வீட்டின் தலைவர் பதவியை பாலா இடது கையால் தூக்கியெறிந்ததுதான் இந்த நாளின் ஹைலைட். கடந்த சீசனில் அவர் வழக்கமாக கையாண்ட உத்திதான் இது. ஆகவே அடுத்த வார தலைவரானார் சுரேஷ். ஆனால் இதனால் உபயோகமில்லை. சுரேஷ் எலிமினேட் ஆகி விட்டதாக தகவல் வந்திருக்கிறது. உண்மையில் இது அதிர்ச்சிதான். சுரேஷ் கலந்து கொண்ட சீசனில் அவரது அடாவடிகளை பார்த்த சிலர் ஆரம்பக் கட்டத்தில் அவரை வெறுத்தது உண்மைதான். ஆனால் நாள்பட நாள்பட ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர் வெளியேறிய போது ஷோ சற்று சுவாரஸ்யம் இழந்தது உண்மை. ‘சுரேஷ் தாத்தா’வை மக்கள் அப்போது ரொம்பவே மிஸ் செய்தார்கள். அல்டிமேட் சீசனில் அவர் நீண்ட நாட்கள் இருந்து ரகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே அவர் வெளியேற்றப்பட்டிருப்பதைப் பார்த்தால், வழக்கம் போல் அதே சந்தேகம் தோன்றுகிறது. உண்மையிலேயே மக்களின் வாக்குகளின் அடிப்படையில்தான் எலிமினேஷன் நிகழ்கிறதா?
எபிசோட் 7-ல் நடந்தது என்ன?
போட்டியாளர்களை வெறுப்பேற்றி மகிழும் ‘பிக்பாஸ் விருதுகள்’ சடங்கு மங்கலகரமாக துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார் அனிதா. போட்டியாளர்கள் வாக்களித்ததை வைத்து இந்த விருதுகள் தேர்வாகியிருக்கின்றன. இந்த வைபவத்தில் யாராவது ஒருவர் எரிச்சலாகி விருதை மறுத்து எரிச்சலுடன் தூக்கியெறியும் பரபரப்பான சம்பவம் ஒன்று நிச்சயம் நடைபெறும். ஆனால் அல்டிமேட் சீசனில் அது நிகழவில்லை. கசப்பு இருந்தாலும் மக்கள் அதை அப்படியே விழுங்கிக் கொண்டு ‘வலிக்கலையே’ என்கிற மாதிரி நடித்தார்கள். விருது நிகழ்ச்சியின் இறுதியில் ஒன்றாக நின்று குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு “பிக்பாஸ்.. கொளுத்திப் போடலாம்னு நெனச்சீங்க… இல்லையா.. உங்க பருப்பு வேகாது. வேற ஏதாவது டிரை பண்ணுங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று பிக்பாஸிற்கே ஒழுங்கு காட்டினார்கள். (அப்படியா சங்கதி?! அடுத்தமுறை பாருங்க – பி.பா, மை.வா).

யார் யாருக்கு என்னென்ன விருது?
‘வீட்டின் வலிமையான நபர்’ என்கிற விருது பாலாவிற்கு கிடைத்தது. “இது எனக்கு மகிழ்ச்சியா இல்லை. பாரமா இருக்கு. கடந்த சீசன்ல ரன்னர்அப்-ஆ வந்ததையெல்லாம் நான் பெருமையா இப்ப நினைச்சுக்கல்ல. ஜீரோ –ல இருந்துதான் இந்த சீசனை ஆரம்பிச்சிருக்கேன்” என்று ‘தன்னடக்கமாக’ பேசினார் பாலா. ‘சகுனி’ என்பது அடுத்த விருது. பெயரைப் பார்த்தாலே தெரிந்திருக்கும். யெஸ். அது ‘சுரேஷ் தாத்தா’ தான். ‘மகாபாரதத்தில் உள்ள சிறந்த பாத்திரங்களுள் ஒன்று சகுனி’ என்கிற பெருமிதத்துடன் வாங்கிக் கொண்டார் சுரேஷ்.

‘வீட்டின் கிளியோபாட்ரா’ என்பது அடுத்த விருது. சுருதியின் முகத்தில் மெல்லிய எதிர்பார்ப்பு தெரிந்தது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ‘அபிராமி’. “எனக்கு டிரஸ்ஸிங் பண்ண ரொம்ப பிடிக்கும். சுருள் முடியை வரவழைக்கறதுக்காகவே ஒன்றரை மணி நேரம் செலவு பண்ணுவேன்” என்று பெருமையடித்துக் கொண்டார். “அழகின்னு நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க?” என்று தாமரை கேட்க “அனிதாவிற்கு” என்றார் அபிராமி. ‘சர்ச்சை இவருக்கு சட்டை மாதிரி’ என்பது அடுத்த விருது. இதையும் உடனே யூகித்திருக்கலாம். யெஸ்…. அது வனிதா. “சர்ச்சை என்பதின் அர்த்தம் இன்றைக்கு மாறிடுச்சு. முன்னல்லாம் இது கெட்ட வார்த்தையா இருந்தது. ஆனால் இப்ப சில பிரபலங்களே இதை தேடிப் போக ஆரம்பிச்சிட்டாங்க. மத்தவங்க தேடிப் போற ஒரு விஷயம், என்னைத் தேடி வந்ததில் பெருமைதான்” என்று சிரிப்புடன் வாங்கிக் கொண்டார் அக்கா.
அழகிப் பட்டம் அறிவித்தால் கூடவே அழகனும் இருக்க வேண்டும் அல்லவா? ‘மன்மதராசா’ பட்டத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதும் பலரும் ‘பாலா.. பாலா’.. என்று கத்தினார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ‘நிரூப்’. காமிரா அபிராமியையே க்ளோசப்பில் காண்பித்தது. ஆச்சரியத்தால் விரிந்தன அபிராமியின் கண்கள். ‘இது உலக நடிப்புடா சாமி’ என்கிற விருது தாமரைக்கு கிடைத்தது. எதிர்பார்த்ததைப் போன்றே அவர் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டார் “என்னுடைய இரண்டு பிள்ளைகள் மீது சத்தியமா சொல்றேன். நான் இங்க நடிக்கலை. வீட்ல எப்படி இருப்பேனோ, அப்படித்தான் இருக்கிறேன்” என்று அவர் கண்கலங்க மற்றவர்கள் தாமரைக்கு ஆறுதல் சொன்னார்கள். “இது ஆஸ்கர் விருது மாதிரி. நீ ஒரு நல்ல நடிகை.” என்று பாசிட்டிவ்வாக பெருமைப்படுத்தினார் சுரேஷ். “சாவித்திரிம்மா எவ்ள பெரிய நடிகை! அவரோட பேரன் கையால இதை வாங்கியிருக்கே. நீ அதுக்காக பெருமைப்படணும்” என்று டைமிங்காக சொன்னார் வனிதா. அதையே சுரேஷூம் சபையில் வழிமொழிய ‘ஹலோ.. அது நான் சொன்னது’ என்பது போல் வனிதா அவசரமாக ரிஜிஸ்டர் செய்தது சுவாரசியம்.

நாட்டாமை விஜயகுமாரின் பொண்ணுக்கு விருது!
‘வந்தான்.. சாப்பிட்டான். தூங்கினான். ரிப்பீட்டு’ என்பது அடுத்த விருதின் தலைப்பு. ‘நானா?’ என்பது மாதிரி தானாக ஆஜரானார் அபிநய். “தூக்கம் சரியா வராததுதான் இன்னிக்கு பலருக்குப் பிரச்சினை. ஆகவே இந்த விருது ஒரு வரம்” என்று பாசிட்டிவ்வாகப் பேசி ‘சுருதிக்கு’ அதை வழங்கினார் சுஜா. ‘சுத்தம், சுத்தமா ஆகாது’ என்பது அடுத்த விருது. ‘ஷாரிக்கிற்குத்தான் இந்த விருது’ என்பதில் மக்கள் உறுதியாக இருந்தார்கள். அவர்தான் சரியாக குளிக்க மாட்டாராம். பல்துலக்க மாட்டாராம். ஆனால் இது ‘சுருதிக்கு’ வழங்கப்பட, அதிர்ச்சியில் அவர் முகஞ்சுளித்தார். அவமானவுணர்ச்சி அவரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. “மனசு சுத்தமா இருக்கறவங்களை இந்த வீட்ல இருக்கறவங்களுக்கு பிடிக்காதுபோல” என்கிற டைமிங்கான கமெண்ட்டுடன் இந்த விருதை கசப்புடன் பெற்றுக்கொண்டார் சுருதி. “எங்க தலைவன் ஷாரிக்கிற்கு இந்த விருதை கொடுக்காம அவரை அவமானப்படுத்திட்டிங்கள்ல?” என்று மற்றவர்கள் ஷாரிக்கை ஜாலியாக ஓட்டினார்கள்.
‘நாட்டாமைத்தனம் செய்பவர் யார்?’ என்கிற அடுத்த விருதையும் எளிதில் யூகிக்க முடிந்தது. இதை வழங்கிய சுரேஷ், “இது Not ஆமை.. அதாவது மெதுவா போகாது. வேகமாகத்தான் போகும்” என்று வியாக்கியானம் தந்தார். இந்த விருது வனிதாவிற்கு சென்று சேர்ந்தது. “நான் விஜயகுமாரோட பொண்ணு. பொருத்தமான விருதுதான்” என்று பெற்றுக் கொண்ட வனிதா, கண்கலங்க “உங்க பேரை காப்பாத்திட்டனா டாடி?” என்று மேலே பார்த்து கூவி உணர்ச்சிவசப்பட்டார்.
‘புரளி புயல்’ என்பது அடுத்த விருது. இதையும் எளிதாக யூகித்து விடலாம். ஆம். சுரேஷ்தான் அது. “அரளி என்பது விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும் பூஜைக்கும் பயன்படும்” என்று புரளியை அரளியோடு சம்பந்தமில்லாமல் முடிச்சுப் போட்டு ‘அஞ்சு மூணும் கூட்டினா எட்டு’ என்கிற லாஜிக்கில் எதையோ பேசி வாங்கிக் கொண்டார் சுரேஷ். ‘ஃபேஸ்மெண்ட் வீக்’ என்கிற விருது அபிநய்க்கு கிடைத்து. “ஆனா பாடி ஸ்ட்ராங்” என்று வாங்கிக் கொண்டார். பற்ற வைப்பவர் என்கிற நோக்கில் ‘கெரோசின் டப்பா’ என்கிற விருதை யூகிப்பதில் ஆச்சரியமில்லை. “இதுக்குப் பேரு கிருஷ்ணாயிலு. சென்னைல அப்படித்தான் சொல்லுவாங்க. ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான பொருள் இது. கிருஷ்ணனின் பெயரைக் கொண்டது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” என்று ஆன்மீக வாசனையுடன் பெற்றுக் கொண்டார் சுரேஷ். ‘அட்டகத்தி’ என்பது அடுத்த விருது. ‘ஐயோ. எனக்கா?” என்கிற எக்ஸ்பிரஷன் அபிநய்யின் முகத்தில் தெரிந்தது. ஆனால் ஜாலியாக பெற்றுக் கொண்டவர் ஷாரிக்.

இந்த விழாவின் கடைசி விருது – விஷ பாட்டில். வனிதாவின் முகத்தில் சலனம் ஏற்பட்டது. ஆனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவருக்கே இந்த விருது கிடைத்தது. ஆம், விஷபாட்டில் என்பது அனிதாதான். “என்னைப் பார்த்து நாலு பேரு பயப்படறாங்கன்னா.. அதை நான் வெற்றியா பார்க்கறேன்” என்று சிரிப்புடன் வாங்கிக் கொண்டார் அனிதா. பழைய அனிதாவாக இருந்திருந்தால் ஒரு பாட்டம் அழுதிருப்பார். இறுதியில் குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட மக்கள் “சண்டை வரும்னு எதிர்பார்த்திங்கள்ல. ஏமாந்தீங்களா?” என்று பிக்பாஸிற்கு ‘வெவ்வே’ காட்டி மகிழ்ந்தார்கள்.
“தலைவர் பதவி வேண்டாம்” – பாலாவின் அழிச்சாட்டியம்
வீட்டின் அடுத்த வார தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விளையாட்டின் இறுதிக்கட்டம். இதற்கு சுரேஷ் மற்றும் பாலா தகுதியாகியிருந்தார்கள். ‘தூக்கு துரை’ என்கிற பெயர் கொண்ட இந்த டாஸ்க்கில், இரு வேட்பாளர்களும் ‘நான் தலைவர் ஆனால்’ என்று இதர போட்டியாளர்களிடம் பேசி ஆதரவாளர்களைச் சம்பாதிக்க வேண்டும். அந்த ஆதரவாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்ததும், இரு அணிகளும் தங்களின் வேட்பாளரை ஒரு நாற்காலியில் அமர வைத்து தூக்கி நிற்க வேண்டும். எந்த அணி அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறதோ, அவருக்கே வெற்றி.
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே ‘வாக்அவுட்’ செய்தார் பாலா. “நான் Best performer’ வாங்கி தலைவராக்கிக்கறேன். இப்ப தலைவர் ஆக விரும்பலை” என்பதே அவர் சொன்ன காரணம். இதே மாதிரிதான் கடந்த சீசன்களிலும் பல முறை சீன் போட்டார் பாலா. ஒருவேளை சுரேஷிற்கு அதிக ஆதரவு இருந்ததால் எரிச்சலாகி பாலா பின்வாங்கி விட்டாரோ என்று தோன்றுகிறது. பாலாவின் தரப்பில் ஜூலி, அனிதா, அபிநய், ஷாரிக் ஆகிய நால்வர் மட்டுமே இருந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் சுரேஷின் ஆதரவாளர்கள். “போட்டின்னு வந்துட்டா முயற்சி பண்ணாம எப்படி?” என்று பாலாவை கெஞ்சி சம்மதிக்க வைத்தார்கள். இந்த சம்மதத்தைப் பெறுவதில் ஜூலி மிகுந்த ஆர்வம் காட்டினார்.

போட்டி துவங்கியது. சுரேஷின் ஆதரவாளர்கள் அவரை நாற்காலியில் அமர வைத்து மேலே தூக்க, அனைவரையும் நோக்கி வணங்கியபடி கண்களை மூடிக் கொண்டார் சுரேஷ். இன்னொரு பக்கம், பாலாவை அமர வைத்து தூக்க முயற்சிப்பதற்குள் கீழே இறங்கிய பாலா “அவ்ளதான் போட்டி முடிஞ்சது. அவங்கதான் வின்னு” என்று அழிச்சாட்டியம் செய்ய, அவரின் ஆதரவாளர்கள் வெறுப்பிற்கும் எரிச்சலுக்கும் ஆனார்கள். “தூக்கவேயில்ல. அதுக்குள்ள இறங்கிட்டியே?” என்று அவர்கள் ஆட்சேபிக்க “நான்தான் முதல்லயே சொன்னேன்ல” என்று பாலா அலப்பறை செய்தார். ‘எங்களை ஏமாத்திட்டியே’ என்கிற நோக்கில் ஜூலி அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க ஆரம்பிக்க “ஹலோ.. இவ்ள சீன் உடம்பிற்கு ஆகாது’ என்கிற பாலாவின் கமெண்ட்டிற்கு கோபமானார் ஜூலி. இவரை பலரும் சமாதானப்படுத்த, பிறகு வந்து ‘ஸாரி’ கேட்டு சமாதானப்படுத்தினார் பாலா.
ஆக அடுத்த வாரத்தின் தலைவர் சுரேஷ். “எல்லோரையும் அனுசரிச்சு போறேன்னு இந்தப் பதவியோட பெருமையை விட்டுடாதீங்க” என்று உபதேசம் செய்தார் சிநேகன். ‘டிராமா போடாத’ என்கிற பாலாவின் கமெண்ட்டினால் பாதிக்கப்பட்ட ஜூலியை ‘அது நல்ல வார்த்தையாம்மா.. போன தடவை கமல் சாரே சொல்லிட்டாரு. எனவே பெருமையா எடுத்துக்கோ” என்று ஜூலியை ஆறுதல்படுத்தினார் தாமரை.
“யாரையும் கிண்டல் பண்ணாதே” – சுரேஷ் என்கிற சாத்தான் ஓதிய வேதம்
பாலாவிற்கும் சுரேஷிற்கும் இடையில் வழக்கம் போல் மோதல் ஆரம்பித்தது. “ஒருத்தரைப் பிடிக்கலைன்னா ஒதுங்கிடணும்ப்பா தம்பி. அவரை கார்னர் பண்ணக்கூடாது. புண்படும் படி கேலி செய்யக்கூடாது. ஜூலி கிட்ட நீ நடந்துக்கிட்டது சரியில்ல” என்பது மாதிரி ஆரம்பித்து சுரேஷ் தீவிர அறிவுரை சொல்ல “ஹலோ.. நான் எங்க ஜூலியை கார்னர் பண்ணேன்?” என்று பாலா மெலிதாக டென்ஷன் ஆக, பிறகு அந்தக் கணக்கில் தன்னையே சேர்த்துக் கொண்டார் சுரேஷ். “வயசானவன்னு பார்க்காம மரியாதையில்லாம என் கிட்ட பேசறே” என்று சுரேஷ் சொல்ல, இவர்களின் வாக்குவாதத்தில் மெல்ல உஷ்ணம் ஏறியது. “உங்க பிளானை சொல்லிட்டன்னு டென்ஷன் ஆகறீங்களா தாத்தா?” என்று பாலா கிண்ட ஆரம்பிக்க “இந்த மாதிரில்லாம் என் கிட்ட பேசாத தம்பி” என்று வேதனையான குரலில் சொன்னார் சுரேஷ்.

சுரேஷிடம் ஒருபக்கம் ஆவேசமாக சண்டை போட்டு விட்டாலும் பிறகு அதை மற்றவர்களிடம் சொல்லி புலம்பிய போது தன்னிச்சையாக கண்கலங்கி விட்டார் பாலா. “சரிடா. அழாத. நம்ம தாத்தாதானே?” என்று மற்றவர்கள் சமாதானம் சொன்னார்கள். “உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சவரு அவர் மட்டும்தான்” என்றார் அனிதா. கடந்த சீசன் பிரியங்கா – நிரூப் ஜோடி மாதிரி. இந்த சீசனில் சுரேஷ் – பாலா ஜோடி. உக்கிரமாக சண்டை போட்ட அடுத்த நாளிலேயே இயல்பாக பேசவும் ஆரம்பித்து விடுகிறார்கள்
மக்களிடமிருந்து வந்த கேள்விகள்
‘இப்படிக்கு நாங்க. பதில் சொல்ல வாங்க’ என்பது அடுத்த டாஸ்க். அதாவது மக்களிடமிருந்து வந்த கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் சொல்ல வேண்டும். “போன சீசன்ல ஆக்டிவ்வா இருந்தீங்க. இந்த சீசன்ல அமைதியா இருக்கீங்க. கல்யாணம் ஆனதுதான் காரணமா?” என்கிற முதல் குறும்பான கேள்வி சிநேகனுக்கு வந்திருந்தது. “வலிமையான போட்டியாளர்கள் நடுவுல இருக்கேன். எனவே கொஞ்சம் டயம் தேவைப்படுது. அப்புறம் பாருங்க” என்று நம்பிக்கையாகப் பேசினார் கவிஞர். ‘கிளிசரின் டப்பாவை வீட்ல வெச்சுட்டு வந்துட்டீங்களா?” என்கிற அடுத்த கிண்டலான கேள்வி, அபிராமிக்கு. “நான் எப்பவுமே கிளிசரின் போடறதில்லை. போன சீசன்ல அழுத அபிராமி வேற. இப்ப இருக்கற அபிராமி வேற” என்று சவடாலாக பேசிய அபிராமி, பிறகு ‘ஐயோ.. இவங்கதான் வோட்டு போடுவாங்கள்ல” என்பது நினைவிற்கு வந்தது போல் ‘ஒரு பிளையிங் கிஸ்’ஸை மக்களுக்கு ஆறுதலாக வழங்கி விட்டுச் சென்றார்.
“நீங்க நல்லவரா. கெட்டவரா?” என்கிற ரகளையான கேள்வி சுரேஷ் தாத்தாவிற்கு வந்தது. “சண்டை வர்ற போது போடுவேன். நானா எதையும் தேடிப் போறது கிடையாது. எந்த எக்ஸ்ட்ரா சுமையையும் நான் வெச்சுக்கறதில்லை. நல்லவன், கெட்டவனைத் தாண்டி நான் புனிதமானவன்” என்று சுரேஷ் பேசிய பன்ச் டயலாக்கைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் ‘உச்’ கொட்டி மகிழ்ந்தார்கள். “தாத்தா மேல ஏன் கோபமும் கண்டிப்புமா இருக்கீங்க” என்கிற கேள்வி பாலாவிற்கு வந்தது. நல்ல டைமிங்கான கேள்வி. “நான் எல்லார் கிட்டயும் சண்டை போடறதில்லை. தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஐ லவ் தாத்தா. நான் அவரைக் கிண்டல் செய்யறதில்லை” என்று சமீபத்திய சண்டைக்கு பாலா விளக்கம் தர அதிருப்தியான முகத்துடன் அமர்ந்திருந்தார் சுரேஷ்.

“நீங்க நல்லா கால்குலேட்டிவ்வா ஆடறீங்க. உங்க பார்வைல உத்தியைச் சிறப்பா பயன்படுத்தற மூணு பேரைச் சொல்லுங்க” என்கிற கேள்வி அனிதாவிற்கு வந்தது. “STR ஒருமுறை சொன்னது எனக்குப் பிடிச்சமான விஷயம். “எங்க அப்பாவின் உடல்மொழியை நிறையப் பேர் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா அவரோட திறமை அவங்களுக்கு இருக்குமா?”ன்னு அவர் கேட்டிருப்பாரு. அது போலத்தான். மத்தவங்க என்னைப் பார்த்து கமெண்ட் பண்றதை என் திறமையா பார்க்கறேன். எனக்கு அவ்ளோ மூளை இருக்குன்னு அர்த்தம்” என்று விளக்கம் அளித்த அனிதா, ‘சிறந்த ஸ்ட்ராட்டஜியாளர்கள்’ என்று தாமரை, சுரேஷ், சிநேகன் ஆகியோர்களைக் குறிப்பிட்டார். ஆனால் தங்களுக்குச் சொல்லப்பட்ட காரணங்களை ஆட்சேபித்து அதற்கான விளக்கத்தை சுரேஷூம் தாமரையும் சொன்னார்கள். ஆனால் சுரேஷிற்கான காரணங்களாக அனிதா சொன்னது ஒரு நல்ல மதிப்பீடு.
“பயப்படறியா குமாரு?” - தாமரைக்கு வந்த கேள்வி
“நீங்க ஒளிச்சு வைச்ச டீத்தூளை யாராவது கண்டுபிடிச்சு எடுத்திருந்தா, வீட்ல என்ன நடந்திருக்கும்?” என்கிற ஜாலியான கேள்வி வனிதாவிற்கு வந்தது. “சிறுத்தையோட தலைலயே சீப்பு வெச்சு வாரிப் பார்க்கறீங்களா?” என்கிற முகபாவத்துடன் டெரராக வந்த வனிதா “முதல்ல ஒளிச்சு வெச்சேன்தான். ஆனா அதுக்கு அப்புறம் மனம் இரங்கி கொடுத்துட்டேன். சாப்பாட்டு விஷயத்துல யாரையும் காயப்படுத்தறது எனக்குப் பிடிக்காது. யாராவது அதை எடுத்திருந்தா, நீங்க எதிர்பார்த்தீங்களோ, அந்தச் ‘சம்பவம்’ நிச்சயம் நடந்திருக்கும்” என்று ஜாலியாக கூறி விட்டுச் சென்றார். அடுத்த கேள்வியும் வனிதாவிற்குத்தான் வந்தது. “காஃபித்தூள் விஷயத்தில் அபிராமி உங்களைக் கேள்வி கேட்டது தப்பா?” என்கிற சரியான கேள்வி அது. “நிச்சயம் தப்பில்ல. ஆனா கேட்ட முறைதான் தப்பு. வேற யாராவது கேட்டிருந்தா கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சவங்க கேட்கும் போது மனசு காயப்படும். அழுதுடுவேன். இப்ப நானும் அபிராமியும் ராசியாயிட்டோம். நீங்க ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க” என்று கேள்வி கேட்ட பார்வையாளரையே பங்கம் செய்து கெத்தாக இறங்கினார் வனிதா.

“கடந்த சீசன்ல ரகளையா விளையாடினீங்க. ஆனா இந்த சீசன்ல உங்க முகத்துல ஒரு மரண பீதி தெரியுதே?” என்கிற வில்லங்கமான கேள்வி தாமரைக்கு வந்தது. “யார் கிட்ட.. நான் கிராமத்துக்காரி. அதெல்லாம் யாருக்கும் பயப்பட மாட்டேன்” என்று சவடாலாக பதில் அளித்த தாமரை, அனிதா தன்னைப் பற்றி சொன்ன கமெண்ட்டிற்கும் விளக்கம் அளித்து விட்டுச் சென்றார்.
ஆக.. ‘அல்டிமேட்’ சீசனின் போட்டியாளர்கள், ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்கிற ரீதியில் உக்கிரமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த எழுபது நாட்களும் ரணகளமாக இருக்கப் போவதை யூகிக்க முடிகிறது. இன்று கமல் விசாரணை நாள். ‘காஃபித்தூள் கலவரம்’ துவங்கி வழக்கமான பாணியில் விசாரிப்பாரா அல்லது இந்தச் சீசனுக்கு ஏற்ப அவரின் அணுகுமுறையில் மாற்றம் இருக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.