Published:Updated:

அர்ச்சனா பாத்ரூம் டூர் வீடியோ சர்ச்சை : "இது சோலோ vs கார்ப்பரேட் பிரச்னையல்ல!"- விளக்கும் யூ-ட்யூபர்

YouTubers
YouTubers

அர்ச்சனா விவகாரம், இந்த விவாதத்தை மீண்டும் பூதாகரமாகக் கிளப்பியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தை சோலோ vs கார்ப்பரேட் பிரச்னையாகப் பார்க்கத் தேவையில்லை என்கிறார்கள் சில யூ-ட்யூபர்கள்.

கடந்த சில வாரங்களாகவே யூ-ட்யூப் உலகில் இந்தப் பிரச்னைதான் ஹாட் டாபிக். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், விஜே அர்ச்சனா தான் நடத்தும் லைஃப்ஸ்டைல் தொடர்பான யூ-ட்யூப் சேனலில் 'பாத்ரூம் டூர்' என்றொரு வீடியோவை வெளியிட அது பலரின் ட்ரோல் கன்டென்ட்டாக மாறிப்போனது. தன் வீட்டிலுள்ள பாத்ரூம்களை தன் மகளுடன் சேர்ந்து அவர் சுற்றிக்காட்டும் வீடியோவுக்கு விமர்சனங்கள் ஒருபுறம் குவிந்தாலும் ஒரு கட்டத்தில் அர்ச்சனாவையும் அவரின் மகளையும் தரக்குறைவாகப் பேசும் வீடியோக்களும் வரத் தொடங்கின. நியாயமான விமர்சனங்கள், ரியாக்ஷன் வீடியோக்கள், கமென்ட்ரி போன்றவைக் கடந்து, தவறாக, காமெடி என்ற பெயரில் கேட்கமுடியாத வார்த்தைகளைப் பயன்படுத்திய வீடியோக்கள் அர்ச்சனாவிற்கு மன வருத்தத்தைக் கொடுத்துள்ளன.

அர்ச்சனா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அர்ச்சனா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

இதன் அடிப்படையில், அவர் அந்த வீடியோக்களை யூ-ட்யூப் தளத்திலிருந்து நீக்க தன்னுடைய MCN (Multi-Channel Network) நிறுவனத்தின் (யூ-ட்யூப் சேனல் நடத்தத் துணைநிற்கும் கார்ப்பரேட் நிறுவனம்) உதவியை நாடியிருக்கிறார். இதில் 'பாத்ரூம் டூர்' தொடர்பாக வந்த பெரும்பாலான வீடியோக்களை நீக்கியிருக்கிறார்கள். இதில் அந்த வீடியோவை நியாயமாக விமர்சித்தவர்களின் வீடியோக்களும் அடங்கும். மேலும், இந்த வீடியோக்களை 'Hate Speech' என்றோ 'Harassment' என்றோ மார்க் செய்யாமல், 'காப்பிரைட் ஸ்ட்ரைக்' என்றொரு டூலைப் பயன்படுத்தியுள்ளனர். இதை ஒருவர் நம் வீடியோக்களைப் பிரதியெடுத்து அவர்கள் சேனலில் வெளியிட்டால் மட்டுமே செய்யவேண்டும். அதை விமர்சனம் செய்தவர்களின் மேலும் பிரயோகித்ததுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. காரணம் ஒரு சேனலுக்கு, மூன்று முறை காப்பிரைட் ஸ்ட்ரைக் விழுந்தால் அந்த சேனலே முடங்கும் நிலை உருவாகும். எனவே, அர்ச்சனா இதைச் செய்தது தவறு என்பது பெரும்பாலான யூ-ட்யூபர்களின் வாதம்.

இந்தச் சர்ச்சை குறித்து அர்ச்சனா கூறிய விளக்கத்தை இங்கே படிக்கலாம்...

அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் வீடியோ: கொந்தளிக்கும் யூ-ட்யூபர்கள்... பிரச்னையின் பின்னணி என்ன?

அர்ச்சனாவின் இந்த 'பாத்ரூம் டூர்' வீடியோ விவகாரம், யூ-ட்யூப் உலகில் கடந்த சில வருடங்களாகவே புகைந்து கொண்டிருந்த சோலோ யூ-ட்யூபர்ஸ் vs கார்ப்பரேட் யூ-ட்யூபர்ஸ் பிரச்னையை மீண்டும் கிளப்பியிருக்கிறது. சோலோ கிரியேட்டர்ஸ் யாரென்றால், தாங்களே வீடியோவை எடுத்து, நடித்து, எடிட் செய்து வெளியிடுபவர்கள். பின்னணியில் ஒரு கார்ப்பரேட் பலத்துடன் (MCN) களமிறங்கும் யூ-ட்யூபர்களை கார்ப்பரேட் யூ-ட்யூபர்கள் என்கிறார்கள். இவர்களின் களம் பெரியது என்பதால், ஒரு வீடியோவை நேர்த்தியாகச் சரியான டெக்னிக்கல் டீமுடன் எடுப்பது, பல வழிகளில் அதை புரோமோட் செய்வதுதான் இவர்களின் பணி. இது சோலோ கிரியேட்டர்களை வஞ்சிக்கும் ஒன்று, என்பதுதான் பலரின் வாதம்.

யூ-ட்யூப் காப்பிரைட் ஸ்ட்ரைக்
யூ-ட்யூப் காப்பிரைட் ஸ்ட்ரைக்

அர்ச்சனா விவகாரம், இந்த விவாதத்தை மீண்டும் பூதாகரமாகக் கிளப்பியுள்ளது. அவர் 'காப்பிரைட் ஸ்ட்ரைக்' கொடுத்தது ஒரு கார்ப்பரேட் பின்னணியுடன்தான் என்பதால் இந்தப் பிரச்னை வெடித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தை சோலோ vs கார்ப்பரேட் பிரச்னையாகப் பார்க்கத் தேவையில்லை என்கிறார்கள் சில யூ-ட்யூபர்கள். அவர்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டே, கார்ப்பரேட், சோலோ இங்கே பிரச்னையில்லை. யார் கன்டென்ட் கொடுத்தாலும் மக்கள் நன்றாக இருந்தால் வரவேற்கவே செய்வார்கள். இங்கே பிரச்னை தவறான டூலைப் பயன்படுத்தி அர்ச்சனா தரப்பு வீடியோக்களை முடக்கியதுதான் என்கிறார்கள். இப்படி முடக்கப்பட்ட அனைவருமே அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் வீடியோ குறித்துத் தரக்குறைவாகப் பேசியவர்கள் கிடையாது. இதில் நியாயமான விமர்சனம் செய்தவர்களும் அடக்கம் என்பதே அவர்களின் வாதம். யூட்யூபின் 'Fair Use'க்கு கீழ் வரும் தங்களின் வீடியோக்களும் காணாமல் போனது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பத்தைத் தங்களின் மேல் விதைப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இப்படி, இது குறித்து சினிமா விகடன் யூட்யூப் பக்கத்திலும் ஒரு வீடியோ வெளியாகியிருந்தது.

இந்தச் சர்ச்சை குறித்து நம்மைத் தொடர்பு கொண்ட 'Mr.GK' யூ-ட்யூப் சேனல் நடத்தும் தர்ம துரையிடம் பேசினோம்.

"யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் இங்கே வீடியோக்கள் செய்யலாம். பாத்ரூம் டூர், ஃப்ரிட்ஜ் டூர் எதையும் இங்கே கன்டென்ட் ஆக்கலாம். அது அவரவர் இஷ்டம். எதைப் பார்ப்பது, எதைத் தவிர்ப்பது என்பது முழுக்க முழுக்க மக்களின் விருப்பமே! இங்கே பிரச்னை என்னவென்றால், உங்களை ஒருவர் திட்டுகிறார், தரக்குறைவாக விமர்சிக்கிறார் என்றால், நீங்கள் காவல்துறையில் அதைச் சொல்லி அவர்களின் மேல் புகார் கொடுக்கலாம். ஆனால், தரக்குறைவாகப் பேசுகிறார் என்பதை மாற்றி கொலை முயற்சி என்று புகாரளிக்கக் கூடாது. அது நியாயமில்லைதானே! அதுதான் இங்கே அர்ச்சனா அவர்களின் விவகாரத்திலும் நடந்துள்ளது.

இங்கே அவர் 'Abuse', 'Harassment', 'Hate Speech' என்கிற ரீதியில்தான் ரிப்போர்ட் செய்திருக்க வேண்டுமே தவிர, 'காப்பிரைட் ஸ்ட்ரைக்' கொடுத்திருக்கக்கூடாது. சீக்கிரம் நடவடிக்கை எடுப்பார்கள் என இதைச் செய்திருக்கிறார்கள். இது ஒரு அதிகார துஷ்பிரயோகம் போலத்தான். இந்த ட்ரெண்டை பயன்படுத்தி இனி எல்லோருமே தங்களின் மேல் விமர்சனம் வைப்பவர்களை ஒடுக்க, 'காப்பிரைட் ஸ்ட்ரைக்' டூலைத் தவறாகப் பிரயோகிக்கத் தொடங்குவார்கள். இது அனைவருக்குமே பிரச்னையானது. ஒரு வீடியோவை எடுத்து அதை கமென்ட்ரி செய்வது என்பது, யூ-ட்யூப் அனுமதிக்கும் ஒன்றுதான். அதை கமென்ட்ரி செய்கிறோம், விமர்சனம் செய்கிறோம் எனும்போதே அது வேறொரு புது கன்டென்ட்டாக மாறிவிடுகிறது.

Mr.GK | Dharma Durai
Mr.GK | Dharma Durai

அர்ச்சனாவே இப்படிச் செய்தோம் என்பதை 'தி பிரியாணி மேன்' உடன் பேசிய லைவ் வீடியோவில் ஒப்புக்கொள்கிறார். இது யாரோ சில சேனல்கள் செய்த தவறுக்குப் பல சேனல்களைத் தண்டிப்பதாகத்தானே இருக்கிறது? MCN-மே இதில் தவறு செய்திருக்கிறது. தற்போது இதை மேற்கோள்காட்டி, நிறைய யூ-ட்யூபர்கள், யூ-ட்யூப் நிறுவனத்திடமே புகார் கொடுத்துள்ளார்கள்.

அர்ச்சனா தரப்பு இப்படியொரு தவறு செய்திருக்கிறது என்பதை யாருமே சுட்டிக்காட்டவில்லை. ஒரு சிலர் தவறான வீடியோக்களை வெளியிட்டிருக்கலாம். அது கண்டிக்கத்தக்கது தான். ஆனால், அதற்கான எல்லோரையும் தண்டிப்பது எப்படிச் சரியாகும்? அந்த ஒரு சில வீடியோக்களை தன் கேடயமாக வைத்துக்கொண்டு, அர்ச்சனா தரப்பு விமர்சனம் என்பதை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து வீடியோக்களையும் தூக்கியதாகவே நாங்கள் நினைக்கிறோம். இதையே பின்னாளில் பலரும் செய்ய வாய்ப்பிருக்கிறது.

'தி பிரியாணி மேன்' ரபி செய்த வீடியோ ஒரு ஜாலியான கலாட்டா வீடியோ மட்டுமே. இப்படியான வீடியோக்களும் இங்கே சிக்கியுள்ளன. 'காப்பிரைட் ஸ்ட்ரைக்' என்பது நம் பாதுகாப்புக்காகக் கொடுக்கப்பட்ட துப்பாக்கி போன்றது. அதை ஒருவர் தவறாகப் பேசினார் என்பதற்காக உபயோகப்படுத்தலாமா? பிரச்னையென்றால் சைபர் க்ரைமில்கூட புகார் அளிக்கலாமே? சோலோ vs கார்ப்பரேட் பிரச்னையை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தத் தவற்றைத்தான் இங்கே விவாதிக்க வேண்டும். ஏனென்றால் இது எதிர்காலத்தில் இதேபோல பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு