Published:Updated:

BB Ultimate 49 : வெளியேறுகிறாரா அனிதா? வார இறுதியில் சிம்புவின் குறும்படம் இருக்குமா?

BB Ultimate ரம்யா பாண்டியன்

ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஒரு கட்டத்தில் ‘கம்பியின் மீது லாகவமாக எப்படி நடப்பது?” என்கிற கற்றலில் தாமரை தேர்ந்து விட்டார்.

Published:Updated:

BB Ultimate 49 : வெளியேறுகிறாரா அனிதா? வார இறுதியில் சிம்புவின் குறும்படம் இருக்குமா?

ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஒரு கட்டத்தில் ‘கம்பியின் மீது லாகவமாக எப்படி நடப்பது?” என்கிற கற்றலில் தாமரை தேர்ந்து விட்டார்.

BB Ultimate ரம்யா பாண்டியன்
“இப்ப.. நான்.. என்ன.. சொல்றது… ம்.. தெரியலையே..” என்று ஒரு இழுவையான மாடுலேஷனில் வடிவேலு தடுமாறியபடி பேசும் வசனம் பிரபலமானது. அதைப் போலவே ஒவ்வொரு தினமும் எபிசோட் பற்றி என்ன சொல்வது என்று தடுமாற்றமாக இருக்கிறது. அத்தனை கன்டென்ட் வறட்சி.

நாள் 48-ல் நடந்தது என்ன?

இந்த வாரம் கோழி டாஸ்க் என்பது இப்போதுதான் பிக் பாஸ் நினைவில் வந்தது போல. எனவே ‘சண்டைக்கோழி’ என்று ஆரம்பிக்கும் பாடலைப் போட்டார். அது எந்தப் பாடலாக இருந்தாலும் அதன் வரிகளை அனிதா மனப்பாடமாக பாடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியொரு ஹோம் ஒர்க். சதீஷ் வழக்கம் போல் இன்னமும் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டிருந்தார். ஒட்டு மொத்த பிக் பாஸ் சீசனிலேயே இந்த ஷோவை இத்தனை அலட்சியமாக பங்கப்படுத்தும் ஒரே போட்டியாளர் சதீஷ்தான்.

பாலா
பாலா

தாமரையின் நாப்கின் பேப்பர் விரயம்

பாத்ரூமில் ஏரியாவில் தாமரையும் பாலாவும் செல்லமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். வர வர இவர்களின் பாசப்பிணைப்பு ஓவராக போய்க் கொண்டிருக்கிறது. பாலாவின் தலைமுடியில் எதையோ தேடுவதை பார்ட்-டைம் வேலையாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் தாமரை. என்றைக்கு இவர்களின் பாசத்தில் விரிசல் ஏற்படுமோ? இந்தச் சமயத்தில் அங்கிருந்த நாப்கின் பேப்பர்களை சரமாரியாக நிறைய இழுத்து முகத்தைத் துடைத்து விரயம் செய்தார் தாமரை. தாய்மார்களின் உபதேசம் காரணமாக, அமெரிக்கர்கள் தங்களின் ஊதாரிப்பழக்கத்தை கணிசமாக குறைத்துக் கொண்ட சமூக மாற்றம பற்றி கமல் முன்பு சொன்னது நினைவிற்கு வருகிறது. அவரும் நாப்கின் பேப்பரைத்தான் உதாரணமாக குறிப்பிட்டார். “எனக்கு டாஸ்க்ல கோபம் வராது. யாராவது பழிபோட்டாதான் கோபம் வரும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் பாலா.

மொபைல் போனில் ஸ்டேடஸ் போடுவது போல மக்கள் வந்து செய்தி சொல்ல வேண்டுமாம். ‘தடை.. அதை உடை.. புது சரித்திரம் படை’ என்று உற்சாகமாக காலை வாழ்த்து சொன்னார் ஜூலி. “பானை டாஸ்க்ல நான் விளையாட்டா இருந்ததால பானை உடைஞ்சது. ஒரு விஷயத்தை ரொம்ப ஆட்டினா உடைஞ்சுடும்னு புரிஞ்சுக்கிட்டேன்” என்று பானையை வைத்து யானை அளவிற்கு தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் பாலா. “எந்தவொரு பெரிய விஷயத்தையும் சின்னதா பாருங்க. பிரச்சினையாவே தெரியாது” என்று பாலசந்தர் படத்திலிருந்து உருவிய தத்துவத்தை சுரேஷ் வழியாக கற்றுக் கொண்டு நமக்கு உபதேசித்தார் தாமரை.

BB Ultimate
BB Ultimate

காவல் அதிகாரி சைலேந்திர பாபுவின் குரலை சதீஷ் மிமிக்ரி செய்த விஷயம் அருமையாக இருந்தது. இது போன்ற அயிட்டங்களை நிறைய அவர் எடுத்து விடலாம். சதீஷ் வரிசையாக சொன்ன உபதேசங்களுக்கு ஏற்ப எக்ஸ்பிரஷன் தந்து கொண்டிருந்தார் சுரேஷ். “நடந்து முடிஞ்ச கோழி டாஸ்க்ல இந்த கோழியின் முதுகை உடைச்சிட்டீங்களே. பிக் பாஸ்.. கோழி செத்துப் போச்சு.. It’s dead” என்று எழுந்து நிற்கக் கூட திராணியில்லாமல் படுத்தபடி செய்தி சொன்னார் அபிராமி.

பாலாவின் பாரபட்சமான ஆட்டம்

அடுத்த வார தலைவர் போட்டிக்கான முதற் சுற்று ஆரம்பித்தது. இதில் போட்டியிடவிருக்கிறவர்கள், அபிராமி, அனிதா, தாமரை, சுருதி, பாலா மற்றும் ஜூலி. தரப்பட்டிருக்கும் மரக்கட்டைகளை வைத்து குறிப்பிட்ட உயரத்திற்கு கோபுரம் உருவாக்க வேண்டும். இதன் நடுவே பந்துகளை வைத்து மற்றவர்களின் வரிசைகளை கலைக்கவும் செய்யலாம். இறுதி பஸ்ஸரில் யாருடைய கோபுரம் உயரமாக இருக்கிறதோ, அவரே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்.

BB Ultimate
BB Ultimate

இந்த டாஸ்க்கில் பாலாவின் பாரபட்சம் நன்கு தெரிந்தது. “டாஸ்க்ல பாசத்தைக் காட்டாதே” என்று தாமரையிடமே முன்பு எரிந்து விழுந்தவர்தான் பாலா. ஆனால் அதே தாமரைக்கு இப்போது பாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் பாலா. அனிதா, சுருதி ஆகியோர்களின் வரிசைகளைக் கலைக்கும் போது மட்டும் ஆவேசமாக பந்து வீசிய பாலா, தாமரையின் பக்கம் அதிகம் செல்லவில்லை. அப்படியே சம்பிரதாயத்திற்கு வீசினாலும் பூவை எறிவது போன்று மென்மையாக செயல்பட்டார். அனிதா, அபிராமி மற்றும் சுருதி ஆகியோர் பாலாவின் ஆவேசத்திற்கு பதிலடி தர ஆசைப்பட்டாலும் அவர்களால் சிறப்பாக பந்து எறிய முடியவில்லை. கண்ணாடிப் பாத்திரத்தை எறிவது போல் சைடு கேப்பில் பந்தை மென்மையாக எறிந்ததால் விளைவு ஏதும் ஏற்படவில்லை. முதல் சுற்றில் அனிதா, இரண்டாம் சுற்றில் அபிராமி, மூன்றாம் சுற்றில் பாலா ஆகியோர் அவுட் ஆனார்கள். பாலாவிற்கு ஜெயிக்க வேண்டும் என்கிற முனைப்பு இருந்தது போல் தெரியவில்லை. அடுக்குவதை விடவும் மற்றவர்களின் வரிசைகளைக் கலைப்பதில்தான் அவர் அதிக ஆர்வம் காட்டினார். தாமரையை கேப்டன் ஆக்க வேண்டும் என்கிற அவரது திட்டம் வெளிப்படையாகத் தெரிந்தது.

சுரேஷ்
சுரேஷ்

“என்னால முடியல. நான் சீக்கிரம் வெளியே போய்டுவேன்” என்று சோர்வாக சொல்லிக் கொண்டிருந்த ஜூலி, ஒரு கட்டத்தில் சோர்வு மிகுதி காரணமாக மயக்கம் அடைந்து விட்டார். நேற்றைய தினத்தில், டாஸ்க்கில் கண்விழித்த தூக்கமின்மை காரணமாக ‘டல்’ ஆக இருக்கிறார் என்பது போல் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு ‘லோ சுகர்’ பிரச்சினை இருக்கிறது போல. மயக்கத்தில் இருந்த ஜுலியை அலேக்காக தூக்கிய நிரூப், படுக்கையறையில் கொண்டு போய் படுக்க வைத்தார். ஜூலியின் வாயில் சர்க்கரையைப் போட்டு தற்காலிகமாக சமாளித்தார்கள். இந்தச் சமயத்தில் நிரூப் செய்த ஒரு மினி அழிச்சாட்டியத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். போட்டியாளர்கள் வெயிலில் ஆடியதால் சோர்வு அடைந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அவர்களுக்கு யாரும் உதவி செய்யக்கூடாது என்று தடுத்து விட்டார் நிரூப். இந்த விஷயம் கூட போட்டியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இன்னொரு பக்கம் தாமரையும் அரை மயக்க நிலையில் சாய்ந்து கிடந்தார்.

பாசிட்டிவ்வாக மார்க் போட்ட கேப்டன்கள்

ஒரு வழியாக இந்த டாஸ்க்கில் சுருதி மற்றும் தாமரை ஆகிய இருவரும் அடுத்த கட்டத்திற்கு தே்ாவானார்கள். பெட்ரூம் ஏரியாவில் அமர்ந்து சதீஷ், நிரூப், ரம்யா ஆகியோர் சுரேஷைப் பற்றி ஜாலியாக கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். “போன சீசன்ல அவர் மத்தவங்களை வெச்சு செஞ்சார். இந்த சீசன்ல அவரை செய்யறாங்க” என்று குதூகலமாக சொன்னார் ரம்யா. “அவர் ஒரு குழந்தை மாதிரி. வந்த ரெண்டே நாள்ல நான் இதைக் கண்டுபிடிச்சிட்டேன். எவ்வளவு கலாய்ச்சாலும் ஜாலியா எடுத்துப்பாரு” என்றார் சதீஷ்.

அபிராமி
அபிராமி

வீட்டின் கேப்டன்களான பாலாவும் அபிராமியும் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள். மற்றவர்களுக்கு மார்க் போட வேண்டிய நேரம் இது. “எல்லோருமே நல்லாப் பண்ணாங்கள்ல.. பாசிட்டிவ்வா போயிடுவோம்” என்று இருவரும் தீர்மானித்தது நன்று. எனவே மார்க் போடும் இந்தச் சடங்கு விக்ரமன் திரைப்படத்தின் காட்சியைப் போல “லாலாலா’வாக பாசத்துடன் நடந்தது. இந்த விஷயம் நமக்கே பெரிய ஆறுதலாக இருந்தது. அப்படியொரு பாசிட்டிவ் அலைவரிசை. இரு கேப்டன்களும் சக போட்டியாளர்களுக்கு பாராட்டுக்களை அள்ளித் தெளித்தார்கள்.

அபிராமி , பாலா
அபிராமி , பாலா

“டாஸ்க்.. வீட்டு வேலை-ன்னு எல்லாத்திலயும் கில்லியா இருந்தாரு.. டாஸ்க் முடிஞ்சு டயர்டா இருந்தா கூட உடனே கிச்சன் போய் சாப்பாடு செஞ்சாரு” என்பது மாதிரியான பாராட்டு நிரூப்பிற்கு தாரளமாக கிடைக்க “நம்பவே முடியலையே… சந்தோஷமா இருக்கு” என்று அகம் மகிழ்ந்தார் நிரூப். இவருக்கு ஏழு மார்க் கிடைத்தது. இருப்பதிலேயே அதிக மார்க் கிடைத்தது அனிதாவிற்குத்தான். ‘Good decision maker’ என்கிற பாராட்டு பெற்றார் அனிதா. இவருக்கு கிடைத்தது ஒன்பது மார்க். சதீஷூம் ஜூலியும் பாத்ரூம் ஏரியாவை பக்காவாக மெயின்டெயின் செய்ததற்காக சிறப்பு பாராட்டு வழங்கப்பட்டது. ‘Good Improvement’ என்கிற சான்றிதழைப் பெற்றார் சதீஷ். ‘Leadership Quality’-ல் ரம்யா பின்னியெடுக்கிறாராம். “நாங்க சின்னச் சின்ன குறைகளை எல்லாம் சொல்ல விரும்பலை. ஏன்னா. டாஸ்க்ல நாம அத்தனை ரொம்ப கஷ்டப்பட்டோம்” என்று பெருந்தன்மையாளராக மாறியிருந்தார் பாலா.

போட்டியாளர்களிடமிருந்த கரன்ஸிகளைப் பிடுங்க முயலும் சதித்திட்டத்தில் இறங்கினார் பிக் பாஸ். கவர்ச்சிகரமான உணவுப்பொருட்கள் கொள்ளை விலையில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. மற்றவர்கள் யாரும் இதில் மயங்கி காசை செலவழித்து விடக்கூடாது என்கிற அக்கறையில் ஒவ்வொரு உணவையும் பற்றி சுரேஷ் கிண்டலடித்தது அருமை. “காஃபி மேல ஹார்ட்டின் படம் போட்டிருக்கு.. அதை நான் கலைக்க விரும்பலை.. இது என்ன தேன்மிட்டாயா?.. பேன் மிட்டாய் சைஸ்ல இருக்கு.. பானிபூரில ஓட்டை இருக்கு.. நான் வாங்க மாட்டேன்” என்று சுரேஷ் வரிசையாக அடித்த கமெண்ட்டுகள் ரகளையாக இருந்தன. என்றாலும் மக்கள் ஐஸ்கிரீம், சிக்கன், சோன்பப்படி என்று வாங்கினார்கள்.

BB Ultimate
BB Ultimate

முயல் – ஆமை கதை போல நிகழ்ந்த தலைவர் போட்டி

தலைவர் போட்டிக்கான இறுதிக்கட்டம். தாமரையும் சுருதியும் மோத வேண்டும். முயல் ஆமை கதை போல சுவாரசியமான டிவிஸ்ட்டுடன் இந்த ஆட்டம் முடிந்தது. ஒரு பெரிய குழம்புக் கரண்டி போன்ற ஒரு அயிட்டம் இருந்தது. அந்தக் கரண்டியின் நடுவில் சீஸா போல இரு முனையிலும் ஊசலாடும். அதன் மீது நடந்து வந்து கரண்டிப்பகுதியில் பந்துகளை இட்டுச் செல்ல வேண்டும். வழியில் கீழே காலை வைத்து விட்டால் அந்தப் பந்தை மறுபடியும் போட வேண்டும். இதில் என்னவொரு சிக்கல் என்றால் கரண்டியில் பந்துகள் நிரம்பும் போது சற்று வேகமாக நடந்து வந்தால் கூட அவை துள்ளி வெளியே விழுந்து விடும்.

BB Ultimate
BB Ultimate

ஆட்டம் ஆரம்பித்தது. உடல்ரீதியான டாஸ்க் என்றால் ஆரம்பத்திலேயே பயந்து நடுங்குவார் தாமரை. ஆனால் கடைசியில் சிறப்பாக ஆடி முடித்து விடுவார். இப்போதும் அதுதான் நடந்தது. ‘ஹூ.. யம்மா… முடியலையே.. பயமா இருக்கு’ என்கிற தடுமாற்றத்துடன் நடந்து வந்து அனத்திக் கொண்டே பந்துகளை இட்டார் தாமரை. ஆனால் சுருதியோ முழுக்கவனத்துடன் நிதானமாக பந்துகளைப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் “என்னால முடியல.. தலை சுத்துது” என்று தாமரை படுத்து விட சுருதிதான் வெல்லுவார் என்று உறுதியாகத் தோன்றியது. ஆனால் பாலா உறுதுணையாக பக்கத்தில் நிற்க, மறுபடியும் எழுந்து வந்து பந்துகளை போடத் துவங்கினார் தாமரை. நிறைய பின்வாங்கியிருந்தாலும் ஒரு கட்டத்தில் மளமளவென முன்னேறி விட்டார். கடைசி பந்தை இடுவதற்கான நேரம் வந்தது. சஸ்பென்ஸ் படம் போல சுற்றியிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தாமரை
தாமரை

கடைசிப் பந்தை தாமரைக்கு முன்பாகவே இட்டு விட்ட சுருதி, திரும்பி வரும் போது எடுத்துக் கொண்ட கூடுதல் நிதானம் காரணமாக மயிரிழையில் தோற்று விட்டார். வேகமாக திரும்பி விட்ட தாமரைக்கு வெற்றி கிடைத்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஒரு கட்டத்தில் ‘கம்பியின் மீது லாகவமாக எப்படி நடப்பது?” என்கிற கற்றலில் தாமரை தேர்ந்து விட்டார். ஆக அடுத்த வார தலைவர் தாமரை. ‘நல்லா விளையாடினே.. உன்னைப் பார்த்து நானே கத்துக்க வேண்டியிருக்கு” என்று சொல்லி தாயைப் பாராட்டும் பாசக்கார தனயனாக மாறினார் பாலா.

அனிதா
அனிதா

என்னது… அனிதா எவிக்ஷனா?

இந்த வார எவிக்ஷன் யார் என்கிற தகவல் வழக்கம் போல் முன்பே கசிந்து விட்டது? ஆம்.. பிக் பாஸ் ஷோவை பிக் பாஸ் டீமை விடவும் அதிகமாக அலசி ஆராய்ந்து அரை மணி நேரம் ஆனாலும் எனர்ஜி குறையாமல் வியாக்கியானம் செய்யும் அனிதாதான் அது. அனிதா மீது சில குறைகள் இருந்தாலும் வலிமையான போட்டியாளர்களுள் அவரும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது. “என்னை விடுங்கப்பா.. நான் போறேன்” என்று சிரத்தையே இல்லாமல் விளையாடும் சதீஷ் கூட உள்ளே இருக்கும் போது அனிதா வெளியேறுவது எல்லாம் முறையற்ற முடிவு. ஏன் மக்களே.. இப்படிப் பண்றீங்க?!