Published:Updated:

இளையராஜாவின் கோரஸ் வேதனையும்; ரஜினியின் கில்லர் ஸ்டெப்ஸும்! -`சூப்பருப்பா’ அலெக்ஸு #AlexInWonderland

நகைச்சுவையில் உண்மை இருக்க வேண்டுமென்பது அலெக்ஸாண்டர் பாபுவின் பொன்சொல். ஒரு படம் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸானாலும் `நெட்ல வரட்டும் மச்சான் பார்த்துக்கலாம்' எனச் சொல்லி காத்திருக்கும் கூட்டம் இங்கு ஏராளம்.

Alex in Wonderland
Alex in Wonderland ( Screenshot grabbed from Amazon Prime )

`கே.ஜி.எஃப்' படம் பல கோடி ரூபாய் வசூலைக் குவித்து சாதனை படைத்திருந்தாலும் அமேசான் பிரைமில் வந்த பிறகுதான் அந்தப் படம் ஹிட் எனும் முழு வடிவம் பெற்றது. இதேபோல்தான் அலெக்ஸாண்டர் பாபுவின் மியூஸிக் கலந்த ஸ்டாண்டுஅப் காமெடி `அலெக்ஸ் இன் வொண்டர்லேண்டு' என்ற டைட்டிலோடு அமேசான் பிரைமில் வெளியானது. 2 மணி நேரம் கொண்ட இந்த ஷோ, மாபெரும் ஹிட்டடித்து, மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதன் சுவாரஸ்யங்களின் சாராம்சம் இதோ...

Alex in Wonderland
Alex in Wonderland
Screenshot grabbed from Amazon Prime

எத்தனை மொழி சினிமாக்கள் உலகம் முழுக்க பரவிக்கிடந்தாலும் மொழி, ஜாதி, மதமற்றது இசை. சினிமாவுக்கு இசை தேவை எனலாம். ஆனால், சினிமாவே இல்லாமல் போனாலும் இசை என்றுமே ராஜாதான்! சென்சிட்டிவாகக் கருதப்படும் இசையை பாரபட்சம் பார்க்காமல் சட்டையர் செய்வதுதான் அலெக்ஸின் ஸ்டைல். 'அலைஸ் இன் தி வொண்டர்லேண்டு' டைட்டிலை பட்டி டிங்கரிங் பார்த்து 'அலெக்ஸ் இன் தி வொண்டர்லேண்டு' என வைத்துக்கொண்டதிலே முதலில் கவர்ந்துவிட்டார்.

ராமநாதபுரம் ஆண்டாவூரணியில் பிறந்தவர் அலெக்ஸாண்டர் பாபு. கோயில், தேவாலயம், பள்ளிவாசலுக்கு வெளியே கேட்கும் பாடல்களைக் கோலா குச்சி ஐஸை சப்பிக்கொண்டே பார்க்கிறார், கேட்கிறார். 1992-ல் ஆர்மோனியத்தையும் தலையணையையும் கட்டிக்கொண்டு சென்னைக்கு புறப்படுவதிலிருந்து ஆரம்பிக்கிறது அலெக்ஸின் கதை. பேச்சுலர்ஸ், மாஸ்டர்ஸ் இரண்டையும் முடித்துவிட்டு 15 ஆண்டுகள் சாஃப்ட்வேரில் பணிபுரிகிறார். `சேஸ் யுவர் டிரீம்ஸ்' என்ற ஞானோதயம் அலெக்ஸுக்கு உதிக்க, `கரெக்ட்டா 16-வது வருஷம், வந்தாண்டா ஸ்டாண்ட் அப் காமெடி பண்ண' என்ற டோனில், தான் ஆசைப்பட்ட கலைத்துறையில் கால்பதித்தார் அலெக்ஸ். மூன்று வருடங்களே இந்தத் துறையில் இவர் பணியாற்றி வந்தாலும் தற்போது அலெக்ஸ் உலகம் முழுக்க ஃபேமஸ்.

Alex in Wonderland
Alex in Wonderland
Screenshot grabbed from Amazon Prime

பல முறை இதே ஷோவை பல இடங்களில் செய்திருந்தாலும் முதல் முறையாக அமேசான் பிரைமுக்காக அந்த ஷோ ஒலிபரப்பாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த `நல்லை அல்லை' பாடலைப் பாடுகிறார், சில சீனியர் சிட்டிஷன்களுக்கு அந்தப் பாடல் தெரியாததால் `காற்று வெளியிடை’ படத்தை பார்க்கும்படி பனிஷ்மென்ட் கொடுக்கிறார். `எடுத்தோன்னே மணிரத்னமா... அடேங்கப்பா இது நம்ம லிஸ்டுலே இல்லையே' என இதுவரை அந்த ஷோவைப் பார்க்காத பார்வையாளர்களின் முதுகுத்தண்டை லேசாக நேராக்குகிறது. அதே`நல்லை அல்லை' பாடலின் டியூனை வைத்து `அல்லேலூயா, மாஷா அல்லா, ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என சமத்துவம் போற்றி ஷோவை ஆரம்பித்து வைக்கிறார்; மொத்த கூட்டமும் கைத்தட்டல்களால் கதறுகிறது.

பின், ’நலம்தானா...’ பாடலை பீபியில் பாடி வந்த பார்வையாளர்களை நலம் விசாரிக்கிறார். அதன் பின், தனது வெற்றிக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். 30 நிமிடங்கள் கழித்து கான்செப்ட்டுக்குள் போகிறார். அவர் எடுத்துக்கொண்ட முதல் ஆள், முதல் டாபிக், இசைஞானி இளையராஜா. `சலங்கை ஒலி’ படத்தின் `மௌனமான நேரம்...’ பாடலின் மூலம் இளையராஜாவின் ஹிட்டன் டீடெயிலை எடுத்துரைக்கிறார். `இசைக்குள் ஒளிந்திருக்கும் அமைதி' என்று ஒரு விரிவுறையும் அதற்குக் கொடுக்கிறார். இசையை நாம் அனுபவித்ததற்கு எஃப்.எம் ரேடியோவுக்கு பெரும் பங்குண்டு. எந்தெந்த நேரத்தில் என்னென்னா ஷோக்கள் ஓடும், யாருடைய பாடல்கள் பாடும் என்பது ஒரு காலத்தில் நமக்கு அத்துப்படி. இருப்பினும் அவர் சொல்ல வந்தது என்னவென்றால், அப்போது ரேடியோவில் ஷோ முடிய வேண்டுமென்பதற்காக, விளம்பரங்கள் அதிகம் போடவேண்டுமென்பதற்காக 'அமைதி' இடம்கொண்ட சில இடங்களைக் காலிசெய்து, பாடல்களை ஃபாஸ்டு ஃபார்வேர்டில் ஓடவிட்டுவிடுவார்கள்.

Alex in Wonderland
Alex in Wonderland
Screenshot grabbed from Amazon Prime

இளையராஜாவிலிருந்து அப்படியே வித்யாசாகருக்கு வந்த அலெக்ஸ், அமைதியின் முக்கியத்துவத்தோடு சேர்த்து `மலரே...’ பாடலைப் பாடிக்காண்பித்தார். இவரின் சில வேற்று கிரக கம்பேரிஷன்களுக்குத் தனி பாராட்டுகள். அப்படியே மீண்டும் இளையராஜாவுக்குத் திரும்பிய அலெக்ஸ், அவரது பாடல்களில் இடம்பெறும் கோரஸைப் பற்றி எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். பொதுவாக, இளையராஜாவின் அனைத்துப் பாடல்களிலும் கோரஸ் போர்ஷன் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதைக் கடந்து செல்லும்போது வெறும் இசையாக மட்டுமே நம் காதுகளில் ஒலிக்கும். ஒரு நிமிடம் கண்களை மூடிக் கேட்டால் மட்டுமே அப்பாடலில் கோரஸ் இடம்பெற்றிருப்பது நமக்குத் தெரியும். அந்தக் கோரஸ் கொடுக்கும் டீமைக் கலாய்க்கிறார்.

கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்ற இரும்பெரும் ஜாம்பவான்கள் இருந்த காலகட்டத்தில்தான் மலேசியா வாசுதேவனும் இருந்தார். `அவர் Unsung பாடகர்' என்ற அனுதாப வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர். இந்த மைண்டு வாய்ஸ் அலெக்ஸுக்குக் கேட்க, `அடப்பாவி Unsung பாடகரா, தமிழ் சினிமாவுல 8,000 பாடல்களுக்கும் மேல பாடியிருக்கார்' என்ற இன்ட்ரோவை மலேசியா வாசுதேவனுக்குக் கொடுக்கிறார். அரசியல் எதைத்தான் விட்டு வைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இசையிலும் அரசியல் நடந்தது. கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்ற இருபெரும் ஆளுமைகளால் மறுக்கப்பட்டவர், மறைக்கப்பட்டவர் மலேசியா வாசுதேவன். இந்தச் சூழலை, `முதல் மரியாதை' படப் பாடலான `பூங்காத்து திரும்புமா...' என்ற வரிகளை, உணர்ச்சியோடு எடுத்துரைத்தார். மொத்த கூட்டமும் இதை உணர்ந்து கதறியது.

யாரோ இல்லாத இடத்தை உன்னை வைத்து நிரப்ப வாய்ப்பு வந்தால், உடனே ஆட்டோ பிடிச்சு கிளம்பிடணும்!
- அலெக்ஸாண்டர் பாபு.

மலேசியா வாசுதேவனைத் தொடர்ந்து கமல்ஹாசனையும் காம்ப்ளிகேஷனையும் ஒப்பிட்டு ஒரு விளக்கமளித்தார். `நா.மு, நா.பி' என்று ஆரம்பித்தார். அதாவது, நாயகனுக்கு முன், நாயகனுக்குப் பின். உண்மைதான். கமல் காம்ப்ளிகேஷன் என்ற வட்டத்துக்குள் போனது அந்தப் படத்துக்குப் பிறகுதான். நடிப்பில் முதிர்ச்சியை உணர்ந்ததால் பின் வரும் படைப்புகளிலும் அது பிரதிபலிக்கத் தொடங்கியது. கமல்ஹாசன் ரசிகர்களே இதை ஒப்புக்கொள்வார்கள். அதன் பிறகு, நினைத்துப் பார்க்க முடியாத சூழலோடு கமல்ஹாசனை ரோஸ்ட் செய்து டோஸ்டு செய்தார்.

முன் குறிப்பு : இந்தப் பத்தியை முடித்தால் யூடியூபுக்குச் சென்று அந்தப் பாடலைக் கேட்கத் தோன்றும்.
Alex in Wonderland
Alex in Wonderland
Screenshot grabbed from Amazon Prime

அதன் பிறகு, அரை நூற்றாண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-யைப் பற்றி ரொம்ப சிம்பிளாக, ரொம்ப இயல்பாக, ரொம்ப கூலாக ஆரம்பிக்கிறார். காதல், சோகம், ஆசை, பாசம், காமம், அழுகை, வெட்கம் என மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எம்.எஸ்.வி இசைத்தது வெறும் `4 பீட் ரிதம்'. அதுவும், பாங்கோஸை வைத்து. இது அலெக்ஸ் சொன்ன பிறகுதான் தெரிந்தது. இதை அவர் சொன்னது மட்டுமன்றி மொத்த காதல் வாழ்க்கையையும் எம்.எஸ்.வி-யின் சில பாடல்களை வைத்தே சொன்னார். 'காற்று வாங்க போனேன்...' இதை எழுதிய பின் கவிதை ரெடியாகி அந்தப் பொண்ணுகிட்ட கொடுக்குறான். `ஆக மெள்ள நட மெள்ள நட மேனி என்னாகும்' என்று கவிதை இப்படிச் செல்கிறது. லவ் வொர்க்அவுட் ஆகுது. அடிக்கடி பார்த்துக்க ஆரம்பிக்கிறாங்க. ஒரு நாள் நைட் டின்னருக்கு வெளியில போறாங்க. அப்போ, `அவளுக்கென்ன, அழகிய முகம்... அவனுக்கென்ன, இளகிய மனம்... இரவுக்கென்ன.... இரவினில் வரும் நிலவுக்கென்ன' பாடல் அந்தச் சூழலில் மெல்லிசையாடுகிறது. அப்படியே கல்யாணம் நடக்குது. முதலிரவு சமயத்துல, `பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயினில் புன்னகை சிந்தி...' பாடல் ஒலிக்கிறது. இருவருக்கும் பிரிவு ஏற்படுகிறது. அந்தச் சமயத்தில், `அவள் பறந்து போனாலே, என்னை மறந்து போனாலே' என்ற அழுகுரலில் இசைக்கிறார். இப்படி மொத்த இல்லற வாழ்க்கையின் இறுதிவரை எம்.எஸ்.வி-யின் பாடல்களின் வாயிலாக இசைக்கிறார், பாடுகிறார். அதுவும் சிம்பிளான அவரின் 4 பீட் ரிதமில்.

அதன் பிறகு, யாரும் எதிர்பார்க்காத சீர்காழி கோவிந்தராஜனின் பாடல்களைப் பாட ஆரம்பிக்கிறார். அவரின் டோனையும் அவர் பாடிய நாஸ்டால்ஜிக் சாமி பாடல்களையும் பாடிக் காண்பித்தார். இவரது பாடல்களை ஏதோவொரு சூழலில் எப்படியும் நாம் கடந்து வந்திருப்போம். பழனிமலை முருகன் கோயிலில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் திருச்செந்தூரில்... என எல்லா தேவஸ்தளங்களுக்கும் சீர்காழியின் பாடல் மூலம் நம்மை அழைத்துச் சென்றார் அலெக்ஸ். சிறு வயதில் அம்மாவின் கைவிரல் பிடித்து கோயில் கோயிலாக நாம் அலைந்து திரிந்தது நம் நினைவுக்கு வரும். இறுதியாக, எம்.எஸ்.வி-யின் இசையில் சீர்காழி பாடிய `உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலோடு' சீர்காழி ரோஸ்டை முடித்தார். நடுநடுவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் விட்டு வைக்கவில்லை. `கர்ணன்’ படத்தின் மொத்த க்ளைமாக்ஸ் காட்சிகளையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். அதுவும் அவரது ரோஸ்ட் ஸ்டைலில்.

