என்ற விவாதத்தைக் கிளப்பிவிட்டது. இந்த பாத்ரூம் டூர் விவகாரத்தில் நாங்கள் 8 வீடியோக்களுக்குதான் காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்தோம். 'தி பிரியாணி மேன்' வீடியோவுக்கு நாங்கள் காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை. பிளாக்தான் செய்தோம். அதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த வகை வீடியோக்கள் வைரலாவதைப் பார்த்து சின்னச் சின்ன சோலோ கிரியேட்டர்களும் இதே பாணியில் வீடியோ செய்யத் தொடங்கினர். யாருக்கு ஸ்ட்ரைக் வந்தாலும் அதற்கு நாங்கள்தான் காரணம் என்கின்றனர். வள்ளுவர் கோட்டத்தில் ஸ்ட்ரைக் நடந்தாலும் இனி என் பெயரைத்தான் சொல்வார்கள்போல! இதுதான் டிரெண்டு, நாம் இவர்களை டார்கெட் செய்வோம் என்று செய்பவர்களுக்குப் பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக மிர்ச்சி அஸ்வினி ஷேர் செய்த ஒரு ஸ்டோரியில் நான் ஏதோ சோலோ கிரியேட்டர்களுக்கு எதிராக இருப்பதுபோல ஒரு கருத்து இருந்தது. உடனே நான் அவர்களிடம் பேசி உண்மையை விளக்கினேன். அப்போது அவர் மூலமாக 'தி பிரியாணி மேன்' ரபி மற்றும் வேறு சில யூ-ட்யூபர்களிடமும் பேசினேன். அப்போது ஒருவர் தரக்குறைவாகத் தான் பேசியதை ஒப்புக்கொண்டார். மன்னிப்புக் கேட்டார். அதற்கான ரெக்கார்டு என்னிடம் இருக்கிறது.

அதன்பிறகுதான் 'தி பிரியாணி மேன்' என்னிடம் லைவ் வரச்சொல்லிக் கேட்டார். 'பிக்பாஸ்'க்குப் பிறகு நான் யாருக்கும் வீடியோ பேட்டி அளிக்கவில்லை. இந்த விவகாரத்துக்காக அதைச் செய்தேன். அதிலேயே நான் காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்ததற்கான காரணத்தை விளக்கிவிட்டேன். ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு ட்ரோலிங் என்பதற்கும் அப்யூசிங் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது. 'உங்க பாத்ரூம் பெருசாயிருக்கு. நான் சுத்திப்பார்க்கலாமா அக்கா?' என்பது ட்ரோல். 15 வயது பையன் ஒருவன் தகாத வார்த்தைகளுடன் என் மகளுக்கு மெசேஜ் செய்கிறான். அது அப்யூசிங் இல்லையா? என் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் நான் போடும் போட்டோக்களில் தவறாக கமென்ட் செய்கின்றனர். இவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு 'பாத்ரூம் டூர்' என்ற ஹேஷ்டேகில் எது வந்தாலும் ஸ்ட்ரைக் கொடுங்கள் என்று சொல்வது எப்படித் தவறாகும்? ஒவ்வொரு வீடியோவாக பார்த்து இவன் என்னைப் பற்றி அசிங்கமாகப் பேசியிருக்கிறானா இல்லையா என நான் செக் செய்து ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டுமா? இது இந்த சோலோ கிரியேட்டர்கள் எனக்கு தரும் மன உளைச்சல் அல்லவா?

அர்ச்சனா
அர்ச்சனா

திரும்பவும் சொல்கிறேன். என்னைக் கலாய்ப்பதில் எனக்குச் சந்தோஷமே. நானே அதைப் பார்த்து 'எப்படிக் கலாய்க்கிறாங்க பாரு' என அதை ரசிக்கவேண்டும். ஆனால் என்னைக் கண்கலங்க வைத்தால் அது ட்ரோல் இல்லை அப்யூஸ் அல்லவா? பெண்களை இந்த டிஜிட்டல் உலகில் அப்யூஸ் செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் எனப் பலர் நினைக்கிறார்கள். அந்தக் காலம் மாறிவிட்டது. நான் அமைதியாக இருக்கமாட்டேன்.

இதனால்தான் சொல்கிறேன். காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்தது என்னைப் பொறுத்தவரையில் தவறில்லை. #RemoveWowLife என்று ஹேஷ்டேக் போடுகிறார்கள். எதற்காக? கண்ணியமான கன்டென்ட் கொடுக்கும் எங்களுக்கு இந்த நிலை? அசிங்கமான கன்டென்ட் கொடுக்கும் சோலோ கிரியேட்டர்களை நாங்கள் சப்போர்ட் செய்யவேண்டுமா?'' என்று கொதித்தார் அர்ச்சனா.

'நாங்கள் வருமானம் பார்த்துக்கொண்டிருந்த வெளியில் டிவி நட்சத்திரங்கள் வந்துவிட்டார்கள். இது எங்களை வளரவிடாமல் தடுக்கிறது' என்கிறார்களே சோலோ கிரியேட்டர்கள்?

