Published:Updated:

BB Ultimate - 43: ``ஜாலியா பேசறதால அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க"- `வார்னிங்' சிம்பு; நடந்தது என்ன?

BB Ultimate - சிம்பு

BB Ultimate: “என் சாமி சார் அவ” என்று சிநேகன் உருகியபோது தன் காதல் மனைவியின் மீது எத்தனை பிரியமாக இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.

Published:Updated:

BB Ultimate - 43: ``ஜாலியா பேசறதால அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க"- `வார்னிங்' சிம்பு; நடந்தது என்ன?

BB Ultimate: “என் சாமி சார் அவ” என்று சிநேகன் உருகியபோது தன் காதல் மனைவியின் மீது எத்தனை பிரியமாக இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.

BB Ultimate - சிம்பு
எப்படியிருந்தது சிம்புவின் மூன்றாவது வாரம்? பரவாயில்லை. இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பிற்குள் கச்சிதமாக பொருந்தத் தொடங்கியிருக்கிறார் சிம்பு. போட்டியாளர்களிடம் நட்பாக உரையாடும் அதே சமயத்தில், ஆங்காங்கே அழுத்தமாக குட்டு வைக்கவும் தவறவில்லை. ப்ரோட்டாகால் இல்லாமல் ‘அக்கா.. அண்ணே. டேய் தம்பி..’ என்று இயல்பாக பேசுகிறார். ‘சிம்புன்னா. அன்பு.. ஆனா இன்னொரு பக்கம் இருக்கு வம்பு’ என்று எச்சரிக்கவும் செய்கிறார். மிகக் குறிப்பாக சுயபுராணங்கள் இல்லாமல் பிக் பாஸ் ஷோ தொடர்பான விஷயங்களை மட்டுமே பேசுகிறார். ஆனால் இன்னமும் சில விஷயங்கள் மட்டும் மிஸ்ஸிங். உதாரணத்திற்கு ‘யாரையாவது காப்பாற்றும் தகவலைச் சொல்வதென்றால் ரைட் இன்டிகேட்டரை போட்டு விட்டு எதிர்பாராத நேரத்தில் கமல் சொல்வார். ஆனால் அவ்வாறான பீடிகைகள் இல்லாமல் சாதாரணமாக சொல்லி விடுகிறார் சிம்பு. இது போன்ற சுவாரஸ்யங்களையும் சிம்பு இணைத்துக்கொண்டால் கமல் இல்லாத குறை பெரிதும் நீங்கி விடும்.

நாள் 42-ல் நடந்தது என்ன?

கடந்த வாரத்தைவிடவும் அட்டகாசமான காஸ்ட்யூமில் வந்திறங்கினார் சிம்பு. (சிகையலங்கார வடிவமைப்பாளருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு). ‘போனால் போகிறதென்று’ சில ஆண்களையும் அரங்கில் அனுமதித்திருந்தார்கள். “கப்புள் டாஸ்க்ல இருந்து செப்பல் பிரச்சினை வரை இந்த வாரம் நல்லா போன மாதிரிதான் எனக்குத் தோணிச்சு.. வாங்க அவங்களையே விசாரிப்போம்” என்றபடி வீட்டுக்குள் சென்றார்.

BB Ultimate
BB Ultimate

புதுவரவு ரம்யாவிற்கு கிடைத்த உற்சாக வரவேற்பு

வைல்ட் கார்ட் என்ட்ரி ரம்யாவை வரவேற்ற சிம்பு “சதீஷ் வரும் போது மட்டும் அப்படி கலாய்ச்சீங்க. ரம்யாவிற்கு சிறப்பு வரவேற்பு எதுவும் இல்லையா?” என்று மற்றவர்களை உசுப்பி விட ஒரு நாடகம் ஆரம்பித்தது. “நைட்டு ஒன்றரை மணிக்கு இந்த ஏழரையை அனுப்பி வெச்சாங்க” என்று சதீஷ் தொடங்கி வைக்க, ‘குஷி’ படத்தின் ஜோதிகாவையே தூக்கி சாப்பிடும் வகையில் அனிதா ஓவர்ஆக்ட் செய்ய ரம்யாவை கலாய்க்கும் அந்த நாடகம் சுமாராகத்தான் இருந்தது. தன் மீது செய்யப்பட்ட கிண்டல்களை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார் ரம்யா. “ஏம்ப்பா சதீஷூ.. வீக் எண்ட்ல மட்டும்தான் நீ வாயைத் திறக்கற… அதுக்காக நான் தினமும் வர முடியாது. உன்னைக் காணோம்-ன்னு வெளியே போஸ்டர் ஒட்டிட்டாங்கப்பா” என்று சதீஷ் மெத்தனமாக இருப்பதை சிம்பு பல முறை நினைவுப்படுத்தினார். ‘பண்ணிடலாம்ண்ணே..” என்றே ஒவ்வொரு முறையும் சமாளித்தார் சதீஷ்.

ரம்யா பாண்டியன் , சதீஷ்
ரம்யா பாண்டியன் , சதீஷ்

அடுத்ததாக ரேங்கிங் டாஸ்க் விவகாரத்திற்குள் நுழைந்தார் சிம்பு. “பாலா வந்து நின்ன மாதிரி முதல் இடத்திற்கு ஏன் மத்த எல்லோரும் வந்து கடுமையா போட்டி போடல?” – இதுதான் சிம்பு வைத்த ஆதாரமான கேள்வி. ஆனால் நிரூப் முதற்கொண்டு பலரும் சுற்றிச் சுற்றி பதில் சொல்லி குழப்பினார்கள். “எப்படி இருந்தாலும் மக்கள் வாக்குதான் தீர்மானிக்கப் போகுது.. எனக்கு விருப்பமில்லை… நானும் பேசிப் பார்த்தேன் சார்.. எனக்கு ஓட்டு வரலை…” என்றே பதில்கள் வந்தன. பாலாவுடன் சரிக்கு சமமாக நின்று மோதுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிரூப் கூட அன்றைய நாளில் அடக்கியே வாசித்தார். “இந்தக் காரணங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க முதல் இடத்திற்கு வாக்குவாதம் செய்து கடுமையா போராடியிருக்கணும்.. இல்லையா?.. அப்பதானே மக்களுக்கு உங்க மேல அபிப்ராயம் ஸ்ட்ராங்காகும்?” என்பது போல் சிம்பு கேட்டது சரியானது.

“ஒண்ணாம் நம்பர் இடத்திற்கு ஏன் நீங்க போராடலை?”

நிரூப் கடுமையாகப் போராடாதது மட்டுமல்லாமல் தாராளப் பிரபுவாக மாறி தாமரைக்கும் ஜூலிக்கும் ரேங்கிக்கை தியாகம் செய்தது குறித்தும் சிம்பு விசாரித்தார். “எனக்கு பேசப் பிடிக்கலை. அதனால கடைசில போய் நின்னுட்டேன்” என்று அபிராமி சொல்ல “எனக்குப் புரியவேயில்ல. ஏன் இப்படி இருக்கீங்க?” என்று அலுத்துக்கொண்டார் சிம்பு. “எனக்கு எட்டாம் நம்பர் ராசி” என்று சம்பந்தமேயில்லாத காரணத்தைச் சொன்னார் சுரேஷ். “ஏம்மா. அனிதா. உனக்கா ஒன்பதாவது இடம்?” என்று சிம்புவே ஆச்சரியப்பட்டு கேட்க “யாரும் எனக்கு ஓட்டு போடலை” என்று முடித்துக்கொண்டார் அனிதா. “முதல் இடத்தை அடைய விரும்பும் ஆர்வமும் போராட்டக் குணமும் ஏன் உங்ககிட்ட இல்லை?” என்று மீண்டும் மீண்டும் சிம்பு முன்வைத்த கேள்விக்கு எவராலும் சரியாக பதில்சொல்ல முடியவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள்.

சிநேகன், அனிதா
சிநேகன், அனிதா

“ஓகே.. அந்த ரேங்கிங் டாஸ்க்கை மீண்டும் ஆரம்பிப்போம். ரம்யா. இதுக்கு நடுவரா இருந்து நடத்திக்கொடுங்க” என்று ரம்யாவை மீண்டும் ரத்தபூமிக்குள் தள்ளி அழகு பார்த்தார் சிம்பு. “ஏன்... சார், என்னை கோர்த்து விடறீங்க..?” என்று சிணுங்கினாலும் உற்சாகமாக இறங்கினார் ரம்யா. பாலாவிற்கு அதே முதல் இடம் கிடைத்தது. ஆச்சரியகரமாக அனிதாவிற்கு இரண்டாம் இடம். அம்மணியின் எக்சைட்மெண்ட் வழக்கம்போல ‘சந்திரமுகி’ மோடில் வெளிப்பட்டது. சதீஷிற்கு கடைசி பத்தாவது இடம். (மைனஸ் பத்தில் போட்டால் கூட தப்பில்லை).

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

இந்த டாஸ்க்கை செய்யச் சொன்னது மட்டுமல்லாமல் “இப்ப.. உங்களுக்கெல்லாம் ரம்யாவைப் பற்றி புரிஞ்சிருக்கும்.. இல்லையா?” என்று சிம்பு சர்காஸ்டிக்காக கேட்க சபை கலகலத்தது. அனிதாவிற்கு இரண்டாம் இடம் தரப்பட்டது குறித்து சிம்புவிற்கே ஆச்சரியம்தான். “அந்த டாஸ்க்கிலும் சரி. இந்த டாஸ்க்கிலும் சரி. அதே இடத்தைப் பிடித்த பாலா காப்பாற்றப்படுகிறார்” என்று தெரிவித்த சிம்பு, ஒரு பிரேக்கில் சென்றார். எத்தனை சீசன் வந்தாலும் தாமரையின் அடாவடித்தனத்தை சில விஷயங்களில் மாற்றவே முடியாது. “இவங்க யாரு ரேங்கிங் கொடுக்க?.. வந்ததுல இருந்து தூங்கிட்டு இருக்காங்க” என்று ரம்யாவைப் பற்றி சுருதியிடம் அனத்தினார் தாமரை. தனக்கு ஏழாம் இடத்தை ரம்யா தந்தார் என்பது அம்மணியின் கோபம். அது சிம்பு கொடுத்த டாஸ்க் என்பது எளிமையான லாஜிக். “எனக்கு கூட ஒரு டாஸ்க்கை வெச்சு கொடுத்தாங்க. அது அவங்களுக்கு தரப்பட்ட வேலை” என்று நியாயமாக பேசிய சுருதி “ரம்யா முன்னாடி கலந்துக்கிட்ட சீசன்ல வந்தவங்களுக்குத்தான் முதல் மூன்று ரேங்க்” என்கிற ஆராய்ச்சியையும் சொல்லி அதிர்ச்சியூட்டினார்.

“பெட்ஷீட்டைக் கூடவா மத்தவங்க மடிச்சுத் தரணும்?”

ரம்யா தொடர்பான தாமரையின் அனத்தலைப் பார்த்த சுரேஷ் “நான் வேணா பேசி அனிதாவோட ரேங்க்கை வாங்கித் தரவா?” என்று அபத்தமான சமாதானத்தை முன்வைத்தார். அது சரியாகப் பற்றிக் கொண்டது. “என்னது?” என்று முகச்சுளிப்புடன் ஆரம்பித்த தாமரை வழக்கம்போல் சாமியாட ஆரம்பிக்க “மன்னிச்சுடும்மா. இனிமே உன் கிட்ட பேசினா கால்ல கிடக்கறதை….” என்கிற தன் வழக்கமான டிஃபென்ஸ் ஆட்டத்தை ஆடினார் சுரேஷ். (இந்தச் செருப்பு விஷயத்தை சுரேஷ் நூறு தடவையாவது சொல்லியிருப்பார். என்றாலும் இடக்காக பேசிக் கொண்டுதான் இருக்கிறார்).

தாமரை, சுரேஷ்
தாமரை, சுரேஷ்

மறுபடியும் வீட்டுக்குள் திரும்பிய சிம்பு, ‘ரம்யா செருப்பு, பெட்ஷீட் மடிப்பு’ போன்ற அற்ப விஷயங்களை பஞ்சாயத்திற்கு எடுத்தார். “இந்த விஷயத்திற்காக அத்தனை நேரமா சண்டை போடுவீங்க?” என்பதே சிம்பு வைத்த கேள்வி. நிரூப்பிற்கு பல விஷயங்கள் நன்றாகப் புரிந்தாலும் விளக்கம் தரும் போது திக்கித் திணறுவது போல் பேசி நன்றாக டைவர்ட் செய்து விடுவார். இந்தச் சமயத்தில் அதே பாணியில் நிரூப் தந்த விளக்கம் சொதப்பல். “க்ளீனிங் டீமை வெச்சு பெட்ஷீட் மடிக்கச் சொன்னேன்” என்று நிரூப் சொன்னபோது “ஏன், அவங்க அவங்க விஷயத்தை அவங்க அவங்களே பண்ணலாமே.. ஒரு கேப்டனா இதைத்தானே நீங்க வலியுறுத்தியிருக்கணும்?” என்று சரியான பாயிண்டைப் பிடித்தார் சிம்பு. “அவங்க அவங்க வாயை அவங்க அவங்கதானே ஃபிரஷ் பண்ணிக்கணும்” என்று அனிதா சொன்ன உதாரணமும் சிறப்பு.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

அடுத்தது செருப்பு விவகாரம். “இதுக்கெல்லாமா பிக் பாஸ் கிட்ட போவீங்க? அவர் என்ன செருப்புக்கு டோக்கனா போட முடியும்?” என்று சிம்பு பிக் பாஸையே சந்தடி சாக்கில் கலாய்த்து ஒரு கேள்வியைக் கேட்க இதற்கும் சிரித்து மழுப்பிய ரம்யா “மன்னிச்சுடுங்க. இனிமே வெளியே வெச்சுக்கறேன்” என்று சரண் அடைந்தார். (இதை முதல்லயே செஞ்சிருக்கலாமே?!).

“யார் மனசுல யாரு?” எப்படி அமைந்தது ஜோடி?

அடுத்ததாக "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” விஷயத்தை கையில் எடுத்தார் சிம்பு. டாஸ்க்கில் ஜோடிகள் தேர்வு எவ்வாறு அமைந்தது?” எனகிற விசாரணையை ஆரம்பித்தார். வழக்கம்போல் இதில் ஆண்களுக்கு சான்ஸே தரப்படவில்லை. பெண்கள்தான் இந்த சாய்ஸை முடிவு செய்தார்கள். முதலில் சென்ற சுருதி ‘நிரூப்’ போட்டோவைப் பார்த்ததும் ‘ஹைய்யா..’ என்று உற்சாகமாக நிரூப்பை லபக்கி விட்டார். ‘அனிதா – நிரூப் ஜோடி ஏன் அமையவில்லை?’ என்று நமக்குள்ளும் ஒரு கேள்வி இருந்தது. அதற்கான விடை இப்போது கிடைத்தது. “நானும் நிரூப்பை எடுக்கலாம்ன்னுதான் உள்ளே போனேன். அதுக்குள்ள சுருதி எடுத்துட்டாங்க… பாலா கூட குப்பை கொட்டறது கஷ்டம். அதனால சிநேகனை எடுத்தேன்” என்று விளக்கம் அளித்தார் அனிதா.

நிரூப், சுருதி
நிரூப், சுருதி

“எனக்கும் சான்ஸ் கிடைச்சிருந்தா நிரூப்பைத்தான் எடுத்திருப்பேன்” என்று அபிராமி சொன்னதும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நிரூப். பாலாவின் முகத்தில் உஷ்ணம் ஏறியது. இதை அபிராமியும் உணர்ந்திருக்க வேண்டும். “ஆனா நிரூப் கிடைச்சிருந்தா கூட டாஸ்க்ல இப்படி செஞ்சிருப்பனான்னு தெரியல.. பாலா கிடைச்சது என் அதிர்ஷ்டம்” என்று சப்பைக்கட்டு கட்டி சமாளித்தார். (பாலா செய்த அழிச்சாட்டியங்களை சபையில் போட்டுக் கொடுத்திருக்கலாம்.) சதீஷை தேர்ந்தெடுத்திருந்த ஜூலி “எங்களுக்குள்ளே செட்டே ஆகலை. ஒரு சேலன்ஜா எடுத்தேன். ஆனா சதீஷ் எனக்கே சேலன்ஜ் கொடுத்துட்டான்” என்று புலம்பினார். கடைசியாக வந்த தாமரைக்கு வேறு வாய்ப்பே இல்லை. சுரேஷ்தான் அவரது ஜோடி என்று விதியில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் தாமரையின் சாய்ஸூம் முதலில் நிரூப்பாகத்தான் இருந்ததாம். (பாலா காதில் மறுபடியும் புகை). இந்தச் சமயத்தில் தாமரை இயல்பாக சொன்ன கமெண்ட் சூப்பர். “தாத்தா பத்தி எனக்கு நிறைய தெரியாது.. இப்ப நெறய விஷயங்கள் தெரிஞ்சது. பாலா. நிரூப் கூட எப்ப வேணா பேசிக்கலாம்… அதுக்கு நெறய டைம் இருக்கு” என்று தாமரை இழுத்த போது ‘தாத்தா இன்னமும் எத்தனை நாளைக்கு இருப்பாரோ!’’ என்பது போன்ற கிண்டல் அதில் தொக்கி நிற்க சபை வெடித்து சிரித்தது.

ஆண்களுக்கு கிடைத்த அரிய இடஒதுக்கீடு

“ஓகே.. உங்களுக்கு சான்ஸ் கிடைச்சிருந்தா யாரை செலக்ட் பண்ணியிருப்பீங்க?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு ஆண்களுக்கும் இடஒதுக்கீடு அளித்து பெருமைப்படுத்தினார் சிம்பு. முதலில் மழுப்பிய நிரூப், ‘அனிதா’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார். “வேணுமின்னா ஜோடியை மாத்திக்கோ” என்று முன்னர் அழும்பு செய்த பாலா, இப்போதோ “அபிராமிதான்” என்று சொல்லி அதிர்ச்சியூட்டினார். “நான் தாமரையைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன்” என்றார் சுரேஷ். சிநேகனும் தாமரைக்கு போட்டி போட்டார். “அவங்ககூட சில முரண்பாடுகள் இருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நட்பாகியிருப்பேன்” என்பது சிநேகனின் விளக்கம். “ஆனா அனிதா எனக்கு ஒரு நல்ல ஜோடியா இருந்தாங்க. பாலாஜி போன சமயத்துல நான் கொஞ்சம் டவுன் ஆகி இருந்தேன்.” என்று அனிதாவையும் விட்டுக்கொடுக்காமல் சமாளித்தார் கவிஞர். “ஜூலியே ஓகேதான்” என்று பெருந்தன்மையாக சொன்னார் சதீஷ். “நான் செய்யறதெல்லாம் டிவில வருதான்னு’ அவனுக்கு சந்தேகம் சார்” என்று ஜூலி போட்டுக் கொடுக்க “டேய்.. நீ ஏதாவது பண்ணாதானே வரும்?” என்று சிம்பு அடித்த டைமிங் அட்டகாசம்.

சுரேஷ் , சதீஷ்
சுரேஷ் , சதீஷ்

சதீஷ் அடம்பிடித்ததால் “சரி… நீ என்ன பண்ணேன்னு ஒரு குறும்படம் போட்டு பார்த்துடலாமா?” என்று சிம்பு கேட்க சபை ஆரவாரச் சிரிப்புடன் வழிமொழிந்தது. ‘நாட்டாமை’ திரைப்படத்தில் ரணகளத்திற்கு இடையேயும் மிக்சர் சாப்பிடும் ஓர் ஆசாமி மாதிரி பல காட்சிகளில் சதீஷ் மெத்தனமாக உலவும் காட்சிகளைப் பார்த்து சபை வெடித்துச் சிரிக்க சதீஷூம் சங்கடத்துடன் புன்னகைத்தார். “இப்படிக் காட்டுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை” என்று சதீஷ் சொல்ல “பாலாஜி இல்லாத குறையை தீர்க்கலாம்னு நெனக்கிறியா?” என்று சிம்பு கேட்ட கமெண்ட் ‘நச்’ ரகம். தாடி பாலாஜியின் காமெடி எடுபடவில்லை என்பதற்காகத்தான் சதீஷை உள்ளே அனுப்பியது. ஆனால் சதீஷ்ஷோ பாலாஜிக்கே நல்ல பெயர் வாங்கித் தந்து விடுவார் போலிருக்கிறது.

சதீஷின் பிரச்னைதான் என்ன?

“நான் வீட்ல இருக்கற மாதிரிதான் நார்மலா இருக்கேன். எனக்கு இந்த கேம் ஃபார்மட்டே புரியல… இங்க ஒரே பிரச்னையா இருக்கு.. நான் என்னதான் பண்ணணும்?” என்று சதீஷ் வெள்ளந்தியாக கேட்க “எந்த வீட்லதான் பிரச்சினை இல்லை?” என்று சரியாக மடக்கிய சிம்பு “இதுதான் கடைசி வார்னிங்.. அடுத்த முறை வேற மாதிரி பண்ணிடுவேன்” என்று சீரியஸ் முகத்தை சற்று வெளிப்படுத்தினார். பொதுவாக நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் இன்னொருபுறம் சீரியஸானவர்களாக இருப்பார்கள். இந்த வகையில் சதீஷின் இயல்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் டாஸ்க்கில்கூட அவர் அலட்சியமாக இருக்கிறார். பிக் பாஸ் என்னும் பெரிய மேடையை இடது கையால் ஹாண்டில் செய்கிறார். தன் இயல்பையும் மீறி தன் நகைச்சவையுணர்வை அவர் கூர்மையாகப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது. ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அனைவருமே காமெடி சென்ஸ் இருப்பவர்கள் என்பதால் அந்த அலைவரிசை சதீஷை உற்சாகமாக்கியிருக்கலாம். பிக் பாஸ் என்னும் ரத்தபூமியைப் பார்த்து தயங்கி நிற்கிறார் போல. அது கூடாது. இயன்ற வரை அடித்து ஆடி இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்..

சதீஷ், ஜூலி
சதீஷ், ஜூலி

அடுத்ததாக ஜோடிகள் ஒவ்வொருவருக்கும் போட்டியாளர்கள் லேபிளை ஒட்ட வேண்டும். இதில் ‘டாம் & ஜெர்ரி ஜோடி’ என்கிற லேபிள் ஜூலி & சதீஷிற்கு நிறைய முறை கிடைத்தது. “பொசிசவ்னஸ் ஜோடி” என்கிற லேபிள் பாலாவிற்கு கிடைத்த போது “ஏதாவது விஷயம் இருக்கும்” என்று நமட்டுச் சிரிப்புடன் சிம்பு கமெண்ட் அடிக்க “தலைவா. நான் உங்க வழிதான்” என்று கத்தினார் பாலா. (அப்ப.. அபிராமி கூட எதுவும் இல்லை போல!). கச்சா..முச்சா என்று ஒருவழியாக இந்த டாஸ்க் நடந்து முடிந்தது.

அடுத்ததாக சில கேள்விகள் கேட்கப்படும் டாஸ்க்கை ஆரம்பித்தார் சிம்பு. ஜோடிகளில் ஒருவரிடம் கேட்கப்படும் கேள்விக்கு அவருடைய இணையைப் போல மாறி அவர் பதில் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு நிரூப்பிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டால் ‘சுருதி எப்படி பதில் சொல்வாரோ’ அப்படியாக நிரூப் பதில் சொல்ல வேண்டும். இந்த டாஸ்க்கின் முடிவில் ஜூலி காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னார் சிம்பு. பிரேக் விடப்பட்டதும் வழக்கம் போல் வீட்டின் உள்ளே சிலர் குடுமிப்பிடிச் சண்டையை ஆரம்பித்தார்கள். ‘டாஸ்க் நேரத்தைத் தாண்டியும் தாமரைக்கு நேரம் கொடுக்காமல் தாத்தா இம்சை செய்கிறார்’ என்கிற புகார் சபையில் சொல்லப்பட்டது. இதற்காக தாமரையை தனியாக அழைத்து சுரேஷ் சொன்ன விளக்கம் அருமை.

கண்கலங்க விடைபெற்றார் கவிஞர்

எவிக்ஷன் கார்டுடன் மேடைக்கு வந்தார் சிம்பு. காப்பாற்றப்பட்டவர்கள் போக மீதமிருந்தவர்கள் சிநேகன் மற்றும் சுருதி. “மக்கள் எதைத் தீர்மானிச்சாலும் எனக்கு ஓகே.. போன வாரம் டல்லாத்தான் இருந்தேன். ரேங்கிங் டாஸ்க் வந்ததும் பழைய சிநேகன் திரும்ப வந்துட்டான். நான் எவிக்ட் ஆகி சுருதி இருந்தா அது எனக்கு சந்தோஷம். அவளுக்குத்தான் இந்த வாய்ப்பு தேவை” என்று சிநேகன் உருக, பதிலுக்கு கண்கலங்கினார் சுருதி. (பாவம். சுருதி.. முடிஞ்ச வரைக்கும் விளையாடத்தான் முயற்சிக்கறாங்க. ஆனா எங்கயோ மிஸ் ஆகுது!). சிநேகனுக்காக அனிதாவும் ஆஜர் ஆனார். “அண்ணன் கூட எனக்கு முன்னாடி நிறைய பிரச்னை இருந்தது. ஆனா ஜோடி டாஸ்க்ல அவரைப் பத்தி நெறய தகவல் தெரிஞ்சுக்க முடிஞ்சது. இப்ப நாங்க பாசமுள்ள அண்ணன் – தங்கச்சியா மாறிட்டோம்” என்று சிநேகனுக்காக உருகிய அனிதா, உடனே லெஃப்ட் இன்டிகேட்டரையும் போட்டு “சுருதியும் எனக்கு நல்ல பிரெண்டு. அவளும் இருக்கணும்” என்று வேண்டிக் கொண்டார்.

சிநேகன் எவிக்சன்
சிநேகன் எவிக்சன்

எவிக்ஷன் கார்டு காட்டப்பட்டது. அதில் இருந்தது ‘சிநேகன்’. “யாரையாவது இங்க நான் காயப்படுத்தியிருந்தா.. ஸாரி” என்று சொல்லி விட்டு தலைமுடியை உதறி உதறி கிளம்பினார் சிநேகன். சுருதி காப்பாற்றப்பட்டதில் தாமரைக்கு மகிழ்ச்சியாம். மேடைக்கு வந்த சிநேகனிடம் “நான் எதிர்பார்க்கலை. இந்த வாரம் நல்லா விளையாட ஆரம்பிச்சீங்க.. பாலாஜி இல்லாதது ஒரு வேளை காரணமா?” என்று சிம்பு கேட்க “அதெல்லாம் நான் உற்சாகமா மாறிட்டேன். ஹெல்த் இஷ்யூ கொஞ்சம் இருந்தது. அது தவிர மக்கள் தீர்ப்பை ஏத்துக்கணும்” என்று விளக்க ஆரம்பித்த சிநேகன், தன் மனைவியைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் தன்னிச்சையாக கண்கலங்கினார்.

சிநேகன்
சிநேகன்

“என் சாமி சார் அவ” என்று சிநேகன் உருகியபோது தன் காதல் மனைவியின் மீது எத்தனை பிரியமாக இருக்கிறார் என்பதை உணர முடிந்தது. “இந்த இடைவெளி என் காதலை இன்னமும் அதிகப்படுத்தியது” என்ற சிநேகன், தொலைக்காட்சி வழியாக ஒவ்வொருவரிடமும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். வெடிகுண்டு சதீஷிற்கு வழங்கப்பட்டது. கரன்ஸி அனிதாவிற்கு பரிசளிக்கப்பட்டது. (பார்றா!).

“என் பெயர் சிம்பு.. வெச்சுக்காதீங்க வம்பு”

சிநேகனை வழியனுப்பிய சிம்பு, போட்டியாளர்களின் பக்கம் திரும்பி சற்று சீரியஸாக பேச ஆரம்பித்தார். “நான் உங்க கிட்ட ஜாலியா பேசறதால அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க. மக்கள் எனக்கு முழு பவர் கொடுத்திருக்காங்க. (?!) உங்களை வெளுத்து வாங்கச் சொல்லியிருக்காங்க. நான்தான் அன்புப் பாதையை கடைப்பிடிப்போம்னு போயிட்டு இருக்கேன். இந்த கேம்ல நடுவர் சொல்றதுதான் ஃபைனல். அதுக்கு மேல பிக் பாஸ் இருக்காரு. அவரை அவமதிக்கறா மாதிரி நடந்துக்காதீங்க.

சிம்பு
சிம்பு

நீங்க ஒழுங்கா விளையாடினா நான் சிம்புவா இருப்பேன். இல்லைன்னா வம்புதான்” என்று பன்ச் வசனம் பேச போட்டியாளர்கள் உறைந்து போய் நின்றார்கள். “கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ” என்கிற ஃபீலிங் அவர்களின் முகங்களில் தெரிந்தது. சிம்புவின் எச்சரிக்கை இந்த வாரத்தில் எப்படி வேலை செய்கிறதென்று பார்க்கலாம். மற்றபடி கடந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் இருந்த சுவாரசியம் இந்த வாரத்தில் கூடினால் நன்று. பார்ப்போம்.

சிம்புவின் நிகழ்ச்சி தொகுப்பும் பேச்சும் எப்படியிருக்கிறது? உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? கமெண்ட் பாக்ஸில் வந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்..