Published:Updated:

BB Ultimate 28: ஆங்கர் சிம்பு அசத்துவாரா; சர்ப்ரைஸுக்குக் காத்திருக்கும் போட்டியாளர்கள்!

BB Ultimate 28

BB Ultimate 28: “அக்கா.. மேல ரொம்பத்தான் பாசம்.. என்னைத் தலைவராக்கணும்னு நீ நெனக்கலைல்ல..” என்று தாமரை விளையாட்டும் செல்லமான கோபமும் கலந்து கேட்க...

Published:Updated:

BB Ultimate 28: ஆங்கர் சிம்பு அசத்துவாரா; சர்ப்ரைஸுக்குக் காத்திருக்கும் போட்டியாளர்கள்!

BB Ultimate 28: “அக்கா.. மேல ரொம்பத்தான் பாசம்.. என்னைத் தலைவராக்கணும்னு நீ நெனக்கலைல்ல..” என்று தாமரை விளையாட்டும் செல்லமான கோபமும் கலந்து கேட்க...

BB Ultimate 28
5 சீசன்கள் + அல்டிமேட் என்று கடந்த ஆறு சீசன்களை கமல்தான் இதுவரை தொகுத்துத் தந்து கொண்டிருந்தார். அதில் இன்று மாற்றம் நிகழ்கிறது. சிம்பு வரப் போகும் முதல் நிகழ்ச்சி இது. பிக்பாஸ் போன்ற சிக்கலான விளையாட்டை வழிநடத்துவதற்கு பல நுட்பமான புரிதல்கள் வேண்டும். சில விமர்சனங்கள் இருந்தாலும் கமல் அதை சிறப்பாகச் செய்தார் என்பதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிம்பு இந்த டாஸ்க்கைச் சமாளிப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும். நேற்றைய எபிசோடில் நடந்த தலைவர் போட்டியை சுவாரசியமாக்கியதில் நிரூப்பின் பங்கு பெரியது. சற்று அழிச்சாட்டியமாக செயல்பட்டாலும் போட்டி என்று வந்து விட்டால் அதில் கணிசமான ஈடுபாட்டைக் காட்டுவது நிரூப்பின் ஸ்டைல். நிரூப்பிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சிநேகனும் பாலாஜியும் திணறினார்கள். இன்னொரு பக்கம் அபிராமி அனத்திக் கொண்டேயிருந்தார்.

எபிசோட் 28-ல் நடந்தது என்ன?

‘ஒரு குச்சி.. ஒரு குல்ஃபி’ என்கிற பாட்டை நூறாவது தடவையாக ஒலிபரப்பி மக்களை எழுப்பினார் பிக் பாஸ். ‘வெயிட்ட காட்டு’ என்கிற தலைப்பில் தலைவர் போட்டி நடந்தது. சிறந்த பங்கேற்பாளர்களாகத் தேர்வான தாமரை, அபிராமி, சிநேகன் மற்றும் ஜூலி ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். கார்டன் ஏரியாவில் அவரவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட சீஸா இருக்கும். ‘யார் தலைவராக வேண்டாம்?’ என்று நினைக்கிறார்களோ, அவர்களின் தொட்டியில் கற்களை வைத்து இன்னொரு பக்கம் சாய்க்க வேண்டும். யாருடைய தொட்டி கீழே இறங்காமல் இருக்கிறதோ, அவரே வெற்றியாளர். சுருக்கமாகச் சொன்னால், தலைவராக்க விரும்பாதவர்களின் தலையில் கல்லை வைக்க வேண்டும்.

சுருதி, அனிதா, நிரூப்
சுருதி, அனிதா, நிரூப்

“தலைவராக்க விரும்பலையா? கல்லைத் தூக்கிப் போடுங்க”

பாலா, பாலாஜி, சுருதி ஆகிய மூவரும் ‘இப்போதான் தலைவரா இருந்தாங்க. வேற யாருக்காவது வாய்ப்பு கிடைக்கட்டும்’ என்று தாமரையை நிராகரித்தார்கள். அடுத்த சுற்றில் சிநேகனுக்கும் இதே காரணத்தை பாலா சொன்னார். ஒருவகையில் இது சரியான காரணமாகத் தெரியலாம். ஆனால் இன்னொரு வகையில் முறையற்றது. ஒருவர் ஏற்கெனவே தலைவராக இருந்த காரணத்தினாலேயே அடுத்த வாரமும் வரக்கூடாது என்று ஒன்றுமில்லை. அவருடைய தலைமைக்காலம் சிறப்பாக இருந்தது என்றால் மறுபடியும் அவரையே தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால் - இது வெறுமனே தலைவர் பதவி மட்டுமல்ல. மேலும் ஒரு வாரத்தை பாதுகாப்பாக நீட்டித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு என்பதால் அதனுடன் இணைந்துதான் யோசிப்பார்கள். “நீ கேப்டனாக வேண்டாம்’ என்பதை முகத்திற்கு நேராகச் சொல்ல மாட்டார்கள். அதற்குப் பதிலாக மறைமுகமான காரணங்களைச் சொல்வார்கள். விதிவிலக்காக பாலா, நிரூப் போன்றவர்கள் மட்டுமே துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் காரணங்களைச் சொல்வார்கள்.

“அக்கா.. மேல ரொம்பத்தான் பாசம்.. என்னைத் தலைவராக்கணும்னு நீ நெனக்கலைல்ல..” என்று தாமரை விளையாட்டும் செல்லமான கோபமும் கலந்து கேட்க, அதற்கு பாலா தந்த பதில் ரசிக்கத்தக்கதாக இல்லை. “என்னடா. தம்பி இப்படிச் சொல்லிட்டே?” என்று தாமரை பரிதாபமாக கேட்ட போது “சும்மாதான் சொன்னேன்.. எல்லாத்துக்கும் கோச்சுக்காதக்கா” என்று அழிச்சாட்டியம் செய்தார் பாலா.

கால்குலேட்டர் அனிதா – அபிராமி சூட்டியிருக்கும் பட்டப்பெயர்

ஒரு பக்கம் அபிராமியிடம் “ஏன் சகஜமா பேச மாட்டேன்றே?” என்று ரைட் இன்டிகேட்டர் போடும் நிரூப், இன்னொரு பக்கம் டாஸ்க்கில் அபிராமியை ஓரங்கட்டும் வேலையையும் சிறப்பாகச் செய்கிறார். ஏற்கெனவே சொன்னதுதான். டாஸ்க் என்று வந்து விட்டால் நிரூப்பின் கணக்குகளை எதிராளி புரிந்து கொள்ளவே முடியாது. அப்படியொரு ‘டாஸ்க் தீவிரவாதி’ அவர். அபிராமியை நிராகரித்த நிரூப் “தலைவர் பதவி ரொம்ப டென்ஷனான வேலை.. அபிராமியால ஹாண்டில் செய்ய முடியாது. ஜாலியா இருக்கட்டும்” என்று காரணம் சொன்னார். மேற்பார்வைக்கு ஆதரவான கமெண்ட் போல தெரிந்தாலும் ‘நீ வேண்டாம்’ என்பதுதான் இதன் உட்பொருள்.

நிரூப்பின் இது போன்ற ரைட் இன்டிகேட்டர் விளையாட்டுக்களால் வெறுப்பாகியிருக்கும் அபிராமி “வாய்ப்பு வந்தாதானே என்னை நிரூபிக்க முடியும்.. இவன் ஏன் இப்படில்லாம் பண்றான்” என்று ஜூலியிடம் புலம்பிக் கொண்டிருந்தார். ஏற்கெனவே எரிச்சலில் இருக்கும் அபிராமி மீது தீக்குச்சியை பற்ற வைத்தது மாதிரி அனிதாவும் இணைந்து கொண்டார்.

அனிதா
அனிதா

“அபிராமி இதுவரை பெரிசா நாமினேட் ஆனதில்லை. மக்களை சந்திச்சு வரட்டும்’ என்று கடந்த வார காரணத்தையே மீண்டும் சொல்லி அனிதா நிராகரிக்க, அபிராமியின் கொலைவெறி உக்கிரமானது. “இவங்க நாமினேட் பண்ணாததுக்கு நான் என்ன செய்ய முடியும்? நான் என் கேமைத்தான் விளையாடறேன்” என்று இதைப் பற்றியும் இணைத்து ஜுலியிடம் ஆவேசமாக அனத்திக் கொண்டிருந்தார். ‘தான் ஒரு வீக் பிளேயர்’ என்கிற காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே இருக்கும் அபிராமிக்கு இது போன்ற கமெண்ட்கள் மேலும் உளைச்சலைத் தருகின்றன. எனவே நேற்றைய எபிசோடில் அவர் உக்கிரமாக அனத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பிக் பாஸ் ஆட்டம் பற்றியே 24x7 யோசிப்பதால் அனிதாவிற்கு ‘கால்குலேட்டர்’ என்கிற பெயரைச் சூட்டியிருக்கிறார் அபிராமி.