''டிவிக்குள் சினிமா நட்சத்திரங்கள் வந்தார்களே, நாங்கள் கம்ப்ளெய்ன்ட் செய்தோமா? சோலோ கிரியேட்டர்கள் பலரின் வயது, என்னுடைய அனுபவத்துக்குச் சமம். ஆனால், இங்கே யாரும் பேசத் தயாரில்லை. பிரைவசி ஸ்ட்ரைக் வந்தவர்களும் காப்பிரைட் ஸ்ட்ரைக் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இது குறித்து நான் பேசப் பேச இது வெறுப்பைத்தான் விதைக்கிறது. என்ன இதைப் பற்றி ஐந்து நாள்கள் பேசுவீர்களா? அதனுடன் இது முடியட்டும். எனக்குத் தெரியும், இங்கு ஒரு பிரச்னை என்றால் செலிப்ரிட்டிகள் யாரும் சப்போர்ட் செய்ய வரமாட்டார்கள். என் பிக்பாஸ் குடும்பமே வரவில்லையே? ஆனால், இந்த முறை நிச்சயமாக நான் அமைதியாக இருக்கமாட்டேன்.

என்னிடமே இதுவரை 30-க்கும் மேற்பட்ட சோலோ கிரியேட்டர்ஸ் பேசியிருக்கிறார்கள். வாரத்துக்கு இரண்டு பேருடைய ப்ரோமோக்களை என்னுடைய சேனலில் கிராஸ்போஸ்ட் செய்து புரோமோட் செய்வதாக நான் உறுதியளித்திருக்கிறேன். வீடியோக்களுக்கு இடையிலும் இதைச் செய்யலாம் என்று இருக்கிறேன், ஆனால் இதற்கும் பலர் தயாராக இல்லை. அவர்களின் ஈகோ இடிக்கிறது. நான் எல்லோரும் ஒன்றாக இருப்பதற்காகத்தான் பேசுகிறேன். அது என் எண்ணமில்லை என்றால் இத்தனை பேரிடம் நான் பேசியிருக்க மாட்டேன்.''

பிரபலங்கள் விளம்பரங்களைக் குறைவான விலைக்கு எடுக்கிறார்கள் என்ற விமர்சனத்தை வைக்கிறார்களே?

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
Representational Image Only

''பிரபலங்கள் என்றால் எங்களால் இன்ஸ்டாகிராமில்கூட விளம்பரங்கள் செய்ய முடியும். எதற்காக யூ-ட்யூப் வரவேண்டும்? நிறுவனங்களுக்கு எங்கெல்லாம் ரீச் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் போகத்தான் செய்வார்கள். பிராண்டு வேல்யூவுக்குத் தகுந்தாற்போல்தானே விளம்பரங்களும் வரும். சொல்லப்போனால் பிரபலங்களைவிடவும் சில யூ-ட்யூப் சேனல்களுக்கு விளம்பரங்கள் கிடைக்கின்றன. நாங்கள் அதற்குப் பொறாமைப்பட முடியுமா? இங்கே போட்டி அதிகம் என்றால் நாம் பெட்டராக செய்யவேண்டும் என்றுதானே அர்த்தம்? போட்டியே வேண்டாமென்று எப்படிச் சொல்லலாம்? சினிமாவிலிருந்து டிவிக்கும், டிவியிலிருந்து சினிமாவுக்கும் வந்துகொண்டுதானே இருக்கிறார்கள்?

நான் ஒரு கிரியேட்டர். நான் ரேடியோவிலும் இருப்பேன், டிவியிலும் இருப்பேன், யூ-ட்யூபிலும் இருப்பேன். இதிலென்ன பிரச்னை? சோலோ கிரியேட்டர்கள் பலரும் இன்று ட்ரோலர்களாக மட்டுமே உள்ளனர். பிரபலங்களும் கிரியேட்டர்கள்தானே? என் சேனலில் ஆறு லட்சம் பேர்தானே இருக்கிறார்கள். இன்னொரு விஷயம் என் சேனல் என்னைப் பற்றியதல்ல. என் மகளையும் தங்கையையும் பற்றியது. அவர்கள் பிரபலங்கள் இல்லை.

ஒரு பொதுத்தளத்திற்கு வந்து இந்த சோலோ கிரியேட்டர்கள் உரையாட வேண்டும். ஆனால், அதை அவர்களே செய்யமாட்டார்கள் என்பதுதான் என் வாதம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க நான் தயாராக இருக்கிறேன். அவர்கள் தயாராக இல்லை. இதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்."

அதன் பின்னர் அர்ச்சனா பேசியதுபோலவே அவருக்கு வந்த தரக்குறைவான கமென்ட்களின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்தார். பொதுவெளியில் வெளியிட முடியாதளவு மோசமானவையாக அவை இருந்தன.

இந்தப் பிரச்னைத் தொடர்பாக நாம் பேசிய 'தி பிரியாணி மேன்' ரபியும் சரி, அர்ச்சனாவும் சரி, பிரச்னையைப் பேசித் தீர்க்கத் தயாராக இருக்கிறார்கள். மற்றவர்கள் இசைவார்களா? அது விரைவில் நடக்கும் என்று நம்புவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு