Published:Updated:

AKS - 62: எல்லோரும் தன்னைப் போலவே இருக்கவேண்டும் என நினைப்பது அன்பின் வெளிப்பாடா, அடக்குமுறையா?

கவிதாவுக்கும் பாண்டியனுக்கும் காதல் மலர்ந்ததில் இருந்து இருவராலும் முன்பு இருந்ததை போல இருக்க முடியவில்லை. கவிதாவிற்கு பாண்டியன் தன் கையை பிடிப்பது ஏதோ செய்கின்றது.

பொற்கொடி, கவிதா மற்றும் பாண்டியன் மூவரும் கடற்கரைக்குச் செல்கின்றனர். பாண்டியனும் கவிதாவும் கடலில் விளையாடுவதை பொற்கொடி பார்த்து ரசிக்கிறாள். அலையில் விளையாட கவிதாவின் கையை பிடித்து பாண்டியன் அழைக்கிறான். கவிதா வெடுக்கென்று கையை உதறிக் இழுத்துக் கொள்கிறாள். பிறகு கரைக்குத் திரும்பி பொற்கொடியுடன் உட்காருகிறாள். பொற்கொடி கவிதாவிடம் ஏன் அலையில் விளையாடுவதை நிறுத்திவிட்டாய் எனக் கேட்கிறாள். பொற்கொடி மூவருக்கும் சுண்டல் வாங்குகிறாள். பாண்டியனுக்கு வேர்க்கடலைதான் பிடிக்கும் என்று கவிதா சொல்ல பொற்கொடி அதை ரசித்து கேலி செய்கிறாள். சிறிது நேரத்திற்கு பிறகு பாண்டியன் அலையில் விளையாடிவிட்டு கரையில் பொற்கொடியின் அருகில் உட்காருகிறான். பொற்கொடி அவனிடம் சுண்டலை நீட்ட அவன் அது தனக்கு பிடிக்காது என்று சொல்கிறான். பொற்கொடி பாண்டியனுக்கு வேர்கடலை கொடுக்க அவன் கவிதாவைப் பார்க்கிறான். கவிதா திரும்பிக் கொள்கிறாள்.

கவிதா , பொற்கொடி
கவிதா , பொற்கொடி

கவிதாவுக்கும் பாண்டியனுக்கும் காதல் மலர்ந்ததில் இருந்து இருவராலும் முன்பு இருந்ததைப்போல இருக்க முடியவில்லை. கவிதாவிற்கு பாண்டியன் தன் கையைப் பிடிப்பது ஏதோ செய்கின்றது. முதன்முறையாக பாண்டியன் தன் கையைப் பிடிப்பதை கவிதா வித்தியாசமாக உணர்கிறாள். பாண்டியனுக்கும்கூட கவிதா கையை உதறிய பிறகு அது வித்தியாசமாகப்படுகின்றது. பாண்டியன் கரைக்கு வந்ததும் பொற்கொடி அவன் தோளில் சாய்ந்து கொள்கிறாள். கவிதா அதைக் கண்டும் காணாமல் இருந்து கொள்கிறாள். பொற்கொடி நெருங்கி வர வர பாண்டியனுக்கு தனக்கும் கவிதாவுக்கும் இருப்பது காதல் எனப் புரிகிறது.

அதனால் முன்பு இருந்ததைப்போல இருவராலும் சகஜமாக இருக்க முடியவில்லை. ஏற்கெனவே ராஜேஷிற்கு நம்பிக்கை அளித்து தவறு செய்ததைப்போல இம்முறை பொற்கொடிக்கு பாண்டியன் நம்பிக்கை அளித்து தவறு செய்கிறான். மேலோட்டமாக பார்த்தால் இந்தக் காதல் உணர்வு மிக மென்மையானது, இயல்பானது என்றெல்லாம் தோன்றும். ஆனால் கவிதா மற்றும் பாண்டியனின் முடிவெடுக்க முடியாத குணத்தினால் ராஜேஷ், பொற்கொடி என்று மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கவிதா மற்றும் பாண்டியனின் காதலை ராஜேஷ் புரிந்து கொண்டாலும்கூட அவனால் அவ்வளவு சீக்கிரம் கவிதாவை மறந்துவிட முடியாது. கவிதா சொல்வதற்கு முன்பே தானாக புரிந்துகொண்டு விலகிச் செல்கிறான்.

