Published:Updated:

BB Ultimate -10: சிரிப்பு போலீஸ்களும், காமெடி திருடர்களும்... தீனாவின் கமென்ட்களும்!

BB Ultimate

நேற்றைய எபிசோடில், அபிநய், நிரூப், பாலாஜி, ஜூலி, வனிதா என்று ஒருவரை விட்டு விடாமல் தீனா செய்த ‘கலாய்ப்பு’ மட்டுமே நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தியது.

Published:Updated:

BB Ultimate -10: சிரிப்பு போலீஸ்களும், காமெடி திருடர்களும்... தீனாவின் கமென்ட்களும்!

நேற்றைய எபிசோடில், அபிநய், நிரூப், பாலாஜி, ஜூலி, வனிதா என்று ஒருவரை விட்டு விடாமல் தீனா செய்த ‘கலாய்ப்பு’ மட்டுமே நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தியது.

BB Ultimate

திருடன் – போலீஸ் என்கிற அரதப்பழசான டாஸ்க் ஒன்று இந்த நாளில் நடந்தது. அதை விடுங்கள். முக்கியமில்லை. ஆனால் இனிய ஆச்சரியமாக, தீனாவின் குரல் நுழைந்து சரமாரியாக அடித்த கமென்ட்கள்தான் இந்த எபிசோடின் அட்டகாசமான ஹைலைட்.

தீனா யாரென்று தெரியாதவர்களுக்காக: விஜய் டிவியின் காமெடி ஷோவில் ஒரு சாதாரண போட்டியாளராக உள்ளே நுழைந்தார். பிறகு பிரபலங்களே இவரின் ரகளையான ‘கவுன்ட்டர்களைக்’ கேட்டு “ஆளை விடுடா சாமி’ என்று அஞ்சியோடும்படி செய்தவர். முகத்தைக் காட்டாமல் அநாமதேயக் குரலில் இவர் தொலைபேசியில் அழைத்தாலே பலருக்கு வயிற்றைக் கலக்கும். எதிர்முனையில் பேசுபவரை அந்த அளவிற்கு பங்கம் செய்து விடுவார். ஆனால் அவை கண்ணியமான எல்லையில், கலாய்க்கப்படுபவரே ரசிக்கும்படியாக இருக்கும்.

நேற்றைய எபிசோடில், அபிநய், நிரூப், பாலாஜி, ஜூலி, வனிதா என்று ஒருவரை விட்டு விடாமல் தீனா செய்த ‘கலாய்ப்பு’ மட்டுமே நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தியது. அந்த அளவிற்கு பிரித்து மேய்ந்து விட்டார் தீனா. எப்படித்தான் குறைந்த அவகாசத்தில் சட்சட்டென்று அவரால் ‘கவுன்ட்டர்’ தர முடிகிறதோ?

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

‘போலீஸ் – திருடன்’ டாஸ்க் என்பதால் ‘ஜித்து ஜில்லாடி’ பாடலை காலையிலேயே அலற விட்டார் பிக் பாஸ். நடனமாடி முடித்தவர்கள் அப்போதுதான் கார்டன் ஏரியாவில் உள்ள அந்த கட்அவுட்டை கவனித்தார்கள். “என்னடா.. பசங்களா.. எப்படியிருக்கீங்க?” என்று கேட்பது போல் சுரேஷ் தாத்தா தன் தலையில் கை வைத்துக் கொண்டிருப்பதைப் போன்ற போஸில் ஒரு கட்அவுட் நின்றிருந்தது. “ஐயோ.. தாத்தா மறுபடி வந்துட்டீங்களா?” என்று சிணுங்கினார் தாமரை. “எனக்கு எண்ட் கார்டே கிடையாதுடா”ன்னு சொல்ற மாதிரியே இருக்கு” என்றார் பாலாஜி. சுருதி ஆரம்பித்து வைத்து விட்டுப் போன சமையலை, அவரிடம் கலந்தாலோசிக்காமல் பாலாஜியும் தாமரையும் செய்து முடித்ததால் சூடு இல்லாத ஒரு மினி பஞ்சாயத்து நடந்தது.

சுவாரசியமில்லாத திருடன் – போலீஸ் விளையாட்டு

‘களவாணிகளும் காவல்துறையும்’ என்கிற பெயரில் ஒரு புதிய டாஸ்க் அறிவித்தார் பிக் பாஸ். போலீஸ் – திருடன் என்று வீடு இரண்டு அணிகளாகப் பிரிய வேண்டும். வனிதா மற்றும் சிநேகன் அணித்தலைவர்களாக இருப்பார்கள்.

திருடர்களுக்கான விதிமுறைகள்: எதிரணியினரின் பொருட்களை மட்டுமே திருட வேண்டும். சொந்த அணியிலேயே திருடக்கூடாது. (தொழில் தர்மம் முக்கியம்!) திருடிய பொருட்களை, அடகுக் கடையில் தந்து பேரம் பேசி கரன்ஸியாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது அதன் மதிப்பை அல்டிமேட் பாயின்ட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். போலீஸார் விசாரிக்கும்போதோ, கைதுசெய்யும் போதோ, திருடர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஒரு சமயத்தில் ‘இரண்டு நபர்கள்’ மட்டும்தான் திருட்டு வேலையை செய்ய வேண்டும். ஷிப்ட் முறையில் மாற்றிக் கொள்ளலாம்.

BB Ultimate
BB Ultimate

இந்த விதிமுறைகளில் பிக் பாஸ் சொன்ன அடுத்த இரண்டு பாயிண்ட்டுகள்தான் சுவாரசியமானவை. ‘காவல்துறை சம்பந்தப்பட்ட பொருட்களைத் திருடித் தந்தால் கூடுதல் பணம் கிடைக்கும்’. ‘பிக்பாஸ் வீட்டின் பொதுச்சொத்துக்களை திருட முடியாது’. (என்னவொரு புத்திசாலித்தனம்?!). இது தவிர காவல்துறையின் ‘சிறப்பு கண்காணிப்பில்’ இருக்கும் ஒரு வைரத்தை திருடினால் லம்ப்பாக 5000 பாயின்ட்டுகள் கிடைக்குமாம்.

காவல்துறையினருக்கான விதிமுறைகள்: ஒரு சமயத்தில் ஒருவரை மட்டுமே சிறையில் அடைக்க முடியும். குற்றவாளிகள் கூடுதலாக இருந்தால் கண்காணிப்பில் அமர வைக்கலாம். கையும் களவுமாக அல்லது சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யலாம். தொப்பி/லத்தி வைத்திருக்கும் இரண்டு காவல் அதிகாரிகள் மட்டுமே திருடர்களை சோதனை செய்ய முடியும். திருடர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் ‘Safe Zone’-ல் காவலர்கள் நுழைய முடியாது.

சிரிப்பு போலீஸ்களும் காமெடி திருடர்களும்!

திருடர்களின் அணித்தலைவராக சிநேகனும், போலீஸ் அணியின் தலைவராக வனிதாவும் நியமிக்கப்பட்டார்கள். சிநேகனின் அணியில் பாலா, நிரூப், அபிநய், அபிராமி, ஜூலி ஆகியோர் இருக்க, வனிதாவின் அணியில் அனிதா, சுருதி, தாமரை, பாலாஜி, ஷாரிக், சுஜா ஆகியோர் இருந்தார்கள். முதல் சுற்று முடிந்ததும் அணி இடம் வலமாக மாறும் என்பது வழக்கமான நடைமுறை. “ஏம்ப்பா.. இத்தனை பொண்ணுங்களுக்கு நடுவுல நான் மட்டும்தானா?” என்று அனத்தினார் பாலாஜி. ஆம், சிநேகனின் அணியில் பாலா, நிரூப் போன்ற வலிமையான போட்டியாளர்கள் சேர்ந்து விட வனிதாவின் அணி ‘டொங்கலாக’ அமைந்துவிட்டது. போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது வனிதா உஷாராக இருந்திருக்க வேண்டும். ‘தான் மட்டுமே இருந்தால் போதும்’ என்று நினைத்திருப்பார் போல.

உண்மையில் இந்த ஆட்டத்தை இவர்கள் சுவாரசியமாக மாற்றியிருக்கலாம். ஆனால் பாலா போன்றவர்கள் முந்திரிக்கொட்டையாகவும் அடாவடியாகவும் செயல்பட்டதால் சுவாரசியம் இழந்தது. டாஸ்க் தொடங்குவதற்கு முன்பே, போலீஸ்காரர்களின் செருப்புகளை திருடர்கள் ‘அபேஸ்’ செய்து விட்டதால் உரத்த குரலில் ஆட்சேபம் செய்தார் சுஜா. காவலர்களுக்கான சீருடையுடன் ‘வனிதாவின் அணி’ வந்து நின்றது. ஏறத்தாழ அனைவரையும் பார்க்க ‘சிரிப்பு போலீஸ்’ மாதிரியே இருந்தது. குறிப்பாக அனிதா, தாமரை போன்றவர்களைப் பார்க்க மகா காமெடியாக இருந்தது. “உன்னை போலீஸ்ல தப்பா எடுத்திருக்காங்க” என்று ஒரு நகைச்சுவைக் காட்சியில் வடிவேலு சொல்வதைப் போன்ற ‘டொங்கலான’ தோற்றத்தில் பாலாஜி இருந்தார்.

வனிதா - பாலாஜி  - பாலா
வனிதா - பாலாஜி - பாலா

‘Think Big’ என்கிற பாலிசியின்படி ஆரம்பத்திலேயே அவசரப்பட்டு வைரத்தை பாலா திருட முயற்சிக்க “திருடன். திருடன்..” என்று கத்தினார் தாமரை. பாலா அதை உடனே ஜூலிக்கு கைமாற்ற முயன்றாலும்கூட போலீஸிடம் பிடிபட்டார்கள். வைரம்தான் டாஸ்க்கின் முக்கியமான அயிட்டம் என்பதால் கான்ஸ்டபிள் பாலாஜி அதை கையில் எடுத்து வைத்துக் கொள்ள “இப்படிச் செஞ்சா நாங்க எப்படி திருட முடியும்? பெடஸ்டல்ல வைக்கச் சொல்லுங்க” என்று மல்லுக்கட்டினார் பாலா.

இன்னமும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஹேங்க் ஓவர் ஜூலிக்கு போகவில்லை போல. எனவே காவல்துறை கைது செய்த போது "போலீஸ் அராஜகம் ஒழிக” என்று ஆவேசமாகக் கத்தினார். போலீஸ்காரர்களிடம் எதையோ தட்டிப் பறித்துக் கொண்டு ‘Safe Zone’ஐ நோக்கி ஓடிய பாலா, தட்டுத் தடுமாறி விழுந்து அங்கிருந்த தடைகளை உடைத்தார். “தெரியாம செய்யறதுக்கு பேர்தானே திருட்டு?” என்று வனிதா ஆட்சேபித்தும் திருடர்கள் அணி அடங்கவில்லை. பாலாவை கைது செய்த வனிதா, சிரமப்பட்டு அவரை சிறையில் அடைத்தார். பிறகு அபிராமிக்கும் சிறைத்தண்டனை கிடைத்தது.

தீனாவின் ரகளையான கவுன்ட்டர்கள்

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த உலக மேப்பையே லவட்டிக் கொண்டு ஓடினார் பாலா. அடகுக் கடையில் பொருட்களை வாங்குபவராக தீனாவின் குரல் திடீரென்று ஒலித்தது ஆச்சரியம். திருடர்கள் வந்து பேரம் பேசும் போது கடையின் ‘கவுண்ட்டர்’ வழியாக, இவர் அடித்த கவுன்ட்டர்கள் அனைத்துமே சுவாரஸ்யம். கிண்டலடிக்கப்பட்டவர்களே இதற்கு விழுந்து விழுந்து சிரித்தார்கள். காவலர்களின் பொருட்களுக்கு மதிப்பு அதிகம் என்பதால் தொப்பி, லத்தி, கைவிலங்கு, நாற்காலி என்று ‘ஸ்டேஷன் பொருட்கள்’ தொடர்ந்து அடகுக்கடையில் வந்து கொண்டேயிருந்தன. திருடர்களிடம் அடாவடியாக பேரம் பேசிய தீனா “சரிப்பா.. சரிப்பா. பார்த்து பண்றேன்” என்று பிறகு அவர்களைச் சமாதானப்படுத்தினார்.

திருடர்களின் வழிப்பறிக் கொள்ளை தாங்காமல் வனிதாவே கதறும்படியானது நிலைமை. ஷாரிக்கின் ஷூக்களையே வரிசையாக தொடர்ந்து திருடி வந்து அபிநய் பேரம் பேச “ஏம்ப்பா.. தம்பி.. ஷூவைத் தவிர ஷாரிக் வேற எதையுமே கொண்டு வரலையா?” என்று தீனா கிண்டலடித்தது சுவாரஸ்யம். தான் கேட்ட தொகையைக் கேட்டு அபிநய் தொடர்ந்து நச்சரிக்க “இந்த ஷூவால என்னைத்தான் அடிச்சுக்கணும். இதெல்லாம் ஒரு வியாபாரமா? புது ஷூன்ற.. ஆனா.. மேல சாணி கிடக்கு” என்று அதன் மதிப்பை வெகுவாகக் குறைத்தார் தீனா.

"மேடம்.. நாங்க யூஸ் ஆகிற பொருள் மட்டும்தான் வாங்குவோம்”

நகைகளைத் திருடிக் கொண்டு வந்த நிரூப், “என்ன விலையை குறைவா சொல்றீங்க. இது கோல்டு நகைங்க.. தெரியுமா..?” என்று அடகுக்கடையில் சிணுங்க “முதல்ல அது ‘கோல்டா’ன்னு உனக்குத் தெரியுமா?” என்று பங்கம் செய்தார் தீனா. “வனிதாவோட மேக்கப் செட்டை எடுத்துட்டு வாங்க.. மேக்கப் போட்டாலும் அவங்க சுமாராத்தான் தெரிவாங்க. அதனால அது அவங்களுக்கு யூஸ் ஆகாது” என்று தீனா சொன்ன கமெண்ட், வனிதாக்கா காதில் விழுந்திருந்தால் அவ்வளவுதான். இன்னொரு சமயத்தில் “நாங்க நேர்மையா வியாபாரம் பண்றவங்கப்பா. திருட்டுப் பொருட்களை மட்டும்தான் வாங்குவோம்” என்று சொல்லி சிரிக்க வைத்தார். “அந்தப் பாலாஜியைக் கூப்பிடுங்க. அவரை எப்படி போலீஸ்ல சேர்த்தாங்க?” என்று தீனா கிண்டலடிக்க, “டேய்.. இங்க வந்தும் என்னை நீ விடலையா?” என்று கதறியபடி வந்தார் பாலாஜி.

“பாலா என் தொப்பியை திருடிட்டு போயிட்டான்” என்று சாக்லேட் பிடுங்கப்பட்ட சிறுமி மாதிரி கதறினார் சுருதி. “சிநேகன் அண்ணா வர்றார்” என்றார் கான்ஸ்டபிள் அனிதா. (திருட்டுப்பயலுக்கு எவ்வளவு மரியாதை?!). திருடர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்காமல் ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்த வனிதா, அடகுக்கடைக்கே நேராக சென்றார். “போலீஸ் கிட்ட திருடிய பொருட்களை எல்லாம் வாங்கறீங்கள்ல.. பேசாம நானே உள்ள வந்துடறேன். எவ்ள தருவீங்க?” என்று நொந்து போய் கேட்க, அதற்கு தீனா அடித்த கமெண்ட் சூப்பர். “மேடம்.. நாங்க யூஸ் ஆகிற பொருள் மட்டும்தான் வாங்குவோம்”.

அபிநய்
அபிநய்

இதனால் கோபம் அடைந்த வனிதா, “உங்க கடைக்கு நான் சீல் வைக்கறேன்” என்று கதவை மறித்தபடி நிற்க, தீனா அலட்டிக் கொள்ளாமல் “யப்பா.. அபிநய்.. கடைக்கு புதுசா வாட்ச்மேன் போட்டிருக்கேன். அவன் இருக்கானா.. டீ குடிக்க போயிட்டானா –ன்னு பாரு” என்று வனிதாவை பங்கம் செய்தது நல்ல நகைச்சுவை. பிறகு “திருட்டுப் பொருட்களை யாரும் திருடிடாம பத்திரமா பார்த்துக்கங்க மேடம்” என்று வனிதாவிற்கே உத்தரவு போட்டார் தீனா.

வனிதாவிற்கு தரப்பட்ட ‘Thuglife’ பெல்ட்டை, கடுமையான காவலைத் தாண்டி திருடி வந்தார் பாலா. அந்தக் கடுமையான காவல் என்பது பாலாஜிதான். ஓடி வரும் வேகத்தில் அந்த பெல்ட் கீழே விழுந்து உடைய “ஐயோ. வனிதாக்கா என்ன சொல்வாங்களோ?” என்று பதறினார் தாமரை. இந்த விஷயம் தெரிய வந்ததும் “என்னதிது. பிக் பாஸ்.. இப்படிப் பண்ணியிருக்காங்க,? என்று கோபம் அடைந்தார் வனிதா. “சரி. கொடுங்க. பிக் பாஸ் கிட்ட கொடுத்து சரி பண்ணிடலாம்” என்று சமாதானம் பேசி அதை எடுத்துச் சென்ற பாலா, பிறகு நிரூப் மற்றும் அபிநய்யின் உதவியுடன் மீண்டும் திருட முயன்றது அசல் சாகசம். உடம்பிற்குள் மறைத்து எடுத்துச் சென்ற அபிநய்யை கையும் களவுமாக பிடித்து விட்டார் சுருதி. என்றாலும் தப்பி பாய்ந்தோடினார்.

திருடன் + போலீஸ் கூட்டணி

திருட்டுச் சாகசம்கூட பெரிதில்லை. அதைப் பங்கிடுவதில் திருடர்களுக்குள் ஏற்படும் தகராறு காரணமாகவே பலர் மாட்டிக் கொள்வார்கள். நிரூப்பிற்கும் பாலாவிற்கும் இடையே அப்படித்தான் உரையாடல் நிகழ்ந்தது. தான் தனியாக திருடிய பொருட்களுக்கு கிடைத்த தொகையை நிரூப் எடுத்து வைத்துக் கொள்ள “டேய். நாம டீமா சேர்ந்துதானே விளையாடினோம். ஆளுக்கு ஒரு பங்கா பிரிச்சுக்கலாம்” என்று அவரிடம் மல்லுக்கட்டினார் பாலா. “நீ திருடங்களுக்கு சப்போர்ட்டா செயல்படறல்ல?” என்று கான்ஸ்டபிள் ஷாரிக்கை கோபித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர் வனிதா. “இப்படில்லாம் செஞ்சாதானே டாஸ்க் சுவாரஸ்யமா இருக்கும்?” என்று பிறகு பாலாவிடம் அனத்தினார் ஷாரிக். சரிதான். நடைமுறையிலும் போலீஸ் + திருடர் கூட்டணி இருக்கத்தானே செய்கிறது?!

BB Ultimate
BB Ultimate

“அபிராமி மறுபடியும் ஆரம்பிச்சிட்டா” என்று நிரூப்பிடம் வந்து ஏதோ ரகசியம் சொன்னார் ஜூலி. தான் எப்படியெல்லாம் சாமர்த்தியமாக திருடினேன் என்பதை சுஜாவிடம் நிரூப் விளக்க “அடப்பாவி” என்பது மாதிரி பார்த்தார் சுஜா. “பாலா குதிச்சு ஓடி டாஸ்க்கோட சுவாரஸ்யத்தை கெடுத்துட்டான்” என்று நிரூப் சொன்னது சரியானது. ‘இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. நாளை தொடரும்’ என்று பிக் பாஸ் அறிவித்த போது, அவர்களுக்கு நிம்மதியாக இருந்ததோ, இல்லையோ.. பெரும்பாலான பார்வையாளர்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள்.