Published:Updated:

BB Ultimate 50: `ஸாரி கேட்டிருக்கலாம்' இறங்கி அடித்த சிம்பு; கண்ணீருடன் வெளியேறிய அனிதா!

சிம்பு

BB Ultimate : தன்னுடைய தந்தையார் மரணம், அந்தச் சமயத்தில் நிகழ்ந்த போன சீசனின் எவிக்ஷன், “அவ ஜெயிச்சுட்டுத்தான் வருவா” என்று அனிதாவின் தந்தையார் கொண்டிருந்த நம்பிக்கை...

Published:Updated:

BB Ultimate 50: `ஸாரி கேட்டிருக்கலாம்' இறங்கி அடித்த சிம்பு; கண்ணீருடன் வெளியேறிய அனிதா!

BB Ultimate : தன்னுடைய தந்தையார் மரணம், அந்தச் சமயத்தில் நிகழ்ந்த போன சீசனின் எவிக்ஷன், “அவ ஜெயிச்சுட்டுத்தான் வருவா” என்று அனிதாவின் தந்தையார் கொண்டிருந்த நம்பிக்கை...

சிம்பு
எப்படியிருந்தது சிம்புவின் நான்காவது வாரம்? ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று ஒவ்வொரு வாரமும் அசத்தலான முன்னேற்றத்தைக் காட்டுகிறார் சிம்பு. இந்த ஷோவிற்கென்று ஒரு மீட்டரை சரியாகப் பிடித்துவிட்டார். ஒவ்வொரு வாரமும் அதில் ஜோராக முன்னேறிக்கொண்டே போகிறார். “சபை நாகரிகம் இல்லாம உங்களை உரிமையா கூப்பிட்டுட்டேன். மன்னிச்சுடுங்க” என்று கேட்பதாகட்டும்.. சரியான டைமிங்கில் தனது நகைச்சுவையை வெளிப்படுத்துவதாகட்டும்.. கண்டிக்க வேண்டிய நேரத்தில் அழுத்தமாகச் சொல்வதாகட்டும்.. ‘என்கிட்ட இந்த கேம் வேண்டாம்.. தாத்தா’ என்று சுரேஷை மெலிதாக எச்சரிப்பதாகட்டும்.. தனக்கென்று ஒரு பிக் பாஸ் ஸ்டைலை வெற்றிகரமாக பதிக்கத் தொடங்கிவிட்டார் சிம்பு. மிக குறிப்பாக பெரும்பான்மையான காட்சிகளை அவர் மெனக்கெட்டு பார்க்கிறார் என்பதை அவரது ஹோம் ஒர்க்கிலிருந்து அறிய முடிகிறது.

எபிசோட் 50-ல் நடந்தது என்ன?

‘இருப்பா.. ஒரு பொஷிஷன்ல நின்னுக்கறேன்’ என்று மாஸ் ஹீரோ என்ட்ரி மாதிரியே அரங்கில் காட்சியளித்த சிம்புவின் ஆடையலங்காரம் கடந்த வாரத்தைப்போலவே அருமையாக இருந்தது. “கோழியா விளையாடச் சொன்னா சேவலா மாறி அடிச்சுக்கறாங்க. கடிச்சுக்கறாங்க.. வாங்க .. விசாரிப்போம்” என்று அதிக நேரத்தை வீணாக்காமல் வீட்டின் உள்ளே சென்றார்.

“ஒரு உரிமைல பேசிட்டேன். மன்னிச்சுடுங்க”

“டேய்.. நிரூப்பு.. ன்னு ஆரம்பிச்சு.. உங்களையெல்லாம் உரிமையா கூப்பிட்டுட்டேன். அப்புறமா வீடியோல பார்க்கும் போது எனக்கே தப்பா தெரிஞ்சது.. ஸாரி” என்று ஆரம்பத்திலேயே சிம்பு மன்னிப்பு கேட்க போட்டியாளர்கள் பதறி “அப்படிப் பேசினாத்தான் நல்லா இருக்குது” என்று கோரஸ் பாடினார்கள். சிம்பு உணர்ந்த சபை நாகரிகம் சரியான விஷயம். நெருக்கமான நண்பனாக இருந்தாலும் கூட ஒரு சபையில் அந்த நண்பனை ‘அவர்’ என்றுதான் சுட்ட வேண்டும். அதுதான் மரபு. ஆனால் இன்னொரு பக்கம் இந்த விஷயமே செயற்கையாகவும் தெரியும். எனவே சிம்பு இயல்பாக பேசுவது ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பெண்களைப் பற்றி பேசும் போது மட்டும் ‘அது சொல்லிச்சு’ என்பது போல் சொல்வதை மட்டும் தவிர்த்துவிடலாம்.

“இந்த வார டாஸ்க்ல ரொம்ப கஷ்டப்பட்டு விளையாடினீங்க.. நான் சொன்னபடி பிக் பாஸ் ரூல்ஸ்ஸை மதிச்சீங்க.. ஹாட்ஸ் ஆஃப். இந்த வாரம் எப்படியிருந்தது?” என்று சிம்பு விசாரிக்க ஆரம்பித்தார். ‘அய்யோ.. சார். அதையேன் கேக்கறீங்க.. வெயில், பசி, மயக்கம், கஷ்டம்’… என்று ஆளாளுக்கு அனத்த ஆரம்பித்தார்கள். வீட்டிற்குள் செல்ல முடியாமல் கார்டன் ஏரியாவிலேயே பொழுதைக் கழித்தது அனைவருக்குமே சிரமமான விஷயம்தான். “சாப்பாடோட அருமை தெரிஞ்சது” என்ற சதீஷ் இப்போதுதான் பிக் பாஸின் ஆரம்ப பாடத்திற்கே வந்திருக்கிறார்.

சதீஷ்
சதீஷ்

சதீஷ் நீளமாக அனத்தியதைப் பார்த்த சிம்பு “நிறைய விளையாடினவங்ககூட இப்படி அலுத்துக்க மாட்டாங்க போலயே” என்று டைமிங்கில் குத்த சங்கடத்துடன் புன்னகைத்தார் சதீஷ். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சதீஷை ஜாலியாக கலாய்த்த சிம்பு, அதற்கான பகுதியில் சதீஷிற்கு தந்த பிரத்யேகமான உபதேசம் அருமையானது. “போன வாரத்திற்கு இந்த வாரம் பரவாயில்ல” என்று சதீஷைப் பாராட்டவும் தவறவில்லை. “பாலா.. நிரூப்பு கிட்டல்லாம் பாசம் காண்பிக்கறீங்க. அந்த அன்பு எனக்கும் கிடைக்குமா?” என்று தாமரையிடம் சிம்பு ஆசையாக கேட்க “என்னை ஆரம்பத்திலேயே அக்கா –ன்னு நீங்க கூப்பிட்ட அடுத்த நிமிஷமே உங்களை தம்பியா ஏத்துக்கிட்டேன்” என்று சென்டியைக் கூட்டி சிம்புவை பரவசப்படுத்தினார் தாமரை.

சிம்புவின் முன்னால் மட்டும் ஜாலியாக இருக்கும் சதீஷ்

அதென்னமோ சிம்பு முன்னால் மட்டும் சதீஷின் காமெடி சென்ஸ் ஓவர் டைமில் வேலை செய்கிறது. கோழி டாஸ்க்கில் சுரேஷ் தாத்தாவிற்கு தரப்பட்ட ஆடை பற்றிய கிண்டல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது “அந்த டிரஸ்ஸை போடறதுக்கு அவர் சிரமப்பட்டதை விடவும் அவர் கிட்ட மாட்டிக்கிட்டு நாங்க ரொம்ப சிரமப்பட்டோம்” என்று டைமிங்கில் தாத்தாவை சதீஷ் குத்திய விதம் அருமை. “தாத்தா.. நீங்க ரூல்ஸ்லாம் கறாரா சொல்லி ஃபாலோ பண்ண வெச்சீங்க.. அதெல்லாம் ஓகே. ஆனா ரொம்ப டென்ஷன் ஆயிட்டிங்க..” என்று சிம்பு சுட்டிக் காட்ட “அடுத்த முறை மாத்திக்கறேன்” என்று இறங்கி வந்தார் சுரேஷ்.

கோழி டாஸ்க்கில் மக்கள் எப்படியெல்லாம் திருடினார்கள், அதற்காக முயற்சித்தார்கள் என்கிற ஜாலியான வீடியோ வெளியிடப்பட்டது. “ஐயோ. எங்க டிரஸ்லாம் அதுல கேவலமா இருக்குமே?” என்று மக்கள் ஆரம்பத்தில் சங்கடமாக முனகினாலும் வீடியோ ஆரம்பித்தவுடன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். “முட்டை விழுந்தும்கூட நீங்க ஏன் போய் எடுக்கலை.. முன்னமே பிராக்டிஸ் ஆயிட்டிங்கள்ல?” என்ற சிம்பு ‘பாவ்லோவ் தியரி’ பற்றியெல்லாம் குறிப்பிட்டது ஆச்சரியம். சிம்புவிற்காக ஜூலி இந்த விஷயத்தை எடுத்துத் தந்தது கூடுதல் ஆச்சர்யம்.

BB Ultimate
BB Ultimate

அடுத்ததாக நிரூப் – பாலாவின் சண்டைக்காட்சி பற்றிய விசாரணை வந்தது. “பாலா வாக்குவாதம் பண்ணும்போது போன சீசன் வரைக்கும் போயிடறான். அன்னிக்கு டாஸ்க்ல முழங்கைய வெச்சு என் மூஞ்சில இடிச்சான்.. வலிச்சது.. “டாஸ்க்ல அடிக்கப் போறேன்னு சுருதி கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கான்” என்று பாலாவைப் பற்றி நிரூப் சபையில் போட்டுக்கொடுக்க “விளையாட்டுக்கு ஏதாவது சொல்லியிருப்பேன்… டாஸ்க்ல யாராவது அடிப்பாங்களா? Muscle power விஷயத்தில் நான் எப்பவுமே ரொம்ப கண்ட்ரோலா இருக்கேன்” என்று பாலா விதம் விதமாக விளக்கம் தர பாலாவின் பக்கம் ஆதரவாக இருந்தார் சிம்பு. ஆனால் பாலா சொன்னதையெல்லாம் கேட்டு விட்டு “தெரிஞ்சு பட்டுச்சோ. தெரியாம பட்டுச்சோ.. அதுக்கு அப்புறம் ஒரு ஸாரி சொல்லியிருக்கலாமே?” என்று பாலாவை மடக்கும் விதமாக சிம்பு கேட்ட அந்தக் கேள்வி சிறப்பு. “அவன் பேசின வார்த்தைகள் அப்படி இருந்துச்சு.. மன்னிப்பு கேட்கணும்னு அப்போ தோணலை” என்று வெளிப்படையாகவே சொன்னார் பாலா.

“தப்பு பண்ணுனா ஸாரிகேட்டு பிரச்னையை முடிங்க” – சிம்பு அட்வைஸ்

பாலா மன்னிப்பு கேட்காததைப் போலவே நிரூப்பும் மன்னிப்பு கேட்காமல் அழிச்சாட்டியம் செய்த சம்பவத்தை விசாரணைக்கு கொண்டு வந்து சமன் செய்தார் சிம்பு. “நீங்களும் அனிதாவும் விளையாடியதில் உணவுப் பாத்திரத்தில் தட்டு விழுந்தது. நீங்களும் ஸாரி கேட்கலை.. ஸாரி கேட்ட அனிதா, சுருதியையும் தடுத்தீங்க.. ஏன்?” என்று நிரூப்பை நோக்கி சிம்பு கிடுக்கிப்பிடி போட, வழக்கம்போல் விதம் விதமாக திசை திருப்பி பேச ஆரம்பித்தார் நிரூப். “என் கிட்ட ஸாரி சொல்ல வேண்டாம்ன்னு அனிதா கிட்டதான் சொன்னேன்” என்று நிரூப் எஸ்கேப் ஆக முயன்றதெல்லாம் அநியாயம். “அது என்ன பிரச்னைன்னாலும் ஸாரி கேட்டு முடிக்க வேண்டிய விஷயத்தை இப்படி இழுத்துக்கிட்டே போறீங்களே” என்று கடுமையாக ஆட்சேபித்த சிம்பு “ஆடியன்ஸ் கிட்டயும் ஒண்ணு கேட்டுக்கறேன். இவங்க வாய் தவறி ஏதாவது சொல்லிட்டா, அதை நூறு முறை போட்டு ஷேர் பண்ண வேணாமே?” என்று டிரோல் செய்பவர்களையும் கண்டிக்கத் தவறவில்லை.

அனிதா
அனிதா

அடுத்ததாக சுரேஷ் தாத்தா செய்த மிகப் பெரிய சறுக்கல் அம்பலத்திற்கு வந்தது. ‘இந்த விஷயம் வெளியே வர வேண்டாம்’ என்று பிக் பாஸிடம் சுரேஷ் முன்னமே வேண்டிக் கொண்டிருந்தார் போல. பிக் பாஸ் டீமும் பெருந்தன்மையாக விட்டிருப்பார்கள்தான். ஆனால் ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது மாதிரி சுரேஷ் போட்ட ஓவர் சீன் காரணமாக ஒருவேளை அவர்களும் காண்டாகியிருக்கக்கூடும் எனவே ஒரு குறும்படம் ஒளிபரப்பானது. ‘கோழி டாஸ்க்கின் போது ஒரு புதிய விதியை தவறாகப் புரிந்து கொண்ட சுரேஷ் அதை போட்டியாளர்களிடம் தவறாகச் சொல்லி விட்டதால் நிறைய நேரம் வீணானது. இது தெரியாமல் போட்டியாளர்களும் பசியுடன் காத்திருந்தனர்.

அம்பலத்திற்கு வந்த சுரேஷ் தாத்தாவின் தவறு

ஒரு கட்டத்தில் பிக் பாஸ் சுரேஷைக் கூப்பிட்டு இதுபற்றி கடுமையாகச் சுட்டிக்காட்ட “இது வெளிய தெரியாம பார்த்துக்கங்க.. அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா.. கொலைவெறில என்மேல பாய்ஞ்சுடுவாங்க” என்று சுரேஷ் உள்ளே கெஞ்சியது கூட ஓகே. ஆனால் வெளியே வந்து தன் தவறை மறைத்துவிட்டு போட்டியாளர்களிடம் பந்தா செய்ததுதான் ஓவர். தன்னுடைய குட்டு சபையில் அம்பலப்பட்டதும் சங்கடமாக சிரித்த சுரேஷிடம் “ஆனா.. தாத்தா. செஞ்ச தப்புல நீங்க வெளியே வந்த விதம் இருக்கே.. சூப்பர்” என்று பாராட்டிய சிம்பு பிரேக் விட்டுச் சென்றார். இப்போதும் தாத்தாவின் வில்லங்கமான குசும்பு அடங்குவதாக இல்லை. பழியை அனிதாவின்மீது போட முயன்று, தன்மீது கோபமாக இருந்த பாலாவிடம் மன்னிப்புக் கேட்டு எஸ்கேப் ஆக முயன்றார்.

சுரேஷ்
சுரேஷ்

சிம்பு பிரேக்கில் சென்றிருந்தாலும் சுரேஷ் செய்து கொண்டிருந்த மாய்மாலங்களை வீடியோவில் தொடர்ந்து பார்த்திருக்கிறார் போலிருக்கிறது. உள்ளே வந்ததும் “என்ன தாத்தா.. வீடியோ காட்டிதான் சண்டை போட வைக்கணுமா? இன்னொரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு.. பார்க்கறீங்களா..?” என்று நமட்டுச் சிரிப்புடன் சிம்பு கேட்க “பாத்ரூம்ல அழுததா.. அய்யோ.. வேணாம்.. தம்பி..” என்று சுரேஷ் கதற “இந்த கேம்லாம் என் கிட்ட வேணாம்” என்ற சிம்புவின் முகம் மெலிதாக மாறியது. இதை சுரேஷூம் சரியாகப் புரிந்து கொண்டது போல்தான் தோன்றியது.

யார் அடைகாக்கும் கோழி? யார் கொத்தும் கழுகு?

“ஓகே வேற கேம் ஆடலாமா?” என்ற சிம்பு ஒரு புதிய டாஸ்க்கைக் கையில் எடுத்தார். ‘தன்னை அடைகாக்கும் கோழி யார், கொத்தும் கழுகு யார்?’ என்று ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும். இந்த ஷோவில் ‘யாருக்கு யார் நெருக்கம்.. யாருக்கும் யாருக்கும் ஆகாது’ என்று நாம் பார்த்து வரும் பட்டியல் இந்த டாஸ்க்கின் மூலம் இன்னமும் உறுதியானது. இந்தச் சமயத்தில் நிரூப் பற்றி அனிதா சொன்ன குறிப்பு உணர்வுபூர்வமாக இருந்தது. “நான் உடைஞ்சு போயிட்டா என் ஹஸ்பெண்ட் மட்டும்தான் என்னை சரிசெய்ய முடியும். இதுவரைக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனா இந்த சீசன்ல நிரூப் அப்படியொரு ஃபீலை கொடுத்திருக்கான். ஒரு தம்பியா பல சமயங்கள்ல என் கூட நின்னிருக்கான்” என்று நெகிழ்ந்தார். பாலாவும் அனிதாவும் ஒருவருக்கொருவர் ‘கழுகு’ பட்டம் கொடுத்துக் கொண்டு “முடியல. சாமி.. அவ்வளவு டென்ஷனா இருக்கு” என்று கண்கலங்கினார்கள்.

சுருதி
சுருதி

சதீஷின் முறை வரும் போது அவர் தவறுதலாக தன் புகைப்படத்தின் மீதே கோழி ஸ்டிக்கரை ஒட்டப் போனார். இதை மற்றவர்கள் சுட்டிக் காட்டும் போது “என்னங்க பண்றது.. என்னை நானே இங்க அடைகாத்துக்க வேண்டியிருக்கு” என்று டைமிங்கில் சமாளித்தது அருமை. இதுபோன்ற சதீஷ் நிறைய வெளிப்பட்டால் நன்றாக இருக்கும்.

இந்த டாஸ்க்கின் முடிவில் ‘அடைகாக்கும் கோழி’யாக தாமரையும் ‘மற்றவர்களை கொத்தும் கழுகாக’ பாலாவும் பெரும்பான்மையில் தேர்வானார்கள். இந்தச் சமயத்தில் தாமரை காப்பாற்றப்பட்ட நல்ல தகவலையும் சொன்னார் சிம்பு. ஒரு பிரேக் விட்டதும் ரம்யாவிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார் சதீஷ். “தனித்தனியா இருக்கும்போது எல்லோருமே இங்க கோழிங்கதான். ஆனா ரெண்டு பேர் சேரும்போதுதான் கழுகா மாறிடறாங்க” என்று சொன்னது அருமை. (இதெல்லாம் நல்லா பேசறீங்க தம்பி!).

“சொல்லுங்க அனிதா, நானும் கத்துக்கறேன்” – அதிரடி சிம்பு

அரங்கத்திற்கு திரும்பிய சிம்பு, அனிதா தொடர்பான ஒரு விவகாரமான விஷயத்தைக் கையில் எடுத்தார். இந்த வீடியோ இணையத்திலும் வைரலாக இருந்தது. “சில விஷயங்கள் சிம்புவிற்கு இன்னமும் ஆழமா புரியல. கமல் சாரா இருந்தா புரிஞ்சிருக்கும்” என்பதுபோல் சுருதியிடம் அனிதா பேசிக் கொண்டிருந்த காட்சிதான் அது. இதுகுறித்து அனிதாவிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சிம்பு “அது என்ன ஆழம்ன்னு சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுக்கறேன்.. இறங்கிப் பார்த்துடறேன்” என்று சர்காஸ்டிக்காக கேட்க, சிம்பு ரசிகர்களை ஒருகணம் எண்ணிப் பார்த்தாரோ, என்னமோ, அப்படியே பதறிப்போனார் அனிதா. “நான் தப்பா எதுவுமே சொல்லலை. சிம்பு அண்ணன் வந்த பிறகுதான் நாம ஜாலியா பேச முடியுதுன்னு பாசிட்டிவ்வாதான் சொன்னேன்” என்று பதட்டத்துடன் விளக்கம் அளித்த அனிதா, அழுவதற்குத் தயாராக இருந்தார். (“அப்ப நான் இருந்த போது ஜாலியா பேச ‘ஸ்பேஸ்’ தரலையா அனிதா?” – இது கமலின் மைண்ட் வாய்ஸ்).

அனிதா
அனிதா

“நான் எதுவுமே தப்பா பேசலை” என்று முதலில் பதறிய அனிதா பிறகோ, “இங்க நடந்த நிறைய பழைய விஷயங்கள் சிம்பு சாருக்கு தெரிஞ்சிருக்காது”ன்னுதான் ஒருவேளை சொல்லியிருப்பேன்” என்று சற்று இறங்கி வந்தாலும் ‘குறும்படம் போடுங்க’ என்று கூடவே வெட்டி வீராப்பையும் காட்டினார். “ஷாக்கைக் குறைங்க அனிதா.. எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. வெளில அப்படி நெனக்கறாங்க. என்னைத் திருத்திக்கறதுக்கு ஒரு வாய்ப்பாதான் இதைப் பார்க்கறேன்.. ஓகே. இதை விட்டுடலாம்” என்று பாசிட்டிவ்வாக டாப்பிக்கை மாற்றினார் சிம்பு.

அடுத்ததாக இன்னொரு டாஸ்க். ‘இந்த விளையாட்டில் இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும்’ என்பவர்களுக்கு இரண்டு இறக்கை பொம்மையையும் “இவரு ஆட்டம்.. ஓவர். கொஞ்சம் அடக்கி வாசிச்சா நல்லது” என்பவர்களுக்கு ஒரு இறக்கையைக் கொண்ட பொம்மையையும் அளிக்க வேண்டும். “தாத்தாவோட அழிச்சாட்டியம் தாங்கலை. ஓவர் எனர்ஜியா லொள்ளு பண்றாரு. கொஞ்சம் குறைச்சிக்கிட்டா நல்லது” என்று பலரும் சுரேஷிற்கே ஒற்றை இறக்கையை வழங்கினார்கள். பாலா மட்டும் ரம்யாவிற்கு தர “அவங்க இப்பத்தானே வந்திருக்காங்க. குறைஞ்ச டைம்தான் இருக்கு. அவங்களை அடக்கி வாசிக்கச் சொன்னா எப்படி பாலா?” என்று சரியாக மடக்கினார் சிம்பு. “ஆமாம்.. சார். லைவ்ட் கார்டு.. வைல்ட் கார்டுன்னு சொல்லி என்னை இம்சை பண்றார்” என்று ரம்யாவும் பாலாவைப் பற்றி நொந்து கொண்டார். ‘நன்றாகப் பறக்க வேண்டும்’ என்கிற இரண்டு இறக்கை பொம்மை சுருதிக்கே அதிகம் வழங்கப்பட்டது.

“இந்த வயசுலயே இப்படிப் பறக்கறீங்களே... சூப்பர்”

இந்த டாஸ்க்கின்போது அனிதாவின் முகம் டல்லாக இருந்ததால் “என்னாச்சு அனிதா?” என்று சிம்பு விசாரிக்க “நான் உங்களைப் பத்தி தப்பா எதுவும் சொல்லலை” என்று உடைந்து அழ ஆரம்பித்து விட்டார் அனிதா. “அய்யோ.. அதை விடுங்களேன்” என்று சிம்புவே சமாதானப்படுத்தும்படி ஆகிவிட்டது. ஒரு விஷயத்தைப் பல்வேறு கோணங்களில் யோசித்து தன்னை இன்னமும் சிக்கலான மனநிலைக்குள் தள்ளும் அனிதாவின் குணாதிசயத்தை எளிதில் மாற்ற முடியாது போலிருக்கிறது. சிம்புவைப் பற்றி அனிதா விமர்சித்திருந்தாலும் என்ன? அது துணிச்சலான கருத்துதான். இதையேதான் சிம்புவும் வழிமொழிந்தார்.

ஒற்றை இறக்கையை ஒடிக்கும் மெஜாரிட்டியான தேர்வு சுரேஷிற்கே வழங்கப்பட்டதால், போட்டியாளர்களின் வெறுப்பை அவர் நன்றாகச் சம்பாதித்திருக்கிறார் என்பது வெளிப்படை. ஆனால் இந்த நெகட்டிவ்வான விஷயத்தை சிம்பு பாசிட்டிவ்வாக மாற்றிய விதம் இருக்கிறதே?! அடடா! “இந்த வயசிலேயே இப்படிப் பறக்கறீங்களே தாத்தா.. இதுக்கே றெக்கையை உடைக்கணும்னு சொல்றாங்க. உங்க எனர்ஜியை நெனச்சா.. பிரமிப்பா இருக்கு” என்று சுரேஷைப் பாராட்டியது அட்டகாசமான அப்ரோச். “உங்க வயசுல சதீஷ் எப்படியிருப்பான்னு யோசிச்சுப் பார்க்கறேன்” என்று சிம்பு நக்கலாக அடித்த கமெண்ட்டிற்கு சபை விழுந்து விழுந்து சிரித்தது.

சிம்பு
சிம்பு

“இருப்பா.. தம்பி.. உன் கிட்ட தனியா வரேன்” என்று சதீஷை அவ்வப்போது ஜாலியாக எச்சரித்துக் கொண்டே இருந்த சிம்பு, இப்போது அந்த விஷயத்தை கையில் எடுத்தார். “என்னதான் உன் பிரச்சினை? போன வாரமே சொல்லிட்டுப் போனேன்” என்று சிம்பு நிதானமாக ஆரம்பிக்க சதீஷ் அதே பாட்டையே பாடினார். “இந்த வீடு எனக்கு செட் ஆகலை. எப்ப வெளியே போவோம்னு இருக்கு”. சதீஷின் இந்த வெளிப்படைத்தன்மை ஒருவகையில் பாராட்டத்தக்கது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அதீதமான போட்டி மனப்பான்மையும், நெகட்டிவ் எனர்ஜியும் அவரை மிரளச் செய்திருக்கலாம். அவரது குணாதிசயத்திற்கு இந்தச் சூழல் பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் வெளியுலகமும் ஏறத்தாழ பிக் பாஸ் வீடு போலத்தான். அத்தனை போட்டியும் பொறாமையும் புறணியும் வெளியேவும் இருக்கிறது. சதீஷ் இவற்றையெல்லாம் சந்தித்ததே இல்லையா? கெளதம சித்தார்த்தன் போல துன்பத்தின் சாயலே தெரியாமலா வளர்ந்திருப்பார்?

“பிக் பாஸ் வீடும் ஒரு நல்ல கிரெளண்டுதான்” –சிம்பு தந்த அட்வைஸ்

“நீ இங்க சண்டை போடணும்னு நான் சொல்லல... டாஸ்க் கூட பண்ண மாட்டிறியே தம்பி...” என்று சிம்பு கேட்க “ரேடியோ டாஸ்க்ன்ற பேர்ல முதுகில் தட்டுவது ரேகிங் மாதிரி இருக்கு” என்று சதீஷ் சொன்ன பதிலைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. “50 லட்சம்லாம் ஒரு காசான்னு கேக்கறே, நீ வெளியே பண்ற ஷோவிற்கெல்லாம் சம்பளம் வாங்காம வேலை செய்வியா?” என்று சரியான கேள்வியை சிம்பு முன்வைக்க, அப்போதுதான் இந்த விஷயம் தெரிந்த - ரம்யா தவிர - சக போட்டியாளர்கள் உற்சாகமாகக் கைத்தட்டினார்கள். “குறைஞ்ச பேமென்ட்டா இருந்தாலும் நிம்மதி வேணும்ணே” என்று உண்மையைச் சொன்ன சதீஷை ஒருவகையில் பாராட்டவே தோன்றியது. பிக் பாஸ் விளையாட்டைப் பற்றி துளிகூட தெரியாமல் உள்ளே வந்தது அவரின் தவறு. அவரை சரியாக பரிசோதிக்காமல் அவசரமாக உள்ளே அனுப்பியது பிக் பாஸ் டீமின் தவறு. நான் முன்னமே சொன்னதுதான். தீனா போன்ற சிறப்பான வாயாடிகள் உள்ளே வந்திருந்தால் ஷோ களை கட்டியிருக்கலாம்.

BB Ultimate
BB Ultimate

இரண்டு தங்க முட்டைகள் கொண்டு வரப்பட்டன. “யார் சேவ் ஆகப் போகிறார்கள் என்பதுதான் முட்டையின் உள்ளே இருக்கும்’ என்பதை போட்டியாளர்கள் எளிதில் யூகித்து விட்டார்கள். “இந்தக் கோட்டைச்சாமி தலைகீழாத்தான் குதிப்பான்” என்கிற காமெடி மாதிரி “போன சீசன்ல செஞ்ச மாதிரியே முட்டையை உடைச்சுதான் திறப்பேன்” என்று அடம்பிடித்த பாலா, அதன் மேல் அழிச்சாட்டியமாக அமர்ந்து உடைத்தார். “முட்டை மட்டும்தானே உடைஞ்சது?” என்று சிம்பு அடித்த காமெடியில் ‘டபுள் மீனிங்’ இருந்தாலும் நல்ல டைமிங். பாலாவின் வழியாக நிரூப் காப்பாற்றப்பட்ட செய்தி வந்தது சுவாரசியம். அடுத்ததாக அனிதா எடுத்த சீட்டு வழியாக ஜூலி காப்பாற்றப்பட்டதை அறிந்ததும் அபிராமிக்கு குஷி. ஆக… ஜூலியின் கிராஃப் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

ஒரு பிரேக்கில் சிம்பு சென்றதும் அனிதாவின் அனத்தல் உச்சத்திற்குச் சென்றது. “தப்பு பண்றவன்தான் மனுஷன்... பெரிய தப்பு பண்றவன் பெரிய மனுஷன்” என்றெல்லாம் பல்வேறு விஷயங்களைச் சொல்லி நிரூப் அனிதாவை சமாதானப்படுத்திய விதம் அருமை. அனிதாவும் நிரூப்பும் ஷோவைத் தாண்டியும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. திரும்பி வந்த சிம்பு “ரொம்ப சீரியஸா பேசிட்டோம். ஜாலியா விளையாடலாம்” என்று அதிர்ஷ்ட கார்டின் மூலம் சில ஜோடிகளை அமைத்து ‘arm wrestling’ விளையாட்டை ஆடச் செய்தார். “இந்த ஆட்டத்திற்கு உடல் ரீதியான பலமும் முக்கியம்” என்பதை உணரச் செய்வதற்குத்தான் இந்த டாஸ்க்காம்.

அனிதாவின் பேச்சைப் போலவே நீளமாகச் சென்ற எபிசோட்

பொதுவாக ஞாயிறு எபிசோட் இரண்டரை மணி நேரத்திலேயே முடிந்து விடும். ஆனால் நேற்றைய எபிசோட் அனிதா தொடர்பானது என்பதால் அவரின் பேச்சைப்போலவே சற்று நீண்டு பொறுமையை சோதித்தது. காப்பாற்றப்பட்டவர்கள் போக மீதமிருந்தவர்கள் அனிதா, சுருதி மற்றும் சதீஷ். இந்த வரிசையில் சதீஷ் வெளியேறுவதான் நியாயம். அதற்குத் தயாராகவும் அவர் இருக்கிறார். ஆனால் மக்களின் வாக்கு அனிதாவைத் தேர்ந்தெடுத்தது. இந்த சஸ்பென்ஸை மிக நீண்ட நேரத்திற்கு இழுத்தார் சிம்பு. தன்னுடைய எவிக்ஷன் குறித்து சுருதி கலங்கி அழுததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. (பாவம். இந்தப் பொண்ணு. நல்லாத்தான் பண்றாங்க. என்னவோ மிஸ் ஆகுது).

சுருதி
சுருதி

தன்னுடைய எவிக்ஷன் குறித்து கண் கலங்க அனிதா சொன்னதும் பரிதாபப்பட வைத்தது. அவர் மீதிருந்த விமர்சனங்கள்கூட இந்தச் சமயத்தில் கரைந்து விட்டிருக்கும். தன்னுடைய தந்தையார் மரணம், அந்தச் சமயத்தில் நிகழ்ந்த போன சீசனின் எவிக்ஷன், “அவ ஜெயிச்சுட்டுத்தான் வருவா” என்று அனிதாவின் தந்தையார் கொண்டிருந்த நம்பிக்கை, ‘இந்தச சீசனிலாவது அதைச் சாதிக்க முடியுமா என்கிற அனிதாவின் தவிப்பு போன்ற விஷயங்களை மனம் உருக விவரித்தார் அனிதா. என்றாலும் வேறு வழியில்லை. மக்களின் தீர்ப்புப்படி எவிக்ஷன் டைம் அனிதாவிற்கு பாதகமாக அமைந்தது.

“நான் எதுக்குப் போறேன்னு தெரியல” என்று கடைசி வரை புலம்பிக் கொண்டிருந்த அனிதா, “உன்னோட ரசிகர்கள்தான் எனக்கு எதிரா ஓட்டு போட்டிருப்பாங்க” என்று பாலாவின்மீது ஜாலியாக பழி போட்டார். “இங்க வாரா வாரம் நாம யார் கூடயாவது சண்டை போட்டுட்டுத்தான் இருக்கோம். யாராவது ஒருத்தர் போய்த்தானே ஆகணும்?” என்று ரம்யா சொன்னது சரியான காரணம். “டாஸ்க் தவிர உங்க மேல ஒரு கோபமும் இல்லைக்கா... வெளியே போய் பழைய மாதிரியே நண்பர்களா இருப்போம்” என்று உருகினார் பாலா. சுரேஷ்கூட அனிதாவை சற்று தயக்கத்துடன் விலகி நின்று ஆற்றுப்படுத்தி விடை தந்தார். பாவம் நிரூப்பின் முகம்தான் வழக்கத்திற்கு மாறாக மிக மிக சோகமாக இருந்தது.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. (ஈரோடு மகேஷ் இல்ல)

மற்றவர்களிடம் காரணம் தேடுவதை விடவும் தன்னுடைய எவிக்ஷன் எதனால் நிகழ்ந்திருக்கலாம் என்பதை வெளியே சென்ற பிறகு அனிதா நிதானமாக யோசித்தால் விடை கிடைக்கலாம். ஆனால் இதையே நினைத்தும் குழம்பக்கூடாது. கடைசியில் பார்த்தால் இதுவொரு விளையாட்டு மட்டுமே. வாழ்க்கையின் எல்லை கிடையாது. இது மட்டுமில்லாமல், மக்களின் தீர்ப்பை விமர்சனங்கள் இன்றி ஏற்றுக் கொள்வதுதான் முதிர்ச்சியான அணுகுமுறை.

மேடைக்கு வந்த அனிதாவிடம் “நானே எதிர்பார்க்கலை.. ரொம்ப குழம்பாதீங்க. தப்பு நடந்ததாதான் வெளியே போகணும்னு அவசியமில்ல. முன்ன வெறும் நியூஸ் ரீடரா மட்டும்தான் இருந்தீங்க. பிக் பாஸிற்கு அப்புறம் பாருங்க. டான்ஸ் ஷோல ஜெயிச்சீங்க. நடிப்புத் திறமை வெளிப்பட்டிருக்கு. எவ்வளவு முன்னேற்றம். நான் சந்திக்காத எதிர்ப்பையா நீங்க சந்திச்சிருக்கப் போறீங்க? ஒருத்தரை எப்ப தூக்கி விடணும்னு மக்களுக்கு தெரியும்” என்றெல்லாம் பாசிட்டிவ்வாக சிம்பு பேசினாலும் அனிதாவின் மனது காரணத்தை தேடி ஆராய்ந்து கொண்டே இருந்தது.

அனிதா
அனிதா

பின்னர் தொலைக்காட்சியின் வழியாக சதீஷிடம் பேசும்போது “உன்னை மாதிரி அமைதியா இருந்திருந்தாகூட தப்பிச்சிருப்பனோ... என்னவோ... ஒரு வாரத்துல நான் ஏதோ தப்பு பண்ணிட்டேன். நீங்களும் பார்த்து பேசுங்க” என்று அனத்திக் கொண்டேதான் இருந்தார். மிகவும் சோகமாக இருந்த நிரூப் “போன சீசன்ல பிரியங்கான்னு ஒரு நல்ல பிரெண்டு கிடைச்சா.. (அடப்பாவி.. என்னா சண்டை போட்டே?!) இந்த சீசன்ல அனிதான்ற அம்மா கிடைச்சாங்க” என்று சென்டிமென்டைக் கூட்டிய போது ‘நம்ம நிரூப்பா இது?' என்று ஆச்சரியமாக இருந்தது. கரன்ஸியை நிரூப்பிற்கும் வெடிகுண்டை சுருதிக்கும் தந்து விடைபெற்றார் அனிதா. ‘பாமை சதீஷிற்கு கொடுக்காதீங்க.. சுத்த வேஸ்ட்’ என்று சிம்பு அடித்த கமெண்ட் சூப்பர்.

ஜூலி அபிராமி
ஜூலி அபிராமி

அனிதா சென்றதும் “அவங்க எவிக்ஷன் எனக்கே ஆச்சரியம்தான்.. உங்களுக்கெல்லாம் இது ஒரு wake up call. இது பழைய பிக் பாஸ் கிடையாது. 24 மணி நேரமும் மக்கள் பார்க்கறாங்க. வோட்டு வித்தியாசமெல்லாம் ரொம்ப டைட்டா போயிட்டு இருக்கு.. பார்த்து விளையாடுங்க” என்று போட்டியாளர்களுக்கு ஆலோசனை சொன்னபடி தானும் விடைபெற்றார் சிம்பு.

ஆயிரம்தான் இருந்தாலும் அனிதா போன்ற வலிமையான போட்டியாளர், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதில் “ஏதோ ஒண்ணு சரியல்ல” என்றுதான் தோன்றுகிறது. அனிதா வெளியேறிய நிலையில் இனி ஆட்டம் எப்படியிருக்கும்? நிரூப் எப்படி தனியாக சமாளிப்பார்? பொறுத்திருந்து பார்ப்போம்.