கவிதாவிற்கு எந்தச் சூழ்நிலையிலும் நல்ல நண்பனாக உடன் இருப்பேன் என்று கூறுகிறான். பொற்கொடி கவிதா பாண்டியன் நட்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருவரையும் சேர்த்தே காதலிப்பதாகச் சொல்கிறாள். ஒருவேளை கவிதா பாண்டியனின் காதல் விஷயம் தெரிய வரும்போது ராஜேஷைப்போல பொற்கொடியினால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். பொற்கொடி இதனால் பெரும் மன வருத்தத்திற்கு ஆளாகலாம்.

பாண்டியனுக்கு, தனக்கும் கவிதாவிற்கும் இடையில் இருப்பது காதல் என்பது தெரிந்ததும் அது சரியோ, தவறோ ஆனால் முடிவெடுக்கும்முன் பொற்கொடியின் காதலை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது. கவிதா பெங்களூரில் இருந்து பேசும்போது பாண்டியனுக்கு கவிதாவின் மேல் இருப்பது காதல் என்று புரிந்துவிடுகிறது. ஆனாலும் கவிதா வருவதற்குள் அவசரப்பட்டு பொற்கொடியின் காதலை ஏற்றுக் கொண்டதாக சொல்வது எல்லோரையும் சிக்கலில் ஆழ்த்துவது.

AKS
AKS

சிவா தன் அறையில் தனிமையில் உட்கார்ந்து இருக்கிறான். அவனுக்கு காணும் இடமெல்லாம் காயத்ரி இருந்தது நினைவுக்கு வருகிறது. சிவாவிற்கு அடிபட்டு இருந்த போது காயத்ரி அவனுக்கு உதவியது, அலுவலகத்தில் காயத்ரி அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகிச் செல்வது எல்லாவற்றையும் நினைத்து வருந்தி, கிட்டார் வாசித்துக் கொண்டு பாடுகிறான். அதை தனது செல்போனில் பதிவு செய்து காயத்ரிக்கு அனுப்பி வைக்கிறான்.

ஒரு பக்கம் மாயா சிவாவின் முடிவுக்காகக் காத்திருக்கிறாள். ஆனால் சிவா ஒரு நொடிகூட காயத்ரியை மறக்க முடியாமல் தவிக்கிறான். சிவாவும் காயத்ரி ஒன்று சேராவிட்டாலும் சிவா தற்போது இருக்கும் சூழ்நிலையில் மாயாவுடன் இணைவது மீண்டும் ஒரு சண்டையை உருவாக்கலாம்.

AKS
AKS

பரத் சிவாவின் அறைக்கு வருகிறான். மனது சரியில்லை என்று சிவாவை மது அருந்த அழைக்கிறான். பரத்திற்கு புனிதாவின்மீது இருக்கும் சந்தேகம் வலுப்பெற்று இருக்கிறது. காரணம் புனிதாவிற்கு கால் செய்ய புனிதாவின் செல்போனில் கிஷோர் பேசுகிறான். பரத் எந்த நேரமும் புனிதா மற்றும் கிஷோரை நினைத்துக் கொண்டிருக்கிறான். இதனால் தன்னைத்தானே வருத்திக் கொண்டு மனவருத்தத்துடன் எந்த வேலையும் செய்ய முடியாமல் இருக்கிறான். அந்த வருத்தத்தை மறக்க பரத் சிவாவை மது அருந்த அழைக்கிறான். சிவா ஏற்கனவே சோகமாக பாடல் பாடி அதை காயத்ரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என செல்போனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காயத்ரி வீட்டுக்கு வந்தும் உடல்நலமில்லாமல் சோர்வாக உட்கார்ந்திருக்கிறாள். அவள் சோர்வாக இருப்பதை பார்த்துவிட்டு சுந்தர் அவன் கொடுத்த மருந்தை சாப்பிடாமல் வாந்தி எடுத்ததால்தான் அவளுக்கு வலி நிற்கவில்லை என்கிறான். அந்த நேரம் காயத்ரிக்கு சமையல் செய்யும் அம்மா டீ கொண்டு வந்து கொடுக்கிறார். சுந்தரின் கோபம் அதிகமாகிறது. தான் சொல்லும் எதுவுமே காயத்ரி கேட்பதில்லை என சுந்தர் கோபித்து கொள்கிறான். காயத்ரி முதல்முறையாக சலித்துக் கொண்டு சுந்தரிடம் எதிர்த்துப் பேசுகிறாள். டீயை வேகமாக டேபிளில் வைத்து விடுகிறாள். சுந்தர் காயத்ரியை டீ குடிக்குமாறு சொல்கிறான். காயத்ரி அதை கையில் எடுத்ததும் மீண்டும் அவளைத் திட்ட ஆரம்பிக்கிறான். தனக்கு அந்தப் பழக்கம் இல்லாதது பற்றி பெருமை பேசுகிறான்.

AKS
AKS

சுந்தர் தன்னைப் போலவே காயத்ரியும், சுற்றியிருக்கும் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். மனிதர்கள் அவரவர் இயல்பில் இருப்பதை சுந்தரை போன்றவர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. சுந்தருக்கு இரண்டு மனம், இரண்டு குணம் இருக்கின்றது. முதலில் முகத்தில் அறைந்தாற்போல் திட்டிவிடுகிறான். பிறகு சமாதானமாக பேசுகிறான். அவன் சமாதானமாகிவிட்டான் என்று எண்ணி அந்தக் காரியத்தை செய்யும்போது மீண்டும் திட்டத் தொடங்குகிறான்.

இதுபோன்ற மனிதர்கள் தங்கள் வாழ்வில் நிலையான எண்ணம் இல்லாதவர்கள். குழப்பவாதிகள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தங்களுக்கு மட்டுமே உலகில் எல்லாமும் தெரியும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். மற்றவர்களை நம்பாதவர்கள். காயத்ரியை சுந்தர் நம்புவதில்லை. அதனால்தான் அவள் செய்யும் காரியங்கள் எல்லாம் பின்னால் இருந்து கவனித்துக் கொண்டே இருக்கிறான். அவன் எப்போதாவது சிறு தவறு செய்ய மாட்டாளா என்று காத்திருப்பவன் போல சந்தர்ப்பம் கிடைத்ததும் அவளை திட்டத் தொடங்குகிறான்.

AKS 61: நேசிப்பவர்களின் விருப்பத்திற்கு உரியவர்களிடமும் அன்பு செலுத்தும் மனிதர்கள் புதுமையானவர்களா?

இதுபோல் குறை சொல்லிக்கொண்டே இருப்பதினால் சுந்தரை மறுத்துப் பேச முடியாதவளாக காயத்ரி மாறுவாள். அது சுந்தருக்கு இன்னும் வசதியாக ஆகிவிடும். ஆரம்பத்தில் அவனை எதிர்த்துப் பேசக்கூடாது என்று மரியாதை காரணமாக காயத்ரி அடங்கிப் போகிறாள். பிறகு பதில் பேசினால் அவன் இன்னும் மோசமாக ஏதாவது சொல்லக்கூடும் என்று காயத்ரி அமைதியாக இருக்கிறாள். ஆனால் இது தொடர்ந்தால் ஒருவேளை காயத்ரி இதன் காரணமாகவே சுந்தரை விட்டு தைரியமாக விலக நேரலாம். அல்லது காயத்ரி முற்றிலும் சுந்தரின் குணத்தை புரிந்து கொள்வதற்குள் திருமணம் ஆகிவிட்டால் இறுதிவரை இப்படியே மன உளைச்சலில் இருக்கவும் கூடும்.

AKS
AKS

சிவா அனுப்பிய பாட்டை காயத்ரி கேட்கிறாள். மனவேதனையில் காயத்ரி கண்ணீர் விடுகிறாள். தான் காயத்ரியை கவனித்துக் கொள்வதைப் பார்த்து அவள் ஆனந்தக் கண்ணீர் விடுகிறாள் என்று சுந்தர் நினைத்துக் கொள்கிறான். திருமணத்திற்கு பிறகு காயத்ரியை இன்னும் எப்படி எல்லாம் தாங்கப் போகிறேன் பார் என்று சுந்தர் சொல்வதை கேட்கும் காயத்ரியின் உதவியாளர் 'நீ பேசுவது என்னாலேயே தாங்க முடியவில்லையே... இவள் எப்படித் தாங்க போகிறாளோ' என்று மைண்ட் வாய்ஸில் சொல்வது ஹைலைட்!

காயத்ரி சிவாவின் பாடலுக்கு பதில் அனுப்புவாளா?

கவிதா மற்றும் பாண்டியனின் மன அலை ஓயுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு