Published:Updated:

BB Ultimate 30: `பாவம் சிம்பு' - `துள்ளுவதோ இளமை' - டாஸ்க்கில் நடந்த அலப்பறைகள்!

BB Ultimate

BB Ultimate : “இப்ப.. நீ நாடகம் நடிக்கறதுக்கு சம்பளம் வாங்கறல்ல..அதுல உன் பகுதியைச் சிறப்பாக நடிக்க டிரை பண்ணுவே.. இல்லையா.? அதே மாதிரிதான் இந்த ஷோவும்.

Published:Updated:

BB Ultimate 30: `பாவம் சிம்பு' - `துள்ளுவதோ இளமை' - டாஸ்க்கில் நடந்த அலப்பறைகள்!

BB Ultimate : “இப்ப.. நீ நாடகம் நடிக்கறதுக்கு சம்பளம் வாங்கறல்ல..அதுல உன் பகுதியைச் சிறப்பாக நடிக்க டிரை பண்ணுவே.. இல்லையா.? அதே மாதிரிதான் இந்த ஷோவும்.

BB Ultimate
“இனிமேல் நிகழ்ச்சியை ஜாலியா கொண்டு போகணும்” என்று ஒவ்வொருவரிடமும் கையில் அடித்து சத்தியம் வாங்கிக் கொண்டார் சிம்பு. ஆனால் அது நடந்ததா? ம்ஹூம்… வீட்டில் அதே புகைச்சல், அதே எரிச்சல். காமெடிச் சுவைக்காக அனுப்பப்பட்ட சதீஷ், கூச்சமுள்ள கெஸ்ட் மாதிரி பம்மி பம்மி தனியாக உலவுகிறார். “காஃபி குடிக்கணும் மாதிரி இருக்குது.. யாரையாவது கேட்கலாமா, வேண்டாமா, கேட்டா நாமினேட் பண்ணிடுவாங்களோ?” என்கிற மாதிரியே பீதியுடன் இருக்கிறார். வீட்டில் உள்ள அங்கிள்கள் பேசும் போது பக்கத்தில் வாயைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். சுரேஷ் இன்னமும் தீப்பெட்டியை கையில் எடுக்கவில்லை. ஆக.. நேற்றைய எபிசோடில் முக்கியமாக எதுவும் நிகழவில்லை. பாவம், சிம்பு, இந்த வாரமும் குறும்படங்களை ரிலீஸ் செய்து நேரத்தைக் கடத்த வேண்டியதுதான் போல.

நாள் 29-ல் நடந்தது என்ன?

சுரேஷ் தாத்தாவும் தாமரையும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள். “இந்த வீட்ல எப்படி குப்பை கொட்டறதுன்னே தெரியல” என்று வழக்கம் போல் அலுத்துக் கொண்டார் தாமரை. பத்து சீசன் தொடர்ந்து வந்தால் கூட இந்த ஆட்டம் தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டே இறுதி வரைக்கும் தாமரை வந்து விடுவார் போலிருக்கிறது. “இப்ப.. நீ நாடகம் நடிக்கறதுக்கு சம்பளம் வாங்கறல்ல..அதுல உன் பகுதியைச் சிறப்பாக நடிக்க டிரை பண்ணுவே.. இல்லையா.? அதே மாதிரிதான் இந்த ஷோவும். மத்தவங்களை பத்தி கவலைப்படாதே. உன் பகுதியைச் சிறப்பா செஞ்சிட்டு போயிட்டே இரு” என்று சரியான ஆறுதலைச் சொன்னார் சுரேஷ்.

“என்னை நாமினேஷன் பண்ணே.. கொண்டே போடுவேன்”

சீக்ரெட் டாஸ்க் தொடர்பாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து அபிராமி ஓவர் ஆக்ட் ஆக்கியதில் தாமரைக்கு வருத்தம். அது உண்மை என்று நம்பியிருந்தாராம். இது குறும்படம் வழியாக அம்பலமாகி விட்டது. இதைப் பற்றி பாலாவிடம் அனத்திய தாமரை, அபிராமியிடம் பேச மறுத்து பின்னர் சற்று சமாதானம் ஆனார். பிக் பாஸ் தந்த சீக்ரெட் டாஸ்க்கை தாமரையும்தான் செய்தார். ‘டாஸ்க்கில் நடந்த பொய்யான நடிப்பிற்கு கோபித்துக் கொள்ளும் அளவிற்கு தாமரை அத்தனை அப்பாவியாக இருக்கிறார்?’ நம்ப முடியவில்லை.

சதீஷ்
சதீஷ்

“டேய்.. புதுசா.. வந்திருக்கற தம்பி.. நாமினேஷன்-ன்னு ஒண்ணு சொல்லி உள்ளே கூப்பிடுவாங்க.. அங்க போயி.. என் பேரைச் சொன்ன.. அவ்வளவுதான்.. கொண்டே போடுவேன்” என்று சதீஷை தாமரை ஜாலியாக மிரட்ட, அதை சதீஷ் சீரியஸாக எடுத்துக் கொண்டார் போலிருக்கிறது. நாமினேஷன் சமயத்தில் தாமரையின் மீது கரெக்ட்டாக முத்திரை குத்தி விட்டார். “என்னமோ.. அவங்க செஞ்சது பிடிக்கலை” என்பது அவர் சொன்ன காரணம்.

“பாலா.. உங்க டிரெண்டிங் பிளேயர் காலம் முடிகிறது. அந்த இடத்தைக் காலி பண்ணிட்டு சுத்தம் பத்தமா வைங்க. இனி யாரும் அந்தப் பக்கம் போகக்கூடாது” என்று பிக் பாஸின் அறிவிப்பு வந்தது. “அவன் காலி பண்ணி ரெண்டு மாசமாவுது.. அது கூட தெரியாம ஒரு அறிவிப்பு.. அப்ப இது ரிகார்ட் பண்ண வாய்ஸ்தானே?.. எப்பூடி கண்டுபிடிச்சேன் பார்த்தியா?” என்று பெருமிதப்பட்டுக் கொண்டார் அபிராமி.

BB Ultimate
BB Ultimate

“கத்துக்கறேன்.. தலைவரே” என்கிற NGK சூர்யா மாதிரி மேடையில் சிம்புவிடம் வாக்குத் தந்து விட்டு உள்ளே சென்ற சதீஷ், பாவமாக உலவிக் கொண்டிருந்தார். “வெளியே இருந்து பார்க்கறதுக்கு லேமினேஷன் பண்ண வீடு மாதிரி நல்லாத்தான் இருக்கு. ஆனா உள்ள எல்லோரும் டெரரா இருக்காங்களே.. இவங்க கூட எப்படி குப்பை கொட்டறது.. பேசாம மிமிக்ரி பிராக்டிஸ் பண்றதுக்கு இந்த வீட்டை யூஸ் பண்ணிக்கலாம்” என்று தனியாக அனத்திக் கொண்டிருந்த சதீஷைப் பார்த்து “அடேய்.. அதுக்காகவா உள்ள வந்தே?” என்று பிக் பாஸ் தலையில் அடித்துக் கொண்டிருந்திருக்கலாம். (தீனா வந்திருந்தால் அச்சமில்லாமல் ஒவ்வொருவரையும் ரகளையாக கலாய்த்திருப்பார்).

24 x 7 நேரமும் 360 டிகிரியில் சிந்திக்கும் அனிதா

24 x 7 ஸ்டீரீம் ஆவதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ஏதாவது தொழில்நுட்ப இடையூறு ஏற்படலாம். ஆனால் இந்த ஷோவைப் பற்றி 360 டிகிரியில் 24x7 நேரமும் சிந்திக்கும் விஷயத்தில் அனிதாவை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த அளவிற்கு அவரது மூளை உயர்தர பிராசசஸர் மாதிரி ஹைஸ்பீடில் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. இதைப் பற்றி நிரூப் கிண்டலடிக்க “அப்படி என்னை பிராண்ட் பண்ணாதே” என்று சிணுங்கினார் அனிதா.

‘துள்ளுவதோ இளமை’ என்பது அடுத்த டாஸ்க். போட்டியாளர்களில் பெரும்பாலோனோர்களின் வயது நடுத்தரத்தைத் தாண்டியிருக்கும். ஆனால் தலைப்பு மட்டும் ‘துள்ளுவதோ இளமை’. யாரோ போகிக்கு எரிக்காமல் போட்டு வைத்திருந்த ஒன்பது டயர்களை எடுத்து வந்த பிக் பாஸ் அதை வைத்து ஆடு புலி ஆட்டத்தை நிகழ்த்தினார். இரண்டு அணிகளாகப் பிரியும் வீடு, சுரேஷ் தாத்தா நடுவராக இருக்க இந்த ஆட்டத்தை ஆட வேண்டும். சாக்குப்பையில் காலை நுழைத்து ஓடி வந்து ஒரு சுருக்குப்பையை கட்டத்தில் போட வேண்டும். எந்த மூன்று பைகள், நேர்க்கோட்டிலோ, பக்கவாட்டிலோ ஒரே வரிசையில் விழுகிறதோ, அந்த அணிக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும்.

தாமரை - சுரேஷ்
தாமரை - சுரேஷ்

பெரும்பாலோனோர் தத்தக்கா, பித்தக்கா என்று மூச்சு வாங்க ஓடி வந்து பொதேர் என்று விழுந்தார்கள். தாமரை உள்ளிட்டவர்கள் கட்டத்தில் சரியாக குறிபார்த்து எறிந்தார்கள். இவர்களுடன் மல்லுக்கட்டுவதில் நடுவர் சுரேஷ் பெரிதும் சிரமப்பட்டார். ஆனால் இன்னொரு பக்கம் உற்சாகமாக ஊக்கப்படுத்தினார். இது ஏதோ ஒலிம்பிக் ரேஸ் மாதிரி, பாலாஜியை இடித்துக் கொண்டு ஓடி ஃபவுல் ஆட்டம் ஆடினார் பாலா. (ஏண்டா.. நீ ஊதினாலே நான் அப்படிப் போய் விழுவேன்.. இதுக்கு ஏண்டா இடிக்கணும்” என்பது பாலாஜியின் மைண்ட் வாய்ஸாக இருக்கும்).

கச்சா முச்சா என்று நடந்து முடிந்த இந்தப் போட்டியில் நிரூப் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களுக்கு சோப்பு டப்பா ஏதாவது பரிசாக கொடுத்தார்களா, இல்லையா என்பது நமக்கு காட்டப்படவில்லை. இந்த டாஸ்க்கையே பிக் பாஸ் ஏன் நடத்தினார் என்பதும் நமக்குப் புரியவில்லை. ஏதோ ஒரு விளையாட்டு. வேடிக்கை பார்ப்பதற்கு கூட சுவாரசியமில்லாத வகையில் சம்பிரதாயமாக நடந்து முடிந்தது. (பிக் பாஸ்.. இன்னமும் எங்களை பைத்தியக்காரங்களாவே நெனச்சிட்டு இருக்கீங்கள்ல?!”).

அபிராமியின் கைப்பாவையா ஜூலி?

இந்த டாஸ்க் முடிந்ததும் இன்னொரு ஆட்டம் வேடிக்கையாக நடந்தது. கீழே கிடந்த டயரை தாமரையின் இடுப்பில் மாட்டி ராட்டினம் போல் வேகமாகச் சுற்றி கீழே போட்டார் பாலா. “அய்யோ.. தலை சுத்துதே” என்று சிரிப்புடன் தாமரை கீழே சரிய “அங்கிள். அங்கிள்.. எனக்கு.. எனக்கு.. நானு.. நானு..” என்கிற பேபி மாதிரி ஆசையாக ஓடி வந்தார் அனிதா. “வா.. செல்லம்.. வா. என்னையா நாமினேட் பண்றே?” என்று நினைத்துக் கொண்டாரோ, என்னமோ, டயரை மாட்டி அனிதாவை ஹைஸ்பீடில் சுத்த, குடை கவிழ்ந்த ராட்டினம் மாதிரி கீழே விழுந்து மெலிதாக தலையில் அடிபட்டுக் கொண்டார் அனிதா. “அய்யோ. வலிக்குதே”: என்கிற மாதிரி அவர் துடிக்க அந்தச் சமயத்தில் பாலா அடித்த கமெண்ட் ரகளையாக இருந்தது. “அய்யோ.. தலைல அடிபட்டுடுச்சே.. ரெண்டு நாள் யோசிக்க முடியாதே.. நாமினேஷன் வேற இருக்கே..”.

 ஜூலி  - அபிராமி
ஜூலி - அபிராமி

நாமினேஷன் ஆரம்பித்தது. வீட்டின் தலைவர் பாலா, புது என்ட்ரி சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகிய மூவரையும் நாமினேட் செய்ய முடியாது. ஒவ்வொருவரும் மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும். “அபிராமியின் கைப்பாவை போலவே ஜூலி செயல்படுகிறார்” என்று காரணம் சொல்லி ஜூலியை நாமினேட் செய்தார் சுருதி. ‘மந்தமாக இருக்கிறார்’ என்கிற காரணம் சொல்லப்பட்டு சுருதியின் மீதும் ஏராளமான முத்திரைகள் விழுந்தன.

“பாலாஜி என்னை மிமிக்ரி பண்ண வேணாம்னு சொல்றாரு”

சதீஷ் வரும் போது “முதன் முறை நாமினேட் செய்யப் போறீங்க.. எப்படி ஃபீல் பண்றீங்க?” என்று பிரத்யேகமாக விசாரித்தார் பிக் பாஸ். “இந்த வீட்ல என்னைப் பார்த்து மத்தவங்க பயந்து ஒதுங்கிப் போற மாதிரி தெரியுது.. (எதே?!) யார் கிட்ட பேசறதுன்னே தெரியலை.. ஒரு மாதிரியா இருக்குது” என்று தயங்கிக் கொண்டே சதீஷ் சொல்ல “அவங்க கேமை அவங்க விளையாடறாங்க. உங்க கேமைப் பாருங்க தம்பி” என்று அட்வைஸ் செய்தார் பிக் பாஸ். முதல் வாரத்திலேயே பாலாஜியை நாமினேட் செய்து அதிர்ச்சி தந்தார் சதீஷ். இவர் கலந்து கொண்ட ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் பாலாஜி.

“பாலாஜி என்னை மிமிக்ரி பண்ண வேணாம்னு சொல்றாரு” என்பதே சதீஷ் சொன்ன காரணம். எனில் சதீஷ் தன்னை தாண்டிச் சென்று விடுவார் என்று பாலாஜி பயப்படுகிறாரா? எதுவாக இருந்தாலும் இது முறையற்ற குறுக்கீடு. “ஜூலியைப் பார்த்தா பயமா இருக்கு. ஒரு பக்கம் சிரிக்கறாங்க.. திடீர்னு கொலைவெறியோட முறைக்கறாங்க” என்று ஏதோ சந்திரமுகி ஜோதிகா ரேஞ்சுக்கு காரணம் சொல்லி ஜூலியை நாமினேட் செய்தார் சதீஷ்.

பாலாஜி
பாலாஜி

ஆக.. இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்த பாக்கியவான்கள்: பாலாஜி, சுருதி, அனிதா, ஜூலி, அபிராமி, சிநேகன் மற்றும் தாமரை. (ஆக.. தப்பித்தவர் நிரூப் மட்டும்தான்).

நாமினேஷன் முடிவுகளை வைத்து பாலாவும் அனிதாவும் தீவிரமாக அலசிக் கொண்டிருந்தார்கள். வருங்காலத்தில் தான் கலந்து கொள்ளப் போகும் பத்தாவது சீசன் வரைக்கும் ஓவர்டைமில் சிந்தித்தார் அனிதா. ‘கடந்த வாரம் காப்பாற்றப்பட்டவர்களின் வரிசை, அது இந்த வாரத்தில் எப்படி மாறும், பாலாவும் நிரூப்பும் இந்த வார எவிக்ஷனில் இருந்திருந்தால் என்னவாகும்?’ என்றெல்லாம் இந்த ஆலோசனை நடந்த போது நமக்குத்தான் தலை சுற்றியது.

பாலாஜி - சிநேகன்
பாலாஜி - சிநேகன்

நிராகரிக்கப்பட்ட முதியவர்கள் மாதிரி பாலாஜியும் சிநேகனும் வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து அனத்திக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு வந்திருக்கும் வேண்டாத விருந்தாளி இளைஞன் மாதிரி இந்த ‘அங்கிள்களை’ பாவமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சதீஷ். “நம்மள வெளிய அனுப்ப வேலை நடக்குது” என்பதே இவர்களின் புலம்பல்.

“இனிமே நிகழ்ச்சியை FUN-ஆ கொண்டு போவோம்” என்று நம்பினார் சிம்பு. ஒரு பன்னுமில்லை, ஜாமும் இல்லை. வேடிக்கை பார்க்கும் நம் மனம்தான் புண்ணாகிக் கிடக்கிறது.