சிநேகன்
சிநேகன்

நிரூப்பைச் சமாளிக்க முடியாத சிநேகன்

ஒரு போட்டியாளரின் தொட்டியில் மூன்று கற்கள் வைத்தவுடன் அது கீழே இறங்கி விடும். எனில் அவர் அவுட் என்பதுதான் பொருள். இந்த விஷயம் விதிமுறையில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தான் தலைவர் ஆக முடியாதா என்கிற எரிச்சலில் சிநேகன் இருந்தார். “மூணு கல்லுக்கு மேல வைக்க முடியாதா, அப்படி ரூல்ஸ்ல இருக்கா?” என்று கோக்குமாக்காக கேட்டுக் கொண்டிருந்தார். வழக்கமாக நிரூப்தான் இப்படிப் போட்டு குழப்புவார். ஆனால் நிரூப்பையும் மிஞ்சும் வகையில் விதியை கொத்துப் பரோட்டா போட்டு குழப்பிய சிநேகன், அதை அழுத்தமாகச் சொல்லவும் துணிச்சல் இல்லாமல் “என்னமோ. கேம் முடிஞ்சது. ஆள விடுங்க” என்று எஸ்கேப் ஆனார். எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் நிரூப் ஆக்கிரமிப்பு செய்து விடுகிறானே என்கிற எரிச்சலில் இருக்கிறார் சிநேகன். இதை அவர் பாலாஜியிடம் புலம்பி புலம்பி அவரையும் இன்னொரு சிநேகனாக மாற்றி வைத்திருக்கிறார்.

ஜூலி
ஜூலி

ஒருவழியாக தலைவர் போட்டிக்கான முதல் கட்டம் முடிந்தது. இதில் ஜூலி தேர்வானார். “இப்படிச் செஞ்சிருந்தா.. அப்படி ஆகியிருக்கும்.. இவர் வந்திருந்தா. அவர் போயிருப்பார்.” என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்ஷன்களை சொல்லி நிரூப் விளக்கிய போது “ஆமாம். தப்பு பண்ணிட்டேன்.. சிநேகன் அண்ணா வர்ற மாதிரி செஞ்சிருக்கலாம்” என்று வருந்தினார் அனிதா. ஜூலி வரக்கூடாது என்பது நிரூப்பின் நோக்கம். ஆனால் அது நடந்து விட்டது. அனிதா விஷபாட்டில் என்றால் அதன் மூடி நிரூப் எனலாம். இரண்டு பேருக்கும் நல்ல பொருத்தம். எனவே பெரும்பாலும் ஒன்றாகவே அமர்ந்து விடிய விடிய ஆலோசனை செய்கிறார்கள்.

கறுப்பு – சிவப்பு இதயங்களுக்குள் நிகழ்ந்த மோதல்

தலைவர் போட்டிக்கான அடுத்த கட்டம் நடந்தது. ஏற்கெனவே தேர்வு பெற்ற ஜூலி மற்றும் Trending Player பாலாவும் மோத வேண்டும். ஆனால் இவர்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். நாற்காலியில் ஜாலியாக அமர்ந்திருக்கலாம். இவர்களின் சார்பில் இவர்களின் ஆதரவாளர்கள் தங்களுக்குள் அடித்து மோதிக் கொண்டு போராடுவார்கள். (ஆம், வெளியில் நிகழும் அதே தேர்தல் மாதிரிதான்). கறுப்பு நிற நாற்காலியில் பாலாவும் சிவப்பு நிற நாற்காலியில் ஜூலியும் ஜாலியாக அமர்ந்திருந்தார்கள். பாலாவின் அணியில் நிரூப், அனிதா, சுருதி ஆகிய மூவரும் இருந்தார்கள். மீதமுள்ளவர்கள் ஜூலிக்கு ஆதரவு. ஜூலியைப் பிடிக்கிறதோ, இல்லையோ.. அது இரண்டாம் பட்சம். பாலா வந்து விடக்கூடாது என்பதுதான் இவர்களுக்கு முக்கியம்.

கார்டன் ஏரியாவில் இதயம் வடிவிலான வெள்ளை அட்டைகள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும். கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான சார்ட்கள் தரப்படும். அவரவர்களின் ஆதரவாளர்கள் தங்கள் அணியின் நிறம் கொண்ட அட்டையை தயார் செய்து, வெள்ளை அட்டையின் மீது ஒட்ட வேண்டும். இறுதி பஸ்ஸர் அடிக்கும் போது எந்த அணியின் இதயங்கள் அதிகம் இருக்கிறதோ, அந்த அணி வெற்றி.

பாலா
பாலா

தொண்டர்கள் போஸ்டர் ஒட்டுவதற்காக சுவர்களை ஆக்கிரமிப்பு செய்வது போல, இருக்கும் வெள்ளை அட்டைகள் முழுவதிலும் இரு அணிகளும் போட்டி போட்டு ஒட்டினார்கள். ஆனால் அதற்கான இடம் இல்லாத போதும் மேலும் சார்ட்களை அனுப்பினார் பிக் பாஸ். “ஒட்ட இடமே இல்லையே.. அதுக்கு மேலயே ஒட்டலாமா.. சொல்லுங்க பிக் பாஸ்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் அபிராமி. ஆனால் பிக் பாஸிடமிருந்து பதில் இல்லை. ஒட்டியதின் மீதே ஒட்டலாம்; ஏற்கெனவே ஒட்டியதைக் கிழித்து விட்டு தங்கள் அணியின் நிறத்தை ஒட்டலாம்; வெள்ளை அட்டையையே கூட கைப்பற்றிக் கொள்ளலாம். எப்படியோ கலாட்டா நடந்தால் சரி. இதுதான் பிக் பாஸின் கள்ள மெளனத்திற்கான அர்த்தம்

அனிதா மற்றும் நிரூப்பின் மீது செம கடுப்பில் இருந்த அபிராமி, இருவர்களைப் பற்றியும் அனத்திக் கொண்டே இருந்தார். ஆனால் விஷ பாட்டிலும் மூடியும் அபிராமியைக் கண்டு கொள்ளாமல் ‘காரியத்திலேயே கண்ணாக’ இருந்தார்கள். இந்த டாஸ்க்கில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற நோக்கில் நிரூப் செய்த அலப்பறைகள் சுவாரசியமாக இருந்தன. வெள்ளை அட்டைகளைப் பறித்து அசால்ட்டாக தரையில் ஆங்காங்கே போட்டு வைத்திருந்தார் நிரூப். சண்டை மெல்ல உக்கிரமாகத் துவங்கும் போதுதான் சிநேகன் இதைக் கண்டுபிடித்தார். வெள்ளை அட்டையின் பின்பக்கம் கறுப்பு இதயம் ஒட்டப்பட்டிருந்தது. (என்னவொரு வில்லத்தனம்?!)

வெப்பன் சப்ளையர் பிக் பாஸ்

வழக்கம் போல் பாலாவின் அழிச்சாட்டியமும் இதில் இருந்தது. அவருக்கு கேப்டன் ஆக விருப்பமில்லையாம். “வேணாம்ன்றவனுக்காக ஏண்டா போராடறே. அவன் கேப்டன் பொறுப்பை சரியா செய்யலைன்னா.. யாரைக் கேட்கறது?” என்று சரியான கேள்வியை தாமரை கேட்ட போது “எனக்கு ஜூலி வர வேண்டாம். அவ்வளவுதான்” என்று அழும்பு செய்தார் நிரூப். “என்னை தலைவரா தேர்ந்தெடுக்கணும்னா தேர்ந்தெடுங்க.. மார்க் போடும் போது என்னைப் பத்தி குறை சொல்றதுக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்று சர்காஸ்டிக்காக கிண்டலடித்தார் பாலா. தலைவர் போட்டியில் இருக்கும் பாலாவும் ஜூலியும் ஜாலியாக ‘அந்தாக்ஷரி’ விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அட்டைகள் கிழியக் கிழிய மேலும் சார்ட் அட்டைகளை அனுப்பிக் கொண்டேயிருந்தார் பிக் பாஸ். எனில் வெப்பன் சப்ளையரின் நோக்கம் என்ன? போர் நீள வேண்டும் என்பதுதானே? ‘கையில் இருக்கும் அட்டைகளைப் பிடுங்க வேண்டாம்’ என்பது இரு அணிக்கும் இடையே ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்டாக இருந்தது. ஆனால் நிரூப்பின் அழிச்சாட்டியத்தைப் பார்த்த சிநேகன் டென்ஷன் ஆகி சுருதி மற்றும் அனிதாவிடமிருந்து அட்டைகளைப் பலவந்தமாக பிடுங்கத் தொடங்கினார். கூடவே பாலாஜியும் ஆவேசம் அடைந்து அட்டைகளை கிழித்து காம்பவுண்ட் சுவருக்கு வெளியே வீசினார். இத்தனைக் களேபரம் நடந்தாலும் பிக் பாஸ் பஸ்ஸரை அடிக்கவில்லை. எந்த நேரத்தில் இறுதி மணியை அடிக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். பிக் பாஸ் வீட்டின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும் எம்பெருமான் அவர்தான்.

நிரூப்
நிரூப்

நிரூப்பின் மாஸ்டர் பிளான்

எதிர்தரப்பின் அட்டைகளில் பலவற்றை அழித்து விட்டு தன் அணியின் அட்டைகளை கையிலேயே வைத்திருந்த நிரூப், ஒரு கட்டத்தில் ஓடிச் சென்று கழிவறையின் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டார். அங்கேயே அமர்ந்து ஒட்டி விட்டு இறுதி பஸ்ஸர் அடிக்கும் வரை அங்கேயே இருப்பது என்பது அவருடைய ராஜதந்திரம். (தலைவன் ஜெயிக்கறதுக்காக கழிவறையில் எல்லாம் தொண்டர்கள் காலம் தள்ள வேண்டியிருக்கிறது). நிரூப்பின் மாஸ்டர் பிளானை தாமதமாகப் புரிந்து கொண்ட சிநேகன் துரத்திச் சென்றாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாத்ரூம் வாசலில் மூச்சு வாங்க காவல் நின்ற சிநேகனும் பாலாஜியும் கதவைத் திறந்த நிரூப்பின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். ஆனால் இறுதி பஸ்ஸர் அதற்குள் அடித்து விட்டது. “பரவாயில்ல. உடைங்க. உடைங்க..” என்று சிநேகன் சொல்ல, பாலாஜி நிரூப்பிடமிருந்து பறிக்கப்பட்ட அட்டைகளை உடைக்க முயன்றது அபத்தம். “பாலாஜி.. நிறுத்துங்க. டாஸ்க் முடிந்தது” என்று எச்சரித்த பிக் பாஸ், உடைக்கப்பட்ட அட்டைகளும் கணக்கில் செல்லும் என்று அறிவிக்க, பாலா அணி அமோகமாக வெற்றி பெற்றது. பாலாவின் இந்த வெற்றிக்கு பிரதான காரணம் நிரூப்தான். இந்த ஆட்டத்தை சுவாரசியமாக்கியது நிரூப்பின் அழிச்சாட்டியங்கள். நாற்காலியில் ஜாலியாக அமர்ந்து கொண்டே வெற்றி பெற்ற பாலா “எல்லா டாஸ்க்கையும் இதே மாதிரி வைங்க பிக் பாஸ். நல்லாயிருக்கு” என்றது அநியாயக் குறும்பு.

பார்வையாளர்களின் கேள்விகள்

“இப்படிக்கு நாங்க.. பதில் சொல்ல வாங்க” என்கிற அடுத்த டாஸ்க் ஆரம்பித்தது. பார்வையாளர்களின் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் சொல்ல வேண்டும். கேள்விகள் வந்த விதத்தைப் பார்த்தால் பிக் பாஸ் டீமே தயார் செய்து அனுப்பியது போல் வில்லங்கமாக இருந்தன. “வனிதா உங்களை பிராடுன்னு சொன்னதுக்கு கோபப்பட்டீங்களே. ‘மயிறு. கிறுக்கு..-ன்ற வார்த்தைகளை நீங்களும் பயன்படுத்தறீங்களே?” என்கிற முதல் கேள்வி தாமரைக்கு வந்தது. “மயிர் என்பது தமிழ் சொல்” என்று பண்டிதர் போல் சமாளித்த தாமரை “ஒரு வார்த்தையை சொல்ற விதத்தில்தான் இருக்கு. என்னைத் தூண்டி விட்டாதான் அப்படிப் பேசியிருப்பேன். இனிமே மாத்திக்கறேன்” என்று மழுப்பினார். கோபம் வந்து விட்டால் தாமரையும் பாதி வனிதாதான். அப்படியாக வசைகள் இறைபடும்.

‘உங்க கேமை விளையாடாம பாலாஜி கிட்ட அனத்திக்கிட்டே இருக்கீங்களே?” என்கிற சங்கடமான, ஆனால் சரியான கேள்வி சிநேகனுக்கு வந்தது. “நான் நேர்மையா விளையாடறேன். நான் பாலாஜியிடம் சொன்னது வருத்தம்தான். புகார் இல்லை” என்று சிநேகனும் சமாளிக்க வேண்டியிருந்தது. “நீங்க பொழுதன்னிக்கும் விளையாட்டைப் பற்றி அனலைஸ் பண்றது பொய்யா விளையாடற மாதிரி தெரியுதே?’ என்கிற கேள்வி கால்குலேட்டர் அனிதாவிற்கு வந்தது. “போன சீசன்ல வாங்கின அடி அப்படி. அப்ப செஞ்ச எமோஷனல் தப்புகளை இப்பச் செய்யக்கூடாதுன்றதுக்காக கவனமா இருக்கேன். அது அப்படித் தெரியுது போல” என்று விளக்கம் தந்தார் அனிதா.

அனிதா சுருதி
அனிதா சுருதி

“ஆடியன்ஸ்ல ஒருத்தரே பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிற மாதிரி தெரியுது” என்று அரதப்பழசான கிண்டல் சுருதி மீது சுமத்தப்பட்டது. “நான் கொஞ்சமாத்தான் பேசுவேன்.. ஆனா பேச வேண்டிய நேரத்துல பேசிடுவேன். பெஸ்ட் பிளேயர்லாம் வாங்கியிருக்கேன். இனிமே கூடுதல் கவனமா இருக்கேன்” என்று வழக்கம் போலவே உறுதிமொழி தந்தார் சுருதி. அடுத்த கேள்விதான் ரகளையாக இருந்தது. “அபிராமி உங்களிடம் பேச வேண்டும் என்று ஏன் மல்லுக்கட்டுகிறீர்கள்?” என்பது நிரூப்பிற்கான கேள்வி. “யாரு பெத்த பிள்ளையோ.. நல்லா இருக்கணும். சரியா கேட்டிருக்கு” என்பது அபிராமியின் மைண்ட் வாய்ஸாக இருக்கும். “ஒரு சக போட்டியாளரா அவங்களைப் புரிஞ்சுக்க டிரை பண்றேன்” என்று அதே பல்லவியைப் பாடினார் நிரூப்.

“பழைய சீசன்களைப் பார்க்காம ஏன் இந்த சீசனுக்கு வந்தீங்க?” என்கிற கேள்வி பாலாஜியின் மீது விழுந்தது. “நான் இப்போது செய்கிற தவறுகளைப் பார்த்து வருங்கால சந்ததிகள் பாடம் கற்றுக் கொள்வார்கள் அல்லவா, அதனால்தான்” என்று தத்துப்பித்தென்று சொல்லி விட்டு அவரே சிரித்துக் கொள்ள “தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சிடுங்க” என்பது மாதிரி சபையும் கூடவே சிரித்தது.

கலக்குவாரா சிம்பு?

“எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா” என்று ஒரு ரியாலிட்டி ஷோவில் ஏற்கெனவே கதறியவர் சிம்பு. மனதில் பட்டதை டப்பென்று சபையில் சொல்லி விடக்கூடியவர். ஆனால் கமலின் பாணி முற்றிலும் வேறு மாதிரியானது. பிக் பாஸ் போன்ற ஆட்டத்தில் அப்படி சொல்லி விட முடியாது; சொல்லவும் கூடாது. சிம்புவிற்கான இந்த டாஸ்க்கை அவர் எப்படி கையாள்வார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கிடையில் ‘இந்த வாரம் நோ எவிக்ஷன்’ என்கிற தகவலும் வந்திருக்கிறது. சிம்புவின் முதல் எபிசோட் என்பதால் இருக்கலாம். இந்த விஷயம் ஆட்டத்தை சுவாரசியமாக்குமா? இன்னமும் மந்தமாக்குமா?