இவரைத் தொடர்ந்து எஸ்.பி.பி. இவரும் இளையராஜாவும் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மாற்றான்களாக திகழ்ந்து வந்தார்கள். இவர்களது காம்போவில் வெளியான அனைத்துப் பாடல்களுமே காவியம். உடலில் ஒரு பாதியை இளையராஜாவின் இசை உருக்கினால், மறுபாதியை எஸ்.பி.பி-யின் குரல் உருக வைக்கும். பாடிக்கொண்டிருக்கும்போதே சிரிப்பார், அழுவார், நகைப்பார், கொஞ்சுவார் எல்லாமே செய்வார். முக்கியமாக அந்த `ரீப ராப ரிப்பப்பா'. திரைக்குப் பின்னே இளையராஜாவுடன் எஸ்.பி.பி பின்னியிருந்தாலும், திரையோடு எஸ்.பி.பி பின்னியிருக்கும் ஒரு நடிகர் ரஜினி. அந்தக் காலத்தில் ரஜினியின் இன்ட்ரோ சாங் என்றாலே எஸ்.பி.பிதான். இந்த இருவரையும் இணைத்து புது வெரையிட்டி ரோஸ்ட்டை சமைத்தார் அலெக்ஸ். அதிலும் குறிப்பாக, எஸ்.பி.பி-யின் குரலுக்கு நடனமாடாமல் ரஜினி நடந்ததையும், பின்நாளில் ரஜினியின் கில்லர் ஸ்டெப் பற்றியும் செய்த ரோஸ்ட் பிரமாதம்.

கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மானின் வழிபாட்டை ஆரம்பித்தார். அவரது முதல் படமான `ரோஜா’ படப் பாடலின் கேசட்டில் கோரஸ், டிரம்ஸ், சவுண்டு இன்ஜினீயர் என அனைவரின் பெயரும் இடம்பெற்றிருந்ததைப் பெருமையாகச் சொல்லி முடித்த பின், அவரது ஸ்டைலில் சில ஹ்யூமர் தூவல்களைப் போட்டார். வழக்கம்போல் கம்பேரிஷன் செய்து சில ஷாக்கிங்களைக் கொடுப்பார். இம்முறை ஏ.ஆர்.ரஹ்மானை சச்சினுடன் இணைத்தார். அந்தக் காலகட்டத்திலே இந்த ஒப்பீடு நடந்தது. ரஹ்மானின் குரல் சமயத்தில் சச்சினின் குரலோடு ஒத்துப்போகும். அந்தக் குரலுக்குள் ஒலிந்திருக்கும் கீச் கீச் சத்தம்; நினைத்துப் பார்த்தால் அவர் பாடிய ஏதோவொரு பாடல் காதுகளில் ஒலிக்கும். வரிசையாக அவர் வேலை செய்த காவியத்தையும் நாஸ்டால்ஜிக் நினைவுகளோடும் அழகாக ஒப்பிட்டுப் பேசினார். இறுதியாக `ஜோதா அக்பர்' படத்தின்`குவாஜா மேரே குவாஜா பாடலோடு' முடித்தார். சிலிர்த்ததோடு ஷோவும் முடிந்தது.

`காதலன்' படத்துல அந்த டும் டும் அடிக்கிற அடியில, ஊர்வசியால வெளியில வர முடியலை!
- அலெக்ஸாண்டர் பாபு
``எனக்கே சில படங்கள்ல கிரெடிட்ஸ் தரல!'' - வடிவேலு, கவுண்டமணிக்கு காமெடி டிராக் எழுதிய ராஜகோபால்

சாரங்கி, பார்லேஜி, டேப்ரிக்கார்டர், வாக்மேன் என 80-களின் நினைவுகளாகப் பயணிக்க, நடுநடுவே 90-களின் நாஸ்டால்ஜி நினைவுகளும் எட்டி எட்டிப் பார்த்தது. எத்தனை வயதைச் சேர்ந்தவர்கள் இந்த ஷோவைப் பார்த்திருந்தாலும் மொத்த வருடங்களின் நினைவாக அந்த ஷோ அமைந்திருந்தது. மொத்த இரண்டு மணி நேரமும் வெறும் ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்து பெர்ஃபார்ம் செய்திருந்தார். பழைய நினைவுகளை மீண்டும் கிண்டிப் பார்க்க உடனே ஓடுங்கள் அலெக்ஸ் இன் தி வொண்டர்லேண்டுக்கு!